பெரிய பெரிய நட்சத்திர விடுதிகளில் பார்த்திருப்போம் ஒரு பெரிய கண்ணாடிக் குடுவை ஆள் உயர்த்தி (lift) நகர்ந்து மேலெழும்.
அது போலத் தான் உணர்வேன், இந்தப் பாடல் ஆரம்பிக்கும் கணத்தில்.
தததா….துதுதுது
தததா….துதுதுது
லலலலலலல…..
அந்த ராட்சசி ஜானுவின் வாய்ஜாலம், இசைக் கருவிகளோடு போட்டி போடும்.
இசைஞானியாருக்குத் தெரியும் ஜானகிம்மா கட்டற்ற ஒரு வாத்தியக் கருவி என்று.
போதைக்குள் மூழ்கிய மனிதனின் உணர்வோட்டம் தான் பாடலின் அடி நாதம்.
அந்த ஆரம்பத்தை உணர்ந்து பாருங்கள், 1983 ஆம் ஆண்டில் 3D effect போல எல்லாப் பக்கமும் ஒரு அதிர்வலை சூழ அமைந்திருக்கும் இந்தப் பாட்டு.
இந்தப் பாடலுக்கு நம் பாட்டுத் தலைவனை விட்டால் மாற்று உண்டோ,
மாற்றுக் குறையாத தங்கம் அல்லோ?
இந்த மாதிரி ஒற்றைப் பாடலின் சறுக்கல் சங்கதிகளிலும் கூட தன் அக்மார்க் சிரிப்பைப் போட்டுக் கலக்குவார் மனுஷர்.
“அருகில் இருந்தே அபிநயம் புரிய”
அந்த அபிநயம் என்ற சொல்லாடலில் அபிநயம் காட்டுவார் ராட்சஷன்.
இளையராஜா, ஜானகி, பாலசுப்ரமணியம் கூட்டணியில் இன்னொரு வாலிபனும் இருக்கிறார்.
பறவை மிருகம்
அழுவது இல்லை
கவலை கடலில்
விழுவது இல்லை
பறவை ஜாதி நானும்
கூட பறவை ஜாதி
அப்படியே பாடல் போலவே இவரும் தன் வரிகளில் பறந்து மிதப்பார்.
“வானம் கீழே வந்தால் என்ன”
https://youtu.be/aGoW-Z9d2Vc?si=EHmavuKCCtfdiQ0y
பாடலை ஒரு மேடை நிகழ்வில் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்,
இந்தப் பாடலுக்கு trombone வாத்தியத்தை வாசித்தவர் Blasco என்ற வாத்தியக் கலைஞர் என்று குறிப்பிட்டிருப்பார்.
யார் இந்த Blasco? இவர் குறித்த அற்புதமான ஆவணப் பேட்டியை வலைப்பதிவர் விக்கி Vignesh Subramanian தனது தளத்தில் சேமித்துள்ளார்.
Swar-Aalap மின்னிதழில் சங்கர் ஐயர் அவர்கள் பிளாஸ்கோ மான்சொரேட் ( Blasco Monsorate) அவர்களோடு நிகழ்த்திய ஆங்கிலப் பேட்டியில் பிளாஸ்கோ இளையராஜா குறித்துப் பகிர்ந்ததை நன்றியோடு தமிழாக்கித் தருகிறேன்
இதோ
மகான் (Mahaan) திரைப்படத்தின் பின்னணி இசைப் பதிவுக்காக நாங்கள் சென்னைக்கு வந்திருந்தபோது, கேர்ஸிஜி (Kersiji) என்னை இளையராஜாவின் இசைப்பதிவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு இளையராஜாவைச் சந்தித்தோம். அவர் தனது பின்னணி இசையின் ஒரு ரீலைப் போட்டு, அதில் ஒரு டிராம்போன் இசைப்பகுதியை வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் நான் அப்போது எனது டிராம்போன் இசைக்கருவியைக் கொண்டு வரவில்லை. எனவே அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வருமாறு கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஓய்வு நாள். கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த நேரத்தில், அவர் ஞாயிற்றுக்கிழமை இசைப்பதிவுக்கு அழைத்திருந்தார்!
நாங்கள் மீண்டும் மும்பைக்குத் திரும்பினோம். ஆனால் சென்னையில் நடந்த அந்தச் சந்திப்பு என் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது.
ஒருநாள், மார்ச் 1983இல், எனது இசைக்கருவியை எடுத்துக்கொண்டு இளையராஜாவைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டேன்.
அப்போது அங்கு பிரபலப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்தேன். அவர் அடுத்த நாளே ஒரு தெலுங்குத் திரைப்படத்தின் பின்னணி இசைப் பதிவுக்கு வருமாறு அழைத்தார்.
எனது இசை வாசிக்கும் பாணியைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
“உங்களுடைய வாசிப்பு முறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது” என்று பாராட்டினார்.
இளையராஜாவைச் சந்திக்க வேண்டும் என்றும், நான் சென்னையில் இன்னும் சில காலம் தங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
அதன் நான்காவது நாளில், இளையராஜாவுக்காக இசைக்கருவியை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!
பொதுவாகவே இளையராஜாவின் இசை, இந்தித் திரைப்பட இசையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவரது இசையில் ஒத்திசைவற்ற தாள அமைப்புகள் (Syncopation) அதிகமாக இருக்கும்.
அவர் எனக்குக் கொடுத்த டிராம்போன் இசைப்பகுதிகள் மிகவும் கடினமானவை. பெரும்பாலும் அவை தாளத்தின் நேரடியான அடிப்படையில் இல்லாமல், எதிர்த்தாளத்தில் (Off-beat) அமைந்திருக்கும்.
மும்பையில் டிரம்பெட் இசைக்கலைஞர்கள் எதிர்த்தாளத்தில் வாசிப்பார்கள். டிராம்போன் இசைக்கலைஞர்கள் நேரடியான தாளத்தில் வாசிப்பார்கள்.
ஆனால் இளையராஜாவின் இசையில் டிராம்போன் எப்போதுமே எதிர்த்தாளத்தில் பயன்படுத்தப்படும்.
எனவே அவருக்காக வாசிக்கும்போது நான் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியிருந்தது. ஒரு டிராம்போன் இசைக்கலைஞராக அது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
அப்படிப்பட்ட கடினமான இசை அமைப்புகளை மும்பையில் நான் அதிகம் சந்தித்ததில்லை.
இன்றைய காலத்தில் அப்படிப்பட்ட இசைக்குறிப்புகளை எழுதக்கூடியவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இப்போது இசைக்கலைஞர்களிடம் குறிப்பிட்ட ஸ்வரங்களைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்கள்.
இளையராஜாவுக்கு எனது இசை வாசிக்கும் பாணி மிகவும் பிடிக்கும். அவர் என்னை அன்புடன் “பிளாஸ்” (Blas) என்று அழைப்பார்!
இளையராஜா இசைக்கலைஞர்களை மனதில் வைத்துக்கொண்டு தனது இசையைத் தனியாகவே உருவாக்குவார்.
அவரது மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது.
இளையராஜாவைப் பொறுத்தவரை, அவரது இசை அதிகத் தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கொண்டது. இசை அமைப்புகள் மிகவும் கடினமானவை.
அவருக்காக வாசிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு சிறந்த இசைக்கலைஞராக இருக்க வேண்டும்.
அவரது இசையை வாசிப்பது எளிதான காரியமல்ல. அவர் எழுதியதை அப்படியே, எந்த மாற்றமும் இல்லாமல் வாசிக்க வேண்டும்.
இளையராஜாவிடம் இசைக்குறிப்பில் எழுதப்பட்டிருப்பதிலிருந்து எந்தவிதமான விலகலும் இருக்கக்கூடாது.
அவருடன் பணியாற்றிய இசைக்கலைஞர்களுக்குப் பல நேரங்களில் கடினமான அனுபவங்கள் இருந்தன.
ஆனால் அவர் என்மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் வைத்திருந்தார்.
அதற்குக் காரணம் நான் மும்பையைச் சேர்ந்தவன் என்பதாக இருக்கலாம். அல்லது நான் ஆர்.டி. பர்மனின் டிராம்போன் இசைக்கலைஞராக இருந்ததால் கூட இருக்கலாம்!
இப்படியாக அந்தப் பேட்டி நீள்கிறது.
குறித்த பேட்டியை முழுமையாகப் படிக்க
http://raagadevan.blogspot.com/2009/11/blasco.html
பிளாஸ்கோ இளையராஜாவுடன் 1983 இலிருந்து 1991 வரை பணியாற்றியிருக்கிறார்.
வெள்ளை ரோஜா, நாயகன், அபூர்வ சகோதரர்கள் உட்பட பிளாஸ்கோவின் வாசிப்பின் பரிமாணம் உள்வாங்கப்பட்டாலும், மிகவும் அரிதான ஒரு பாடல்
“ரோஜா ஒன்று” (ஓ மானே மானே)
https://youtu.be/4NdvX9F-rhw?si=qWQQmLRAmRD5qjhe
பாடலில் இவரின் வாத்திய வாசிப்பைச் சிலாகிக்கிறார் பேட்டி கண்ட சங்கர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இருவர் படத்தில் “வெண்ணிலா” பாடலிலும் இவரின் வாய்ஜாலம், இசைஜாலம் இருக்கும்.
ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் - பியாரிலால் போன்ற இசை மேதைகளுடன் பணியாற்றிய இப்பேர்ப்பட்ட உயரிய இசைக் கலைஞர்கள் இளையராஜா இசையில் வாசிக்க வேண்டும் என்று தவம் கிடந்தது தான் இசைஞானியின் ஆளுமையைப் பறை சாற்றும்.
சரி மீண்டும்
“வானம் கீழே வந்தால் என்ன”
பாடலுக்கு வருவோம்.
இந்தப் பாடல் R.D.பர்மனின் இசைக் கலைஞர்களோடு பணியாற்றியது என்று SPB குறிப்பிட்டிருக்கிறார். இதே காலப் பகுதியில் தான் இசைஞானியின் சொந்தத் தயாரிப்பான “ஆனந்தக் கும்மி” பாடல்களும் D.பர்மனின் இசைக் கலைஞர்களோடு மும்பையில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
அப்போது அந்த வட நாட்டு இசைக் கலைஞர் ஒருவர்
“நீங்க இனிமேல் இந்தப் பக்கம் வந்துடாதீங்க, நாங்க இங்குள்ள இசையமைப்பாளர்களோடு ஜிங்கிள்ஸ் மாதிரிப் பண்ணிட்டிருக்கோம், இந்த இளையராஜா கொடுக்குற நோட்ஸ் எல்லாம் ரிதம் ப்ளேயர்ஸ்ல இருந்து நம்ம எல்லோருக்குமே வாசிக்கிறது ரொம்பக் கஷ்டம்”
என்று உரிமையோடு SPB யிடம் செல்லமாகக் கோபித்துக் கொண்டு சொன்னாராம்.
இந்தப் பாடலை மேடையில் பாடி முடித்து விட்டு
“என்ன அற்புதமான composition தந்திருக்கிறார்
இளையராஜா நீடூழி வாழணும்”
என்று போற்றினார் SPB எனும் மாமனிதன் ❤️
தினமும் மனம்போல்
திரியும் குருவி
❤️
வானம் கீழே வந்தால் என்ன
ஹ ஹ ஹ ஹ
அட பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
கானா பிரபா
12.11.2026

