"மேகங்களைத் தொடுப்பேன் மஞ்சமதை அமைப்பேன் எந்தனுயிரே எந்தனுயிரே, வானவில்லைப் பிடிப்பேன் ஊஞ்சல் கட்டிக் கொடுப்பேன் கண்ணின் மணியே கண்ணின் மணியே, உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே" கண்மணி படத்தில் வந்த இந்தப் பாடலை இன்று எதேச்சையாக ஒரு பண்பலை வானொலியில் ஒலிபரப்பக் கேட்டபோது உள்ளுர இனம்புரியாதவொரு சந்தோஷம் எனக்குள் .
ஏ.ஆர்.ரஹ்மான் அலை அடித்துக்கொண்டிருந்த நண்பர்களுக்குள் கோஷ்டி பிரிந்து ரஹ்மான் கோஷ்டி, ராஜா கோஷ்டி என்று வாதப்பிரதிவாதம் செய்து கொண்டிருந்த வேளை அது. 1994 ஆம் ஆண்டில், "கண்மணி" திரைப்படம் வருவதாகச் செய்தி வந்திருந்தபோது உள்ளுர ஒரு மனோபலம். ஏற்கனவே செம்பருத்தி படத்தில் கலக்குக் கலக்கிய இயக்குனர் செல்வமணி - இசைஞானி இளையராஜா கூட்டணி மீண்டும் இணையும் படம். இந்தப் படத்தின் பாடல்களை வைத்தே எதிர்க்கோஷ்டியை மடக்கிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். உள்ளூரில் பாடல்களை ஒலிநாடாவில் பதிவு செய்து விற்கும் ரெக்கோர்டிங் நிலையம் ஒன்றின் நிரந்தர வாடிக்கையாளன் நான். கடன் கொடுத்தவன் கூட அந்தக் கடைக்கு அடிக்கடி போகமாட்டான். அவ்வளவு அந்நியோன்யம் அந்தக் கடைக்காரருக்கும் எனக்கும் ;-). கடும் யுத்தச் சூழலில் கொழும்பில் இருந்து யாராவது ஒருவர் கொண்டுவரும் பாடல் ஒலிநாடாவை வைத்தே அவரும் பிழைப்பை ஓட்டிவிடுவார்.
"அண்ணை, கண்மணி பாட்டுகள் வந்துட்டுதோ" என்று நானும் சதா கேட்பதும், "இல்லைத்தம்பி, கொழும்பில் இருந்து தான் கசட் வரவேண்டும், பாத்துக் கொண்டிருக்கிறன்" என்று அவருமாக இழுபறிப்பட்டு கடைசியில் ஒருநாள் இந்தப் படத்தின் பாடல்கள் வந்த செய்தியைச் சொன்னார். "எனக்கு முழுப்பாட்டையும் அடிச்சுத் தாங்கோ" கண்மணி படப்பாடல்களின் ஒன்றைத் தானும் அதுவரை கேட்காமல் நான் கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே "நாளைக்கு வாரும்" என்று சொல்லிவிடுகிறார்.
அடுத்தநாள் கடை திறக்கும் வரை பழியாய்க் கிடந்து கஸெட்டைக் கவர்கின்றேன். வீடு போய் முதல் வேலையாக சைக்கிள் டைனமோவைச் சுழற்றி மின் பிறப்பாக்கி அதில் பொருத்திய வயர் வழியே டேப்ரெக்கார்டருக்கு உயிர் பாய்ச்சுகிறேன். அப்போது மின்சாரம் மருந்துக்கும் இல்லாத காலம். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் மின்சாரமே இப்படித்தான் பார்த்தோம். பாடல் பதிவு செய்த ஒலிநாடாவை, என் டேப்ரெக்கார்டரில் போட்டுவிட்டு ஒருகையால் டைனமோவைச் சுற்றிக்கொண்டே, உச்சஸ்தாயியில் ஒலியை வைத்துப் பாடல்களைப் போடுகின்றேன். ஒவ்வொன்றாகக் கழிகின்றன. மனதில் பெரிதாக ஒட்டமறுக்கின்றன. "புதுப்படம் தானே திரும்பத் திரும்பக் கேட்டால் பிடிக்கப் போகுது" எனக்கு நானே சொல்லிவிட்டு, எதிர்க்கோஷ்டிக்கு "கண்மணி" படத்தின் பாடல்கள் வந்த விஷயத்தையே சொல்லாமல் அமுக்கிக் கொள்கிறேன்.
ஆனால் நானோ விடாப்பிடியாகத் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். மெல்ல மெல்ல என்னை ஆக்கிரமிக்கின்றன அந்தப் பாடல்கள். குறிப்பாக "நேற்று வந்த காற்று என் பாட்டைக் கொண்டு வந்து தந்ததா" பாடலை ராஜாவும், ஜானகியும் பாடிய பாங்கும் இசையும் புதுமையாக இருந்தது. அதற்குப் பின்னர் "ஓ என் தேவதேவியே" யும் மனதுக்கு நெருக்கமாக வர, "ஆசை இதயம்" பாடலும் சேர்ந்து கொள்கின்றது.
இவற்றையெல்லாம் கடந்து ஒரு பாடலை மட்டும் இரகசியமாக ஒலியளவைக் குறைத்து, வீட்டுக்காரரின் காதில் படாமல் எனக்கு மட்டுமாகக் கேட்கிறேன். "உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே" என வரிகளோ விவகாரமாக இருக்கிறது, ஆனால் அந்தப் பாடல் மெட்டமைக்கப்பட்ட பாங்கும் இசைக்கோர்வையும் சும்மா விட்டால் தானே,
ஏனோ இனம்புரியாத ஈர்ப்பு அந்தப் பாடலில்.அந்தப் பாடலைப் பற்றி அன்று என்னோடு கோஷ்டியமைத்த நண்பர்களுக்கும் கூடச் சொல்லிச் சிலாகிக்கவில்லை. ஏனென்றால் இப்படியான பாடல்களின் வரிகளை வைத்தே "ஆளின்ர வயசுகுக் கேக்கிற பாட்டைப் பார்" என்ற ரீதியில் மேம்போக்கான ஒரு முத்திரை வந்திடும் ;) இல்லாவிட்டால் இதென்ன இந்தப் பாட்டில் அப்படி என்ன இருக்கு என்று கடந்து போய்விடுவார்கள். எல்லாம் என் தனிப்பட்ட ரசனை அனுபவம்தான்.
ஆனால் எப்போவாது இந்தப் பாடல் என் காதுகளை நெருங்கும் போது அதே பழைய சினேகிதத்தோடு வாரிக்கொள்வேன். செம்பருத்தி படம் போல எடுக்க ஆசைப்பட்டுக் கையைச் சுட்டுக்கொண்ட செல்வமணி கூட இந்தப் படத்தையே மறந்திருக்கலாம். ஆனால் இந்தப் பாடல் என்னோடு நெருக்கமாகப் பயணிக்கும் எனக்கும் இந்தப் பாடலுக்குமான பந்தம் அப்படி. அது ராஜாவின் பாடல்களை ஏன் பிடிக்கும் என்று கேட்கும் போது ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கமாகவும் இருக்கும்.
"உடல் தழுவத் தழுவ" பாடலைக் கேட்க
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இப்படத்தின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "ஓ என் தேவ தேவியே" பாடல் தான்.
"நேற்று வந்த காற்று" பாடலின் மெட்டை 2001 இல் கார்த்திக் ராஜா Grahan என்ற ஹிந்தி படத்தில் உபயோகித்திருப்பார்.
சொடுக்கி கேட்டு மகிழுங்கள்..
http://www.abmp3songs.com/download-aaj-main-khush-hoon-mp3-songs/3-dl-1202-20354.html
"நழுவுகிற" பாட்டை ரசித்தப்பொழுது உமக்கு என்ன வயசுன்னு சொல்லவே இல்லையே :-)
மலரின் நினைவுகள் said...
இப்படத்தின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "ஓ என் தேவ தேவியே" பாடல் தான்.
"நேற்று வந்த காற்று" பாடலின் மெட்டை 2001 இல் கார்த்திக் ராஜா Grahan என்ற ஹிந்தி படத்தில் உபயோகித்திருப்பார்.//
தொடுப்புக்கு மிக்க நன்றி நண்பரே, இந்தப் பாடலின் மூலமும் கார்த்திக் ராஜாதான் இசையமைத்திருக்கவேண்டும். அப்போது ஒற்றைப்பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்
உஷாக்கா
அவ்வ்வ் ;)
உடல் தழுவத் தழுவ பாட்டு எனக்கும் பிடிக்கும். ஆண் பாடகர் மட்டும் எஸ்.பி.பியாகவோ ஜெயச்சந்திரனாகவோ இருந்தால் நன்றாகயிருக்கும் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.
நீங்கள் சொன்ன காலகட்டத்தில் நானும் நண்பர்களோடு ராஜா-ரகுமான் விளையாட்டு விளையாண்டிருக்கிறேன். ஆனால் அந்தக் காலகட்டத்தில் நான் ரகுமான் பக்கம்.
இப்போது யாருடைய பக்கமும் இல்லாத காலகட்டம். மீண்டும் வருமா வசந்தகாலம்? பாடல்களைத் தேடித் தேடி வாங்கிய காலம்!
வாங்க ராகவன்,
நீங்களும் இசைக்கோஷ்டிச் சண்டையில் இருந்திருக்கீங்களா ;)
மனோவிற்கு ராஜா வள்ளலாக இருந்த காலமது
arumaiyana pagirvu....naanum indha kanmanikkaga kathirundha anubavam sugamanadhu kanmani paadagal andrum indrum manadai thirudivittathu.........nandri
Post a Comment