“ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னைத் தேடுறேன்”
எண்பதுகளில் ரெக்கோர்டிங் பார்களில் இருந்து தேநீர்ச்சாலைகள் வரை, கோயில் திருவிழா நாதஸ்வரங்களில் இருந்து விடலைப் பையன்கள் ஏன் சின்னஞ்சிறு பொடுசுகள் வரை இந்தப் பாட்டு வந்த நேரம் ஒரு மயக்க நிலைக்கு எடுத்துச் சென்றது. கம்பீரத் தோற்றம் கொண்ட விஜயகாந்த் என்ற நாயகனுக்கு முற்றிலும் மாறுபட்ட மென் குரல்களான ஜெயச்சந்திரனும், கே.ஜே.ஜேசுதாஸும் கச்சிதமாகப் பொருந்திப் போனார்கள். இதுவொரு முரண் நிறைந்த சுகானுபவம்.
இந்த மென் குரல் முரண் பற்றிப் பேசும் போது கேப்டனுக்குத் திருப்புமுனை கொடுத்த “சட்டம் ஒரு இருட்டறை” காலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ச்சியாக அவரை வைத்து இயக்கிய போது பின்னணிக் குரல் கொடுத்தவர் இன்னொரு மென் குரல் எஸ்.என்.சுரேந்தர்.
கூடவே
“தனிமையிலே ஒரு ராகம்”
https://www.youtube.com/watch?v=YrK2xcu8uYM
விஜயகாந்துக்கான ஆரம்ப கால ஹிட் பாடல்களில் ஒன்றைக் கொடுத்தவர் சுரேந்தர்.
“இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே”, “காத்திருந்து காத்திருந்து”, “ராசாத்தி உன்னை” என்று வைதேகி காத்திருந்தாளில் ஜெயச்சந்திரன் கொடுத்த பாடல்கள் மூன்றுமே முத்தாகக் கிட்ட,
https://www.youtube.com/watch?v=VbidRaHhBW4
தொடர்ந்து அந்தப் படத்தை இயக்கிய ஆர்.சுந்தரராஜனின் சீடர் பாலு ஆனந்த் இயக்கிய “நானே ராஜா நானே மந்திரி” படத்தில் கொடுத்த “மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்”
https://www.youtube.com/watch?v=TH75xoyjPvY
இன்றும் ராஜா இசையமைத்த பாடல்களில் அதிக தடவை உச்சரிக்கும் பாடல்களில் ஒரு பாடலானது.
முன்னதில் மூத்தவர் P.சுசீலாவோடு இணைந்தவர் “தேகம் சிறகடிக்கும்”
https://www.youtube.com/watch?v=Hmh7sw5lmhI
என்று அதே படப் பாடலில் சித்ராவோடு இணைந்தார்.
அம்பிகாவை ஜோடியாக்கி விஜயகாந்த் நடித்த தழுவாத கைகளில் அவருக்கு மாறுபட்ட குடும்பத் தலைவர் வேடமாகக் கொடுத்து இயக்கினார் ஆர். சுந்தரராஜன்.
“விழியே விளக்கொன்று ஏற்று”
https://www.youtube.com/watch?v=NkVZoLKtESc
ஆகா இசை சொட்டும் பாட்டு என்று இதைப் படிக்கும் போதே முகம் விளக்காய்ப் பிரகாசிக்குமே?
இதுவும் இன்னொன்றுமாக “ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ”
https://www.youtube.com/watch?v=MR5rk1AhGQY
பாடலும் மீண்டும் ஜெயச்சந்திரன் குரல் கொடுத்த விஜயகாந்த் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்து கொள்ள,
இதோ நானிருக்கிறேனே என்று “பூ முடித்துப் பொட்டு வைத்த வட்ட நிலா” https://www.youtube.com/watch?v=SA3cIpyUOZQ&t=213s
என்று இன்னுமொரு கலக்கல் பாட்டு போட்டி போட்டது. அந்தப் பாடல் இடம் பிடித்த “என் புருஷன் எனக்கு மட்டும் தான்” படத்தில் இன்னொன்றாகக் கொடுத்த “புல்லைக் கூடப் பாட வைத்த”
https://www.youtube.com/watch?v=HAcLOuxlStM
ஜெயச்சந்திரன் தானும் உருகி எங்களையும் உருக வைப்பார்.
“ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே”
https://www.youtube.com/watch?v=OjOZFpjnJwo
அப்படியே றேடியோ சிலோன் காலத்துக்குக் கொண்டு போய் இருத்தி விடும். அந்தப் பாடல் இடம்பிடித்த “அகல் விளக்கு” காலத்தில் இருந்து அகலாத குரலாக கே.ஜேசுதாஸ் விஜய்காந்துக்குத் தோதுவாக இருந்தார்.
எங்கள் காலத்து இளைஞர்களுக்குத் தீனி போட்ட பாடல் என்றால் “அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ” (சிறையில் பூத்த சின்னமலர்).
https://www.youtube.com/watch?v=mHIdn0VaiAQ
ஆனால் அந்தப் பாடலுக்கு முன்பே வெளி வந்த பாடல்கள் தான் நாளாக நாளாக இன்னும் அதிகம் ஈர்த்தன.
அப்படியொன்று தான் “சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா”
https://www.youtube.com/watch?v=GQWF5D94QDg
கேட்கும் போதெல்லாம் தாய்மை உணர்வு வந்து ஒட்டிக் கொள்ளும்.
“பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்” என்ற வரிகளில் மிதக்கும் போது கங்கை அமரன் கவி நயத்தை மெச்சும் மனசு.
பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் வந்த இந்தப் பாட்டோடு “அடி கானக் கருங்குயிலே கச்சேரி வைக்கப் போறேன்” என்று குத்தாட்டத்தில் பின்னியிருப்பார் ஜேசுதாஸ்.
ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்
என்று ஹம் கொடுத்துக் கொண்டே “மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ” என்று உங்களுக்குள் பாடி விட்டு பின்னர் அந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள் சொர்க்கம் ஐயா. இதே பாட்டு சோக கீத வடிவில் ஒற்றை ஆளாக கே.ஜே.ஜேசுதாஸ் உருக்குவார் “நீதியின் மறுபக்கம்” படத்துக்காக.
“உன் மடிமேல் நான் மயங்க….
நாள் விடிந்தால் கண்ணுறங்க….
காவேரி ஆத்துக்கு கல்லில் அணை
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை
நான் போடவா….”
https://www.youtube.com/watch?v=WzEg65o8aEE
அப்படியே ஓடிப் போய் இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு வாருங்களேன்.
இங்கே பேசிக் கொண்டிருக்கும் கே.ஜே.ஜேசுதாசும் ஜெயச்சந்திரனும் ஒரே படத்தில் விஜய்காந்துக்குக் குரல் கொடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற கனவை மெய்ப்படுத்தியது “அம்மன் கோயில் கிழக்காலே”. ஜேசுதாஸ் தன் பங்குக்கு “உன் பார்வையில் ஒராயிரம்” என்று ஒரு சூப்பர் ஹிட் பாட்டு கொடுத்திருக்க, “பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்னராசா” என்று ஜெயச்சந்திரன் தன் பங்கையும் நிறைவாக்கியிருக்கிருப்பார்.
அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் எஸ்பிபி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் என்று நான்கு முன்னணிப் பாடகர்கள் விஜயகாந்துக்குக் குரல் கொடுத்த அதிசயம் நிகழ்ந்தது. அதில் உன் பார்வையில் ஓராயிரம் https://youtu.be/PtL-ZO88hOA ஜேசுதாஸுக்கும்,
பூவ எடுத்து ஜெயச்சந்திரனுக்கும் சேர்ந்தது.
இதில் “பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே”
https://www.youtube.com/watch?v=lfOYYP241SM
பாடலை எந்தவித வாத்தியப் பின்னணி இல்லாமல் கூட அழகாகப் பாடி முடிக்கலாம், அவ்வளவுக்கு அழகானதொரு மெட்டு இலக்கணம் அமைந்திருக்கும்
கே.ஜே..ஜேசுதாசுக்கு பி.சுசீலா, எஸ்.ஜானகி, சித்ரா என்று ஜோடி சேர்ந்த பாடகிகள் எல்லோருமே நிறைவானதொரு பங்களிப்பைக் கொடுத்திருக்க, வாணி ஜெயராமோடு அவர் சேர்ந்த பாடல்களைத் தனிப் பாடல் கொத்தாகப் போடுமளவுக்கு நல்ல நல்ல பாட்டுகள் இருக்கின்றன. நல்ல என்றதும் நினைவுக்கு வருது “நாளை உனது நாள்” படத்தில் வரும் “வெண்ணிலா ஓடுது”
https://www.youtube.com/watch?v=UZQzAphWemw
பாட்டு. பாடகி சுனந்தாவின் முதல் ஜோடிப் பாட்டுக்காரர் ஜெயச்சந்திரன், அவரின் அறிமுகக் காலத்தில் வந்த “சிறைப் பறவை” இல் கே.ஜே.ஜேசுதாஸ் உடன் ஜோடி சேர்ந்தது “ஆனந்தம் பொங்கிடப் பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி”.
https://www.youtube.com/watch?v=zHq3jyS5BBw
“காதல் கீதம்” என்று தமிழில் மொழி மாற்றிய அபினந்தனா தெலுங்குப் படத்தில் “அதே காதல்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாட்டின் மெட்டும் இசையும் விஜய்காந்த் நடித்த “அமுத கானம்” படத்தில் கே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி குரல்களில் “ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடவா” ஆனது.
https://www.youtube.com/watch?v=AZZjvziBvJU
“குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்”
https://www.youtube.com/watch?v=gzzdkIcBcSA
இன்றும் பெரு விருப்போடு வானொலியில் ஒலிபரப்பும் கல்யாணப் பாட்டு தொண்ணூறுகளில் விஜய்காந்துக்கான குரலாக “எங்க முதலாளி” க்காகக் கொடுக்க, அதே கால கட்டத்தில்
“வண்ண மொழி மானே”
https://www.youtube.com/watch?v=QkrOwAwBxSE
என்று சேதுபதி ஐ.பி.எஸ் குரலானார் ஜேசுதாஸ்.
“குயிலே குயிலே கொஞ்சும் தமிழே”
https://www.youtube.com/watch?v=doaaUf7uJ2w
என்று ஜேசுதாஸ் பாசமழை பொழிந்தார் புலன் விசாரணைக்காக.
முன் சென்னதெல்லாம் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்காந்துக்காக கே.ஜே.ஜேசுதாசும் ஜெயச்சந்திரனும் கொடுத்தவை. இதை விட ஏராளம் இன்னும் உண்டு.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் விஜய்காந்தின் ராசிக் குரல்களை விட்டு வைக்கவில்லை. “காற்றோடு புல்லாங்குழல் அது கண்ணே நீ சொல்லும் தமிழ்” என்று “கஸ்தூரி மான்குட்டியாம்”
https://www.youtube.com/watch?v=QT_qjXXiW_g
பாடலில் ஜெயச்சந்திரனை “ராஜ நடை போட வைத்தார்.
இசையமைப்பாளர் சந்திரபோஸ் ஐக் கொண்டாட வேண்டுமென்றால் “ தோடி ராகம் பாடவா மெல்லப் பாடு”
https://www.youtube.com/watch?v=0-EdIAvC08U
பாடலை அந்தக் கொண்டாட்டதில் சேர்க்க வேண்டும். அத்துணை அழகானதொரு மெல்லிசை தழுவிய காதல் பாட்டு கேப்டனின் மாநகரக காவல் வழியாக எமக்குப் பரிசாகக் கிட்டியது.
இசையமைப்பாளர் தேவேந்திரன் எண்பதுகளில் கொடுத்த இரண்டு சோகப் பாடல்கள் அன்றைய காலத்து இளைஞரின் தேசிய கீதம் என்று முன்னர் சொல்லியிருந்தேன். அதை இங்கும் ஞாபகப்படுத்த விஜய்காந்த் நடித்த “காலையும் நீயே மாலையும் நீயே” இல் “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்”
https://www.youtube.com/watch?v=6Oz360EdiXw
மற்றும் “உழைத்து வாழ வேண்டும்” இலிருந்து
“வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்”
https://www.youtube.com/watch?v=fo0LWd2OkzA
ஆகியவற்றைத் துணைக்கு அழைக்கிறேன். அவை சோக ராகம் பாடும் போது இன்னொரு பக்கம் “முத்துக்கள் பதிக்காத கண்ணில்” (சித்ராவுடன் ஜேசுதாஸ்)
https://www.youtube.com/watch?v=qJoSpFaAlno
என்று “உழைத்து வாழ வேண்டும்” படத்திலும், “சம்மதம் சொல்ல வந்தாள்” (எஸ்.ஜானகியுடன் ஜெயச்சந்திரன்),
https://www.youtube.com/watch?v=uxoe5tcZ074
“காலையும் நீயே மாலையும் நீயே” படத்திலுமாக நாயகக் குரல் கொடுத்திருப்பார்கள்.
விஜய்காந்துக்குக் கிட்டிய மாறுபட்ட படைப்புகளில் இசையாட்சி புரிந்த மனோஜ் - கியான் குறித்துப் பின்னர் அதிகம் பார்க்கலாம். ஆனால் இந்தப் பகிர்வில் அவர்கள் கொடுத்த இரண்டு முக்கியமான பாடலைக் குறிப்பிடாமல் கடந்து விட முடியாது. “சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை”
https://www.youtube.com/watch?v=n0a8KAk5GZk
இது “செந்தூரப் பூவே” படத்துக்காக ஜெயச்சிந்திரன் கொடுத்த சோகப்பாட்டு. குடும்பத்தோடு கூடிக் களிக்கும் குரலாக ஜேசுதாஸ் “காவியத் தலைவன் தந்த “சந்தன மலர்களைப் பார்த்து வந்தது தென்றல் காற்று” https://www.youtube.com/watch?v=Ml1eaa3aFJA என்ற இரண்டுமே அவை. ஆபாவாணன் கூட்டணியில் “காவியத் தலைவன்” படத்தில் கேப்டன் இணைந்த போது “சந்தன மலர்களைப் பார்த்து” என்று ஸ்வர்ணலதாவுடன், கே.ஜே.ஜேசுதாஸுமாக குடும்பப் பாட்டுக் கொடுத்தார்.
வித்யாசாகரும் தன் பங்குக்கு “தந்தனத் தந்தனத் தை மாசம்” என்று சாதனா சர்க்கத்தை, ஜேசுதாஸுடன் இணைத்து விஜயகாந்துக்குக் கொடுத்திருந்தார்.
“ஆகாயம் கொண்டாடும் பூபாளமே”
https://www.youtube.com/watch?v=mPG363pNPmw
பாடலோடு பாவலர் மகன் இளைய கங்கை (ஸ்டாலின் வரதராஜன்) தன் இசைப் பயணத்தை இரண்டாவது சுற்றில் “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்ற படத்தில் தொடங்கிய போது ஜேசுதாஸ் குரல் மீண்டும் விஜய்காந்துக்குப் போனது.
விஜயகாந்துக்குப் பல பின்னணிப் பாடகர்கள் பாடல்கள் தந்திருந்தாலும் கே.ஜே.ஜேசுதாஸ் & ஜெயச்சந்திரனின் பாடல்களில் ஒரு தனித்துவம் விளங்கும்.
புரட்சிக் கலைஞருக்கு
இனிய பிறந்த நாள் பூச்செண்டு ♥️🥁
கானா பிரபா