" நீ தான் கோபுவா!”
“ஆமாப்பா”
“சிவாஜிக்குல்லாம் எளுதீக்கியாமே, இந்த கலாட்டாக் கல்யாணம்லாம் பாத்திருக்கேம்பா, நீ நம்மூர்க்காரன்னு தெரியாமப் போச்சேப்பா
நம்மளக் கொஞ்சம் சினிமாவுல இஸ்து வுடேன்
இந்த தேங்காய் சீனிவாசன், நாகேஷைல்லாம் பீட் பண்ணணும்"
அடப்பாவி சினிமாங்குறது எவ்ளோ பெரிய விஷயம் இவன் அசால்டா வந்து பீட் பண்ணுடுவேங்குறான் என்று மனசுக்குள் நினைக்கிறார் கோபு.
“சரி நான் சொல்றேம்பா” என்று சொல்லி அந்த மனிதனை வழியனுப்பி வைக்கிறார்.
பின்னால் அவரின் வீட்டு வேலைக்காரி வந்தாள்.
“ஐயரே! என்ன இவன்கிட்டல்லாம் பேச்சு வச்சிருக்கே நீயி,
அவன் மூணு இன்ஸ்பெக்டரை, நாலு போலீஸ்காரரைப் போட்டுத் தள்ளினவன்”
என்று திகிலூட்டி விட்டுப் போகிறாள்.
திருவல்லிக்கேணி வாசியான சித்ராலயா கோபு சந்தித்த அனுபவம் ஒரு கதையாகப் பிறக்கிறது.
ஒரு சினிமாக் கதாசிரியரிடம் ஒரு ரவுடி தன்னைச் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டுகிறார். அடுத்த நாள் அந்தக் கதாசிரியரின் வீட்டு உரிமையாளரே கேஸ் எல்லாம் வீட்டுக்கு அனுப்பி விட்டு,
“என்கிட்ட கேட்டா நானே கொண்டு வந்து கொடுத்திருப்பேனே ஏன் துரைக்கண்ணுகிட்டல்லாம் சொல்லிக்கிட்டு”
என்று அந்தக் கதாசிரியருக்கு மரியாதை எல்லாம் பலமாகக் கிடைக்கிறது.
ரவுடியைப் போட்டுப் படம் எடுத்தாச்சு, அவனுக்கும் நல்ல சந்தோஷம். கூட்டாளிகளோடு படம் பார்க்கப் போகிறான்.
ஆனால் அவனை வைத்து எடுத்த காட்சிகள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டன.
“நீ ஒண்ணும் கவலைப்படாதே, அடுத்ததா நானே கதை, வசனம், டைரக்சன் பண்ணி ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன், நீ தான் வந்து அந்தக் கட்டையை (க்ளாப்) அடிக்க வேண்டும்”
என்று ரவுடி சொல்வதாகக் கதை முடிகிறது.
“துரத்துகிறார் துரைக்கண்ணு” என்ற பெயரில் சித்ராலயா கோபு குமுதத்தில் பல்லாண்டுகளுக்கு முன் எழுதிய தொடர் அது.
இதைப் படிக்கும் போது “ஜிகர்தண்டா” படம் ஞாபகத்துக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல என்று சொல்ல மாட்டேன்.
கார்த்திக் சுப்புராஜ் தன் படம் உருவான கதைக்கு ஒரு வரலாறு வைத்திருக்கிறார்.
நாம் சந்திக்கும் மனிதர்கள், இயல்பான சம்பவங்களை வைத்தே வசனம் கொடுப்பது சித்ராலயா கோபுவின் பாணி.
தன் முன்னோர்கள் கல்கி, தேவன் போன்றவர்களை மெச்சுவார்.
“கோபு ஒரு சமுத்திரத்தில் கண்டெடுத்த முத்து நாமெல்லாம் கரையில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்கள்”
என்று சித்ராலயா கோபுவைத் தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். சமீபத்தில் “காசேதான் கடவுளடா” படத்தை முதன்முறை பார்த்தேன்.
கிரேசியின் முன்னோரின் தாக்கம் பின்னாளில் எவ்வளவு தூரம் அவருக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது என்பதை உணர முடிந்தது.
காசேதான் கடவுளடா நாடகத்தை ஏவி மெய்யப்பச் செட்டியார் படமாக்க நினைத்த போது அந்தப் படத்தை சித்ராலயா கோபு அவர்களையே இயக்க வேண்டினார்.
புதுமை இயக்குநர் ஶ்ரீதரின் நண்பர், தான உத்தியோகத்தை உதறி விட்டுத் தன்னுடனேயே வருமாறு அவரும் வேண்டவும் ஶ்ரீதரின் பாசறையில் கதை வசன கர்த்தாவாக விளங்கியவர்.
“சமூகத் தொண்டி”,”மாஞ்சாக் கயிறு” என்று இந்தப் படத்தில் தேங்காய் சீனிவாசன் வைத்து அதகளம் பண்ணியிருப்பார்.
ஏவி மெய்யப்பச்செட்டியார் இந்தப் படத்தின் குணச்சித்திர நாயகன் தேங்காய் சீனிவாசனுக்கு 16 அடி கட் அவுட் வைத்ததால் கதாநாயகன் முத்துராமனுக்கு வருத்தமும் கூட.
படத்தைத் தேடிப் பிடித்துப் பாருங்கள் இந்தக் காலத்திலும் ரசிக்கலாம்.
நம் காலத்தில் ஏவிஎம் இன் “பாட்டி சொல்லைத் தட்டாதே” வழியாகத் தான் கோபு நமக்கு அறிமுகம். இங்கேயும் அவரின் ஆஸ்தான நடிகை மனோரமோவோடு, ஒரு நகைச்சுவைக் கலாட்டாவே இருக்கும்.
ராஜசேகர் இயக்கிய அந்தப் படத்தைத் தொடர்ந்து ஏவிஎம் இன் “வசந்தி” படத்தை மோகனை வைத்து 30 நாட்களில் எடுத்து முடித்தவர் சித்ராலயா கோபு.
இவரின் கலாட்டா கல்யாணம் நாடகத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனே படமாக எடுக்க வேண்டினாராம்.
பாஸ்கியுடன் இவரின் கலகல பேட்டியைத் திரும்பத் திரும்பப் போட்டு ரசிப்பேன்.
கோபு, ஶ்ரீதரைத் தவிர இன்னொரு நண்பர் கடுகு நம் வலைப்பதிவு காலத்திலும் எழுதிய எழுத்தாளர் இந்த மூவரும் பள்ளிக்காலத் தோழர்கள். அஞ்சறைப்பெட்டி பெயரா கடுகு, மிளகுன்னு பேர் வச்சுண்டு எழுதிக்கிட்டிருந்தான் என்று கோபு சொல்வார்.
கடுகுவின் வலைப்பதிவைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். இந்த உலகில் இருந்து விடை பெற முன்னர் வரை எழுதிக் கொண்டே இருந்தவர்.
கோபு, தன் ஐந்தாம் வகுப்பு நண்பர் ஶ்ரீதரோடு இணைந்த கலைப்பயணம்,
தன்னை கதை வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும் அடையாளப்படுத்தினார்.
இவரின் “சிரிப்பாலயம்” புத்தகத் தலைப்பையும், அந்தப் புத்தக அட்டையில் இருக்கும் அவரின் பொக்கை வாய்ச் சிரிப்பையும் பார்த்து ரசிப்பேன்.
இன்று தனது 95 ஆவது பிறந்த நாள் கொண்டாடும்
சித்ராலயா கோபு ❤️
வாழ்க வாழ்க வாழ்க
கானா பிரபா
02.06.2026


0 comments:
Post a Comment