“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே நீங்கள் மாறுங்களே”
https://youtu.be/nBO9BWloUY8
எண்பதுகளின் தேவதாஸ்களுக்குக் கிட்டிய இன்னொரு ஜேசுதாஸ் பாட்டு. மலேசியா வாசுதேவன் இணைந்து பாடிய அந்தப் பாட்டு ஒன்றே போதும் இந்தப் படத்தின் பெயரை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்க.
அந்தக் காலத்தில் இந்தப் பாடலைப் பெருங்குரலெடுத்துப் பாடிய அண்ணன்மார்களைச் சைக்கிள் சகிதம் வாசிகசாலை வெளிகளில் கண்டிருக்கிறேன்.
“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” (உழைத்து வாழ வேண்டும்), “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” (காலையும் நீயே மாலையும் நீயே) வரிசையில் இசையமைப்பாளர் தேவேந்திரன் - பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூட்டணிக்குப் புகழ் கொடுத்தது “காதல் காயங்களே” பாடலும். எண்பதுகளில் T.ராஜேந்தருக்குப் பின் ஆபாவாணன் & மனோஜ் - கியான் அலையடித்த போது இவ் இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய வகையில்
T.M.செளந்தரராஜன் அவர்களின் இசைப் பயணமும் இடைவெளியில்லாது தொடர எதுவானது. அந்த வகையில் தேவேந்திரனும் இந்தப் படத்தில் “வாராய் என் தோழி வாராயோ” பாடலை மீள T.M.செளந்தரராஜனுடன் ஆண் குரல் கூட்டணியோடு பாட வைத்த “வாராய் என் தோழா வாராயோ”
https://youtu.be/Zdt0Sng5lPk
இன்றும் கல்யாண வீடுகளில் எள்ளல் பாடலாகக் குறும்பு செய்யும்.
“ஆண்களை நம்பாதே” படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். இவற்றில் புகழ் பெற்ற காதல் காயங்களே பாடல் உட்பட வைரமுத்துவும், மற்றும் வாலி, எம்.ஜி.வல்லபன் பாடல்களை எழுதினர்.
“ஆண் பாவம்” படத்தின் பெரு வெற்றியின் பாதிப்பில் எடுத்த இந்த “ஆண்களை நம்பாதே” படத்தின் ஆரம்பம் முதல் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆண் பாவம் படத்தில் பெரிய பாண்டியாக வந்த நாயகன்
பாண்டியன் இந்தப் படத்தில் முத்துப்பாண்டி. வி.கே.ராமசாமியின் மகனாக இந்தப் படத்திலும். அங்கும் ராமசாமி இங்கும் ராமசாமி முதலியார் ஆக வி.கே.ராமசாமி. தாய்க் கிழவியாக கொல்லங்குடி கருப்பாயியே நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கிராம மக்கள் கூடி நின்று ராமசாமியின் புது முயற்சிக்கு வாழ்த்தும் கூத்து இங்கேயும்.
இந்தப் படத்தின் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியனும் பாண்டியராஜன் ஆண் பாவத்தில் நடித்தது போல உப நாயகன். பின்னாளில் நட்சத்திர இயக்குநராக விளங்கிய கே.எஸ்.ரவிகுமார் ஆண்களை நம்பாதே படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்ததைச் சொல்லியிருக்கிறார் பேட்டி ஒன்றில்.
“வேட்டிகட்டி” என்ற எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் தான் ஆரம்பப் பாடல். இதே பாடகியின் இன்னொரு குழுப்பாட்டு “தாளம் தட்டுங்கள்”, மேலும் “பாக்குத் தோப்பிலே” என்று ஜோடிப் பாட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடியது. மலேசியா வாசுதேவன் & சைலஜா ஜோடிக் குரல்களில் “மதுரைக் கார” மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடிய “ராஜாதி ராஜன் தானே”
என்றெல்லாம் இப்படப் பாடல்களை அடுக்கினாலும் முன் சொன்ன இரண்டு பாடல்கள் அளவுக்குக் கவரத் தவறி விட்டார் இசையமைப்பாளர் தேவேந்திரன்.
கானா பிரபா
07.03.18
0 comments:
Post a Comment