இன்று கடும் குளிர் போர்த்திய விடிகாலை உடற்பயிற்சி ஓட்டத்துக்கு என்னைத் தயார்படுத்தி விட்டு வழக்கம் போல காதணிகளைச் செருகி விட்டு YouTube இல் எழுமாற்றாக ஏதாவது இளையராஜா பாடலைக் கேட்கலாம் என்று துழாவிய போது தன்னிச்சையாகக் காட்டியது இந்தப் பாடல் காணொளி
உடற்பயிற்சி ஓட்டம் ஆரம்பித்த கணம் தொட்டு அது முடிவுற்ற புள்ளி வரை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு அற்புதமான மீள் பகிர்வாகக் கொடுத்திருந்தார்கள். பஞ்சாமிருதத்தில் கடிபடும் கற்கண்டு போல நுணுக்கமான சங்கதிகள் ஒன்றைக் கூட இந்தப் பாடகர்கள் விட்டு வைக்கவில்லை. அமிர்தம் தான்.
ஒரு பாடலைப் பாட முன்பு அதைக் காதலிக்க வேண்டும். அப்படியான காதலுணர்வோடு அணுகினால் தான் அதன் பூரணத்தை அப்படியே அள்ளிக் கொடுக்க முடியும். அப்படியொரு நிறைவானதொரு முயற்சி இது. பாடிய ரம்யா துரைசாமி மற்றும் சஞ்சய் சதீஷ் உங்களுக்கு 💚🙏
தூறல் நின்னு போச்சு படத்தில் வரும் இந்தப் பாடலை அடியொற்றி கவிஞர் முத்துலிங்கத்திடம் கே.பாக்யராஜ் படங்களில் அவர் பணியாற்றிய அனுபவத்தைப் பேட்டியில் நான் கேட்ட போது
“பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம்”
என்று மனுஷர் பாடி விட்டுத் தான் தொடர்ந்தார். அப்படியாயின் அந்த மெட்டை அவர் உளமாரக் காதலித்திருக்கின்றார். அதனால் தான் பூ மாதிரி அற்புதமான வரிகளை அவரால் தூவ முடிந்தது.
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
னன னன னன னனனா
மெட்டின் வசீகரத்தில் வரிகளைப் போட மறந்து விட்டாரோ என்றெண்ணும் ஆலாபனை
மாலை அந்தி மாலை
இந்த வேளை
மோகமே….
ஜேசுதாஸ் அப்படியே உருகிப் போய் விடுவார். தட்டி இயல்பாக்குவது போல உமா ரமணன்
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே…..
அப்படியே சரணத்தில் உமா ரமணனின் அக்மார்க் உருக்கத்துக்கு வழி சமைக்கும்
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா…,,
என்ன விலை கொடுத்தாவது பாட்டுக்குள்ளே வாழ்ந்து விட்டு வர வேண்டும் போல இருக்கும்.
இந்தப் பாடலில் “தந்தன” கொட்டும் கோரஸ் குரல்கள் தான் எவ்வளவு அழகு மணப்பெண்ணின் தோழியர் போல.
“இரு மனம் சுகம்
பெறும் வாழ்நாளே..”
அந்த வாழ் நாளை உயர்த்திப் பாடும் பாங்கைப் பாருங்கள். அங்கே தான் ஒரு பாட்டின் ஜீவிதம் புரியும். அவ்வளவு உயரம் வேண்டுமாம் இவர்களுக்கு.
மேகமழை நீராட...
தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னனனா…
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
0 comments:
Post a Comment