Pages

Monday, May 25, 2026

ஒரு முல்லைப்பூவிடம் ❤️



 TMS & சுசீலா ஜோடி இணைந்தது ஒரு யுகக் கணக்கு. அது நிகழ்த்திய அற்புத விளைச்சல் என்பது காலம் தாண்டியது.

இந்த இருவரையும் இணைத்து விட்டு ஒரு பாட்டு கொடுத்தாலே அது அந்தக் காலம் ஆகி விடும்.

ஆனால் இந்தப் பாடலின் அங்க இலட்சணங்கள் எல்லாவற்றிலும் அந்தக் காலம் தான் பேசும்.

லல்லா லாலலா தொடங்கும் போதே, அந்த மிடுக்கனோடு கூட சாரட் வண்டியில் ஏறி உட்கார்ந்து உற்சாகத் தாளம் போடும் வாத்தியக் குழாம்.

ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும்

பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா

ஒர்ர்ரு என்ற நறுக்கு உச்சரிப்போடு இசையரசியின் வெட்கக் குரல் தொடரும்.

இந்த மாதிரித் தாள லயம் எல்லாம் இளையராஜாவின் கோட்டையில் ஒலித்தால் வியப்பில்லை.

ஆனால் இளையராஜா காலத்தில் மனோஜ் - கியான் இரட்டையை இசைக் கோவைக்கு வைத்துக் கொண்டு தன் எண்ணங்களைச் செயல்வடிவமாக்கிய புதுமைப் பித்தர் ஆபாவாணன்.

பாடல்கள், இணை இசை என்று அவர் ஊமை விழிகளில் தொடர்ந்த பாரம்பரியத்தின் விழுதுகளில் ஒன்று இந்த “தாய் நாடு”.

இது பனித்திரை மூடிய பார்வை

அந்த பார்வையில் மாறுதல் தேவை

அந்த மாறுதல் நான் தரும் போது

அந்த திரையும் விலகலாம்

அன்று பயணம் தொடரலாம்

அந்த “மாறுதலில்” அறுபதுகளின் கட்டிளங் காளைத்தனத்துக்குப் போய் விட்டு வருவார் TMS.

“கொஞ்சம் வாடினால்” என்பதில் கூட எத்தனை நுணுக்கம் காட்டி வாடிப் போன தொனியைக் காட்டுவார் சுசீலாம்மா.

நளினம் காட்டும் அக்கார்டியன் இசைக்கருவியை வாங்கி ஆயிரம் முத்தங்கள் இட்டால் என்னவாம்.

ஒவ்வொரு வரிகளும் முடியும் போது அணி அணியாய், அந்தக் காற்று வாத்தியத்தின் அலை பாய்தல் எல்லாம் மெல்லிசை மன்னர் காலத்தை நினைப்பூட்டிப் பரவசத்தில் ஆழ்த்தும்.

பாட்டு முடியும் போது அந்த மழலைக் குரலை இணைத்தது ஒரு முத்தாய்ப்பு.

விஜயகாந்த் நடித்த “செந்தூரப் பூவே” சத்யராஜுக்குத் தான் முதலில் தேடி வந்தது. ஆனால் அதன் அருமை தெரியாமல் இருந்து விட்டேனே என்ற சத்யராஜுக்கு ஆபாவாணன் கூட்டணியில் அமைந்த படமாக தாய் நாடு அமைந்து விட்டது.

தோல்விப் படமானால் என்ன இதோ முப்பது ஆண்டுகளைக் கடந்து “ஒரு முல்லைப்பூவிடம்” நினைப்பூட்டிக் கொண்டே இருக்குமே?

ஒரு முல்லைப்பூவிடம் பாடலோடு, 

தாளம் தட்டிப் பட வந்தேன், தாய்மாமன் கைகள் பட்டு, ஓ கண்களே, நான் முதன்முதல் பாடிய பாட்டு என்று மொத்தமாக ஐந்து பாடல்களை TMS க்கு அள்ளி வழங்கி அவர் வாழும் காலத்தில் பாட்டு விழா எடுத்தது இந்தப் படம். அதில் புதுமை என்னவென்றால், தந்தை, மகன் என்று இரு சத்யராஜுக்கும் இவர் ஒருவரே குரல்.

T.M.செளந்தரராஜன் எனும் தென் இசைத் தென்றலை நினைக்கும் போதெல்லாம் இந்தப் பாட்டும் கூட வரும்.

நல்ல ஆறுதல் நீ தரும் போது

எந்த திரையும் விலகலாம்

அன்பு பயணம் தொடரலாம் ❤️

https://youtu.be/1ACHJiUphgw?si=F49urv_qoV0gxh3u



Saturday, May 23, 2026

பாடலாசிரியர் முத்துக்கூத்தன் மகன் கலைவாணன் மறைவில்


 தொன்று தொட்டு இன்று வரை 

ஏழை என்னும் ஜென்மத்துக்குத் துன்பம் ஐயா

இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம் 

வன்மம் கொண்டே துன்பம் தந்தால் 

தொல்லை ஐயா….

ஏழை படும் பாடு அது சொல்லி முடியாது

பொழுதே இருளானால் இனி இங்கே விடிவேது?

https://www.youtube.com/watch?v=XoszYudZyko

பாடலாசிரியர் முத்துக்கூத்தன் எழுதி “அவதாரம்” திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்.

ஒரு சோகப் பரப்பில் எழும் விரக்தியை வரிகளிலும், ஆக்ரோஷத்தை இசையிலுமாகக் கொடுத்த வகையில்

இந்தப் படத்தின் மிக முக்கியமானதொன்று.

இப்படியானதொரு சூழலுக்கு ஒரு நாட்டுப் பண் கலைஞரைப் பாடல் எழுத வைக்க வேண்டும் என்ற தீர்மானம் நாசரின் தெரிவாக இருக்கக் கூடும்.

இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியர்கள்  என்ற வரிசையில் தான் முத்துக்கூத்தன் என்ற பாடலாசிரியர் குறித்த அறிமுகம் எனக்குக் கிட்டியது.

இருப்பினும் அவர் பெரும் பெரும் ஆளுமை என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

முத்துக்கூத்தன் பழம் பெரும் கவிஞர், பாடலாசிரியர், வில்லிசைக் கலைஞர் என்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முன்னிலையிலேயே கலைவாணரின் வாழ்கையை வில்லிசைத்தவர் என்றும், எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் நடிகராகவும், எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமரி, நாடோடி மன்னன், அரசகட்டளை, திருடாதே ஆகிய படங்களிலும் பாடல்களை எழுதியவர் என்று விக்கிப்பீடியா குறிப்பு அவரி வாழ்க்கைச் சுருக்கத்தைப் பகிர்கிறது.

கலைவாணர் என்.எஸ்.எஸ்.கிருஷ்ணனின் மேல் நேசம் கொண்டு தன் மகனுக்குக் கலைவாணன் என்றே பெயர் சூட்டினாராம்.

“கலைமாமணி” கலைவாணன், பொம்மலாட்டக் கலை மூலம் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் போன்ற பகுத்தறிவு சிந்தனைகளை, சமூக முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்.

இன்று நேற்று 68 ஆவது அகவையில் விடைபெற்று விட்டார்.

தன் தந்தையின் நீட்சியாகக் கலைப்பணியாற்றிவரின் களப்பணி ஓய்ந்து விட்டது.

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!