Pages

Wednesday, March 14, 2018

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு 🥁💐🎻

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு 

இன்று நூறு வயசு 🥁💐🎻


கேரளத்தில் இருந்து வந்து  தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னராக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தெலுங்கு தேசத்தில் கொடி நாட்டியவர் நாகர்கோயிலில் இருந்து புறப்பட்ட இசை விற்பன்னர் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள். 


இன்றைக்குத் அறுபதுகள் எழுபதுகளில் இடம்பெற்ற பாடல்கள் வானொலிகளில் ஒலிபரப்புச் செய்யப்படும் போது பொதுவாக எம்.எஸ்.வி கணக்கிலும் சேர்க்கப்படுவதுண்டு. ஆனால் தமிழ்த் திரையிசைப் பாரம்பரியத்தில் ஊறியவர்கள் கே.வி.மகாதேவன் அவர்களின் தனித்துவமான இசைக் கோப்பை அடையாளம் கண்டு ரசிப்பர். ஒப்பீட்டளவில் தமிழ்த் திரையிசை ரசிகர்களை விட ஆந்திரா வாலாக்கள் தான் “மாமா” என்று திரையுலகத்தோர் பாசத்தோடு அழைக்கும் கே.வி.மகாதேவனின் மேல் அதீத பற்றுஒ கொண்டவர்கள்.


சென்னை வானொலியின் விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் நான் அடிமைப்பட்ட காலத்தில் தான்

கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்த தெலுங்குப் பாடல்களைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு முதன் முதலில் கிட்டியது.


எண்பதுகளில் இளையராஜா பாடல்களோடு வாழ்க்கைப்பட்ட என் போன்ற ரசிகர்களுக்கும் கே,வி.மகாதேவன் முத்தான பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றில் குறிப்பாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டுமென்றால்,  

ஹிந்தியில் ஹிட்டடித்த ரங்கீலாவுக்கெல்லாம் பாட்டி முறையான கதை "ஏணிப்படிகள்" படத்தில். இந்தப் படத்தின் கதையை உருவிப் பின்னாளில் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன, ஆனால் ஏணிப்படிகள் படத்தின் நேர்த்தியான திரைக்கதையும் கே.வி.மகாதேவனின் இசையும் இன்றளவும் நினைவில் இனிமை சேர்ப்பவை. இந்தப் படத்தில் பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனித்தனியே பாடிய

 "பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன" , “கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்” போன்றவை ஏக பிரபலம் அப்போது.


புதுமைப்பித்தனின் கதையொன்றை எடுத்தாண்டு ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் "அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை". தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோப்படங்களும் நம்மிடையே புழங்கிய காலத்தில் அப்போது இந்தப் படத்துக்க்கும் ஏக மவுசு. படத்தில் "சுமைதாங்கி ஏனின்று விழுங்கின்றது" என்ற சோகப் பாட்டு, “மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்” என்ற அழகிய காதல் பாட்டு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய "எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே" என்ற தனிமைத் தவிப்பின் பாடலென்று முத்தான மூன்று கிட்டியது.


நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் எண்பதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது வழக்கம் போலத் திரை ஜோசியப்படி அவரும் நாயகனாக நடித்து வெளிவந்த படம் என்ற ஒரேயொரு பெருமையைக் கொண்டது "பாய்மரக்கப்பல்". இந்தப் படத்தில் எஸ்.பி.சைலஜா பின்னணில் கோரஸ் இசைக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்" சென்னை வானொலியில் நீங்காது இடம்பிடித்த பாடல்களில் ஒன்று


கமல்ஹாசனின் ஆரம்ப காலம் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வேடம் பூண்ட போது சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த படம் "சத்தியம்". இந்தப் படத்தில் "கல்யாணக் கோயிலின் தெய்வீகக் கலசம்" பாடல் கே.வி.மகாதேவனின் பாடல்களில் அழகிய முத்து ஒன்று.


என் பால்ய காலத்தின் இருள் படிந்த நினைவுகளில் வின்சர் தியேட்டர் என்று நினைவு. ஏதோவொரு படம் தொடங்க முன்பு தியேட்டர்காரர் ஒலிபரப்பிய “கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே” இன்றும் பசுமரத்தாணி போல உறைந்திருக்கிறது அதுவும் சங்கீதத் திலகத்தின் கை வண்ணமாக உத்தமன் படத்தில் வந்ததாகப் பிற்காலத்தில் அறிந்து தெரிந்து கொண்டேன்.


அது போல “ஞானக் குழந்தை” படத்தைப் பல்லாண்டுகளுக்குப் பின் லிடோ திரையரங்கில் திரையிட்ட போது சீனிப்புளியடி ஆரம்பப் பள்ளிக்கூடக்  கூட்டத்தோடு திருஞானசம்பந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று சொல்லிப் போய்ப் பார்த்ததோடு இன்றும் இனிக்கும் கே.வி.மகாதேவன் அவர்களின் அந்தப் படப் பாடல்களில் ஒன்று “பாலோடு தேன் கலந்து அபிஷேகம்”.


2001 ஆம் ஆண்டு  சிட்னிக்கு இசை நிகழ்வை நடத்த வந்த பாடகி சுஜாதா நான் அப்போது இயங்கிய வானொலி நிலையத்துக்கு வந்த போது அப்போது கிட்டிய கே.வி.மகாதேவனின் பிரிவுச் செய்தியை இணையம் மூலம் அறிந்து அவருக்குச் சொன்னேன். அப்போது "மாமா" என்று சொல்லியவாறே, தமது குடும்பத்தில் ஒருவரின் இழப்புப் போல வாய்பொத்தி அவர் கலங்கி நின்றார். 


 கந்தன் கருணை படத்திற்காகத் தேசிய விருதைத் தமிழில் பெற்றுக் கொண்டவர், திரையிசைக்காகக் கொடுத்த முதல் தேசிய விருது கந்தன் கருணைக்குத் தானாம். தமிழோடு தெலுங்கில் சாதனை படைத்த சங்கராபரணத்துக்கும், சுவாதி க்ரணம் என்ற படத்துக்கும் என்று மூன்று தேசிய விருதுகளை எடுத்ததோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் கே.வி.மகாதேவன்.


கே.வி.மகாதேவனின் உதவியாளராகவிருந்த புகழேந்தி அவர்களின் மனைவி, மகனை 17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வானொலிப் பேட்டி எடுத்தபோது இவரின் அறியப்படாத பரிமாணங்களை அப்போது சொல்லிச் சொல்லிச் சிறப்பித்தனர்.


மார்ச் 14, 1918 ஆம் ஆண்டில் பிறந்து ஜூன் 21, 2001 வரை வாழ்ந்திருந்து இன்று நூறாவது பிறந்த நாள் காணும் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனின் பாடல்கள் முறையாக அவர் பெயர் சொல்லி வானொலிகளில் பகிரப்பட வேண்டும். அதுவே அந்த மகா கலைஞனை இன்னும் பல ஆண்டுகள் நாம் உயிர்ப்பித்து வைத்திருக்க ஏதுவாக அமையும்.


கானா பிரபா


14.083.2018

0 comments: