Pages

Tuesday, June 16, 2026

பாரதிராஜாவின் படத்தில் பாடகர் கிருஷ்ணசந்தர்

பாடகர் கிருஷ்ணசந்தர், அருமையான பாடகர் மட்டுமல்ல, கலையுலகில் எளிமையாகப் பழகும் மிகச்சிறந்த மனிதர் இவர்.

தாமரப் பூவுக்கும்

தண்ணிக்கும் என்னிக்கும்

சண்டையே வந்ததில்ல…

இந்த ஜென் ஸீ யுகத்திலும் அடிப்பொளியாகக் கொண்டாடப்படும் பாட்டு.

பாடலைப் பாடிய கிருஷ்ணசந்தரும், ஜென்ஸியும் கூட ஒரு பாடலில் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். அதுவும் பாரதிராஜா படத்துக்காக.

இசைஞானி இளையராஜா இசையில் பாரதிராஜா இயக்கத்தில் “டாப் டாக்கர்” என்ற படத்தை, கமல்ஹாசனை நாயகனாக வைத்து எடுக்கத் திட்டமிடுக்கிறார்கள்.

அந்தப் படத்துக்காக ஒரு பாடலும் பதிவாகியது, பாடலைப் பாடியவர்கள் கிருஷ்ணசந்தர் மற்றும் ஜென்ஸி. ஆனால் அந்தப் படம் கிடப்பில் போடப்படுகிறது.

குறித்த பாடலை மீளவும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா வை வைத்துப் பாட வைத்து, அதே கமல்ஹாசன். ராதா நடிப்பில் “காதல் பரிசு” படத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

அந்தப் பாடல் தான் “புறாக்களே…புறாக்களே” என்ற பாடல்.

கமல்ஹாசனுக்கு மென்மையான குரல்கள் என்ற வரிசையில், ஜேசுதாஸ், ஜெயசந்திரன், உன்னிமேனன், அருண்மொழி வரிசையில் கிருஷ்ணசந்தரும் இடம்பிடிக்க வேண்டிய பாட்டு அது.

அதே போல், பாரதிராஜாவின் படத்திலும் இந்த வாய்ப்பு தவற விடப்படுகிறது.

கிருஷ்ணசந்தர் பாடகராக இருந்த காலத்தில் சந்தூர் போன்ற வாத்தியக் கலைஞராக விளங்கியவர் வித்யாசாகர், ஆரம்ப காலத்தில் ஒரு தொலைக்காட்சி நாடகத்துக்கு வித்யாசாகர் இசையமைத்த போது கிருஷ்ணசந்தர் பாடல் பாடியுமுள்ளார்.

ஆனால் காலம் போட்ட கணக்கைப் பாருங்கள். அதே இயக்குநர் இமயம் பாரதிராஜா 1995 இல் “பசும்பொன்” படத்தை எடுக்கிறார். அதில் வித்யாசாகர் கிருஷ்ணசந்தரைப் பாட அழைக்கிறார். இதில் முன்னேற்பாடு எதுவுமே இல்லை. எல்லாமே தானாக அமைந்தது என்று கிருஷ்ணசந்தர் சாரிடம் பேசும் போது சொன்னார்.

பாரதிராஜாவின் திரைச்சரித்திரத்தில் இந்தப் பாடலும் ஒரு மைல் கல் தானே?

“அந்த நெலாவைத் தான் கையில புடிச்சேன்” போல இரண்டாவது நாயகன், நாயகிக்கான பாட்டு என்பது பாரதிராஜாவின்  இன்னொரு முத்திரைப் பாணி.

இந்த “தாமரைப் பூவுக்கும்” பாடல் சற்று முன்னே வந்த “ஆத்தங்கரை மரமே” பாடலுக்கும் மிக நெருங்கிய சூழல் பாட்டு.

இரண்டிலும் பொதுப் பாடகி சுஜாதா. பின்னாளில் மலையாளத்தில் “தெய்வத்திண்டே மகன்” படத்திலும் வித்யாசாகர் இசையில் சுஜாதா & கிருஷ்ணசந்தர் ஜோடி போட்டுக் கலக்கி இருப்பார்கள்.

ஐயாறெட்டு

நெல்லைப் போல

அவசரமா..சமஞ்ச

ஐத்தமக

மஞ்சதுக்கு

ஆதரமா..அமஞ்ச

“தாமரைப் பூவுக்கும்” பாடலில் கிருஷ்ணசந்தர் & சுஜாதா கூட்டணி மிகக் கச்சிதமாக இருக்கும் போட்டி போட்டு அதகளம் பண்ணியிருப்பார்கள். கூடவே வித்யாசாகர் உய்ய்ங் உய்ங்ங் இசையில் மகுடி தான் போங்கள் 🙂

நாக்குல மூக்கையே..ஹே..ஹே

தொட்டவன் நானடி

பார்வையால் உசுரையே..ஓ..ஹோ

தொட்டவ நீயடி

இங்கே கிருஷ்ணசந்தர் அவர்களது மென் குரல் வார்த்தைகளில் துள்ளிக் குதிக்கும் மீனாட்டம் இருக்கும்.

கானா பிரபா

16.06.2026

Monday, June 15, 2026

பாசத்துக்குரிய பாரதிராஜாவின் பாட்டுக்கார மலேசியா வாசுதேவன் ❤️

பாசத்துக்குரிய பாரதிராஜாவின் 

பாட்டுக்கார மலேசியா வாசுதேவன் ❤️


ஜூன் மாதம் 15 ஆம் திகதி பின்னணிப் பாடகர்  மலேசியா வாசுதேவன் அவர்களின் பிறந்த தினம். 


இம்முறை பல வருஷங்களுக்குப் பிறகு பாரதிராஜாவும், மலேசியா வாசுதேவனும் விண்ணில் இருந்து பேசிக் கொண்டிருப்பார்கள் இல்லையா?


“16 வயதினிலே” எத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்தது பாருங்கள்.

இயக்குநராக பாரதிராஜாவுக்கும், உதவி இயக்குநராக கே.பாக்யராஜுக்கும்,

அறிமுகப் பாடலாசிரியராக கங்கை அமரனுக்கும், இன்னும் 

“இந்தப் படத்தில் தான் எனக்குப் பின்னணி இசையமைக்கக் களம் (space) கொடுத்திருக்கிறாய்” என்று இளையராஜா மனம் விட்டுச் சொல்லவும்,

இவர்களை எல்லாம் தாண்டி மலேசியா வாசுதேவன் என்ற அற்புதமான மண்ணின் குரலுக்கு வாழ்வு கொடுத்ததுமாக அமைந்து விட்டது.


மலேசியா வாசுதேவன் பாடிய முதற் திரையிசை “பாலு விக்கிற பத்மா” பாடல் வி.குமார் இசையில் டெல்லி to மெட்ராஸ் (1972) , அதைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையிலும் பாடியவர், ஏன் இளையராஜா இசையிலேயே “உறவாடும் நெஞ்சம்” படத்தில் “Dear Uncle” பாடலைப் பாடுவதற்காக இளையராஜாவே தன் காரில் அழைத்துக் கொண்டு தன் குருநாதரின் ஆசியைப் பெற வைத்து, பாட வைத்ததாக மலேசியா வாசுதேவன் குறிப்பிட்டிருப்பார்.

உறவாடும் நெஞ்சம் பாடும் போது என் மகன்  தாய் வயிற்றில் ஆறு மாசம், யுகேந்திரன் பிறந்ததும்16 வயதினிலே பாட்டு என்பார்.

மலேசியா வாசுதேவன் என்ற முழுமையான பாடகனைப் பிறக்க வைத்ததும் இந்தப் படமானது.


16 வயதினிலே படப் பூஜைப் பாடல் 

பெரும் திருப்புமுனையாக “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்காவாய்ப்பு இசைஞானி இளையராஜா இசையில் கிடைத்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் கெட்டுப் போனதால் பூஜைக்குப் பாடிய பாடலே இவரின் தலையெழுத்தை மாற்றியது. 

இதில் ஒரு புதுமை என்னவென்றால் SPB தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று அறிமுகமான போது அவரோடு முதன் முதலில் ஜோடி கட்டிய குரல் P.சுசீலா.

எனக்கு ராசியான குரல் சுசீலாம்மா என்பார் SPB.

இங்கே மலேசியா வாசுதேவனின் தலையெழுத்தை மாற்றிய பாடலிலும் ஜோடி அவரே.

உண்மையில் 16 வயதினிலே படத்தில் மலேசியா வாசுதேவனுக்கு முழுப் பரிமாணத்தை அளித்தது “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” பாடல்.

அதுவே பின்னாளில் அவருக்கான முப்பரிமாணப் பாடல்களுக்கும் வித்திட்டது.

சப்பாணிக்கு ஒரு பாட்டு என்று கங்கை அமரன் சொன்ன ஆட்டுக்குட்டி முட்டை என்ற எடுத்தாளலை உள்வாங்கி கண்ணதாசன் கடகடவென்று எழுதித் தள்ளியதாக ஆச்சரியப்பட்டிருப்பார் கங்கை அமரன்.

இந்தப் பாடலில் இவ்விதம் இரண்டு ஆச்சரியங்கள்.


“தென்றலே ஆசை கொண்டு 

 தோகையைக் கலைந்ததம்மா”

அவர் இந்த இடத்தில் வரும் போது எழும் உணர்வூட்டத்தைப் பாருங்கள்.

அதுதான் மலேசியா வாசுதேவன் எனும் மந்திரக் குரலின் ஜாலம்.

“புதிய வார்ப்புகள்” அறிமுக நாயகன் பாக்யராஜின் குரலாக வந்தவர் பின்னாளில் பாக்யராஜின் குரலாளனாக எத்தனை எத்தனை முத்துகளைக் கொடுத்தார்.

“என் மனது தாமரைப்பூ

உன் மனது முல்லை மொட்டு

காலம் வருமே நீ கூட பெண்ணாக, 

கோவில் மணி ஓசை கேட்டதாரோ…”

இங்கே அறிமுக நாயகன் சுதாகருக்கு மலேசியா வாசுதேவன் குரலைப் பொருத்துகிறார் பாரதிராஜா.

அதே படத்தில் வராத மாமணிப் பாட்டு “மலர்களே நாதஸ்வரங்கள்” எப்படித்தான் மறப்போமோ?

பூமியில் மேகங்கள்..

ஓடியாடும் யோகமே…

மலையின் மீது

ரதி உலாவும் நேரமே…

சாயாத குன்றும்

தாளாத நெஞ்சும்

தாலாட்டு பாடாமல் 

தாயாகுமோ…

ஆயிரம் மலர்களே

மலருங்கள்..

உதவி இயக்குநராக இருந்த விஜயனை அரிதாரம் பூச வைத்து நாயகனாக்கிய நிறம் மாறாத பூக்களில் கூட மலேசியா வாசுதேவனே கதாநாயகன்.

“தோப்பிலொரு நாடகம் நடக்குது” கல்லுக்குள் ஈரம் பாடலின் தொடக்கத்தில் இளையராஜாவின் குரல் அறிமுக நாயகன் பாரதிராஜாவுக்கும், மலேசியா வாசுதேவன் குரல் சுதாகருக்குமாக அமைந்து விடுகிறது.

மலேசியா வாசுதேவனை “கொலுசு” திரைப்படம் வழியாக கே.எஸ்.மாதங்கன் நடிகராக அறிமுகப்படுத்தினார். 


“நடிக்க ஆரம்பிச்சாச்சா?” என்று 

பாடகராக ஒரு திருப்பு முனை கொடுத்த அதே பாரதிராஜாவே ஒரு கைதியின் டைரி வழியாக மலேசியா வாசுதேவன் என்ற நடிகர் தொடர்ந்து புகழ்பூத்த நடிகராக விளங்கத் திருப்புமுனை கொடுத்தார்.

“தோட்டத்திலே பல பூக்கள் உண்டு

நீதானே என் சிகப்பு ரோஜா,

இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது”

இரண்டே இரண்டு கண்ணே கண்ணு என்று விளங்கிய பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் பாட்டுகள் இரண்டில் ஒன்று மலேசியாவுக்கே.

“ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்”,

“அரிசி குத்தும் அக்கா மகளே” “அட மூக்கியரெ மூக்கம்மா” என்று முத்தான மூன்றை “மண்வாசனை” பாண்டியனுக்கு மலேசியா வாசுதேவனைப் பாட வைத்து அழகு பார்த்தார்கள்.

“அழகே உன்னை”, “டக்கர் டக்கர் பேபி” என்று இன்னும் இரண்டு, பாரதிராஜாவின் திரையோட்டத்தின் கரும்புள்ளி “வாலிபமே வா வா” விலும் கூட மலேசியா வந்தார்.


“ஓ…. ஒரு தென்றல் புயலாகி வருமே” வேட்கையோடு எழும் “புதுமைப் பெண்” ணுக்காக ஆதரவுக் குரலாக அங்கும்.

கடலோரக் கவிதைகளில் எல்லோரும் பாடினாலும் என்ன

“அடி ஆத்தாடி” என்று சோக ராகத்துக்கு மலேசியாவை அழைத்து வந்து விடுவார்கள்.

அது போலவே தேவேந்திரனோடு சேர்ந்த போதும் பாரதிராஜாவின் ஜோடிக் குரல் 

“மாட்டு வண்டிச் சாலையிலே” வேதம் புதிதில்

பாடியது. 


ஹம்சலேகாவுடன்” கொடி பறக்குது” இசையிலும் “தொண்டைக்குள்ளே” பாட்டுக் கொடுத்தார் பாரதிராஜா.

அந்த வரிசையில் “பசும்பொன்” வித்யாசாகர் இசைக் கூட்டணியிலும் “ஏலே ஏலே” பாட்டுக் கிட்டியது இவருக்கு.தேவாவும் தன் பங்குக்கு கடல் பூக்களில் ஒரு பாட்டளித்தார்.

“ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா” பாடல் பதிவாகி விட்டது. அப்போதுதான் மலேசியா வாசுதேவனை அழைத்துக் கொண்டு வருகிறார் பாரதிராஜா. இவரின் குரலையும் சேர்த்து ஒலிப்பதிவு செய்யுங்கள் என்ற வேண்டுகோளில் அது பரிபூரணம் ஆனது.

அந்த என்னுயிர்த் தோழனில்

“குயிலுக் குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன…”

மலேசியாவைத் தாண்டி யாரை நினைக்க முடியும்?

“ஏலமலைக் காட்டுக்குள்ளே”

அந்த நாடோடிப் பாட்டுக்காரன் குரல் கேட்கவில்லையோ நாடோடித் தென்றல் வழியே…


“தென்கிழக்கு சீமையில

செங்காத்து பூமியில

ஏழைப்பட்ட சாதிக்கொரு 

ஈரமிருக்கு…”

“கிழக்கு சீமையிலே” இன் அடிநாதம் இவர் தானே?

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக

“காடு பொட்டல் காடு”

பாரதிராஜா & மலேசியா வாசுதேவன் கூட்டணியை முதன் முதலில் ஜோடி போட வைத்து அழகு பார்த்தார் “கருத்தம்மா”வில் ரஹ்மான்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இன்மையில் “முதல் மரியாதை” ஐ நினைக்காத உள்ளங்கள் ஏது?

அங்கே சிவாஜி கணேசன் என்ற நடிப்பரசனின் பாட்டு அரசனாகி நிற்கிறார் மலேசியா வாசுதேவன்.

“ஏ குருவி”, “ஏறாத மலை மேலே” வகையறாக்களோடு நெஞ்சை அள்ளும் இரண்டு பாட்டுகள்.

“வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்”

“பூங்காற்று திரும்புமா?”

பாரதிராஜாவின் பொற்காலத்தைப் பேசும் போது இளையராஜாவோடு மலேசியா வாசுதேவனும் கூட வருவார்.

இனி “பூங்காற்று திரும்புமா” பாடலை ஏக்கத் தொனியோடு கேட்கும் போது மலேசியா வாசுதேவனுடன் பாரதிராஜாவும் கூட வருவார்.

கானா பிரபா


Saturday, June 13, 2026

பாரதிராஜாவும் பாவலர் சகோதரர்களும்


“நான் பண்ணைப்புரத்துக்கு சுகாதாரப் பரிசோதகரா வந்தப்ப பாஸ்கர் தான் முதலில் ஒட்டிக்கிட்டான்,

அப்புறமா கங்கை அமரன் சர்ச் இல் நடக்கும் பிரசங்கத்துக்குக் கூட்டிட்டுப் போவான்

ராஜா தன்னோட வீட்டுக் கதவில் கம்பி கட்டி வாசிப்பான், மூங்கிலைச் சுட்டுப் புல்லாங்குழல் ஆக்குவான்,

அப்புறம் ஒன்றாக நாடகம் போட்டோம்”

இப்படி பாரதிராஜா பண்ணைப்புரம் சகோதரர்களைச் சந்தித்த கதையைச் சொல்லி இருப்பார்.

“நமக்கு வாய்ப்புத் தேடி ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்குவார் அண்ணன் பாஸ்கர்” 

என்று இளையராஜா தன் சகோதரர்களைப் பற்றிச் சொல்லி இருப்பார்.

பாஸ்கர் எண்பதுகளின் இறுதிவரை இளையராஜாவுக்காக இயங்கிய ஒரு நிழல் பொதுசனத் தொடர்பாளர். 

அவரைப் போல போல ஒரு இயல்பான, நட்பான மனிதரைப் பார்க்கவே முடியாது என்பார் சித்ரா லட்சுமணன். 

“என்னோட மருத்துவச்சி (அன்னக்கிளி) கதை இளையராஜா இசையில் தான் வரணும்னு இருந்தேன்”

என்பார் கதாசிரியர் செல்வராஜ்.

அவரே பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை அறிமுகப்படுத்தி அன்னக்கிளி வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கிறார்.

“இவங்க பாவலர் சகோதரர்கள் என்னோட சகோதரர்கள் மாதிரி” என்று எஸ்பிபிக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் பாரதிராஜா. எஸ்பிபியோடு கூட்டணி போட்டுப் பாட்டுக் கச்சேரிகள் நடத்தினார்கள்.

இளையராஜா இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இடம் உதவியாளராகச் சேர்ந்த பின்னர், புட்டண்ண கனகல் இன் பெல்லி மோடா கன்னடப் படத்தைப் பார்த்த பாரதிராஜா அவரிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்த, ஜி.கே.வெங்கடேஷ் உதவுகிறார். அது குறித்து இன்னொரு விரிவான பகிர்வைப் பகிர்கிறேன்.

மேற்கண்ட வரலாறு எல்லாமே தானாக வந்தது. காலம் அவர்களை ஒன்று சேர்த்தது.

சாதனையாளர் ஆனார்கள்.

இதை வைத்தே அற்புதமானதொரு திரைக்கதை அமைக்கலாம்.

வெற்றியை காலமும், சந்தர்ப்பமும் தீர்மானிக்கும். அது எல்லாமே முற்கூட்டியே நம்மை அறியாமல் தீர்மானிக்கப்பட்ட கணக்கு.

கானா பிரபா

Friday, June 12, 2026

இயக்குநர் இமயம் பாரதிராஜா & பாடும் நிலா SPB நட்பு

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவின் போது எனக்கு முதலில் நினைவுக்கு வந்த இன்னொருத்தர் SPB.

காரணம், 2014 ஆம் ஆண்டு தெலுங்கு ETV  'ஸ்வராபிஷேகம்' என்ற நிகழ்ச்சியில் மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SPB), இயக்குநர் பாரதிராஜா உடனான தனது அரிய நட்பு மற்றும் நினைவுகள் குறித்துப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதை இன்னொரு பகிர்வு கொடுக்க அப்போது தேடினேன் கிட்டவில்லை.

இப்போது அந்தத் தொலைக்காட்சியே பகிர்ந்திருக்கிறது பாருங்கள்

https://www.youtube.com/watch?v=9bhAZY92mkU&t=132s

SPB சொன்ன கருத்துகளைத் தமிழாக்கித் தருகின்றேன்

பாரதிராஜா ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்துகொண்டிருந்த காலத்திலிருந்தே எஸ்பிபியின் நட்புத் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் பாரதிராஜா தமிழில் நாடகங்களை எழுதி, அவரே அதில் கதாநாயகனாகவும் நடித்தார். அப்போது வளர்ந்து வரும் பாடகராக இருந்த எஸ்பிபி, அந்த நாடகங்களுக்குப் பின்னணி பாடியதோடு புல்லாங்குழலும் வாசித்துள்ளார். ஒரு நாடகக் காட்சியின் போது பாரதிராஜாவுக்கு ஒரு நல்ல சட்டை தேவைப்பட்டது. அப்போது 'ஆராதனா' படத்தில் ராஜேஷ் கன்னா அணிந்தது போன்ற ஒரு புதிய கிரீம் நிற சட்டையை எஸ்பிபி வைத்திருந்தார். நாடகத்தில் ஒரு காட்சிக்கு மட்டும் தருமாறு பாரதிராஜா கேட்க, எஸ்பிபியும் தனது சட்டையைக் கொடுத்துவிட்டு பாரதிராஜாவின் சட்டையை அணிந்துகொண்டார். ஆனால், மேடையில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்த பாரதிராஜா, அந்த அவசரத்திலும் ஆவேசத்திலும் எஸ்பிபியின் சட்டையைக் கிழித்துவிட்டார்! அதன் பிறகு அந்தச் சட்டை எஸ்பிபிக்குத் திரும்பக் கிடைக்கவே இல்லை.


எஸ்பிபி சொந்தமாகக் கார் வாங்கி, டிரைவர் இல்லாமல் அவரே ஓட்டிச் சென்ற காலங்களில், அவர் தூங்கிவிடக் கூடாது என்பதற்காகப் பாரதிராஜா முன் இருக்கையில் அமர்ந்து கதைகளைச் சொல்லிக்கொண்டே வருவார். '16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' போன்ற படங்களின் கதைகளை 45 வருடங்களுக்கு முன்பே பாரதிராஜா தன்னிடம் கூறியதாக எஸ்பிபி குறிப்பிடுகிறார். "யார் இதையெல்லாம் பார்ப்பார்கள், மிகவும் அட்வான்ஸாக இருக்கிறதே" என்று எஸ்பிபி கேட்டதற்கு, "ஒரு நாள் நான் இதை படமாக எடுத்து மக்களைப் பார்க்க வைப்பேன்" என்று பாரதிராஜா சவால் விட்டார். அவர்கள் இருவரும் இணைந்து முதலில் '16 வயதினிலே' படத்தின் தமிழ் பதிப்பைத் தயாரிக்கத் திட்டமிட்டனர். எழுத்துப் பதிவு கானா பிரபா.

ஆனால், இருவரிடமும் போதிய பணம் இல்லாததால் அந்தத் திட்டம் தள்ளிப்போனது.

இசைஞானி இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களை எஸ்பிபியிடம் முதலில் அனுப்பி வைத்தவர் பாரதிராஜா தான். மெட்ராஸில் தனது வீட்டில் எஸ்பிபி ஒரு சிறிய இசைக்குழுவுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது, பாரதிராஜா இவர்களை அனுப்பி எஸ்பிபியின் இசைக்குழுவில் வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். பாரதிராஜாவின் படங்களில் வரும் பின்னணி இசையின் சிறு துண்டுகள் கூட அவருடைய சொந்த கற்பனையில் உதித்தவை. எஸ்பிபி தான் 'படமதி சந்தியாராகம்' (Padamati Sandhya Ragam)  என்ற படத்திற்கு இசையமைக்கும் போது, பாரதிராஜாவின் இந்த இசை உத்தியை உத்வேகமாகப் பெற்றுப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த 'முதல் மரியாதை' படத்தின் கதையை முதலில் எஸ்பிபியிடம் கூறி, அவர்தான் நடிக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டுள்ளார். படப்பிடிப்பிற்குத் தொடர்ந்து 40 நாட்கள் தேவைப்பட்டதால், தினமும் 6 பாடல்கள் வரை பாடிக்கொண்டிருந்த எஸ்பிபியால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது தனக்கு இழப்பு என்றாலும், ஒரு சிறந்த காவியமாக அந்தப் படம் உருவாகி தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றது குறித்து பெருமைப்படுவதாக எஸ்பிபி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பகிர்வு : கானா பிரபா

இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள், தெலுங்கின் ஜாம்பவான்களோடு, இயக்குநர் இமயம் பாரதிராஜா மெய் சிலிர்த்துக் கண்ணீருடன் எஸ்பிபி பேச்சை ரசிக்கிறார். கூடவே இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் இருக்கிறார்.

Tuesday, June 2, 2026

இசைஞானி இளையராஜா எனும் இயக்கம் ❤️


இசைஞானி இளையராஜா ❤️

அவர் ஒரு இயக்கம்.

ஐம்பது ஆண்டுகளைக் கடந்து இன்னும் உழைக்கும் இசைத் தொழிற்சாலை.

இந்த இசைக்குப் பெரியது, சின்னது என்று எதுவுமே தெரியாது

பிரமாண்டங்களிலும் உழைப்பார், கலைப்படங்களிலும் தன் இசையால் இழைப்பார்.

தென்னகத்தின் தமிழ் - தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் சூப்பர் இசையமைப்பாளராகச் சம காலத்தில் இயங்கிய அந்தச் சாதனை இனி எப்போதும் நிகழ்த்திக் காட்ட முடியாத அற்புதம்.

அன்று தேவராஜ் – மோகன் தொடங்கி இன்று தியாகராஜன் குமாரராஜா, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் என்று அந்த வளையம் பெருக்கிறது. 

இப்போது பயணிப்பவர்களின் வயதுகளோடு ஒப்பிட்டால் இவரின் இசைப் பயணத்தின் இரண்டு மடங்கு கொள்ளும்.

தன் இசை மேடைகளில்  வயலின் தொடங்கி ஒவ்வொரு வாத்தியத்துக்குமாக சாரி சாரியாகக் கலைஞர்களை மேடையில் நிரப்பி, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தன் பாடல்களை மீண்டும் இசைக்கும் போது, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு என்ற சொலவாடையையும் தாண்டி, ஒத்திசைவாக எல்லாக் கலைஞர்களும் பிசிறின்றி இசைக்கும் போது தொலைக்காட்சியில் பார்க்கும் போதே மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்.

அன்னக்கிளியில் தொடங்கிய சாம்ராஜ்ஜியம், தமிழ் கடந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ஒரே சமயத்தில் இருந்தது ஒன்றும் அவ்வளவு இலேசுப்பட்ட காரியமல்ல. இதைத்தவிர ஹிந்தி, மராட்டி மொழி சார்ந்த படைப்பாளிகள் இவரைத் தேடி வந்து தம் படைப்புக்கு இசையால் சிறப்பும், பெருமையும் சேர்க்கவேண்டும் என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கின்றது. ஒருமுறை ஆனந்த விகடனின் மதன் கேள்வி பதில்களில் "இளையராஜா அமர்ந்த சிம்மாசனத்தில் அவரைத் தவிர வேறு யாரும் அமரமுடியாது" என்று சொல்லியிருந்தார். மேம்போக்காக ஒரு படத்தில் வரும் நான்கோ ஐந்தோ பாடல்களின் ஹிட்டை வைத்துப் பார்க்கும் சராசரி ரசிகனுக்கு இதில் முரண்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால் ஆயிரமாயிரம் பாடல்களைக் கடந்து அந்தந்தப் படங்களிலே இசைஞானி இளையராஜா இழைத்த பின்னணி இசையை எடுத்து ஆராயப் போனால் வாழ்நாள் போதாது. அவ்வளவுக்கு தான் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் ஒரு இணை இயக்குநராக நின்று செயற்பட்டிருக்கிறார்.  

இங்கேதான் இளையராஜாவுக்கும் மற்றைய இசையமைப்பாளர்களுக்குமான வேறுபாடு முன்வந்து நிற்கும். ஒரு படத்துக்கு இன்னென்ன ஒளிச்சேர்க்கை வேண்டும் என்றோ, உடை, அரங்க அமைப்பு, ஏன் பாடல்கள் வரை சுயமாகத் தீர்மானிக்கும் வல்லமை ஒரு தேர்ந்த இயக்குநருக்கு வாய்க்கலாம் ஆனால் அதையும் கடந்து ஒரு முழுப்படத்தின் எழுத்தோட்டத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரையான அசையும் பிம்பத்துக்கான ஓசையைப் பொருத்தி அந்த ஓசையால் உயிர்கொடுக்கும் பணி என்பதே ஒரு சராசரி இசையமைப்பாளனைத் தாண்டி இசைஞானியின் அதீத வல்லமையின் தாற்பரியத்தைக் காட்டும். 

எத்தனையோ இயக்குநர்களை நான் வானொலிப் பேட்டி கண்ட போது அவர்கள் பிரமித்துச் சொன்ன விஷயம் இது. நாட்கணக்காக ஸ்கிரிப்ட் எழுதி எடுத்த படத்துக்கு ஒரு சில மணி நேரத்திலேயே தேவையான இசையால் அந்தப் படத்தின் நிறத்தையே மாற்றி இன்னும் பல படி உயர்த்திக் காட்டியிருக்கிறார் இளையராஜா. இதையே ஒரு இசைமேடையில் பிரபல ஹிந்தி இயக்குநர் பால்கி தன்னுடையை "பா" படத்தின் காட்சியை, பின்னணி இசைக்கு முன்பாகவும், இசைக்குப் பின்பாகவுமாகச் செய்துகாட்டி, "இளையராஜாவின் பின்னணி இசைத் துணுக்குகளை வைத்துக் கொண்டே இன்னும் ஏராளம் பாடல்களை இசையமைக்கலாம்" என்று சிலாகித்திருந்தார். 

ஒரு குறிப்பிட்ட படத்தின் ஓரிரு பாடல்களில் இழையோடும் ஆதார சங்கீதத்தை வைத்தே வெவ்வேறு வாத்தியங்களால் வாசித்துப் பின்னணி இசை கொடுக்கும் மாமூல் இசையமைப்பாளர்களை அதிகம் காணலாம். ஆனால் படத்தின் பாடல்களை முன்னிறுத்தாத இசையை எடுத்துக் கொண்டு அந்தப் படத்துக்கான தீம் ஆகக் காட்டியிருக்கிறார் ராஜா, இதெல்லாம் முப்பது வருஷங்களுக்கு முன்பே, ஒரு படத்தின் கலைநுட்பம் பற்றி ரசிகர்களுக்கு அவ்வளவு ஈடுபாடில்லாத சூழலில் செய்து காட்டியிருக்கிறார். 

இன்றும் நிறம் மாறாத பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை எடுத்துப் போட்டுப் பார்த்தீர்களானால் அந்தத்தப் படங்களுக்குப் பின்னால் செய்து காட்டிய பின்னணி இசையின் மகத்துவம் புரியும்.ஒரு குறிப்பிட்ட இசை மெட்டை வைத்து காதல், சோகம், நகைச்சுவை, ஊடல், அழுகை என்று விதவிதமாக வித்தியாசமான வாத்தியங்களில் வேறுபடுத்திக் காட்டுவதில் ராஜா ராஜா தான்.

கைரளி மலையாளத் தொலைக்காட்சியில் வரும் கந்தர்வ சங்கீதம் என்ற இசை நிகழ்ச்சியில் இந்தப் படம் குறித்து, பாடகி பின்னி கிருஷ்ணகுமார் வழங்கிய பகிர்வு. இந்தப் படத்தை பாடகி பின்னி கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதில் வந்த முக்கிய பின்னணி இசையைக் கேட்டபோது இது என்ன ராகத்தின் வழிவந்தது என்று அவர் தேட, கிட்டியது "மாயா விநோதினி" என்ற ராகம். இந்தப் படத்தின் நாயகி அமலாவின் கதாபாத்திரத்தின் பெயரும் மாயா விநோதினி. பாருங்கள், எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை வைத்தே பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் உழைப்பு மெய்சிலிரிக்க வைத்தது இதைக் கேட்டபோது. ஒவ்வொரு படத்திலும் இயக்குநருக்குச் சரிசமமாக, அல்லது அதற்கும்மேலாக காட்சிகளுக்கு உயிர்கொடுத்ததில் ராஜாவின் பங்கு அளப்பரியது.

இதன்பிறகு கற்பூர முல்லை" திரைப்படத்தை எடுத்துப் போட்டுப் பார்த்தேன். ஒரு காட்சியோடு இழைந்த பின்னணி இசையில் அப்படியே கிறங்கிப் போய்விட்டேன். ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் எவ்வளவு தூரம் ஜீவ நாடியாக அமைகின்றார் என்பதற்கு, இங்கே நான் தரும் ஒரு சிறு பின்னணி இசைக்குளிகை ஒரு சான்று. முறை தவறிப் பிறந்த தன் மகளை ஏற்றுக் கொள்ள முடியாது மூடி மறைக்கும் சமூகத்தில் பிரபலமான தாயும், அதுவரை அவள் தான் தாய் என அறியாத மகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். தன்னை ஏற்கமறுக்கும் தாயைக் கண்டு மருகும் மகளின் மனக்குமுறலாக இங்கே இசை பிரவாகிக்கிறது, அதுவே மகள் பேச ஆரம்பிக்கும் போது தாயின் பக்கம் தாவி மிரட்சியோடு அலைபாய்கின்றது.  இசைஞானி இளையராஜாவின் இத்தகு செல்வங்கள் எவ்வளவோ எண்ணற்ற படங்களில் பின்னணி இசையாக இறைந்து கிடக்கின்றன.கானா பிரபா

ராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது. எண்பதுகளிலே இந்த இரண்டு எல்லைகளையும் கவனித்துக் கொண்டது ராஜாவின் இசை.

நாயகன், ஒரு படைப்பை நேர்மையாகக் கொடுக்கும் போது கிட்டும் அதீத கெளரவம் இந்தப் படத்துக்கும் கிட்டியிருக்கிறது. வெகுஜன அபிமானம் மட்டுமல்ல, Time சஞ்சிகையின் எல்லாக்காலத்திலும் கெளரவித்துக் கொண்டாடக்கூடிய 100 படங்களில் ஒன்று என்ற தனிச்சிறப்பையும் பெற்றிருக்கிறது. கமல்ஹாசன் இந்தப் படத்துக்கு முன்பே எத்தனையோ சோதனை முயற்சிகளின் மூலம் தன் பாத்திரப்படைப்பில் வித்தியாசத்தைக் காட்டமுனைந்திருந்தாலும், ஒரு பூரணத்துவம் என்பது இந்தப் படத்திலேயே கிட்டியிருக்கிறது. அதற்கு மணிரத்னம் என்ற சிறந்த நெறியாளரின் முக்கிய பங்கு கண்டிப்பாகப் பங்கு போட்டிருக்கிறது. கூடவே ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம். இவர்களோடு நம்ம இளையராஜா. பாத்திரங்க்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை முழுமையாக நிரப்பித் தன் பங்கை நிறைவாகச் செய்து, அந்த வெற்றிப்புழகாங்கிதத்திலேயே நின்றுவிடாமல் அடுத்த படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இசைஞானியின் பங்கு இந்தப் படத்தின் ஆரம்ப நிமிடம் முதல் இறுதிச் சொட்டு வரை இசையால் இழைத்து இழைத்துப் பண்ணப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் நுட்பமாகக் கேட்டிருந்திருக்க முடியாது. ஆனால் ராஜாவின் இசை காலம் கடந்தது என்பதற்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் இசைத்துணுக்குகளாகக் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கமல்-மணிரத்னம்-இளையராஜா இந்தப் படத்தில் இணைந்தது போன்ற இன்னொரு வாய்ப்பு வந்தாலும் இந்தப் படம் கொடுத்த சிறப்பிற்கு நிகராக இருக்குமா என்பது ஐயமே.

இசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் "மெளன ராகம்" இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று. எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது. இசைஞானி இளையராஜாவோடு மணிரத்னம் இணைந்து கொண்ட அஞ்சலி, தளபதி போன்ற படங்களின் பின்னணி இசை பற்றிப் பேசப்போனால் ஒரு சில கட்டுரைகளில் முடக்கிப்போட முடியாத அளவுக்குச் சாகித்யம் நிரம்பியிருக்கும்.

"சிந்து பைரவி" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா என்ற அலை வந்தபோதும் பல்லாண்டுகாலமாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை அல்லது கிட்டவில்லை. ஆனால் இந்த இரு இமயங்களும் இணைந்த படங்களிலேயே "சிந்து பைரவி" உச்சமாக அமைந்து விட்டது. சங்கராபரணம் அளவுக்கு எங்களாலும் கொடுக்க முடியும் என்று தமிழ்த்திரையுலகம் சிந்து பாடிய படம் இது

கவிஞர் வைரமுத்துவின் பாடல்களோடு, மகாகவி சுப்ரமணியபாரதியார் பாடல்களும் தெலுங்குக் கீர்த்தனைகளுமாக ராஜபாட்டையோடு இருக்கும் இந்தப் படம் இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டாவது தேசிய விருதைக் கொடுத்து விருதுக்குப் பெருமை தேடிக் கொண்டது. பட்டமா, பாட்டா என்று மனதில் பட்டிமன்றம் போட்ட அந்தச் சின்னக்குயில் சித்ராவுக்கு சிறந்த பாட்டுக்குயில் என்று தேசிய விருதுப்பட்டம் கொடுத்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இளையராஜாவின் இசையில் வெளிவந்த படங்களிலே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த "ஆண்பாவம்" முக்கியமானது. வழக்கமாக இப்படியான நகைச்சுவை கலந்த படத்துக்கு வயலின் போன்ற ஒற்றை வாத்தியத்தை வைத்தே பெரும்பாலும் இசையமைப்பாளர் தன் பின்னணி இசையை ஒப்பேற்றிவிடுவார். ஆனால் பாருங்கள் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி கொடுத்த தனித்துவமான இசைக்கலவை ஒவ்வொன்றும் கேட்கும் போது மனதில் புதுப்பூம்புனலை உருவாக்கும் வல்லமை கொண்டது.

ஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. கொல்லங்குடி கருப்பாயியை வைத்து மூன்று பாடல்களைப் பாடவைத்தது ஒரு புதுமை.

இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.

கேரளத்தின் பெரும் எழுத்தாளர் M. T.வாசுதேவன் நாயர் எழுதிய கேரளவர்மா பழசிராஜா என்ற காவியத்தை இயக்கியவர் மலையாளத்தின் உச்ச இயக்குநர்களில் ஒருவரான ஹரிஹரன். இசையமைப்பை இசைஞானி இளையராஜா கவனித்துக் கொள்ள, ஒலிச்சேர்க்கையை ஆஸ்கார் விருதைக் கவர்ந்த ரசூல் பூக்குட்டி கவனித்துக் கொண்டார். 2009 ஆம் ஆண்டு தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜா, சிறந்த ஒலிச்சேர்க்கைக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த துணை நடிகைக்கான தேர்வுக்குழுவின் சிறப்பு விருதாக பத்மப்பிரியா ஆகியோருக்கு இந்தப் படம் உச்ச விருதுகளைக் கொடுத்துக் கெளரவித்தது.

பழசிராஜாவின் பின்னணி இசைக்கோர்ப்பில் ராஜாவின் இசையை Hungarian National Philharmonic இன் இசைவல்லுனர்கள் இசைய வைத்தார்கள். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஏற்கனவே பட்ஜெட்டை மீறிய செலவாகிவிட்டது எனவே ஹங்கேரிய இசைக்குழுவை வைத்துப் பண்ணுவதைத் தவிர்த்து விடலாம் என்று இயக்குநர் வேண்டினாலும் ராஜா, "இந்தப் படத்தை இன்னொரு முறை எடுக்கப் போகிறீர்களா, இதிலேயே சிறப்பாகக் கொடுத்து விடுவோமே" என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். ராஜாவின் தளராத அந்த எண்ணம் தான் இப்படத்தின் பின்னணி இசையில் பெரும் உச்சத்தைக் காட்டியிருக்கிறது.

இந்தியத் திரைவரலாற்றில் பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பழசிராஜாவுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்குக் கிட்டியதும் அவரின் உயிர் ரசிகர்கள் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தி இருந்தால் பின்னணி இசைக்கான தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 20 ஐ ஆவது அள்ளியிருப்பார் எங்கள் ராகதேவன்.

பழசிராஜா பின்னணி இசையைக் கேட்கும் போது பழசிராஜா என்ற பெருங்காவியத்துக்கு இசைஞானியின் எல்லைகடந்த இசைக்கோர்ப்பு எவ்வளவு தூரம் பெரும் பலமாக இருக்கின்றது என்பதை உணரமுடிந்தது. காட்சிகளின் நுட்பத்தை உணர்ந்து ஒரு காட்சியிலேயே வரும் பலவிதமான உணர்வுக் கலவைகளையும், காட்சிகளின் வீரியத்தையும் பார்வையற்றவனின் மனக்கண்ணிலே கூடப் பிரகாசமாய்க் காட்டும் உயரிய சங்கீதமாக இந்த இசைக்கலவை விளங்கி நிற்கின்றது. பின்னணி இசையிலே இசைஞானியின் உச்சத்தைத் தொடுவதற்கு இனிமேல் தான் ஆண்டவன் கருணை கூர்ந்து யாரையாவது பிறப்பெடுக்க வைக்கவேண்டும் என்பது போன்றதான உணர்வலையை உண்டுபண்ணும் இசைஜாலத்தின் சங்கமம் இந்தப் படம். சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தும், வீரத்தில் வெகுண்டெழுந்தும், பலவீனப்பட்டு வீழும் போது முடங்கி முனகியும், பழசிராஜாவின் பெரும்பயணத்தில் அவருக்குத் துணையாக வந்த தளபதி இடைச்சேன குங்கன் போல இசைஞானி இளையராஜாவின் இசை வியாபித்து நிற்கின்றது.

ஷிவா என்ற தெலுங்குப் படம் அதே ஆண்டில் தமிழில் "உதயம்" என்று மொழிமாற்றப்பட்டுத் தமிழகத்திலும் பேராதரவைச் சந்தித்தது. சைக்கிள் செயினைக் கழற்றிச் சுழற்றி அடிக்கும் ஸ்டைல் பலரைக் கவர்ந்த ஒன்று. தெலுங்கில் 155 நாட்கள் ஓடிய இந்தப் படம் தேவி என்ற தியேட்டரில் 3 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 62 நாட்கள் ஓடியது இன்றுவரை சாதனையாகக் கொள்ளப்படுகின்றது.

ஒரு பரபரப்பான படத்துக்குத் தேவையான முழுமையான உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடிந்து இறுதியில் ஓடும் எழுத்தோட்டம் வரை பயணிக்கும் பின்னணி இசையில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மெல்லிசை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தவிர மற்றைய அனைத்துக் காட்சிகளுக்கான இசையுமே அதிரடி தான்.

பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது கீதாஞ்சலி என்ற தெலுங்குப்படம் இது இதயத்தைத் திருடாதே என்று தமிழில் மொழிமாற்றம் கண்டது. மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமும் , இசைஞானி இளையராஜாவும் படம் முழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.

எண்பதுகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த இசைஞானிக்கு கீதம், காதல், கிராமம் என்றிருந்தால் மனுஷர் அடிபின்னி விடுவார். அதைத் தான் இங்கேய்யும் காட்டியிருக்கின்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முன்னர் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முரளியை வைத்து ஒரு படம் தயாரித்த போது அந்தப் படத்துக்கு கீதாஞ்சலி என்று பெயர் சூட்டியவர் இளையராஜா. சில வருஷங்களுக்குப் பின் அதே தலைப்பு தெலுங்குக்குப் போய் இன்னொரு கதையோடு வரும் போது அங்கேயும் தான் இசையமைப்பேன்னு எண்ணியிருப்பாரா என்ன? இன்னொரு விஷயம் இளையராஜாவின் பக்தி இசைத் தொகுப்பு ஒன்றுக்கும் பெயர் "கீதாஞ்சலி".

இந்தப் படத்தில் வரும் ஆத்தாடி அம்மாடி பாட்டின் இடையில் வரும் ஆர்மோனிய இசையைத் தன் இசைக் குழுவில் இருந்தவர் சரிவர உள்வாங்காமல் இசையமைக்க, சலித்துப் போய் அந்த ஆர்மோனிய இசையைத் தானே இசையமைத்துப் பாட்டை உருவாக்கினார் இளையராஜா என்று இந்தப்பாடலைப்பாடிய பாடகி சித்ரா சிட்னி சொல்லியிருந்தார்.

ஆவாரம் பூ, படத்தின் ஆரம்ப இசையில் மிளிரும் புல்லாங்குழலும், கிட்டாரும், வயலினும் கொடுக்கும் சங்கதிகளும் சரி, படம் முடியும் வரை அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப ஆர்ப்பரித்தும், அடங்கியும், எழுந்தும், தொடரும் இசை என்னும் அந்த இன்ப வெள்ளம் இப்படம் முடிந்ததும் கூட அசை போட வைக்கின்றது. இளையராஜாவின் பல நல்ல இசை கொண்ட படங்களின் பாடல்களின் ஒலிப்பதிவு வெகு சுமாராய் கூட இருந்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை சீடியிலும் சரி, படத்தினைப் பார்க்கும் போது வரும் போதும் சரி மிகத் துல்லியமாக வாத்தியங்களின் வேறுபாட்டையும் அவற்றின் சிறப்பான ஒலிநயத்தையும் காட்டி நிற்கின்றன. தனிமை, மையல், காதல், சோகம் என்று விதவிதமான இசைப்படையலாக அமைந்து நிற்கின்றது "ஆவாரம்பூ" பாடல்களின் அணி.

"முதல் மரியாதை" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா உலக ரசிகர்களால் மரியாதைக்குரிய படமாகப் போற்றப்படுகின்றது. 

பின்னணி இசையைப் பொறுத்தவரை குயிலோசை, குழலோசை படமெங்கும் ஆங்காங்கே தூவ மற்றைய கிராமிய வாத்திய இசையும் கலக்கின்றது.

ஏ கிளியிருக்கு, அந்த நிலாவத்தான் போன்ற பாடல்களுக்கு ராஜாவின் குரல் தான் பொருத்தமானது, அது போல் பூங்காத்து திரும்புமா, வெட்டி வேரு வாசம் போன்ற பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி போன்றவர்களால் தான் கிராமியத்தனத்தை பாடல்களில் கொண்டுவர முடியும். அதையே உய்த்துணர்ந்து ராஜா கொடுத்திருக்கின்றார்.

இதே ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்காக "சிந்து பைரவி" திரைக்காக தேசிய விருது பெற்ற இளையராஜா முதல்மரியாதை திரைப்படத்துக்கும் போனசாக பெற்றிருக்கவேண்டும்.

கடலோரக்கவிதை படத்தை ஓடவிட்டு இறுதிக்காட்சியை ஒரு முறை கவனித்துப் பாருங்கள், கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக எந்தவிதமான வசனங்களும் இல்லாமல் வெறும் இசைக்கலவையோடு மட்டுமே பின்னப்பட்டு, வாத்தியக் கலவைகளின் நர்த்தனம் அழகிய பிரவாகமாகப் பெருக்கெடுக்கின்றது. அடி ஆத்தாடி பாடலின் இன்னொரு வாத்தியக் கோர்வையும் கலந்து இங்கே வயலின் உட்பட பல வாத்தியங்களில் அந்த மெட்டு இசைக்கப்படுகின்றது.

பிறவிப்பிணி என்னும் தளையால் கட்டுண்ட ஆன்மா இறைபதம் நாடி இறைமேல் பற்று வைத்து முத்தி நிலையை அடைதல் என்னும் உட்பொருளோடு அமைகின்றது குணா படத்தின் உட்பொருள், இப்படியான படங்களில் ராஜாவின் தேவை எவ்வளவு தூரம் பொருந்தியிருக்கிறது என்பதை "பார்த்தவிழி பார்த்தபடி பார்த்து இருக்க" பாடலில் இருந்து படத்தின் இறுதிக்காட்சியில் குணா, அபிராமி மலையுச்சியிலிருந்து பாய்ந்து தம்மை மாய்த்து கூடு விலகல் வரை உணர்த்தப்படும். இதே மாதிரியான கமல் - ராஜா அலைவரிசையின் ஒத்திசைவு ராஜபார்வை, விருமாண்டி, ஹேராம் என்று பட்டியல் நீளும்.

"ஒரு நல்ல வாகான, சிற்பவேலைப்பாட்டுக்கேற்ற பாறை ஒரு சிற்பிக்குக் கிடைக்கிறது. பிறகு அவர் அந்தப் பாறையைக் கொண்டு அழகிய ஒரு சிலையை வடிப்பதற்காக அந்தப் பாறையின் தேவையற்ற பகுதிகளைக் களைந்து விட்டு, தனது கற்பனையால் கைவண்ணத்தால் அந்தப் பாறையை உருமாற்றி எல்லோரும் பாராட்டும் அழகிய சிலையாக எப்படி வடிவமைக்கிறார். அப்படிதான் ஒரு நாவலைத் திரைப்படம் ஆக்கும் கலையும்" இப்படிச் சொல்கிறார் சினிமாவும் நானும் என்னும் தனது நூலில் இயக்குநர் மகேந்திரன்.

முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரனின் முதல் திரைப்படம்.

கமல்ஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லும் மகேந்திரன் படத்தின் பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி இளையராஜாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்கிறார்.

படத்தை ரீரிக்கார்டிங் செய்வதற்கு முன்னர் பார்த்த தயாரிப்பாளர் வேணுச்செட்டியார் "அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல" என்று திட்டித் தீர்த்தாராம். ஓடாத படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்றும் ஒதுங்கிவிட்டாராம். படம் நூறு நாள் கண்டபோது blank cheque கை எடுத்து வந்து "மகேந்திரா,என்னை மன்னிச்சுக்கோ" என்றபோது அன்பாக மறுத்துவிட்டாராம் மகேந்திரன்.

இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் "முள்ளும் மலரும்" என்கிறார் மகேந்திரன்.

தன் காலத்தைத் தாண்டிச் சிந்தித்துப் படைப்பாற்றல் பண்ணியவர்கள் காலம் கடந்துதான் இன்னும் அதிகம் பேசப்படுவார்கள். அதை இளையராஜாவின் இசையாற்றலுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். அவர் சினிமா உலகுக்கு வந்த காலம் தொட்டு இன்று வரை கொடுத்த இசை நுணுக்கங்களை உள்வாங்கும் பக்குவம் எவ்வளவு தூரம் அந்தந்தக் காலகட்டத்து ரசிகர்களுக்கு இருந்திருக்கின்றது என்பது கேள்விக்குரியதொன்று. ஆயிரமாயிரம் பாடல்களால் வசீகரித்த இந்த இசையமைப்பாளனின் முழுமையான பக்கம், பல நூறு படங்களுக்கு இவர் கொடுத்த பின்னணி இசையை விலாவாரியாக எடுத்து ஆராயும் போதுதான் புலனாகும். ஆனால் அதெல்லாம் அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன? அவரோடு பணியாற்றிய இயக்குநர்களுக்கே இளையராஜா தம் படைப்புக்களுக்குக் கொடுத்த சங்கதிகளைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்க, இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி இசை ஆவணங்களாகக் கொடுக்கும் நாள் எந்நாளோ என்ற ஏக்கம் அடிமனதில் தானாக வரும். இசைஞானி இளையராஜா காலத்தில் நாம் வாழ்வது என்பது பெருமை அல்ல, தவப்பேறு.

வயது மட்டுமல்ல, தன் சாதனைகளும் வெறும் இலக்கமே என்ற ஓய்வறியாச் சாதனையாளர்

இளையராஜா என்ற இசைப் பேராளுமை நமக்கு ஒரு வாழ்வியல் பாடம்.

ஜூன் மூன்றில் அகவை எண்பத்து மூன்றாய்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசைப்பேரலையே !


கானா பிரபா

02.06.2026