Pages

Saturday, July 18, 2026

இயக்குநர் கே.பாக்யராஜ் இன் பாடலாசிரியர் கவிஞர் வாலி


இன்று கவிஞர் வாலியின் 

நினைவு நாள் ❤️🙏


பல்கலை வேந்தன் இயக்குநர் கே. பாக்யராஜ் இற்கு அதிக பாடல்களை எழுதியதும், அவரின் முழுப் படத்துக்கும் அனைத்துப் பாடல்களும் எழுதியவர் என்ற வகையிலும் கவிஞர் வாலிக்குத் தனியிடம் உண்டு.


“ஒரு பல்லவியை எழுதிக் கொடுத்தா, அதை வாங்கி ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டே இருப்பார் பாக்யராஜ்,


ஒரு நாள் நான் சொன்னேன்

இந்தப் பல்லவியைப் பார்த்துக்கிட்டிருய்யா

நான் பக்கத்துல போயிட்டு வர்ரேன்


சரி! எங்கேன்னு பாக்யராஜ் கேட்பார்


திருச்சி வரைக்கும் போயிட்டு வர்ரேன் என்பேன்”

இப்படி வேடிக்கையாகச் சொல்வார் கவிஞர் வாலி.


அவர் அப்படிச் சொன்னதன் அடிநாதம், பாக்யராஜ் எவ்வளவு தூரம் தன் படப் பாடல் வரிகளில் நுணுக்கம் பார்ப்பார் என்பது தான்.


எங்க சின்ன ராசா படத்தின் கதையைச் சொல்லி விட்டு, படித்த பெண்ணான ராதாவை, படிக்காத பாமரன் பாக்யராஜ் திருமணம் முடித்த பின் எழும் பாடல்.


நான் தந்தனதான் பாட்டு

தாளம் இல்லை

என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை


பாக்யராஜ் சொன்ன அந்தப் பல்லவியின் ஈரடி அப்படியே இருக்கட்டும் என்று விட்டு


நல்ல வைரக்கல்லு பக்கத்தில

உப்பத்தான்

சேர்த்து வச்சது அந்த சாமி 

செஞ்ச தப்புதான்

நான் உப்புதான்


என்று படத்தின் கதையையே அந்த வரிகளுக்குள் அடக்கி விட்டார் வாலி என்று வியந்து பேசியிருக்கிறார் பாக்யராஜ்.


காவடிச் சிந்து படத்துக்காக பாக்யராஜ் எழுதிய “யாரோ சொன்னாங்க என்னன்னு” பாடலின் முழுப் பல்லவியும் அப்படியே இருக்கட்டும் என்று பெருந்தன்மையாக அனுமதித்துச் சரணத்துக்குப் போய் விட்டாராம் வாலி.


பாக்யராஜ் நடிக்காத படத்திற்கு அவர் இசையமைத்த போது வாலியாரின் வரிகளால் மாண்புறு பாடலாக அமைந்தவைகளில் 

“பொண்ணு பாக்கப் போறேன்” படத்தில் அமைந்த 

“சலசலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே” பாடலெல்லாம் இருவரின் பேர் சொல்லும்.


தன்னுடைய ஆரம்ப காலத்தில் கதாநாயக அந்தஸ்து வந்த போதும், நாயகத் தனமான பாடல் வைக்கத் தயங்கிய போது,

“மூக்குத்திப் பூமேலே” (மெளன கீதங்கள்) பாடலின் சந்தோஷம், சோகம் இரண்டையும் எழுதி, பாக்யராஜுக்கு நம்பிக்கையூட்டினாராம் வாலி.


பின்னாளில் “ஒரு நாயகன் உதயமாகிறான்” பாடலைத் தாவணிக் கனவுகள் படத்துக்கு எழுதிய போது தன் வரிகளாலும் தான் சொன்னதை அங்கீகரித்தார் வாலியார்.


“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்று எம்ஜிஆருக்காக “அன்பே வா” படத்துக்காக எழுதிய வாலிக்கே மீண்டும் வந்தது வாய்ப்பு அதே மெட்டினைத் தழுவிய “இந்த ராகமும்” பாடல் என் ரத்தத்தின் ரத்தமே படத்துக்காக.


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “அண்ணா நீ என் தெய்வம்” படத்துக்காகக் கொடுக்கப்பட்ட பாடல்களோடு, மேலதிகமாக பாக்யராஜ் இசையோடும் அந்தப் படக் காட்சிகளை  உள்வாங்கி எடுத்த அவசரப் போலீஸ் 100 படத்திலுமாக இந்த இரண்டு படப் பாடல்களிலும்  பயன்படுத்தப்பட்டவர் வாலி மட்டுமே, ஏனையோர் அந்தந்தப் படப் பாடல்களில் தனித்து இருந்தார்கள்.


கவிஞர் வாலி & இயக்குநர் கே.பாக்யராஜ் கூட்டணியில் அமைந்த பாடல்கள்.


கங்கை அமரன்

1. மூக்குத்திப் பூ மேலே (மெளன கீதங்கள்) சந்தோஷம்

2. மூக்குத்திப் பூ மேலே (மெளன கீதங்கள்) சோகம்

3. ருத்ரா படத்தில் கங்கை அமரன் மற்றும் வாலி பாடல் எழுதியிருக்கிறார்கள்


சங்கர் - கணேஷ் இரட்டையர் இசையில்

1. பொய் சாட்சி படத்தில் எல்லாப் பாடல்களும்( ஜி.ராமகிருஷ்ணன் இயக்கம்) 

மூன்று பாடல்களில் “அதோ அந்தத் தென்றல்” அந்தக் காலத்தில் ஹிட் அடித்ததொன்று.


2. என் ரத்தத்தின் ரத்தமே ( இயக்கம் கே.விஜயன் & சுந்தர் கே.விஜயன்) 2.a) வாத்தியாரே சின்ன வாத்தியாரே

2.b) இந்த ராகமும்


3. எங்க சின்ன ராசா படத்தில் இடம்பெற்ற

3.a) கொண்டைச் சேவல் கூவும் நேரம்

3.b) நான் தந்தனத்தம் பாட்டு

3.c) என் ராத்தூக்கம் போச்சு

3.d) தென்பாண்டிச் சீமை ஓரமா


தேவா இசையில் அம்மா வந்தாச்சு (P.வாசு இயக்கம்) அனைத்துப் பாடல்களும்

1. தினத்தந்தி பேப்பரிலே

2. உனக்கொரு தாயிருக்கா

3. நந்தினி ஓ நந்தினி

4. உனக்காகப் பாடும் ராகம

5. சோப்பு மேடம் 


பாக்யராஜ் இசையில்

1. இது நம்ம ஆளு (பாலகுமாரன் இயக்கம்) 

1.a) நான் ஆளான தாமரை

1.b) சங்கீதம் பாட

1.c) மார்கழி மாசத்து


2. பொண்ணு பாக்கப் போறேன் (N.முருகேஷ் இயக்கம்)

சல சலவென ஓடும


3. சகாதேவன் மகாதேவன் (இராம நாராயணன் இயக்கம்) படத்தில் ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி ஒரு பாடல் மட்டும் பாக்யராஜ் ஏற்கனவே இசையமைத்தது பயன்பட்டது 


4. ஆராரோ ஆரிரரோ 

4.a) என் கண்ணுக்கொரு நிலவா

4.b) ஒரு மூணாம்பிறை பாரு

4.c) ஓடைப்பக்கம் ஒரு குருவி

4.d) என்ன பிகர்

4.e) தானா தலையாடுண்டா


5. காவடிச் சிந்து (படம் வெளிவரவில்லை, பட்டணந்தான் போகலாமடி படத்தில் ஜாமக்கோழி பாடல் மீளப் பயன்பட்டது) 

5.a) சங்கீதம் எனக்கு

5.b) யாரோ சொன்னாங்க

5.c) என்ன குறை ராசாவே

5.d) ஜாமக்கோழி கூவியாச்சு

5.e) ஒரு பூ பூத்தாட

5.f) ஒரு எட்டுமுழ வேட்டி

5.g) வெத்தலைக்காடு

5.h) மாவோவ் அடிக்கடி


6. பவுனு பவுனு தான் 

6.a) தேதி ஒண்ணு பாத்திருக்கேன்

6.b) முல்லைப்பூ வாசம்


7. அவசரப் போலீஸ் 100 படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (ஶ்ரீதரின் அண்ணா நீ என் தெய்வம்) மற்றும் பாக்யராஜ் இசையில் அமைந்த பாடல்கள்


இசைஞானி இளையராஜா இசையில்


1. விடியும் வரை காத்திரு அனைத்துப் பாடல்களும்

  1.a) அபி நயம் காட்டு

 2.b) பேசு என் அன்பே

 3.c) நீங்காத எண்ணம் ஒன்று


2. தூறல் நின்னு போச்சு

     தாலாட்ட நான் பொறந்தேன்


3. தாவணிக் கனவுகள்

        ஒரு நாயகன் உதயமாகிறான் 


4. ராசுக்குட்டி

       4.a) பாளையத்துப் பொண்ணு

        4.b) வாடி என் செங்கமலம்


5. வீட்ல விசேசங்க (ஒரு பாடல் தவிர அனைத்தும்)

5.a) மலரே தென்றல் பாடும் (சந்தோஷ)

5.b) மலரே தென்றல் பாடும் (சோகம்)

5.c) இந்த பஸ்ஸு தான் 

5.d) கொஞ்சம் சங்கீதம்

5.e) ஜிங்கான் ஜினுக்குத்தான்


6. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (அனைத்துப் பாடல்களும்)

6.a) வந்தாள் வந்தாள்

6.b) ராஜா ராஜா தான்

6.c) அழகு நிலா 

6.d) கண்மணி காதல் 

6.e) ஒரு மைனாக்குஞ்சு

6.f) எத்தனை நாளா


கவிஞர் வாலி & இயக்குநர் கே.பாக்யராஜ் கூட்டணியில் அமைந்த

90 வீதமான பாடல்கள் என் மனம் கவர்ந்தவை எனினும் இந்தப் பதிவை எழுதும் போது இரண்டு பாடல்கள் காதுக்குள் ஓடிக் கொண்டிருந்தன.


ஒன்று


தாலாட்ட நான் பொறந்தேன்

தாலே தாலேலோ

தலையாட்ட நீ பொறந்தே

ஆரோ ஆரிராரோ


https://youtu.be/PFN983wbvsA?si=5plMm15hIpUWPddC


இன்னொன்று


முல்லைப்பூ வாசம் உசுப்புது மானே மானே


https://youtu.be/5NSA5xPR-To?si=Nt4bbpnmpVU8-vRL


கே.பாக்யராஜ் இன் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள்.


கானா பிரபா

18.07.2026

Sunday, July 12, 2026

மலையாள தேசத்தில் எஸ்.ஜானகி

 கிளியே கிளியே

மணி மணி மேகத் தோப்பில்

ஒரு மலர் நுள்ளான் பூக்கும் 

அழகின் அழகே….


https://youtu.be/Qk5rfuCTU9U?si=Ek1vyvEg_eKO3j2s


மற்றைய மொழிக்காரர்களை விட்டு விடுங்கள். இந்த மலையாளிகள் தம்

தேசத்துப் பாட்டுக்காரர்களில் கூட அணை போட்டு வைத்திருப்பார்கள்.

ஆனாலும் ஆச்சரியங்கள் நிகழ்ந்ததுண்டு.


அண்டை வீட்டு சங்கீதக்காரர்கள்

அரிதாகவே கொண்டாடப்பட்ட காலம் அது.

விதிவிலக்காக இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரை 

சலீல் செளத்ரி என்றும், இளையராஜா என்றும் கொண்டாடினார்கள்.


பாடகி என்று வரும் போதே பி.லீலா போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே ஜானகியை அரவணைத்து விட்டார்கள்.


1957 ஆம் ஆண்டில் “மின்னுன்னதெல்லாம் பொன்னல்ல” படத்தில் எஸ்.என்.ரங்கநாதன் இசையில் “இருள் மூடுகையோ என் வாழ்வில்” என்ற சோகப் பாட்டு.


அந்தப் பாட்டு ஹிந்தியில் முன் அப்போது வெளியான நாகின் படத்தின் இசைத் தழுவல்.


இதே ஆண்டு தான் சலபதி ராவ் இசையில் “விதியின் விளையாட்டு” (படம் வெளிவரவில்லை)  "என் ஆசை பாழானது ஏனோ" என்ற சோகப் பாடல் தொடக்கமானது.

ஆனால் அந்த முரண் ராசி  எல்லாம் இந்தக் குரலரசி அடுத்த தசாப்தங்களைக் கட்டி ஆள்வதைத் தடுக்கவில்லை.


ஒரு காலம் வரை 

“தும்பி வா தும்பக் குடத்தின்” 


https://youtu.be/BtAoUN0-yxg?si=PyMm1rPqPnfttOpK


பாடல் தான் கேரளத்தவர் மனம் நிறைந்தது என்று எண்ணியிருந்தேன்.

ஆனால் காலம் நிறைய நிறைய, 

மலையாளத் திரையுலகில் கூடத் தனக்கொரு சாம்ராஜ்ஜியத்தை ஜானகி நிறுவியிருப்பது துலங்கியது.


வகை தொகையில்லாமல் அங்குள்ள இசையமைப்பாளர்கள் எல்லோருமே அவர் குரலை அரவணைத்திருக்கிறார்கள்.


“பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்” என்று ரவீந்திரன் மாஸ்டர் இசையில் “ரசிகன் ஒரு ரசிகை” யில் கேட்ட அந்தப் பாடலின் நதி மூலம் அவரிசையில் ஜானகிம்மா பாடிய

“தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி”


https://youtu.be/4KdSr-_582Q?si=3-731w3tpnr6h2uF


“ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ” பாடலுக்கு மலையாள நிறம் பூசி அழகு பார்த்த இளையராஜாவின்

“வீணே வீணே வீணைக்குஞ்சே”


ஜானும்மா வாழும் காலத்திலேயே அவரின் பெருமையை அவர் பாட்டைப் பாடிப் பெருமை சேர்த்த சித்ராவின் 

“மலர்க் கொடி போலே வர்ணத் துடி போலே”


https://youtu.be/b4IukJRngI4?si=0m3LPisLpeCAIvli


கேட்டுவிட்டு அப்படியே ஜானும்மா குரலுக்குத் தாவ வேண்டும்


https://youtu.be/-zuJY2MsAJY?si=w7NSIdmXNX4EMxoq


அந்த மலர்க் கொடியில் தான் எத்தனை வளைவுகள் அந்த குரலில். சலீல் செளத்ரியின் அற்புதமான சாகித்தியம் அது.





https://youtu.be/h7h9flbk7-4?si=qWecFrErhHs6gwCC



கேட்ட நாளில் இருந்து அந்தத் தேன் கூட்டிலேயே சிக்கி விட்டது மனசு.



ஜான்சன் மாஸ்டரின் “கூடெவிடே” படத்தில்

“ஆடி வா காற்றே”


https://youtu.be/E8KTUMgks9k?si=lviQ93Lx-ற்ஃட்ட்6


எம்.பி.ஶ்ரீனிவாசன் தந்த “ஏட்டுமானோர் அம்பலத்தில்”


https://youtu.be/GCAYAfIdUeM?si=FwR71X-cMtpjwpVW


என்று தொடரும் ஜானகி


ஸ்வரண முகிலே ஸ்வர்ணமுகிலே


https://youtu.be/WXgEADeRiRU?si=JI-S4qMkhcsbYnzy


என்று இது நிஜங்களோட கதா படத்தில்,  அவர் பாடியது, இந்தப் படத்தின்  மூலமான பாலைவனச் சோலையில் நாம் கேட்ட “மேகமே மேகமே” பாடலுக்குத் துளி கூடச் சம்பந்தமில்லாத சங்கீதம்.


பாபுராஜ் மாஸ்டரின் “காட்டுத்துளசி” படத்தில் சுசீலா, ஜிக்கி,எல்.ஆர்.ஈஸ்வரி என்று பாடகிகளுக்கு ஒவ்வோர் பாட்டு அங்கே ஜானகியின் வானம்பாடி


https://youtu.be/5QvWHZN8hO8?si=lqCBLrbN9NWimew1


தனித்துத் துலங்கும்.



இன்றும் ஏஷியா நெட், அம்ருதா போன்ற தொலைக்காட்சிகளில் பாட்டுப் போட்டி என்று வந்து விட்டால் பழைய நினைவுகளில் தோய்ந்து ஜானும்மாவின் பெருமை தனைப் பேசுகிறார்கள் இசையுலகில் கோலோச்சும் நடுவர் பெருமக்கள்.


கேரளாவுக்கு வெளியே இருந்து வந்து மொத்தம் 11 கேரள அரசு விருதுகளைப் பெற்ற பாடகி என்ற தனித்துவத்தையும் எடுத்துக் கொண்டார் ஜானகி.


இளையராஜா எங்கு சென்றாலும் நாமும் அங்கே போய் விடுவோம்.  அங்கேயும் ஜானும்மா இருப்பார்.

அப்படித்தான்

“கொஞ்சிக் கரையல்லே” 


https://youtu.be/Yd4TOWLCof8?si=7kz1qM7lumdqDVcZ


துன்பச்சுவையை ரசித்தோம்.


தான் போகும் இடமெல்லாம் அந்த ஆலாபனைக் குயிலை விட்டு நீங்காமல் அவரும் இருப்பதால் அதே படத்தில்

“பூங்காற்றினோடும்” 


https://youtu.be/ADU0B95tbvo?si=jvkHaJ7K5obnuduE


பாடலில் ஜானும்மாவின் ஆலாபனையில் சொக்கிப் போனோம்.



“கிளியே…கிளியே…”

“தும்பி வா தும்பக் குளத்தே..”


இந்த இரண்டு படங்களும் அவலச்சுவை கொண்டு எடுக்கப்பட்ட படங்கள். இரண்டிலும் பூர்ணிமா ஜெயராம்.

பூர்ணிமா ஜெயராம் என்றதும் ஓளங்கள் படத்தில் “வேளாம்பல் கேளும்”


https://youtu.be/5mFWbNVMggU?si=xk1oC7vklgdFcy_ஜ்


ஜேசுதசைப் பாட விட்டு ஆலாபனை அரசி ஜானகி காட்டுவாரே பாட்டு முழுக்க அப்பப்பா..


அப்படியிருந்தும் செவ்வியல் சுவையோடு நினைவு மீட்டிக் கொண்டிருக்கிறது இந்த உலகம்.

ஜானகியின் குரலைத் தம் தாயின் தாலாட்டாக அள்ளியெடுத்துச் சுமக்கிறது.


கானா பிரபா

12.06.2026


Thursday, July 9, 2026

கே.பாக்யராஜின் பாடலாசிரியர்கள் ஆர்.பி.விஸ்வம் & பா.விஜய்


 

“முத்துத்தாரகை வான வீதி வர

தங்கத்தேரென பூவை தேடி வர

ஊர்கோல நேரமிது”

https://www.youtube.com/watch?v=37zQ4nrGnOk


என்ற அற்புதமான பாடல் கே.பாக்யராஜின் ஒரு கை ஓசை படத்தில் இடம்பெற்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எஸ்பிபியுடன், சுசீலா பாடியிருப்பார்.

அந்தப் பாடலை எழுதியவர் பின்னாளில் பிரபல வில்லனாகத் திகழ்ந்த ஆர்.பி.விஸ்வம்.



இன்று பாடகர் உன்னிகிருஷ்ணனின் பிறந்த நாள்.

இயக்குநர் கே.பாக்ராஜின் பாடலாசிரியர்கள் என்று வரும் போது தவிர்க்க முடியாத இன்னொருவராக இருப்பவர் பா.விஜய்.

அந்த வகையில் இரண்டும் பொருந்திப் போகப் பயணிக்கிறது இந்தப் பதிவும்.


பாக்யராஜ் ஒரு தலை சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, தன்னை ஒரு பத்திரிகையாளராகவும் அடையாளப்படுத்த ஒரு வாய்ப்பு அமைந்தது “பாக்யா” சஞ்சிகை மூலம். 

சொல்லப் போனால் அவர் இயக்குநரான ஆரம்ப காலத்திலேயே அந்த முயற்சியில் இறங்கினாராம். ஆனால் பத்திரிகையாளர் சோலை கொடுத்த அறிவுரை “இரண்டு தோணியிலும் கால் வைக்க வேண்டாம்" என்று.

எனவே “பாக்யா” பத்திரிகை காலச் சூழலுக்கேற்ப வந்தது. புதிய புதிய கவிஞர்கள் அடையாளப்படுத்தப்பட்டார்கள்.


பாக்யராஜின் அண்ணன் வழியாக பா.விஜய் தனது 19 ஆவது வயதில் பாக்யராஜிடம் சேர்கிறார்.

“ஒரு தேர்ந்த சமையல்காரரிடம் தொழில் கற்றுக்கொள்ளப் போனால் இலையில் தண்ணீர் தெளிக்கும் நேர்த்தியில் இருந்து, உருசியான சமையல் கற்றுத் தரும் ஒரு வித்தைக்காரர் போலத்தான் பாக்யராஜ்" என்று தன் குருநாதர் பற்றிச் சிலாகிப்பார் பா.விஜய்.


பாக்யராஜே ஒரு தலை சிறந்த பாடலாசிரியராகப் பல்லவி ஆக்குவதில் வல்லவர்.

எடுத்த எடுப்பிலேயே திரைப்படத்துக்குப் பாட்டு எழுத அவரை ஈடுபடுத்தவில்லை. இரண்டாண்டுகள் மெட்டுக்குப் பாட்டு எழுத அவரிடம் கற்றுக் கொண்டேன் என்றார் பா.விஜய்.

அதையே பாக்யராஜும் சொல்லி இருக்கிறார். 


பாக்யராஜ் தன் ஊரில் இருந்த போது சக நாடகக்காரராக அறிமுகமானவர் ஆர்.பி.விஸ்வம். இருவரும் இணைந்தும் நாடகம் போட்டிருக்கிறார்கள்.

காலம் பின்னால் பாக்யராஜின் உதவி இயக்குநர் படையில் விஸ்வத்தையும் இணைத்தது.



இந்த நிலையில் ஞானப்பழம் படத்தை ஆர்.பி.விஸ்வம் இயக்கும் போது ஒரு இடைவேளைக்குப் பின் மீண்டும் பாக்யராஜ் இசையமைப்பாளர் ஆகிறார்.

அந்தப் படத்தில் பா.விஜய் பாடலாசிரியராகப் பிறக்கிறார்.


“யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்

 அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்”

https://www.youtube.com/watch?v=QRWeVVy-rMk


ஞானப்பழம் படத்தில் மேலும் இரண்டு பாடல்களை எழுதியதோடு, தொடர்ந்து பாக்யராஜின் படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பையும் பெறுகிறார் பா.விஜய்.


சொக்கத் தங்கம் படத்தை புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை வைத்து கே.பாக்யராஜ் இயக்கிய போது பா.விஜய் கொடுத்த “என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு” 

https://www.youtube.com/watch?v=poEPQmpENPs

இன்னொரு குறிப்பிடத்தக்க முத்து.


“வித்தகக் கவிஞர்” என்ற அடையாளச் சிறப்பு மிக்க, முன்னணிப் பாடலாசிரியராக இன்று விளங்குகிறார் பா.விஜய்.

அதனிலும் பெருமை

“நீ திரைப்படப்பாட்டு எழுதுவது மட்டுமல்ல வெண்பாவும் மிகச் சிறப்பாக எழுதுகிறாய் அதனால் தான் உன்னை என் வாரிசு என்றேன்” என்று கவிஞர் வாலியின் பாட்டு வாரிசாக அடையாளப்பட்டார்.

காவிரியில் வந்து கங்கை

கை சேர்க்க வேண்டும்

நாமும் அதில் சென்று 

காதல் நீராட வேண்டும்

ஈழத்தில் போர் ஓய்ந்து

தேன் முல்லை பூ பூத்து

நீ சூட தர வேண்டுமே.....

கே.பாக்யராஜின் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள்.


கானா பிரபா

09.07.2026


Wednesday, July 8, 2026

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் SPB ❤️

பாரதிராஜாவின் படக் கதைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இசையமைத்த நிகழ்வும் அமைந்தது.

பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ரயில்” படத்திலும் பாலசுப்ரமணியம் பாடும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும் தெலுங்கில் அந்தப் படம் Toorpu Velle Railu என்று உருவான போது அந்தப் படத்தின் இசையமைப்பாளரே அவர் தான். ஆண் பாடகராக அனைத்துப் பாடல்களையும் பாடியளித்தார். 

தமிழில் சுதாகர் நாயகனாக நடித்த அதே பாத்திரத்தைத் தெலுங்கில் ஏற்றவர் எஸ்பிபிக்கு மிகவும் பிடித்த நடிகர் மோகன் தான்.

ராதிகாவை அந்தக் காலத்தில் ரயில் நடிகை என்று அழைப்பார்கள். சொல்லப் போனால் இன்னொருவரையும் ரயில் நடிகை என்று அழைக்கலாம். அதுவும் இரட்டை ரயில்.

அவர் “கிழக்கே போகும் ரயில்" திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பான Toorpu Velle Railuதெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜோதி.

அதென்ன இரட்டை ரயில் என்றால், அதே ஜோதி தமிழில் அறிமுகமான திரைப்படம் T.ராஜேந்தரின் “இரயில் பயணங்களில்".

இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், பாடும் நிலா SPB யும் 

தம் திரையுலகத் தொடக்க காலத்திலேயே நட்போடு இருந்ததும், 

“மயிலு” கதையை எஸ்பிபியே “பல்லவி பிக்சர்ஸ்" இல் தயாரிக்க விரும்பியதும், அதில் அவரை டாக்டராக நடிக்க வைக்க இருந்ததும் கை கூடாமற் போனதும்,

பின்னர் “16 வயதினிலே” படத்தின் பூஜைப் பாடலான “செவ்வந்திப் பூமுடிச்ச சின்னக்கா” பாடலையும் எஸ்பிபி பாட முடியாமல் போனதும் நாமெல்லாம் அறிந்த செய்தி.

16 வயதினிலே தெலுங்கில் Padaharella Vayasu ஆனபோது அங்கே இசைமைப்பாளர் சக்கரவர்த்தி இசையில் பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி மட்டுமே பாடகர்கள்.

புதிய வார்ப்புகள் Kotha Jeevithalu பாரதிராஜாவே தெலுங்கில் மீள எடுத்தது அங்கே எஸ்பிபி

எங்கும் நிறைந்த பாடலை தெலுங்கில் Pongi Porale என்று கொடுத்தார்கள்.

அலைகள் ஓய்வதில்லை படத்தை கார்த்திக் & அருணாவை வைத்து Seethakoka Chilaka என்று எடுத்த போது தரிசனம் கிடக்காதா? மற்றும் காதல் ஓவியம் பாடும் காவியம் இரண்டின் தெலுங்கு வடிவத்தைப் பாடியவர் எஸ்பிபி.

இப்படியாகத் தமிழில் பாரதிராஜாவின் படத்துக்கு நேரடியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் வாய்ப்பு அமையாத சூழலில் அவருக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு “நிறம் மாறாத பூக்கள்” வழியாக பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் இசைஞானியின் இசையில் அமைகிறது.

அந்தப் பாடலின் ஆரம்பத்தை பாருங்கள், காத்திருந்து அமைந்தது போல இருக்கும், அதுதான்

“முதன்முதலாக் காதல் டூயட் பாட வந்தேனே”

இளையராஜாவின் சினிமாத்தேடலைப்  பிரதிபலிக்குமாற்போல 46 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முன்னோட்டப் பாடல் வாலியார் கை வண்ணத்தில் அமைகிறது. அதுவும் காட்சியொன்றில் இளையராஜாவுக்கு எஸ்பிபியே குரல் கொடுக்குமாற் போல அமையும் அந்தப் பாடல் தான், பாரதிராஜாவின் “நிழல்கள்” படத்தில் அமைந்த

“மடை திறந்து தாவும் நதியலை நான்”

பாடலாசிரியர் வைரமுத்துவின் பாட்டுப் பயணத்தின் திறவுகோலாய் அமைந்த பாட்டும் இங்கே நிகழ்கிறது.

“இது ஒரு பொன்மாலை பொழுது” ஆக.

இலங்கை வானொலியின் இசை அணித் தேர்வில் பலவாரங்கள் நின்று நிலைத்த பாட்டு அது.

தொடர்ந்து “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” SPB & ஜானகி கூட்டில் அமைந்ததும் அதுவும் அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை இசைஞானியின் பாடல்களில் முத்திரைப்பாடலாக முகிழ்ந்து நிலைத்தது.

அந்த ஆரம்ப மிருதங்கத் தாள லயம், மிருதங்க விற்பன்னர் சீனாக்குட்டியின் மேதமை பறையும்.

SPB யின் பெருந்தன்மையின் மறு சான்று ஒன்றைச் சொல்ல வேண்டும். தான் பாட வேண்டிய பாடல் ஒன்றுக்காக Track இல் பாடுகிறார் தீபன் சக்ரவர்த்தி. அதைக் கேட்டவர், இது நல்லா இருக்கே இப்படியே இருக்கட்டும் என்று சொல்லி விடுகிறார்.

அப்படி தீபன் சக்ரவர்த்திக்கு அமைந்த பாடல் தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருதையும் அள்ளி வழங்கிய

“பூஜைக்காக வாழும் பூவை”

“காதல் ஓவியம்” பாரதிராஜாவின் படைப்புகளில் ரசிகர்கள் கொண்டாடாத படமாக அமைந்தாலும், அங்கே வைரமுத்து வரிகளில் இசைஞானி இளையராஜா கொடுத்த பாடல்கள் காலம் தாண்டிய காவியப் பாடல்கள்.

“குயிலே...குயிலே... எந்தன் கீதங்கள் கேட்காயோ....”

காதலர்களின் சோகராகங்களில் ஒன்றானது.

“நதியில் ஆடும் பூவனம்” கேட்கும் போதே நதி நீரில் கால் நனைத்து அலம்பும் சுகத்தை அள்ளித் தரும்.

“பூவில் வண்டு கூடும்” 

“வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்”

என்று அந்த நாட்டிய மங்கைக்கும், பாடகனுக்குமான பந்தத்தை இசை மொழி காட்டும் பாடல்கள். இவற்றோடு “அம்மா அழகே” என்று “காதல் ஓவியம்” படப் பாடல்கள் பாரதிராஜா காத்திருந்து எஸ்பிபிக்கு அளித்த விரு(ந்)து போல.

“பேசிப் பேசி ராசியானதே ஏஏஏஏ

 பொத்தி வச்ச மல்லிக மொட்டு 

பூத்திருச்சு வெக்கத்தை விட்டு”

“மண்வாசனையிலும் தன் வாசனை காட்டிய எஸ்பிபி & ஜானகி கூட்டு இன்னொரு மணிமகுடப் பாட்டு.

“ஒரு கைதியின் டைரி” படத்தில் வந்த

“நான் தான் சூரன்”

காட்சிப்படுத்தாத பாட்டு.

“கடலோரக் கவிதைகள்” படத்தில் “போகுதே போகுதே”

என்று ஒற்றைப் பாடலைத்தான் எஸ்பிபி பாடியிருந்தாலும்,

இந்தப் படக் கதையை சிரஞ்சீவியை வைத்து பாரதிராஜா “ஆராதனா” என்று மீள எடுத்த போது அவரே எல்லாப் பாடல்களிலும் மூலப் பாடகர் ஆனார்.

பாரதிராஜாவின் இன்னொரு தெலுங்குப் படமான “ஜமதக்னி”யில் எஸ்பிபி பாடாவிட்டாலும், அந்தப் படத்தை வைரமுத்து தமிழுக்காகப் பதிப்பித்து வெளிவராமல் முடங்கிப் போன “நாற்காலிக் கனவுகள்” படத்தில் அவற்றைச் சுவீகரித்தார்.

படம் வராவிட்டால் என்ன, 

“ஒரு வார்த்தை சொல்லு பாடலுக்கு” இசை ரசிகர்கள் அடிமையாகிப் போனார்கள்.

இப்படியாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பாரதிராஜா இயக்கிய படைப்புகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அணி செய்த பாடல்கள் தொடர்ந்து வரும் பயணத்தில் தொண்ணூறுகளில் அமைந்த “புது நெல்லு புது நாத்து” படத்தில்

“பூப் பூப்பூ பூப்பூத்த சோலை” ரம்யம் தந்தது.

பாரதிராஜாவின் பாசறையில் இன்னும் சில இசையமைப்பாளர்கள் இணைந்த போது அங்கேயும் அடி நாதமாக விளங்கியவர் எஸ்பிபி.

அந்த வகையில் ஹம்சலேகா இசையில் “கொடி பறக்குது” பாடல்களில்

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு”

“ அன்னை மடியில்”

“ஓ காதல் என்னை” 

என்றும்,

அப்படியே அந்த இசைக்கூட்டணியின் 90களில் “எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று”, “நந்தவனப் பூக்கள்” என்று கேப்டன் மகளிலுமாகத் தொடர்ந்தார் எஸ்பிபி.

பாரதிராஜா & தேவேந்திரன் கூட்டு நிகழ்ந்த போது “வேதம் புதிது” படத்தில் “கண்ணுக்குள் நூறு நிலவா” பெரும் புகழ் ஈட்டியது என்றால், படமாக்காத “சந்திக்கத் துடித்தேன் பொன்மானே” கேட்காதவர்கள் கேட்டுப் பாருங்கள் கிறங்கி விடுவீர்கள்.

“மருதாணி வச்சு” வித்யாசாகர் இசையில் “பசும் பொன்”, “உன்னால் முடியும்” தேவா இசையில் தமிழ்ச் செல்வன்” என்றும் பாரதிராஜா & எஸ்பிபி கூட்டணியில் அமைந்த பாட்டு வரிசை இருக்கும்.

“பச்ச ஒடம்புக்காரி பார்த்து நடக்கச் சொல்லுங்க”

இதில் வரும் அந்த எஸ்பிபியின் நெகிழ்வை பாரதிராஜா கேட்ட கணம் எப்படித் தன் உணர்வைப் பிரதிபலித்திருப்பார் என்று கேட்க ஆசைப்பட்டேன். அந்த அற்புதமான பாடல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் “கிழக்குச் சீமையிலே” படத்தில்  “மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே” என்று அமைந்தது. அந்தப் பாடலுக்காகத் தனிப் பதிவே எழுதியிருக்கிறேன். இன்று வரை தாய்மாமன் சீர் பாடகன் ஆகி விட்டார் எஸ்பிபி.

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவில் தெலுங்கு தேசமும் கண்ணீர் வடித்தது. அதுவொரு காவியப் பாட்டு அவர்களைப் பொறுத்தவரை. அதனால் தான் பாரதிராஜா தெலுங்கு தேசத்தில் அதிகம் பங்களித்திருக்காவிட்டாலும், இசைஞானி இளையராஜா கொடுத்த அந்தப் பாடல் காலங்கள் தாண்டி இன்றும் தம் தலைமேல் உச்சமாக வைத்திருக்கும் பாட்டு.

அதுதான், அலைகள் ஓய்வதில்லை படத்தின் தெலுங்கு மொழியாக்கமாக அமைந்த Seethakoka Chilaka படத்தில் வரும் பாட்டு.

தமிழில் இசைஞானி & ஜென்ஸி பாடியதைத் தன் சகோதரியோடு கொடுத்திருப்பார் எஸ்பிபி. அதுதான்

Maate Manthramu manase bandhamu

https://www.youtube.com/watch?v=GFIuEVx2y2A

தம் உலகத்தில் இருந்து இந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருப்பார்கள் பாரதிராஜாவும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இப்போது.

கானா பிரபா

08.07.2026

Tuesday, July 7, 2026

இயக்குநர் கே.பாக்யராஜ் உடன் பாடலாசிரியர் வைரமுத்து


தங்கச் சங்கிலி

மின்னும் பைங்கிளி

தானே கொஞ்சியதோ

இனி தஞ்சம் மல்லிகை

மஞ்சம் என்றிவன்

தோளில் துஞ்சியதோ ❤️

இயக்குநர் கே.பாக்யராஜ் & பாடலாசிரியர் வைரமுத்து கூட்டணியில் ஆகச் சிறந்த ஒன்று என்றால் இதுவே முன் நிற்கும்.

அத்துணை அழகு நிறைந்த பாடலது.

பாக்யராஜுக்கான ராசியான குரல் மலேசியா வாசுதேவனும், ராசியான ஜோடிக் குரல் ஜானகியும் அணி செய்த பாட்டு.

வைரமுத்துவின் பாடல்களில் பின்னாளில் எழுந்த அதீத உவமை கையாளல் போல் இல்லாமல் இந்தப் பாடலில் இயல்பான கவிதை மடை மிளிரும்.

துஞ்சியது பைந்தமிழ் சொல்லில் ஒரு கிறக்கம் எழும்.

“தன்னோடு தான் போராடினாள்” எல்லாம் வைரமுத்துவின் அழகியல் சொல்லாடல்.

“முந்தானை முடிச்சு” படத்தைப் போட்டுக் காட்ட இளையராஜாவை அழைக்கிறார் பாக்யராஜ். வைரமுத்துவும் கூட வரலாமா என்று கேட்டு அவரின் அனுமதியோடு அழைத்து வருகிறார் ராஜா.

படத்தின் இடைவேளையோடே “இந்தப் படம் நூறு நாட்கள் ஓடும்” என்கிறார் ராஜா.

“எப்படி முழுப்படத்தையும் பார்க்காமல் சொல்கிறீர்களே” என்று பாக்யராஜ் கேட்கவும்,

“இந்தக் கதைப்போக்கு சரியாகப் பயணிக்கிறது” என்றாராம் ராஜா.

கூட வந்த வைரமுத்து ஒன்றுமே பேசவில்லையாம்.

இந்தப் படைப்பில் தன் பாடல் எதுவுமே இடம்பெறவில்லையே என்ற ஆதங்கத்தைத் தான் கண்டு கொண்டதாக பாக்யராஜ் குறிப்பிட்டார்.

ஆனால் அதற்கு முன்பாகவே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “எண்ணி இருந்தது ஈடேற” பாடலை அந்த 7 நாட்கள் படத்துக்காக எழுதியிருக்கிறார் வைரமுத்து.

கே.பாக்யராஜ் எந்த ஒரு பாடலாசிரியரையும் முழுமையாகச் சார்ந்திருந்தவர் அல்ல. எம்.ஜி.ஆர் காலத்துப் பாடலாசிரியர்களை மட்டுமன்றிப் புதிய புதிய கவிஞர்களையும் உள்வாங்கினார்.

இளையராஜாவின் முறை வந்தது முந்தானை முடிச்சு படத்துக்குப் பின்னர் தாவணிக் கனவுகள் படத்தில் “மாமோய் கள்ளுக்கடை” மற்றும் சின்ன வீடு படத்தில் இடம்பெற்ற “சிட்டுக்குருவி வெட்கப்படுது” ஆகிய பாடல்களை பாக்யராஜுக்காக வைரமுத்து எழுதினார்.

தீபக் இசையில் சுந்தரகாண்டம் படத்தில் வா வா பாட்டுப் பாடலாம் மட்டும் குறிப்பிடத்தக்க பாடல்.

பாக்யராஜ் இசையில் ஆராரோ ஆரிரரோ படத்தில் “எல்லோருமே லூசுங்க தான்” மற்றும் அவசர போலீஸ் 100 படத்தில் “நாகூரு பேட்டை” என்று தலா ஒரு பாடல் எழுதியவர்.

பாக்யராஜ் இசையில் அதிக பட்சம் ஒரே படத்தில் எழுதிய கணக்கில் பவுனு பவுனு தான் படத்தில்

“உச்சாணிக் கொம்பேறி”, “என்னென்ன சுட்டிக” பாடல்களோடு

“தென்மதுர பாண்டி சீமையிலே சாமி ஆளாகி நான் வாடுறேன்”

https://youtu.be/MGoAFY4Bu2M?si=SCiBl1yH7uAOgt4M

அற்புதமான விளைச்சல்.

இவ்விதம் இவர்கள் தொடர்பின் இறுதி அத்தியாயமாக, “படிச்சாப் புடிச்சிர்லாம்”என்ற

பாக்யராஜ் சுயசரிதை நூலுக்கு முன்னுரை பகிர்ந்திருக்கிறார் வைரமுத்து.

“தூறல் நின்னு போச்சு” படத்துக்குப் போட்ட மெட்டுக்குப் பதில் பாக்யராஜ் இன்னொன்று வேண்ட, அந்த மெட்டு தும்பி வா, சங்கத்தில் பாடாத கவிதை என்று மொழி கடந்து ஹிந்தி வரை சென்றது உப வரலாறு.

“தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி”

https://youtu.be/MFQsW2D6JMU?si=6zcGeBEmt8tgOWiI


ஒரு காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவை நகை மாட விளம்பரத்தில் ஒட்டிக் கொண்ட முன்னிசைப் பாட்டு.

காலங்கள் மாறினால் என்ன…

இவளின் கனவு

தணியும் வரையில்

விடியாது

திருமகள் இரவுகள்

தங்கச் சங்கிலி

மின்னும் பைங்கிளி

தானே கொஞ்சியதோ…❤️

கானா பிரபா

07.07.2026

Monday, July 6, 2026

பாக்யராஜைப் பாட வைத்த புலவர் ❤️


பச்சைமலை சாமி ஒண்ணு 

உச்சிலை ஏறுதுன்னு 

எடுடா தம்பி மேளம் 

கொஞ்சம் எதமாப் போடு தாளம்

பாக்யராஜ் அந்தப் பல்லவியையும் தானே எழுதித் தன் மெட்டுக்கட்டலைப் பாடிக் காட்டுகிறார் புலவர் புலமைப்பித்தனிடம். (பாக்யராஜ் இவ்விதம் பல்லவிகளில் அணி செய்த கை வண்ணம் பின்னொரு  பகிர்வில் வரும்)

இந்தப் பல்லவியே இருக்கட்டும் என்று புலவரவர்கள் சொல்லி விடுகிறார்.

கூடவே இன்னொன்றையும் வேண்டுகோளாக வைக்கிறார்.

“நீங்களே இந்தப் பாடலையும் பாடி விடுங்களேன்” என்று.

பாக்யராஜ் தயங்குகிறார். 

கூட இருந்த ஒலிப்பதிவாளர் சம்பத் அதை ஆமோதிக்கிறார்

“நீங்க இசையமைக்கிறதை ஊர்ல நம்புற மாதிரித் தெரியலை நீங்க பாடினால் தான் அடையாளம்” என்று அவர் வேறு விளக்கம் சொல்கிறார்.

“இது நம்ம ஆளு” படத்தின் வழியாக

இசையமைப்பாளர் பாக்யராஜ் அறிமுகமாகிறார்.

கூடவே பாடகர் பாக்யராஜ் பிறப்பெடுக்கிறார்.


“காவேரின்னு கங்கைன்னு பேரு வச்சான் 

ஆனாலும் அந்தத் தண்ணி ரெண்டும் ஒண்ணுதான் 

ஆளாளுக்கொரு சாதி இங்கே சொல்லி வச்சான்

ஆனாலும் நாம சாதியெல்லாம் ஒண்ணுதான்”


என்று புலமைப்பித்தனின் பொதுவுடமைச் சித்தாந்தம் பாடல் வரிகளில் தொனிக்கும்.


கங்கை தெற்கே பாயாதா…

காவேரியோடு சேராதா…

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு


என்று அதே ஆண்டிலேயே “உன்னால் முடியும் தம்பி”யிலும் அந்த வெளிப்பாட்டைக் காட்டியவர்.


“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா” என்று பாடும் நிலா எஸ்பிபி அவர்களுக்குப் பாட்டெழுதியவர் புலவர் புலமைப்பித்தன்.

பாலசுப்ரமணியம் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படமான “துடிக்கும் கரங்கள்” படத்தில் கூட அந்த ராசி புலவர் ராசியாக ஜோடி போட்டிருப்பார்.


பச்சமலை சாமி ஒண்ணு


https://youtu.be/CcnI2QW3M_M?si=W_CbxeNy7Pa9c7NS


“இது நம்ம ஆளு” படத்தில் இன்னுமிரண்டு காதல் ஜோடிப் பாடல்கள்.

எஸ்பிபியுடன்

 “அம்மாடி இதுதான் காதலா” 


https://youtu.be/erJ_bMgEA7c?si=qorVc_0YybMz0h_y


என்று சித்ராவும்,

எஸ்பிபியுடன் “காமதேவன் ஆலயம்” 


https://youtu.be/w_1JYnfid5Q?si=cysrrrve3h0P2F8f


என்று எஸ்.ஜானகியுடனும்

இணைந்து கொண்ட இரண்டுமே பெரு வெற்றி பெற்ற இசையமைப்பாளர் பாக்யராஜின் பாடல்களாகி விட்டன.


புலவர் புலமைப்பித்தனுக்கும், கே.பாக்யராஜுக்குமான பந்தம் “கன்னிப் பருவத்திலே” காலத்தில் விளைந்தது.

பாக்யராஜின் திரையுலக வழிகாட்டி பாலகுரு அவர்கள் இயக்கிய அந்தப் படத்தின் கதை, வசனகர்த்தாவோடு இணை இயக்குநராகவும், வில்லனாகவும் பாக்யராஜ் தோன்றிய படமது. 

சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இசையில் 

“பட்டு வண்ண ரோசாவாம்

 பார்த்த கண்ணு மூடாதாம்….”


https://youtu.be/9YfB-a6oaa4?si=OF-hokl9ZvoyDoz_


மலேசியா வாசுதேவன் குரலிலும், எஸ்.ஜானகி குரலிலுமாகத் தனித்தனியாக அமைந்தவை.


 

காத்து பட்டாலே

கரையாதோ கற்பூரம்

கரையுது எம் மனசு உன்னால…


புலவரவர்கள் அந்த வரிகளால் கரைய வைத்திருப்பார் நம் மனதை.


இதில் இன்னொரு சம கால விந்தையும் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட இதே சந்தத்தில் 1979 இல மாதக் கணக்கில் சற்றே முன்பதாக இசைஞானி இளையராஜா இசையமைப்பில்

“உச்சி வகுந்தெடுத்து” பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.


இவ்விதம் எழுபதுகளின்  “கன்னிப் பருவத்திலே” தொட்டு 90களின் நடுப்பகுதி வரை புலவர் புலமைப்பித்தனோடு கே.பாக்யராஜின் கவி இணைப்பும் இருந்தது.


பாக்யராஜ் இசையில் “பவுனு பவுனுதான்” படத்தில் வரும்

 “மாமா ஒரு மாலை சூட்டி மார்பில் எனை ஊஞ்சலாட்டு” 


https://youtu.be/38HgJNUs0KI?si=Z8dQwrKdC08U_fdB


பாடலுக்கும்

பாக்யராஜுக்கு மூத்தவர், சினிமாவுக்கு வருவதற்கு முன் ஒன்றாக நாடகம் போட்டவரும் பின்னாளில் உதவி இயக்குநருமாக அமைந்தவருமான ஆர்.பி.விஸ்வம்

இயக்கிய “ஞானப்பழம்” படத்தில் பாக்யராஜ் கதாநாயகனாகவும், இசையும் கொடுத்த

  “ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்னு சொன்ன சாரே” 


https://youtu.be/zhW_NkUqpLU?si=rvFrgpk2OjCBekFt


பாடலுக்கும் 

என்று புலவர் புலமைப்பித்தன் எழுதியிருக்கிறார்.


பட்டு பூச்சி வாழ்க்கையது

எட்டு நாள் தானே

பறந்து வரும் ஈசலுக்கு

ஒருநாள் தானே


அவை பறக்கலையா

சிறகு விரிக்கலையா

வாழ்வை ரசிக்கலையா


பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்

மன பாரம் தீரத் தான்


https://youtu.be/KMhvXWII6HA?si=EeX4BM31DV0QiJTK


வாழ்க்கையே ஒரு வரவு செலவு

வந்ததே ஒரு வரவு தான்


என்று நிலையாமைத் தத்துவத்தைக் காட்டி நிற்கும் அற்புதமான பாடலை “சுந்தர காண்டம்” படத்துக்காக தீபக் இசையில் புலமைப்பித்தன் எழுதி பாக்யராஜ் படங்களில் இன்னொரு மகுடப் பாடலாய் அமைத்தார்.

பாக்யராஜ் இயக்காத, நாயகனாக நடித்த "என் ரத்தத்தின் ரத்தமே" படத்தில் மூன்று பாடல்களை சங்கர் - கணேஷ் இரட்டையர் இசையில் புலவர் புலமைப்பித்தன் எழுதினார். அந்தப் பாடல்களில் "ஓர் ஆயிரம் பெளர்ணமி நிலவு" அந்தக் காலத்தில் வெகு பிரபலமான பாட்டு.

இசைஞானி இளையராஜா & இயக்குநர் பாக்யராஜ் கூட்டில் புலவர் புலமைப்பித்தன் இணைந்து கொண்ட பாடல்களில்

“நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்” 


https://youtu.be/Cg4a0aYdjpE?si=JWmvjKMlF_pwQn3U


முந்தானை முடிச்சுக்காகவும், “பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணாகக் கூடிச்சாம்” 


https://youtu.be/1ftmovmTljY?si=x4eAlpnQ1Prm2xBl


வீட்ல விசேஷங்க படத்துக்காகவும் அமைந்த சிறப்பு மிக்கவை.

அவற்றுக்கெல்லாம் மேலாக, பாக்யராஜ் வேண்டி வாங்கும் சூழ்நிலைப் பாடலில் உன்னதமாக அமைந்த “சின்ன வீடு” படத்தில் வரும்

“வெள்ளை மனம் உள்ள மச்சான்” 


https://youtu.be/2RfG5u_8o4g?si=ZgAOZ6UUwiWO4Fbu


இந்தக் கூட்டணியில் புலமைப்பித்தனின் புலமை சாற்றும்.


“கள்ள மனம் முள்ளு தச்சி

கண்ணீரில் மூழ்குதடி…”


என்று எதிர் அலைவரிசையில் நாயகனுக்காக அவர் கொடுத்த வரிகள் அபாரம் என்றால்


செங்கரும்பை நான் மறந்து

வேலி முள்ளை ஏன் கடிச்சேன்…


அவன் நொந்து நிற்கும் சூழலில் “யாருமிங்கே ராமனில்லே” என்று ஆற்றுப்படுத்துவாள் புலவரின் வரிகளினூடே.


இந்தக் கட்டுரை எழுதும் போது பழைய நினைவுகளில் தேங்கியிருந்த போது ஒன்று ஞாபகத்தில் எழுந்தது.

“தங்க மகன்” படம் உருவாகும் சூழலில் தான் பூர்ணிமா ஜெயராம், பாக்யராஜை மணமுடிக்கும் செய்தி வந்தது. அதன் பின்னர் கூட பூர்ணிமா நடிப்பில் படங்கள் 

வந்திருந்தாலும், தங்க மகன் காலத்தை நினைத்தால் பூர்ணிமா & பாக்யராஜ் திருமண பந்த அறிவிப்பு நினைவில் எழும்.

அங்கே கூட புலவர் புலமைப்பித்தனின் “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ” கூடவே வரும்.


இதற்கெல்லாம் முன்பாக, பாக்யராஜ் & பூர்ணிமா நிழலில் ஜோடி போட்ட காலம் அமைந்திருக்கிறது. 

“டார்லிங்…டார்லிங்…டார்லிங்…”

படத்திலே “அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே” 


https://youtu.be/PSOsKuz4d0s?si=wkF0aZZxqkb7Wmi-


என்று புலவர் புலமைப்பித்தன் எழுதியது பின்னாளில் நிஜத்தில் நிலைத்துப் போனது.

கே.பாக்யராஜின் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள்.


பட்டுப் போல் மெதுவாக தொட்டுக்கொள்

கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள்

தலைவனின் கரம் தழுவிட வரும்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே…

இதய தாகம் அது 

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்…


கானா பிரபா

05.07.2026