Pages

Wednesday, August 11, 2021

Oh Butterfly .....Butterfly... வ்வாவ் வ்வாவ் Oh Butterfly.....🦋 ஏன் விரித்தாய் சிறகை......🧚‍♂️ தரையில் விழாத இசை ❤️

அந்த ஆரம்ப இசையே வண்ணத்துப் பூச்சி சிறகடித்து உலாவுமாற் போலப் புல்லாங்குழல் நாதத்தோடு கிளம்ப,
இடையில் வரும் நிச் நிச் ஒலியைக் கற்பனை பண்ணினால் அந்த வண்ணத்துப் பூச்சி ஒவ்வொரு பூக்களாய்த் தாவித் தாவி இருக்கும் ஓசையோ எனத் தோன்றும்.
“எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு”
என்று கேட்டு வாங்கி போனார் எட்டு வயசுப் பெண் குழந்தை.
“அது பழைய பாட்டாச்சே” என்று அறிவிப்பாளர் ஜெய்னேஷ் கிண்டலாகக் கேட்ட போது தான் அந்தக் குழந்தை இந்தப் பதிலைச் சொல்லிப் பாடலைக் கேட்டது. ஒரு தினம் சிங்கப்பூர் ஒலி வானொலியைக் கேட்ட போது தான் இந்த சுவாரஸ்யமான உரையாடல் நிகழ்ந்தது.
அந்தப் பாடல் வானொலியில் ஒலித்து ஓய்ந்தும் என் மனசில் கடந்த மூன்று மணி நேரமாக வண்ணத்துப்பூச்சி போலச் சுற்றிக் கொண்டே வருகிறது.
இந்தப் பாட்டை ஆழ அகலமாக முன்பெல்லாம் கேட்டு ரசித்திருந்தாலும் இன்று ஏனோ புதிதாகக் கேட்பது போல. இதை விட ரொம்பப் பழைய பாடல்களையெல்லாம் இன்றைய குழந்தைகள் கேட்டு ரசிப்பது வழமை என்றாலும் ஓ பட்டர்ஃப்ளையின் சிறப்பு வெறுமனே பாடலின் மெட்டு மட்டுமல்ல அது தாங்கியிருக்கும் இசையும். பூவில் குடிகொண்ட தேனை உறுஞ்சிக் களி கொள்ளும் வண்ணத்துப்பூச்சி கொள்ளும் கிறக்கம் எழும். ஒரு தித்திப்பும், புத்துணர்வும் இருக்கும்..
ஓ பட்டர்ஃப்ளை பாடலை எப்படி இசையமைச்சீங்க? என்று பாடகர் கார்த்திக் இசைஞானி இளையராஜாவிடம் கேட்ட போது ராஜாவும் வேடிக்கையாக கையை மிதப்பது போல அசைத்துக் காட்டியதை இசை மேடையில் கண்டிருப்போம். ஆனால் இந்தப் பாடல் வெளிவந்த நாட் தொட்டு பாடலைக் கேட்கும் போதே மிதக்குமாற் போலத் தான் உணர்வேன். பாடல் கூட இசையோடு மிதந்து கொண்டேயிருக்கும். பயன்படுத்திய வாத்தியக்கருவிகளில் புல்லாங்குழல், வயலின் ஈறாக ஒரு புது மாதிரியான மெது மெதுப்பு இருக்கும். புல்லாங்குழல் ஒலி வரும் போதெல்லாம் நோகாமல் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியைத் தான் கண்ணுக்குள் கொண்டு வரும்.
இந்த மாதிரிப் பாடல்கள் என்றால் பாடும் நிலா பாலுவுக்கு கரும்பு சுவைப்பது போல. அந்த “பட்ட ஃப்ளை” என்ற உச்சரிப்பிலேயே ரொம்பவும் நாகரிக எடுத்தாளுகையாக “ர்” ஐ சேர்க்காமல் பாடுவார். ஆனால் கூடப் பாடும் ஆஷா போன்ஸ்லே அபிராமிப்பட்டர் ரேஞ்சுக்கு “பட்டர்ர்ர்ர்ஃபளை” என்று ர்ர்ர்ப்பாடியிருப்பார்ர்.
கேட்கும் போதெல்லாம் இதையும் ஸ்வர்ணலதாவுக்கு எழுதி வைத்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றும். எஸ்.பி.பிக்கும் ஸ்வர்ணத்துக்குமிடையில் வெற்றி தோல்வியற்ற சமனான ஆட்டமாக இருக்கும்.
“மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே” என்ற அடியில்
“உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே”என்று வரும் கணங்களில்
போதையேற்றுவார் ஆஷா போன்ஸ்லே.
இந்தப் பாடலை சுஜாதா பாடியிருக்கிறார் பாருங்கள் நம் எதிர்பார்ப்பைக் கொஞ்சம் ஈடு செய்திருப்பார் இங்கே https://youtu.be/gUVQhGw0i1Q
“மீரா” படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. அனைத்துப் பாடல்களிலும் ஒரு இளமைத் துள்ளாட்டம் இசையில் மட்டுமல்ல வாலிபக் கவிஞர் வரிகளிலும் இருக்கும். ஆச்சரியமாக இந்தப் படத்தில் இடம் பெற்ற “புது ரூட்டுல தான்” பாட்டு தான் என் மனைவியாருக்குப் பிடிக்கும். 😃
கதாநாயகி ஐஸ்வர்யாவை நேரில் பார்க்காமல் ஒரு சஞ்சிகையில் பார்த்துத் தான் "மீரா” படத்துக்கு ஒப்பந்தம் செய்தேன் என்று அப்போது பேட்டி கொடுத்திருந்தார் இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமான ஒளிப்பதிவாளர் P.C.ஶ்ரீராம். அப்போது ஐஸ்வர்யாவும் வண்ணத்துப் பூச்சியுமாக பேரழகு வடிவம் கொண்டு “மீரா”குறித்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தனர். சரத்குமார் நாயகனாக மாறிய போது இந்தப் படத்தில் மட்டும் வில்லனாக நடிக்கிறேன் என்று ஒப்பந்தமான கடைசிப்படம். அதிர்ஷ்டமில்லா நாயகன் விக்ரம் கூட எதிர்பார்ப்போடு இருந்த படம்.
மினி ஜோசப் என்ற கேரளத்துக் குயிலை மின்மினி ஆக்கி “லவ்வுன்னா லவ்வு” பாட வைத்துத்‬ தமிழ்த் திரையுலகில் ஒரு புதுக் குரலை அறிமுகப்படுத்தினார் இசைஞானி.
தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் மின்சாரத் தடை இருந்த போது ஜெனரேட்டரில் 100 ரூபாவுக்கு (அப்போது அது ஆயிரம் ரூபாவை விடப் பெறுமதி) மண்ணெண்ணை போட்டுப் பார்த்த படங்களில் மீராவும் ஒன்று. பெரும்பாலும் படத்தை இரசித்துப் பார்க்கும் ஆவலை விட, அந்த நெருக்கடியான காலத்திலும் படம் போட்டுக்காட்டி ஏதோ சாதனை செய்த திருப்தி தான் முனைப்பில் இருக்கும். எமது வாலிபப்பருவத்தில் இருந்த ஒரே பொழுதுபோக்கு அல்லது நடத்தை அதுவாகத் தான் இருந்தது. அந்த நேரத்தில் எங்கள் கிராமத்தில் படம் பார்க்கும் கோஷ்டியில் என்ன படம் போடலாம் என்ற ஆலோசனைக் குழுவின் முக்கிய உறுப்பினன் நான். என் படத் தெரிவுகள் சில சொதப்பியதும் உண்டு. விக்ரம் நடிக்க அப்போது பிரபலமாக இருந்த பி.சி. ஶ்ரீராம். இயக்க "மீரா" படம் வருகுது என்று ஆவலைத் தூண்ட, மீராவையும் எடுத்துப் போட்டோம்.
படம் தொடங்கி முடியும் வரை, கதாநாயகனும் நாயகியும் வில்லனுக்கு பயந்து ஒடுகினம் , ஒடுகினம், ஓடிக்கொண்டே இருக்கினம். படம் முடிஞ்சாப் பிறகும் கூட்டாளி அப்புவால் நம்பமுடியவில்லை. இன்னும் ஏதேனும் படம் இருக்கும் என்ற நப்பாசையில் எழும்பவேயில்லை. மற்றவர்கள் தங்கள் மோசம் போனது போல் என்னை முறைத்துப் பார்த்தார்கள். ஆனாலும் என்னுடைய முந்திய தெரிவுகள் சில நல்லதாக இருந்ததால் நானே அவர்களுக்கு நிரந்த ஆலோசகர். இப்படிப் பழைய நினைவுகளை எல்லாம் இந்த “மீரா” கிளப்பும்”.
29 வருடங்கள் கழித்தும் மீரா படத்தைப் பற்றிச் சிலாகிக்க இன்று எஞ்சியிருப்பது இசைஞானியின் பாடல்கள் தான். அது அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போகும் இன்று காலை கேட்ட சிங்கப்பூர் வானொலிக் குழந்தை போல.
மலர்கள் தோறும்
நடந்து போகும்
சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம்
இரவல் கேட்கும்
எனது ஜீவனே…..
Oh Butterfly .....Butterfly...

0 comments: