Pages

Sunday, October 4, 2026

சிங்கீதம் முதல் சிங்கீதம் வரை


இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்பாளியாக விளங்கிய சிங்கீதம் சீனிவாசராவ் தனது 95 ஆவது வயதில் அக்டோபர் 3 ஆம் திகதி மறைந்து விட்டார். திரைப்படத் துறையில் 71 வருடகாலம், 54 வருடங்களாக இயக்குநர் என்று வாழ்ந்து தன் வாழ்க்கையை அர்த்தப்படுத்தியிருக்கிறார்.

கமல்ஹாசன் & சிங்கீதம் சீனிவாசராவ் கூட்டணியைப் பாருங்கள், Sommokadidhi Sokokadidhi (தமிழில் இரு நிலவுகள் என்று வெளிவந்தது), ராஜ பார்வை, புஷ்பக் (பேசும் படம்), அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் மகளிர் மட்டும் என்று ஒவ்வொன்றும் தனி ரகம். 

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி இந்த ஆண்டு வெளிவந்த இறுதிப் படமான சிங்கீதம் கூட ராஜபார்வை காலத்தில் அதாவது 45 வருடங்களுக்கு முன்னர் கமல்ஹாசனிடம் சொல்லப்பட்ட கதை. அதை இப்போது எடுத்து முடித்து நிறைவு கண்டார்.

தொண்ணூறுகளுக்கு முன்பெல்லாம் கமல் படங்களின் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் என்று காணும் போது கமல் தான் புனைப்பெயரில் விளையாடுகிறாரோ என்று எண்ணுவதுண்டு.

“அபூர்வ சகோதரர்கள்” படத்தில் ஒரு பரபரப்பான காட்சி.

அப்பு கமல் செய்த கொலைகளுக்காக ராஜா கமல் துரத்தப்படும் காட்சி. அப்போது தான் தன்னுடைய மறுபிள்ளை வளர்ந்து ஆளாகியிருப்பதைத் தாய் ஶ்ரீவித்யா கண்டு உணர்ச்சி மேலிடுகிறார்.

இந்தக் காட்சியை கமல்ஹாசன் விபரித்ததும் “ஆகா அட்டகாசமான செண்டிமெண்ட் சீன் அகப்பட்டுடுதுடா” என்று கமலின் உசுப்பேற்றலில் கிட்டத்தட்ட 15 பக்க வசனக் காட்சியாக கிரேஸி மோகன் எழுதித் தள்ளிவிட்டாராம். அதைச் சும்மா படிக்கவே ஏழெட்டு நிமிடங்கள் பிடிக்கும்.

படத்தின் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் முன் கமல் அந்தக் காட்சியை ஒத்திகை காட்டுகிறார். எல்லாவற்றையும் பார்த்து விட்டு மெல்லச் சிரித்து விட்டுச் சொன்னாராம்,

“கமல் ! உங்களுக்கு இந்தக் காட்சிக்காக 30 sec அல்லது

போனாப்போகுது அதிகபட்சம் ஒரு நிமிடம் தர்ரேன்” 

போய் வேற மாதிரிச் சிந்திச்சுட்டு வாங்க”

என்று சொல்லி அனுப்பி விட்டார் சிங்கீதம்.

கமல் குழுவினருக்குப் படு ஏமாற்றம். வேண்டா வெறுப்பாக மாற்றியமைத்தது தான் இப்போது திரையில் காணும் காட்சி. அதில் தாய் ஶ்ரீவித்யா & மகன் ராஜா கமல் சந்திக்கும் காட்சி அதிகபட்சம் 30 விநாடிகள் தான்.


இந்தச் சம்பவத்தை கமல்ஹாசனோடு  அந்தக் காலத்தில் இணைந்து பணியாற்றிய திரு ராசி அழகப்பன் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்.

ராஜாஜியின் கதையில் திக்கற்ற பார்வதி, கமல்ஹாசனின் ராஜபார்வை. பேசும் படம் என்று தமிழில் வெளியான, வசனம் ஏதும் இல்லாமல் எடுத்த கன்னடப் படமான புஷ்பக விமான , கால் ஊனமுற்ற பெண் நடனத்தில் சாதிக்கும் மயூரி, அபூர்வ சகோதரர்கள், கால இயந்திரத்தில் கிருஷ்ண தேவராயர் என்ற மன்னன் காலத்துப் பயணிக்கும் ஆதித்யா 369, கார்ட்டூன் சித்திரமான Ghatothkach போன்ற படங்களின் வழியாக சிங்கீதம் இந்திய சினிமாவின் முக்கிய அடையாளமாக அறியப்படுகிறார்.

ஒரு கலைப்படைப்பாளி தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய படைப்புலக அனுபவத்தைக் காணொளி வழியாக ஆக்கித் தந்த வகையில் மிகச் சொற்பமான பகிர்வுகளே இருக்கின்றன.

சிங்கீதம் சீனிவாசராவ் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களைத் தனக்கென ஒரு பிரத்தியோகத் தளத்தில் பகிர்ந்திருப்பது.

ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 53 பாகங்கள். எப்பேர்ப்பட்ட அசுர முயற்சி இது.

கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒரு நடிகர் என்று பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர்.

நான் இசையமைக்கும் படத்துக்கு நீங்கள் தான் இசை ஒருங்கமைப்பாளராக இருக்க வேண்டும் என்று இளையராஜாவிடம் ஒரு சமயம் சொல்லி இருக்கிறார் சிங்கீதம்.

1986 ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் படத்தை இயக்கியதோடு படத்தில் இசையும் சிங்கீதம் தான்.

அந்தப் பரபரப்பான காலத்திலும் இளையராஜா வந்து சிங்கீதம் படத்தின் இசை ஒருங்கமைப்பாளராக/ நெறியாளராக (conductor)

தான் முன் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுகிறார். 

அந்தப் படம் தான் “பாக்யலஷ்மி பரம்மா” .

இப்படித்தான் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்று சொல்லி வைத்த மனிதர்களில் புது உதாரணம் நம் சிங்கீதம்.

அந்தக் குறும்புப் புன்னகையும், இடிச் சிரிப்புமாக சிங்கீதம் நம் மனதில் நிறைந்திருப்பார்.

கானா பிரபா

04.10.2026


Friday, October 2, 2026

இளையராஜா எனும் பிரமிப்பு ❤️ மலையாள தேச இயக்குநர் சத்யன் அந்திக்காட்

 

இளையராஜா எனும் பிரமிப்பு  ❤ 

மலையாள தேச இயக்குநர் சத்யன் அந்திக்காட் வாய்மொழியில் இருந்து

நான் இயக்குநராகத் தொடங்கியதில் இருந்தே இளையராஜாவைக் கொண்டு ஒரு படத்திற்காவது இசையமைக்க வைக்க வேண்டும் என்பது என் மனதிலிருந்த ஆசை. அது எட்டாத உயரத்தில் உள்ள ஒரு கனவு, அது சாத்தியப்படாது என்றுதான் நினைத்திருந்தேன்.   

'கொச்சு கொச்சு சந்தோஷங்கள்' படம் வந்தபோது, இளையராஜாவை வைத்துப் பண்ணலாம் என்று நினைத்து, பாசில் மூலமாகப் பரிந்துரைக்கச் செய்துதான் நான் ராஜா சாரைப் பார்க்கச் சென்றேன். 

அவர் என்னைக் கூப்பிட்டு உள்ளே அழைத்தார். 

உள்ளே கம்போசிங் அறையில் நாற்காலிகள் எதுவும் இல்லை. உட்காருவதற்காகப் பாய்கள் மட்டுமே இருந்தன. அவரிடம் நான் சிரமப்பட்டு எனக்குத் தெரிந்த தமிழில் கதையை விவரிக்கத் தொடங்கினேன். 

அவர், "மலையாளத்திலேயே சொன்னால் போதும், எனக்கு மலையாளம் தெரியும், மலையாளத்திலேயே பேசுங்கள்" என்று கூறினார்.   

நான் என் மனைவி நிமியிடம் சொல்லியிருந்தேன், கம்போசிங்கிற்குப் போகிறேன், வழக்கமாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கழித்துத்தான் வருவேன்; படத்தில் 5 பாடல்கள் இருக்கின்றன என்று.   

இளையராஜா சார் சூழலைக் கேட்டுக்கொண்டே வேறு ஏதோ வேலை செய்வது போலத் தோன்றும். ஜெயராம் மற்றும் அந்தப் பெண் இருக்கும் காட்சிக்கு இந்த டியூன் செட் ஆகுமா என்று கேட்டார். அந்தச் சூழலுக்கு 4-5 டியூன்களை மாற்றி மாற்றிப் போட்டுக் காட்டினார். அடுத்த பாடலையும் உடனே செய்துவிட்டார்.   அதாவது 9:30 மணிக்கெல்லாம் 5 பாடல்களின் கம்போசிங்கும் முடிந்துவிட்டது! 

நான் அதிர்ந்துபோனேன். 

நான் வெளியே வந்து பாசிலை அழைத்து, "எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்பதால் அவர் போடும் டியூன்கள் எல்லாம் எனக்குப் பிடித்துள்ளதா, அல்லது உண்மையிலேயே நன்றாக இருக்கிறதா? என்று.

 9:30 மணிக்கெல்லாம் 5 பாடல்களும் முடிந்துவிட்டதே" என்றேன். 

அதற்கு பாசில், 

"9:30 மணி வரை எடுத்தாரா? வழக்கமாக ஒரு மணி நேரத்திலேயே 5 பாடல்களையும் முடித்துவிடுவாரே!" 

என்று கேட்டார். 

இப்படியாக சத்யன் அந்தக்காட் இசைஞானி இளையராஜாவுடன் தன் முதல் பாடல் பதிவு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

https://www.facebook.com/reel/2224684808061504

கானா பிரபா

மூலக் காண்பகிர்வு இணைப்பில் உள்ளது. தமிழில் பிரதியாக்கித் தந்திருக்கிறேன்.

இந்தப் பாடல்கள் இடம்பெற்ற கொச்சு கொச்சு சந்தோஷங்கள் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள் அற்புத அனுபவம்.

https://www.youtube.com/watch?v=OZvt6u95L_Y

சிறந்த படம்,  நடனம் ஆகியவற்றுக்கானதேசிய விருதையும் அள்ளியது.

வேகமாக வேலை செய்வது மட்டுமல்ல, அங்கே விவேகமாகவும் பிரமிப்பூட்டும் விதத்திலும் அற்புதமான பாடல்களைப் பிறப்பாக்கித் தருவதுதான் இசைஞானி என்ற அதிசயம்.

மக்களே சந்தோஷப்படுங்கள், கொண்டாடுங்கள் ! 

இப்படியொரு அபூர்வமான இசைப்பிறவி வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் என்று.


கானா பிரபா

02.102026