Pages

Friday, March 16, 2018

🥁 இசைமைப்பாளர் தேவேந்திரனின் இசைப்பயணம் 🎸 🎼 நிறைவுப் பாகம் 🎻



“பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே…
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்
மன்னவன் பிறந்தான் ஈழத்திலே”

ஈழத்திலும், அதைத் தாண்டி ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளும் மேற் சொன்ன பாடல் ஒவ்வொரு கார்த்திகை 26 இலும் ஒலிக்கும் வேத மந்திரம் போலானது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் பாடலைப் பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் உட்பட்ட பாடல்களைக் “களத்தில் கேட்கும் கானங்கள்” என்ற பெயரில் முப்பது வருடங்களுக்கு முன்னர் சென்னையில் வைத்து தேவேந்திரன் இசையமைக்க ஒலிப்பதிவானது. அந்த வாய்ப்பை இன்னொரு பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனே ஏற்படுத்தியிருந்தார்.

“களத்தில் கேட்கும் கானங்கள்” பாடல் தொகுப்பில் “வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு” என்று தனித்தும் “தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்” என்று ஜோடி சேர்ந்தும் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். “நடடா ராஜா மயிலைக் காளை” பாடலை மலேசியா வாசுதேவன் பாட, “காகங்களே காகங்களே காட்டுக்குப் போனீர்களா”
சிறுவர் பாட்டு, “ஏழு கடல்களும் பாடட்டும்” , “காற்றும் ஒரு கணம் வீச மறுத்தது (தீயினில் எரியாத தீபங்களே)” ஆகிய உணர்வெழிச்சிப் பாட்டுகள், இவற்றோடு இசைக்குயில் பி.சுசீலா பாடிய “கண்மணியே கண்ணுறங்கு” தாலாட்டு, “அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி” என்ற மெல்லிசைப் பாட்டு என்று எல்லாமே காலம் தின்று விழுங்காத மறக்க முடியாத பாட்டுகள். இந்திய அமைதிப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் உச்சமடைந்த சமயத்தில் வெளிவந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” இன்றுவரை தமிழீழ எழுச்சிப் பாடல்களில் அதி முக்கியத்துவம் கொடுத்துப் பேணப்படுபவை. பாடல்களை மனப்பாடம் செய்யுமளவுக்குப் பலருக்கு இந்த இசைத் தொகுப்பு பதியம் போட்டது.
களத்தில் கேட்கும் கானங்கள் இசைத் தொகுப்பைக் கேட்க
https://eelamsong.blogspot.com.au/2014/11/eelam-mp3_25.html

தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே மடை திறந்தாற் போலப் புதுப் புது பாடகர்கள், இயக்குநர்கள், அறிமுக நாயக, நாயகிகளோடு படங்கள் இவற்றோடு புது வர இசையமைப்பாளர்களும் நிறையப் பேர் தமிழ்த் திரையுலகுக்கு வந்தார்கள். ஒப்பீட்டளவில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக வந்த புதுப் புதுக் கலைஞர்களுடனான தமிழ்த் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது முந்திய எண்பதுகளில் ஒரே சமயத்தில் ஒரு குறுகிய காலத்தில் இப்பேர்ப்பட்ட அலை அடித்ததில்ல்லை. 

அப்போது தான் வானொலிகளும் பண்பலை வரிசைக்குத் தாவிக் கொண்டிருந்த சமயம் அது.
“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க”
https://youtu.be/tbJzW7x42Gc
என்ற பாடல் காற்றலைகளில் கலக்கிக் கொண்டிருந்தது.  யாராடா இது ரவி தேவேந்திரன் என்ற புது இசையமைப்பாளர் என்ற இன்ப அதிர்ச்சியோடு அந்தப் பாடலில் மூழ்கிப் போன காலமது. கூடவே பூனைக்கண் அழகி, சின்னக் குஷ்பு என்று அழைக்கப்பட்ட சிவரஞ்சனி மேல் மையல் கொண்டு அலைந்த இளைஞர் கூட்டம் அவரின் இயற்பெயர் ஊஹா முதற்கொண்டு சாதகத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் போது இப்படி ஒரு பாட்டு தலைவியின் புதுப் படத்தில் வருகிறது என்றால் சும்மா விடுவார்களா என்ன? 
அந்த ஆரம்ப இசை இதயத் துடிப்புப் போலப் படபடக்க,
இந்தப் பாட்டின் இடையிசையில் வரும் புல்லாங்குழல் இசை இளையோருக்கோ மகுடி வாசிப்பது போல மயக்கத்தைக் கொடுத்தது.

“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க” பாடலின் இசை நேர்த்தியைப் பார்த்தால் புதிதாகச் சாதிக்க வரும் இசையமைப்பாளரின் துடிப்பும், நேர்த்தியும் இருக்கும். ஆனால் எண்பதுகளில் “வேதம் புதிது” தொட்டு இன்னொரு பரிமாணத்தில் இசை கொடுத்த தேவேந்திரன் தான் ரவி தேவேந்திரன் என்று தீவிர ரசிகர்கள் கண்டுணர்ந்தார்கள்.

“முத்தம் கொடுக்கணும் முத்தம் கொடுக்கணும் முத்துமணிக் குயிலே” பாட்டைக் கேட்டால் அச்சொட்டான இளையராஜா பாணியில் எஸ்.ஜானகி பாடியிருப்பது போல இருக்கும்.
“நிலவென்ன பேசுமோ” என்று பாடிய இசையமைப்பாளர் சந்திர போஸையோ அல்லது நாகூர் ஹனீபாவின் குரலை ஒத்துப் பாடியது போல இருக்கும்
“நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்” என்ற பாட்டு.

“ஓ பறவைகளே ஓ பறவைகளே நில்லுங்கள்” எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா பாடிய பாடல் தொண்ணூறுகளின் காதலர் சோக கீதங்களில் ஒன்றானது. 

“புதிய தென்றல்” திரைப்படம் ரமேஷ் அர்விந்த், சிவரஞ்சனி நடிக்க, புதுமுக இயக்குநர் பிரபாகர் இயக்கியது. அப்போது வெளிவந்து கொண்டிருந்த சினிமா சஞ்சிகை பொம்மை இதழில் இரண்டு முழுப்பக்க விளம்பரங்கள் போடுமளவுக்குப் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் முன் சொன்ன அதியற்புதமான பாடல்களைக் கொடுத்தும் பலமான இன்னொரு சுற்று ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனுக்கு வாய்க்கவில்லை. 
புதிய தென்றல் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்க
https://youtu.be/AEA9bmYgJTY

கலைஞர் கருணா நிதி கதை, வசனம் எழுதி மு.க.ஸ்டாலின், கார்த்திக் நடித்த “ஒரே ரத்தம்”, இயக்குநர் விசு ஆனந்த விகடனில் கதையாக எழுதிப் பின் பி.நாகிரெட்டி தயாரித்து வந்த “மீண்டும் சாவித்திரி” (விசு இதுவரை இயக்கிய கடைசிப்படம்) போன்றவை தேவேந்திரன் இசையில் குறிப்பிட வேண்டிய படங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட “மூணார்” என்ற படத்துக்கு இசையமைத்தார். புகழேந்தி தங்கராஜ் இயக்கிய ஈழப் பின்னணியில் உருவான “கடல் குதிரைகள்” படத்துக்குக் கடந்த வருடம் இசையமைத்து வெளியிட்டார்.

இந்தத் தொடரின் முந்திய பகுதிகள்
வேதம் புதிது
https://www.facebook.com/kana.praba/posts/10214303319362217

மண்ணுக்குள் வைரம்
https://www.facebook.com/kana.praba/posts/10214260559293242

காலையும் நீயே மாலையும் நீயே & உழைத்து வாழ வேண்டும்
https://www.facebook.com/kana.praba/posts/10214775308721656

கனம் கோட்டார் அவர்களே
https://www.facebook.com/kana.praba/posts/10214423910816928

ஆண்களை நம்பாதே
https://www.facebook.com/kana.praba/posts/10215851876395175

“தென்றலுக்கு மேடை தந்த தேவராஜன் வாழ்க”

கானா பிரபா
16.03.2018
அடுத்த தொடர் வரும் வாரம் முதல் இன்னிசை இரட்டையர் மனோஜ் கியான்

🎻 இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 ஆண்களை நம்பாதே ❤️



“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே நீங்கள் மாறுங்களே”
https://youtu.be/nBO9BWloUY8
எண்பதுகளின் தேவதாஸ்களுக்குக் கிட்டிய இன்னொரு ஜேசுதாஸ் பாட்டு.  மலேசியா வாசுதேவன் இணைந்து பாடிய அந்தப் பாட்டு ஒன்றே போதும் இந்தப் படத்தின் பெயரை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்க. 
அந்தக் காலத்தில் இந்தப் பாடலைப் பெருங்குரலெடுத்துப் பாடிய அண்ணன்மார்களைச் சைக்கிள் சகிதம் வாசிகசாலை வெளிகளில் கண்டிருக்கிறேன். 

“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” (உழைத்து வாழ வேண்டும்), “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” (காலையும் நீயே மாலையும் நீயே) வரிசையில் இசையமைப்பாளர்  தேவேந்திரன் - பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூட்டணிக்குப் புகழ் கொடுத்தது “காதல் காயங்களே” பாடலும். எண்பதுகளில் T.ராஜேந்தருக்குப் பின் ஆபாவாணன் & மனோஜ் - கியான் அலையடித்த போது இவ் இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய வகையில்
T.M.செளந்தரராஜன் அவர்களின் இசைப் பயணமும்  இடைவெளியில்லாது தொடர எதுவானது. அந்த வகையில் தேவேந்திரனும் இந்தப் படத்தில் “வாராய் என் தோழி வாராயோ” பாடலை மீள T.M.செளந்தரராஜனுடன் ஆண் குரல் கூட்டணியோடு பாட வைத்த “வாராய் என் தோழா வாராயோ” 
https://youtu.be/Zdt0Sng5lPk
இன்றும் கல்யாண வீடுகளில் எள்ளல் பாடலாகக் குறும்பு செய்யும்.

“ஆண்களை நம்பாதே” படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். இவற்றில் புகழ் பெற்ற காதல் காயங்களே பாடல் உட்பட வைரமுத்துவும், மற்றும் வாலி, எம்.ஜி.வல்லபன் பாடல்களை எழுதினர்.

“ஆண் பாவம்” படத்தின் பெரு வெற்றியின் பாதிப்பில் எடுத்த இந்த “ஆண்களை நம்பாதே” படத்தின் ஆரம்பம் முதல் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆண் பாவம் படத்தில் பெரிய பாண்டியாக வந்த நாயகன்
பாண்டியன் இந்தப் படத்தில் முத்துப்பாண்டி. வி.கே.ராமசாமியின் மகனாக இந்தப் படத்திலும். அங்கும் ராமசாமி இங்கும் ராமசாமி முதலியார் ஆக வி.கே.ராமசாமி. தாய்க் கிழவியாக கொல்லங்குடி கருப்பாயியே நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கிராம மக்கள் கூடி நின்று ராமசாமியின் புது முயற்சிக்கு வாழ்த்தும் கூத்து இங்கேயும்.

இந்தப் படத்தின் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியனும் பாண்டியராஜன் ஆண் பாவத்தில் நடித்தது போல உப நாயகன். பின்னாளில் நட்சத்திர இயக்குநராக விளங்கிய கே.எஸ்.ரவிகுமார் ஆண்களை நம்பாதே படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்ததைச் சொல்லியிருக்கிறார் பேட்டி ஒன்றில்.

“வேட்டிகட்டி” என்ற எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் தான் ஆரம்பப் பாடல். இதே பாடகியின் இன்னொரு குழுப்பாட்டு “தாளம் தட்டுங்கள்”, மேலும் “பாக்குத் தோப்பிலே” என்று ஜோடிப் பாட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடியது. மலேசியா வாசுதேவன் & சைலஜா ஜோடிக் குரல்களில் “மதுரைக் கார” மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடிய “ராஜாதி ராஜன் தானே”
என்றெல்லாம் இப்படப் பாடல்களை அடுக்கினாலும் முன் சொன்ன இரண்டு பாடல்கள் அளவுக்குக் கவரத் தவறி விட்டார் இசையமைப்பாளர் தேவேந்திரன்.

கானா பிரபா
07.03.18

Wednesday, March 14, 2018

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு 🥁💐🎻

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு 

இன்று நூறு வயசு 🥁💐🎻


கேரளத்தில் இருந்து வந்து  தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னராக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தெலுங்கு தேசத்தில் கொடி நாட்டியவர் நாகர்கோயிலில் இருந்து புறப்பட்ட இசை விற்பன்னர் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள். 


இன்றைக்குத் அறுபதுகள் எழுபதுகளில் இடம்பெற்ற பாடல்கள் வானொலிகளில் ஒலிபரப்புச் செய்யப்படும் போது பொதுவாக எம்.எஸ்.வி கணக்கிலும் சேர்க்கப்படுவதுண்டு. ஆனால் தமிழ்த் திரையிசைப் பாரம்பரியத்தில் ஊறியவர்கள் கே.வி.மகாதேவன் அவர்களின் தனித்துவமான இசைக் கோப்பை அடையாளம் கண்டு ரசிப்பர். ஒப்பீட்டளவில் தமிழ்த் திரையிசை ரசிகர்களை விட ஆந்திரா வாலாக்கள் தான் “மாமா” என்று திரையுலகத்தோர் பாசத்தோடு அழைக்கும் கே.வி.மகாதேவனின் மேல் அதீத பற்றுஒ கொண்டவர்கள்.


சென்னை வானொலியின் விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் நான் அடிமைப்பட்ட காலத்தில் தான்

கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்த தெலுங்குப் பாடல்களைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு முதன் முதலில் கிட்டியது.


எண்பதுகளில் இளையராஜா பாடல்களோடு வாழ்க்கைப்பட்ட என் போன்ற ரசிகர்களுக்கும் கே,வி.மகாதேவன் முத்தான பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றில் குறிப்பாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டுமென்றால்,  

ஹிந்தியில் ஹிட்டடித்த ரங்கீலாவுக்கெல்லாம் பாட்டி முறையான கதை "ஏணிப்படிகள்" படத்தில். இந்தப் படத்தின் கதையை உருவிப் பின்னாளில் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன, ஆனால் ஏணிப்படிகள் படத்தின் நேர்த்தியான திரைக்கதையும் கே.வி.மகாதேவனின் இசையும் இன்றளவும் நினைவில் இனிமை சேர்ப்பவை. இந்தப் படத்தில் பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனித்தனியே பாடிய

 "பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன" , “கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்” போன்றவை ஏக பிரபலம் அப்போது.


புதுமைப்பித்தனின் கதையொன்றை எடுத்தாண்டு ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் "அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை". தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோப்படங்களும் நம்மிடையே புழங்கிய காலத்தில் அப்போது இந்தப் படத்துக்க்கும் ஏக மவுசு. படத்தில் "சுமைதாங்கி ஏனின்று விழுங்கின்றது" என்ற சோகப் பாட்டு, “மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்” என்ற அழகிய காதல் பாட்டு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய "எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே" என்ற தனிமைத் தவிப்பின் பாடலென்று முத்தான மூன்று கிட்டியது.


நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் எண்பதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது வழக்கம் போலத் திரை ஜோசியப்படி அவரும் நாயகனாக நடித்து வெளிவந்த படம் என்ற ஒரேயொரு பெருமையைக் கொண்டது "பாய்மரக்கப்பல்". இந்தப் படத்தில் எஸ்.பி.சைலஜா பின்னணில் கோரஸ் இசைக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்" சென்னை வானொலியில் நீங்காது இடம்பிடித்த பாடல்களில் ஒன்று


கமல்ஹாசனின் ஆரம்ப காலம் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வேடம் பூண்ட போது சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த படம் "சத்தியம்". இந்தப் படத்தில் "கல்யாணக் கோயிலின் தெய்வீகக் கலசம்" பாடல் கே.வி.மகாதேவனின் பாடல்களில் அழகிய முத்து ஒன்று.


என் பால்ய காலத்தின் இருள் படிந்த நினைவுகளில் வின்சர் தியேட்டர் என்று நினைவு. ஏதோவொரு படம் தொடங்க முன்பு தியேட்டர்காரர் ஒலிபரப்பிய “கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே” இன்றும் பசுமரத்தாணி போல உறைந்திருக்கிறது அதுவும் சங்கீதத் திலகத்தின் கை வண்ணமாக உத்தமன் படத்தில் வந்ததாகப் பிற்காலத்தில் அறிந்து தெரிந்து கொண்டேன்.


அது போல “ஞானக் குழந்தை” படத்தைப் பல்லாண்டுகளுக்குப் பின் லிடோ திரையரங்கில் திரையிட்ட போது சீனிப்புளியடி ஆரம்பப் பள்ளிக்கூடக்  கூட்டத்தோடு திருஞானசம்பந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று சொல்லிப் போய்ப் பார்த்ததோடு இன்றும் இனிக்கும் கே.வி.மகாதேவன் அவர்களின் அந்தப் படப் பாடல்களில் ஒன்று “பாலோடு தேன் கலந்து அபிஷேகம்”.


2001 ஆம் ஆண்டு  சிட்னிக்கு இசை நிகழ்வை நடத்த வந்த பாடகி சுஜாதா நான் அப்போது இயங்கிய வானொலி நிலையத்துக்கு வந்த போது அப்போது கிட்டிய கே.வி.மகாதேவனின் பிரிவுச் செய்தியை இணையம் மூலம் அறிந்து அவருக்குச் சொன்னேன். அப்போது "மாமா" என்று சொல்லியவாறே, தமது குடும்பத்தில் ஒருவரின் இழப்புப் போல வாய்பொத்தி அவர் கலங்கி நின்றார். 


 கந்தன் கருணை படத்திற்காகத் தேசிய விருதைத் தமிழில் பெற்றுக் கொண்டவர், திரையிசைக்காகக் கொடுத்த முதல் தேசிய விருது கந்தன் கருணைக்குத் தானாம். தமிழோடு தெலுங்கில் சாதனை படைத்த சங்கராபரணத்துக்கும், சுவாதி க்ரணம் என்ற படத்துக்கும் என்று மூன்று தேசிய விருதுகளை எடுத்ததோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் கே.வி.மகாதேவன்.


கே.வி.மகாதேவனின் உதவியாளராகவிருந்த புகழேந்தி அவர்களின் மனைவி, மகனை 17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வானொலிப் பேட்டி எடுத்தபோது இவரின் அறியப்படாத பரிமாணங்களை அப்போது சொல்லிச் சொல்லிச் சிறப்பித்தனர்.


மார்ச் 14, 1918 ஆம் ஆண்டில் பிறந்து ஜூன் 21, 2001 வரை வாழ்ந்திருந்து இன்று நூறாவது பிறந்த நாள் காணும் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனின் பாடல்கள் முறையாக அவர் பெயர் சொல்லி வானொலிகளில் பகிரப்பட வேண்டும். அதுவே அந்த மகா கலைஞனை இன்னும் பல ஆண்டுகள் நாம் உயிர்ப்பித்து வைத்திருக்க ஏதுவாக அமையும்.


கானா பிரபா


14.083.2018

Saturday, March 3, 2018

தீர்த்தக்கரை தனிலே.....செண்பகப் புஷ்பங்களே

தீர்த்தக்கரை தனிலே.....செண்பகப் புஷ்பங்களே
நான் போடும் தாளங்கள் விழி நீரின் கோலங்கள்
பாடுங்கள் ஜீவ ராகங்களே.....❤️

சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் மட்டும் தேவையில்லை அந்த உணர்வாக மாறி விட்டாலே போதும் அதனை மொழி பெயர்த்துச் சொல்லி விடும். அதனால் தானோ என்னவோ பறவைகளும், மிருகங்களும் ஏன் மனிதர்களும் கூடத் தங்களின் ஏக்கத்தைத், துயரை வெளிப்படுத்தும் பாங்கு வேறுபட்டிருக்கும். 

இங்கே இந்தப் பாடலில் நாயகனுக்கு ஏதுவாக இயங்கும் வாத்தியங்கள் இசை மொழியில் பகிரும் அந்தந்த வெளிப்பாடுகள் கூட அப்படித்தான். தான் கொடுக்கும் இசையில் மாறுபட்டாலும் சோகம் என்ற பொதுச் சொல்லின் கீழ் ஓசையெழுப்புகின்றன.

பாடலின் ஆரம்பத்தில் வந்து போகும் பெண்ணின் குரலொலியை இசைக்கோவையொன்று ஒற்றியெடுத்து நாயகன் காதில் போட்டு விட அவன் தொடர்ந்து பாட ஆரம்பிக்குமாற் போபத் தொடங்குகிறது இந்தப் பாட்டு.

சோகப் பாடல்கள் ஏன் விரும்பி ரசிக்கப்படுகின்றன என்று கேட்டால் அவை வெறுமனே சோக உணர்வை மட்டும் கடத்துவதோடில்லாமல் துவண்டு போயிருப்பவன் முதுகைத் தடவி ஆறுதல்படுத்தும் பண்பு கொண்டவை.
உன் சோகத்தை நான் பங்கு போட்டுக் கொள்கிறேன் உன்னை நான் ஆற்றுப்படுத்துவேன் என்று இந்தப் பாடல்கள் மறை பொருளில் அவனுக்குச் சொல்லி வைக்கின்றன. அந்த மாதிரியானதொரு உணர்வோட்டம்  மிகுந்த பாட்டு இது. 

“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடல் வெளிப்படையாக ஒரு ஜனரஞ்சகம் பொதிந்ததாகத் தோன்றினாலும் அந்தப் பாட்டின் பயணத்தில் ஒரு சாஸ்திரிய சங்கீதத்தின் சாயம் ஒட்டியிருக்கும். பாடலை  உன்னிப்பாகக் கேட்கும் போது ஒவ்வொரு வரிகளையும்
நீட்டி நிரவி பாடும் பாங்கில் அதைக் கோடிட்டுக் காட்டுவார் ஜேசுதாஸ். ஒடுங்கிப் போய்த் தன் குரலைத் தணித்துக் காட்டும் போதே மெலிதான
சோக ராகத்துக்கான இலக்கணம் அமைந்து விடும்.
ஆனால் அந்த சாஸ்திரிய சங்கீதத்தனம் வெளிப்படையாகத் தெரியாத அளவுக்கு ஜாலம் கொண்டு படைக்கப்பட்டிருக்கும். அந்த வரிகளை இன்னொரு சிட்டிகை  அதிகப்படியாகப் போட்டு இன்னும் நீட்டினால் அந்தப் பாட்டின் ஜீவனே தொலைந்து விடுமளவுக்குக் கையாளப்பட்டிருக்கும் பாட்டு இது.

ஒரு பாடலைக் கேட்டு முடித்த பின்னர் அதையே திரும்பக் கேட்பதோ அல்லது அதே சாயல் கொண்ட இன்னொன்றைக் கேட்பதோ இயல்பு.
“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடலின் ஆண் குரலின் முதல் ஓசை வடிவத்தை மட்டும் கொடுத்த பாடகி ஜென்ஸி அதே பாடலை முழுமையாகவும் தனியாகப் பாடியிருக்கிறார். இவ்விரண்டையும் தவிர எனக்கு இன்னொரு பாடல் இந்தச் சூழலில் நினைவுக்கு வரும். அந்தப் பாடல் கூட கே.ஜே.ஜேசுதாஸுக்குத் தனியாகவும் ஜென்ஸிக்குத் தனியாகவும் என்று கொடுக்கப்பட்ட பாடல். அதுதான் “மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்”.

“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடலுக்கு முரணான ரிதத்தில் அமைந்தது
“மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்”. முன்னையது ஒரு வட்டம் போட்டு அங்கேயே சுற்றி மெது வேகத்தோடு பாடும் பாட்டென்றால் பின்னது துள்ளிசை போட்டுக் குதித்துக் கொண்டு போகும் தாளக் கட்டு.

மெல்லிசை தழுவிய பாடல் ஒன்று நம் உள்ளுணர்வுகளை மட்டுமன்றி, உடலையும் கூட ஆட்டிப் பார்க்கும் சக்தி கொண்டதென்றால் இந்த “மீன் கொடித் தேரில்” பாடலும் அத்தகையதே. பாடலின் தொடக்கம் முதல் முடிவிடம் வரை கொல்லம் போகும் நீர் வழித்தடத்தில் ஆலப்புழாவின் படகு வீடொன்றில் அமர்ந்து செல்லும் சுகமான நகர்வு கிட்டும். பாடல் முடியும் போது எழும் ஓசையென்னவோ கடலலையொன்று வந்து முத்தமிட்டுப் போவது போல.
இந்த இரு பாடல்களின் பொதுத்தன்மை “பிரிவுத்துயர் பேசும் இசை”. ஆனால் இரண்டினதும் இசை கோப்பு மாறுபட்டு நம்மை ஆட் கொள்ளும்.

நாண மேக வானிலே...
நானும் நீயும் கூடியே...
மோக ராகம் பாடியே...
போடும் சோக நாடகம்

காவிரி ஓரமாய்...கோவலன் காதலி..
பூவிழி மாதவி...காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே..
கொஞ்சவா.......

தீர்த்தக்கரை தனிலே செண்பகப் பூஷ்பங்களே (ஜேசுதாஸ் குரலில்)
https://youtu.be/r6xg3TMM8Hg

தீர்த்தக்கரை தனிலே செண்பகப் பூஷ்பங்களே (ஜென்ஸி குரலில்)
https://youtu.be/nZNitgJB8AM

மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் (ஜேசுதாஸ் குரலில்)
https://youtu.be/TzexE2LUVqk

மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் (ஜென்ஸி குரலில்)
https://youtu.be/3gFM3-GK-vE