
கடந்த வாரம் அப்பாவித்தங்கை துர்கா வந்து பல மொழிப்பாடல்களோடு வித்தியாசமான தன் ரசனையை வெளிப்படுத்தினார். இந்த வாரம் ஆண் நேயர் என்ற வகையில் ஐந்து முத்தான பாடல்களுடன் வந்து கலக்குகின்றார் "ஜிரா என்ற கோ.இராகவன்".

கோ.இராகவனின் பதிவுகள் இலக்கியம், சமயம், இசை, அனுபவம் என்று பலதரப்பட்ட பரப்பில் அகல விரிந்தாலும் அவரின் எல்லாப் பதிவுகளிலும் எஞ்சி நிற்பது அவரின் உயரிய ரசனைச் சிறப்பு. எதையும் அனுபவித்து எழுதும் இவர், பதிவுகள் மட்டுமன்றி பின்னூட்டங்களிலும் அதே சிரத்தையைக் காட்டுவார். பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் இவர் விதைக்கும் கருத்துக்கள் மிகுந்த நிதானத்துடனும், சுவையான தகவற் குறிப்புக்களுடனும் அமையும். சிறப்பாக;
மகரந்தம்
இனியது கேட்கின்
இசையரசி
முருகனருள்
போன்றவை கோ.இராகவனின் படைப்பாற்றலுக்கான களங்களில் சில.
இதோ இனி ஜிரா என்ற கோ.இராகவன் தொடர்கின்ரார்.
1. இது இரவா பகலா - வாணி ஜெயராம், ஏசுதாஸ்
நீலமலர்கள் படத்தில் இடம் பெற்ற பாடல் இது. கவியரசர் எழுதி மெல்லிசை மன்னர் இசையமைத்தது. கமலஹாசனும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள்.
காதலிக்கு உண்டாகும் ஐயங்களைக் கேள்வியாகக் கேட்கிறாள். அவைகளுக்குக் கேள்வியாலே விடையளிக்கிறான் காதலன்.
காதலி : இது இரவா பகலா?
காதலன் : நீ நிலவா கதிரா?
அவள் நிலவென்றால் அது இரவு. கதிரென்றால் பகல். என்ன அழகான விடை. மெல்லிசை மன்னரும் கவியரசரும் ஏற்கனவே செய்த இந்த முயற்சிதான்...பின்னாளில் உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா என்று கேட்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வாணி ஜெயராமின் குரலும் ஏசுதாசின் குரலும் இணைந்து ஒலிக்கும் அற்புதப் பாடல்.
2. சிந்து நதிக்கரை ஓரம் - டி.எம்.எஸ், பி.சுசீலா
இளையராஜா இசையில் பாடிய முதல் ஆண் பாடகர் என்ற பெருமை ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜனையே சேரும். அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை மறந்து விட்டு அவர்கள் இருவரும் இணைந்த பாடல்களைப் பார்த்தால் அத்தனையுமே அருமை. ஒன்று கூட பழுது கிடையாது. அன்னக்கிளியில் தொடங்கிய கூட்டணி விரைவிலேயே முறிந்தது நமது கெட்ட நேரம்தான்.
நல்லதொரு குடும்பம் என்ற படத்திற்காக கவியரசர் எழுதி டி.எம்.எஸ்சும் இசையரசியும் பாடிய இந்த ஜோடிப் பாடலில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். மிக அழகான காதற்பாடல்.
3. அழகி ஒருத்தி இளநி விக்குற - எல்.ஆர்.ஈசுவரி, ஜெயச்சந்திரன்
ஜெயச்சந்திரன் என்றாலே மெல்லிய காதல் பாடல்கள் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் அவரையும் துள்ளலிசையரசி எல்.ஆர்.ஈசுவரியையும் இணைத்து ஒரு பாடலை மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்கிறார். கவியரசரின் பாடல்தான். பைலட் பிரேம்நாத் என்ற படத்திற்காக.
இலங்கையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர்திலகம், மாலினி ஃபொன்சேகா (இலங்கை), விஜயகுமார், ஜெயச்சித்ரா, ஸ்ரீதேவி, ஜெய்கணேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இலங்கையின் இளம் குயில், முருகனெனும் திருநாமம், Who is the blacksheep? ஆகிய அருமையான பாடல்களும் இந்தப் படத்தில்தான்.
இந்தப் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.....
உப்புக்கடலோரம் ஒரு ஜோடி நண்டு
ஓடி விளையாடி உறவாடக் கண்டு
கன்னம் முச்சூடும் காயாத புண்ணு
கன்னி இளமேனி என்னாகுமென்னு
அம்மான் மகன் சும்மா நிப்பானா
அள்ளிக்கொண்டால் மிச்சம் வெப்பான
கேட்டுப்பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்.
4. இது சுகம் சுகம் - வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மெல்லிசை மன்னருக்கும் இசைஞானிக்கும் பிறகு தமிழகத்தில் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமாந்தான். அவர் எட்டாத பல உயரங்களுக்குச் செல்கையில் தமிழ்த் திரையுலகத்தையும் விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அவருடைய இடம் இன்னும் நிரப்ப்பப்படாமல் இருக்கிறது. அவருடைய பாணியை வைத்துக் கொண்டுதான் இன்றைக்குப் பலருக்குப் பிழைப்பே தவிர புதிதாக யாரும் எதுவும் செய்யவில்லை.
அவருடைய இசையில் வெளிவந்த இந்தப் பாடலில் ஒரு சிறப்பு. ஆம். அவருடைய இசையில் வாணி ஜெயராம் பாடிய ஒரே பாடல் இதுதான். வாணி அவர்களிடம் ஏ.ஆர்.ரகுமான் சொன்னாராம். "அம்மா, நீங்க பாட வேண்டிய அளவுக்குப் பாட்டு நான் போடுறதில்லை" என்று. அந்த அளவுக்கு இசைப்புலமை மிக்கவர் வாணி ஜெயராம். அவரும் பாடும் நிலா பாலுவும் இணைந்து குரலால் குழைந்து பாடிய இந்தப் பாடல் மிகமிக அருமையானது.
வண்டிச்சோலை சின்ராசு என்ற படத்தில் வெளிவந்த காரணத்தினால் மட்டுமே காணாமல் போன இந்தப் பாடல் நத்தையில் முத்து. கேட்டு ரசியுங்கள்.
5. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா - சொர்ணலதா, ஏசுதாஸ்
சொர்ணலதாவின் முதல் பாடல். நீதிக்குத் தண்டனை என்ற திரைப்படத்தில் இருந்து. பாரதியாரின் அருமையான தாலாட்டுப் பாடல். கண்ணன் பாட்டில் ஒரு பாட்டு இது. இந்தப் பாடலை இசையாக்கியிருக்கிறார் மெல்லிசை மன்னர். வழக்கமாக பாரதியார் பாடலென்றால் மெல்லிசை மன்னர் பயன்படுத்தியது இசையரசியின் குரலைத்தான். ஆனால் முதன்முறையாக புதுப்பாடகி. சொர்ணலதாவிற்குக் கிடைத்தது மோதிரக்கைக் குட்டு. அதுவும் ஏசுதாசுடன் இணைந்து பாடியிருக்கிறார். பின்னாளில் அவர் நிறையப் பாடல்களைப் பாடித் தேசிய விருதெல்லாம் வாங்கியிருந்தாலும் அவையனைத்திற்கும் முதற்படி இந்தப் பாடலே.
பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.
அன்புடன்,
ஜிரா என்ற கோ,இராகவன்