இசையமைப்பாளர் வெ.தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் என்றென்றும் கேரள தேசத்தின் தூய இசையின் பேரரசராக விளங்குகிறார்.
ஆன்மிகம் நிறைந்த சுவாமியின் முழு உடலும் வாழ்க்கையும் இசை என்று சொல்லலாம்.
ஒரு பக்கம் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜேசுதாஸில் இருந்து, ஜேசுதாஸ், மகன் விஜய் ஜேசுதாஸ், மகள் அமேயா ஆகியோருக்கும்,
இன்னொரு பக்கம் இசைஞானி இளையராஜா தொட்டு பவதாரணி வரையும் ஒரு இசை ஞான குருவாக ஸ்வாமிகள் விளங்கி நிற்கின்றார்.
பழம் பெரும் முன்னணிப் பாடகி பி.லீலாவிலிருந்து, N.C.வசந்தகோகிலம், கல்யாணி மேனன் உள்ளடங்கலாக அவர் குருவாக விளங்கியது இன்னொரு மேன்மை.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் அவர்கள் மேடை இசைக் கலைஞராக இருந்த போது அவரைத் திரையிசையின் பக்கம் திருப்பியவரும் ஸ்வாமிகளே. அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மான் வரை ஸ்வாமிகளின் பந்தம் தொடர்ந்தது.
இதனால் பெரிய பக்தர் தலைமுறைகளின் சுவாமி மற்றும் குரு ஆனார்.
ஸ்ரீகுமரன் தம்பியின் பல மெல்லிசைப் பாடல்களை மலையாளிகளின் எப்போதும் பிடித்தமானதாக ஆக்கியது சுவாமியின் மாயம்தான்.
சிறந்த இசை இயக்குனருக்கான மாநில அரசின் திரைப்பட விருது, ஜேசி டேனியல் விருது, சங்கீத சரஸ்வதி விருது மற்றும் சுவாதி திருநாள் விருது உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக, சுவாமி இசைப் பிரியர்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பெற்றார்.
தொண்ணூற்றி மூன்று வயதில், சென்னையில் உள்ள மயிலாப்பூரில், சுவாமி இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வரை தூய இசையின் பக்தராக இருந்தார்.
இன்று கேரள மண் ஸ்வாமிகளுக்கான ஒரு நினைவு மண்டபம் அமைத்து அவரின் சேகரங்கள் அனைத்தையும் சேமித்துப் பாதுகாக்கின்றது.
இப்படியானதொரு நீண்ட இசை வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தட்சணாமூர்த்தி ஸ்வாமிகள் குறித்த ஒரு பெட்டக நிகழ்ச்சியைச் செய்வோம் என்று அன்பு நண்பர் சரவணன் நடராஜனிடம் Saravanan Natarajan வேண்டினேன். அவர் தன்னுடைய நண்பர் சுந்தர் வழியாக ஸ்வாமிகளின் மகள் திருமதி கோமதி ஶ்ரீ அம்மாவை இந்த நிகழ்வுக்கு வருமாறு வேண்டினார். அவரும் மனமுவந்து கலந்து கொண்டார். திருமதி கோமதி ஶ்ரீ அவர்கள் ஒரு சாஸ்திரிய இசைப் பாடகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவாஜி உட்பட (மாலே மணிவண்ணா, சஹாரா பாடலின் முகப்புப் பாடல்) படங்களில் பாடியிருக்கிறார்.
இரண்டு மணி நேரத்தைத் தொடும் இந்த நிகழ்ச்சிக்காக நண்பர் சரவணனும், கோமதி ஶ்ரீ அம்மாவும் கொடுத்த உழைப்பு கிட்டத்தட்ட 10 மணி நேரம் என்று சொன்னால் மிகையில்லை. அவ்வளவுக்கு ஸ்வாமிகள் குறித்த முக்கிய வரலாற்றுத் திரட்டுகள், பாடல்கள், ஒளிப்படங்கள் என்று திரட்டி ஒரு முழுமையான நிறைவான நிகழ்வாகப் படைத்து விட்டார்கள்.
வெள்ளித்திரையில் ஒரு சகாப்தத்தைப் படைத்த வெ.தட்சணாமூர்த்தி ஸ்வாமிகளுக்கு இன்றைய நாள் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாக அவர் முன் இந்தப் படைப்பைச் சமர்ப்பிப்பதில் பெரு நிறைவு கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment