Pages

Wednesday, August 18, 2021

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் ❤️

ஆஹா.... ஆஹா ஹா.....

ஆஹா.... ஆஹா ஹா.....

ஒரு மலை உச்சியிலிருந்து உரக்க ஒலி எழுப்பி அது அப்படியே மலையடிவாரமெங்கும் தொட்டுப் பரவி எதிரொலிப்பது போல ஒரு ஆர்ப்பரிப்பை முகப்பு ஆலாபனையாய் கொடுப்பார் பாடும் நிலா பாலு. அது தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் காதலின் நீள அகலம் எவ்வளவு என்பதைத் தன் நெஞ்சைப் பிளந்து காட்டுமாற் போல இருக்கும்.

வாசமான முல்லையோ..,

வானவில்லின் பிள்ளையோ..

பூவில் நெய்த சேலையோ..

நடந்துவந்த சோலையோ..

இப்படியாகக் காதல் பாடலென்று வந்தாகி விட்டது இனி அவளை வர்ணிக்கக் கற்பனைக்குதிரைக்குக் கடிவாளம் போட முடியுமா? 

ஆனால் 

ஆனால் 

ஆனால்

ஒரு இயற்கையைப் பொய்யாக்கி விட்டு, கற்பனையை மெய்யாகும் தருணத்தைப் போட்டிருப்பார் கவிஞர் வைரமுத்து இப்படி

“உன் கண்ணில் நீலங்கள் 

நான் கண்டு நின்றேன்

ஆகாயம் ரெண்டாக 

மண்மீது கண்டேன்”

பாடலின் அந்தத்தில் அப்படியே தன் ஆலாபனையால் அடுத்த தொடக்கத்துக்கு இணைத்து விடுவாரே எஸ்பிபி கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா இவரைத் தாண்டி?

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் அந்த ஆலாபனையை ஆரம்பிக்கும் போதே தன் வயதில் பாதியைக் குறைத்து விடுவார்.

இந்தப் பாடல் மூன்று வடிவங்களில் இருக்கிறது. அவற்றை வேறுபடுத்த இசை தான் முக்கியமான தொழிற் கருவி. மற்றது பாடல் வரிகள்.மற்றப்படி மெட்டில் அதிகம் நெகிழ்வுத் தன்மையையோ வேகத்தையோ அதிகப்படியாகக் கூட்டாமல் அளவாக வேகமெடுத்தும், நிதானித்துச் சோகம் கலந்தும் கொடுக்கிறது இந்தப் பாட்டு.

“கீதம் சங்கீதம்” 

https://www.youtube.com/watch?v=Lhjj-2Rxvxs

சந்தோஷப் பாடலில் ஒரு பக்கம் உருகி உருகி எஸ்பிபி பாட அந்த இடையிசையில் அவர் நிற்கும் மலையுச்சி நோக்கிப் பயணிக்கும் நீலகிரி எக்ஸ்பிரஸ் போல இசையின் வேகம் ஒரு தட தட தட ரயில் பயணம்.

இதே பாடல் தான் ஆனால் சோகச் சூழலாக அமைய வேண்டியிருக்கிறது. அப்போது தன்னுடைய கடந்த காலக் காதலின் இனிய நினைவுகளை எப்படி இரை மீட்டியிருப்பான்?

அதே பாடலை மீண்டும் ஆலாபனை செய்திருப்பான் அல்லவா?

அப்படித் தான்

கீதம் சங்கீதம் சோகப் பாடல்

https://www.youtube.com/watch?v=DcI4K_GEdFQ

அதே நீலகிரி எக்ஸ்பிரஸை பின்னோக்கித் திருப்புமாற் போல, ஒரு ரிவர்ஸ் அடித்து மெது நடை கற்பிக்கும் பாட்டு இது.

கீதம் சங்கீதம் சந்தோஷ மெட்டின் ஆரம்பத்தில் சிரித்து வைக்கும் எஸ்.பி.சைலஜா குரலைக் கடாசி விட்டாலும் பாதகமில்லை என்றெண்ண வைக்கும். அப்படியிருந்தால் அது ஒரு காதலின் தீபமொன்று ரேஞ்சில் தனியாவர்த்தனமாக அமைந்திருக்கும்.

இருக்கவே இருக்கிறதே எஸ்.பி.சைலஜாவுக்கா தனிப்பாட்டு இதுவென்று.

https://www.youtube.com/watch?v=ad8mgmRuk64

அது என்னமோ தெரியவில்லை கங்கை அமரன் முதலில் எழுதிய பாடலிலோ, முதலில் இசையமைத்த படத்திலோ அன்றி முதலில் இயக்கிய படத்திலோ கூட அவரின் பிரிய நண்பன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடவில்லை. ஆனால் வட்டியும் முதலுமாகக் கொடுத்து வைத்த படமோ என்றெண்ண வைக்கும் இந்த “கீதம் சங்கீதம்”

கோழி கூவுது திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்து தன்னுடைய இன்னொரு பரிமாணத்திலும் சாதித்து மிகப் பெரிய வெற்றியையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டார் கங்கை அமரன்.

பாடலாசிரியராக, இசையமைப்பாளராக இதற்கு முன்பே தன்னை நிரூபித்துக் காட்டிய கங்கை அமரனுக்கே கோழி கூவுது படத்தின் வெற்றியை ஏற்றுக் கொள்ளுமளவு அப்போது பக்குவம் இருக்கவில்லை என்பதை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் அவர் தொடர்ந்து இயக்கிய "கொக்கரக்கோ" படம் நேரெதிரான வசூல் நிலவரத்தைக் கொடுத்தது.

"கோழி எப்பிடிக் கூவும்" என்று வைரமுத்து செல்லமாகச் சீண்ட "வைரமும் முத்துவும் ஒன்றாக இருப்பதில்லையா அது போல்" என்று பதில் கொடுத்தார் கங்கை அமரன் என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு.  

"பாவலர் கிரியேஷன்ஸ்" தயாரிக்க "கொக்கரக்கோ" படம் கங்கை அமரன் இயக்கத்தில் உருவானது. இந்தப் படத்திலும் இசைஞானி இளையராஜா குறை வைக்காத மணி மணியான பாடல்கள். கோழி கூவுது படத்தைப் போல இந்தப் படத்திலும் வைரமுத்து பாடல்களை எழுதினார். அதில் ஒன்று தான் இந்த "கீதம் சங்கீதம்"

சில பாடல்களை எந்த விதமான வாத்திய அலங்காரங்கள் இன்றித் தனிக் குரல் வெளிப்பாடாகப் பாடும் போது கூடச் சுவைக்கும். அப்படியொன்று தான் இந்த "கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்".

எம்பார் கண்ணனின் வயலின் இசையோடு மீட்டாத ஒரு வீணையும் கீதம் சங்கீதமும் கலந்து ஒரு பகிர்வு இருக்கிறது கேட்டுப் பாருங்கள்.

https://soundcloud.com/skrajiv/meetadhu-oru-and-geetham

நீலமான கண்களே..,

நீண்டு வந்து தீண்டுதே......

பாவை பாதம் பார்க்கவே..

கூந்தல் இன்று நீண்டதே....

தூய காதலின் முன்னே இயற்கையெல்லாம் பொடிப் பொடியாக அங்கே கற்பனையே நிஜமாக நிறுவப்படும் அற்புதத் தருணமது.

ஒவ்வொரு வரிகளையும் ஒரு பச்சைக் குழந்தையை ஏந்துமாற் போல ஏந்திப் பாடும் இந்தப் பாடகனை எந்தப் பிறவியிலும் மறவோம்.

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

பாதம் உந்தன் பாதம்

என்னோடு வந்தாலே போதும் எப்போதும்

கானா பிரபா

0 comments: