இப்படியொரு ஆங்கிலத்தனமான தலைப்போடு நான் தொடங்க காரணமே இதை உள்ளதை உள்ளவாறு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர் வாயால் சொன்ன போது தான். அப்போது அவர் எழுபதைக் கடந்து விட்டிருந்தார்.
ஒரு மனிதனின் சுறு சுறுப்பான இயக்கத்துக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, தன்னைப் புதுப்பித்துக் கொண்டே புதிய புதிய சிந்தனைகளோடு ஓடிக் கொண்டிருக்க வேண்டும். என் அப்பாவுக்கு அடுத்து இப்படியானதொரு சுறு சுறுப்பானதொரு இயக்கத்தை எட்ட நின்று பார்த்தது கே.பாலசந்தர் போன்றவர்கள் வழி தான்.
மேடை நாடகம்.
சினிமா,
சின்னத்திரை நாடகம்
ஆகிய களங்களில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கொடுத்த விரிவான பங்களிப்பை இனியொருவர் தமிழ்ச்சூழலில் கொடுக்கவே முடியாது.
ஒவ்வொரு களத்திலும் முந்திய களத்தின் பாதிப்பே இருக்காது. ஏனெனில் சினிமாவுக்கு மேடை நாடகம் போட்ட இயக்குநர்களின் படங்களையும் பார்த்திருக்கும் அனுபவம் தான் இப்படியெல்லாம் எண்ண வைக்கிறது.
“என்ன இடைஞ்சல்கள் வரட்டும், அதை மீறிப் போராடித் தன்னைப் பரிபூரணமா நம்பி இறங்கியவர்கள் யாரும் வெற்றி அடையாமல் இருக்கவே முடியாது” - கே.பாலசந்தர்
“1972ல் ஹார்ட் அட்டாக், 6 மாத ஓய்வின்போது புதுசு புதுசாக படம் பண்ண யோசனை தோன்றி கலாகேந்திராவை ஆரம்பித்தோம்” என்கிறார் இயக்குநர் சிகரம். இதையெல்லாம் அவர் வாழ்ந்திருந்த காலத்தில் கொடுத்த பேட்டிகள் வந்த போது குறிப்பெடுத்து வைத்திருந்தேன். இன்று அவரின் 90 வது பிறந்த நாளுக்கு ஒப்புவிக்கக் கால நேரம் கூடியிருக்கிறது.
சிந்து பைரவி படத்தில் 14 விநாடிகளே அமையும் ஒரு காட்சி அது.
சங்கீத உலகம் போற்றும் ஜே.கே.பி என்ற இசை மேதை வழி தவறிக் காதலில் விழுந்து பின் அதைத்தொலைத்த வேதனையில் குடியில் சரணாகதி கொள்கிறார்.
கையிருப்பு எல்லாம் மெல்ல மெல்லத் தேயும் வேளை எஞ்சிருந்த காரும் எதற்கு என்று ஜே.கே.பி மனைவி அது நாள் வரை வாகனச் சாரதியாக இருந்தவரை வழியனுப்புகிறார்.
அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது கார் மீது புதைந்து அழுகிறார் சாரதி. அப்படியே காமெராவின் கோணம் கார்க் கண்ணாடி வழியாக மது போதையால் நிறைந்து சித்தம் கலங்கி நிற்கும் ஜே.கே.பியைக் காட்டும். இவ்வளவு நுணுக்கமான காட்சியை "பூமாலை வாங்கி வந்தான்" பாடலின் இடையிசையின் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே பயணிக்கும் இசையில் 14 விநாடிகளை நிரப்பிய காட்சி தான் இது. இதையே கே.பாலசந்தரின் திறமையான இயக்கத்தின் ஒரு சோறு பதமாக என்னால் காட்டமுடியும்.
நாடக மேடை மரபில் கட்டியக்காரனின் வருகை தனித்துவமானது. கே.பாலசந்தரது படைப்புகளைப் பார்த்தால் கண்டிப்பாக ஒரு பாத்திரம் இதே பாங்கில் அமைக்கப்பட்டிருக்கும். தனியாக ஒரு கட்டுரையில் எழுத வேண்டியது இந்தப் பார்வையில்.
அதே போல் ஒரு பாடல் கதையோட்டத்தின் கீற்றாக இருக்கும்.
“இல்லாத உறவுக்கு
என்னென்ன பேரோ” என்றும்
“நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்”
என்றும் சிந்து பைரவியில், வைரமுத்துவைத் துணைக்கழைத்திருப்பார்.
அது போலவே எழுத்தாளர் சிவசங்கரியின் 47 நாட்கள் கதையைப் படமாக்கிய போது அந்தப் படம் முழுக்க “மான் கண்ட சொர்க்கங்கள்” பாட்டு ஓடும். 8 நிமிடம் 21 விநாடி ஓடும் பெரும் பாட்டைப் பகுதி பகுதியாகக் காட்சிகளில் இழைய விட்டிருப்பார் கே.பாலசந்தர்.
“இந்திய தாய் நாட்டை
எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை
தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டு தெய்வங்கள்
துணையாக வாராதா இப்போது”
அவர் சொன்ன கதைச் சுருக்கத்தை அப்படியே உள்வாங்கி கவிதைச் சுருக்கமாகத் தந்தார் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் துணையோடு.
“அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்தப் பக்கம்”
என்று அவர்கள் படத்தில் நாயகி மூன்று தலைக் கொள்ளி எறும்பாகச் சிக்கித் தவிக்கும் போதும்,
“முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா”
என்று உவமைக் கவிஞர் சுரதா வழியாக நீர்க்குமிழியிலும்,
“கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா“
என்று வாலியின் துணையோடு மனதில் உறுதி வேண்டும் படத்தின் நாயகிக்கான அசரீரிப் பாட்டாகவும்,
“கல்யாண சுகமுமில்லை
கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய்
என்ன நீ உறவு கண்டாய்
கண்மூடும் வேளையிலும்
எம்மைதான் கனவு கண்டாய்”
என்று “மூத்தவள் நீ இருக்க” பாடல் வழியாக அரங்கேற்றத்திலும்,
“காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்“ (ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்) என்று அபூர்வ ராகங்களிலும்,
“ஆத்திரத்தாலும் அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானாள்
ஆத்திரக்காரனையே திருத்தி ஒருத்தி சாத்திரப்படியே தாயானாள்” (நானொரு கதா நாயகி) நச்சென்று மூன்று முடிச்சு கதை சொல்வதிலும்,
“பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி“
என்று அவள் ஒரு தொடர்கதை நாயகி சுஜாதாவுக்குமாக ஒவ்வொரு படத்தின் கருவினைக் காட்டும் சித்திர வரிகள் இருக்கும். இதுவுமொரு நீட்டி எழுத வேண்டியதொன்று. அதில் படாபட் ஜெயலட்சுமியின் பாத்திரமும் தனியே ஆராயப்பட வேண்டியதொன்று.
“கே.பாலசந்தர் சினிமாவில் ஒரு அகிம்சாவாதி, படத்தின் வியாபாரத்துக்கு
நாலு சண்டைக் காட்சியை வலிந்து வைக்க விடவே மாட்டார்.
கவர்ச்சி என்பது காட்சியின் பின்னணியில் இருக்கணும், முன்னணியில் துகிலுரிப்பது அல்ல என்பதைச் செய்து காட்டியவர்” என்கிறார் இயக்குநர் சக நடிகர் மெளலி.
இயக்குநர் சிகரம் கே.பாலச்ச்ந்தர் அளவுக்கு கின்னஸ் சாதனை படைக்குமளவுக்கு அறிமுகங்களை உருவாக்கியவர்கள் யாரும் இல்லை என்று நடிகர் விவேக் ஒருமுறை சொல்லியிருந்தார்.
உடனே “மனதில் உறுதி வேண்டும்” படம் ஞாபகத்துக்கு வர அந்தப் படத்தை YouTube இல் ஓட விட்டு எண்ணினேன். சுஹாசினி தவிர முன்னணி நட்சத்திரங்களாக அந்தப் படத்தில் மட்டும்
12 பேரை அறிமுகங்களாக இறக்கி விட்டிருக்கிறார். இம்மட்டுக்கும் சிந்து பைரவி என்ற ஒரு பெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டு அடுத்ததாக இது, எப்பேர்ப்பட்ட துணிச்சல்.
தன் திரையுலக வாழ்வுக்கு வழிகாட்டியாக இருந்த ஆனானப்பட்ட எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே “தண்ணீர் தண்ணீர்” (மூலக்கதை கோமல் ஸ்வாமிநாதன்)
எடுத்துச் சிக்கலையும் சம்பாதித்தவர்.
“விசுவின் இந்த மேடை நாடகத்தைப் படமாக்குவோம்” என்று கவிதாலயா நிர்வாகி நடராஜன் சொன்னபோது இதையெல்லாம் சினிமாவா எடுக்கக் கூடாது” என்று கே.பாலசந்தர் மறுத்து விடுகிறார். ஆனால் விடாப் பிடியாக எடுக்கிறார்கள். படம் மாபெரும் வெற்றி.
அதுதான் மணல் கயிறு.
“எனக்கு இந்தப் படம் சுத்தமாப் பிடிக்கல”
அந்தப் படத்தின் வெற்றி விழாவில் எடுத்த எடுப்பியே தன் பேச்சை இப்படி ஆரம்பித்தாராம் பாலசந்தர். இதைச் சமீபத்தில் பேட்டியில் சொன்னவர் வி.நடராஜன்.
தன்னுடைய நிறுவனத் தயாரிப்பாக இருந்தாலும் படைப்பு மோசமாகப்பட்டால் பாரபட்சமின்றி விமர்சிக்கத் தவற மாட்டார்.
நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் “குணா” படத்தை முதல் காட்சி பார்த்து விட்டு “என்னடா படம் எடுத்து வச்சிருக்கிறான்” என்று கமல் குறித்து கவிதாலயா கிருஷ்ணனிடம் அலுத்தது ஒரு பக்கம், “மகா நதி” பார்த்து விட்டு மை டியர் ராஸ்கல் என்று அழுது நெகிழ்ந்து கமலைத்
தன் பிள்ளையின் வெற்றியில் பரம திருப்தி காணும் தந்தையின் பூரிப்பிலுமாகக் கடிதம் எழுதியிருக்கிறார்.
அது போல தன்னுடைய பாசறையில் இல்லாத இன்னொரு இயக்குநர் சாதித்தாலும் எழுதிப் பாராட்டி விடுவார். இதைப் பல இயக்குநர்களின் பேட்டி வழியாகச் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
“மதராசப் பட்டணம்” படத்தை உச்சி குளிரப் பாராட்டிய பாலசந்தரின் கடிதத்தை குமுதமோ, விகடனோ அப்போது பிரசுரித்தது.
தன்னுடைய படைப்பின் கதை மாந்தர்கள் வழியே பிரச்சார நொடி இல்லாமல் சமூகக் கருத்துகளைச் சொன்னவர்.
எனக்கு சின்னத்திரை நாடகங்களில் பெரிய ஈர்ப்பு இல்லாவிட்டாலும் அதன் ஆரம்ப யுகத்தில் பார்த்த விரல் விட்டு எண்ணக் கூடிய நாடகங்களில் ஒன்று
பாலந்தரின் ரயில் சினேகம்.
இன்னொன்று துண்டு துண்டாகப் பார்த்த ப்ரேமி. இதில் ஒரு பாத்திரம் பேசும்
சமூக விமர்சனத்தை இன்னும் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன், அதன் சாரம் இது தான் ;
“சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மீது சதா விமர்சனங்களைக் கொட்டிக் கொண்டிருப்பவர்கள் பலருக்கு உள்ளூரத் தமக்கு அந்த பிரபல அந்தஸ்து வராததின் காழ்ப்புணர்வும் ஒரு காரணம்”
இது உளவியல் ரீதியாக அனுபவித்து உணர வேண்டியது. .
“ஈர்ப்பு என்பது நம்மிடம் இருப்பது மற்றவரிடம் இருந்தாலும் வரலாம் நம்மிடம் இல்லாதது மற்றவரிடம் இருப்பதாலும் வரலாம்” - கே.பாலசந்தர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இன்னமும் வாழும் இயக்குநர் சிகரத்துக்கு.
கானா பிரபா
09.07.2020
1 comments:
சிறு வயதில் கே.பி யின் படங்களைப் பார்த்து வளர்ந்ததால் ரஜினி, கமல் இருவர் படங்களையும் பாரபட்சமின்றி ரசிக்கும் பக்குவம் வாய்த்தது. ஆங்கிலத்தில் சொல்வதானால் A creator ahead of his time. இயக்குனர் சிகரம் அவர்களுக்கு நல்லதொரு பிறந்தநாள் பரிசு உங்கள் பதிவு.
Post a Comment