ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண்மூட....
நாடு கடந்து, சொந்தம் அற்று, புலம் பெயர்
வாழ்வியல் சூழலில் நள்ளிரவு கடந்த வானொலி ஒலிபரப்புகளில் தனியனாக நிகழ்ச்சி செய்யும் போது இந்தப் பாடலை ஒலிபரப்பும் போதெல்லாம் ஒரு காதல் பாடலாக அன்றி தாயின் அரவணைப்பில் முதுகு தடவும்.
“ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ”
பாடல் மட்டுமல்ல இசைஞானி கொடுத்த இது போன்ற வரம் தந்த சாமிக்குச் சுகமான லாலிகள் எல்லாமே தனிமை களையும் தாயின் தாலாட்டுகள் தான். அதனால் தான் லதா மங்கேஷ்கர் என்ற பாடகியின் மொழிச் சுத்தம் கடந்து அந்த ஒலியின் கனிவோடு கட்டுண்டு கிடக்கச் செய்து விடும்.
லதா மங்கேஷ்கர் தமிழில் பாடியது என்றால் இன்றைய யுகத்துக்கு சத்யாவின் “வளையோசை கலகலவென”
பாடல் தான் அதிகம் தெரிந்திருக்கும். அந்தப் பாடலில் துள்ளாட்டம் போடும் எஸ்பிபிக்குத் தோதாய் ஒரு அமலாக் குரலாக
“சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது”
லதாவின் செல்லக் குரல் இருக்கும்.
ஆனால் சத்யா வந்த 1988 க்கு முன்பே
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கர் குரல் “ஆன்” ஹிந்தி தமிழ் வடிவம் கண்ட போதே வந்திருக்கிறது. அதில் ஆச்சரியமான ஒற்றுமை என்னவெனில் இசைஞானி மனம் திறந்து போற்றும் நெளஷத் தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். ஒரு உபரித்தகவல் நெளஷத் இசையில் Mughal-e-Azam” என்ற ஹிந்திப்படப் பாடல் தமிழில் அக்பர் திரைப்படப் பாடலாக பி.சுசீலா குரலில் காலம் மறக்கடிக்காத பாடலான “கனவு கண்ட காதல்” என்று வந்ததையும் சொல்லி வைக்க வேண்டும்.
நெளஷத் இசையில் வெளிவந்த வான ரதம் ( Uran Khatola என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் வடிவம்) படத்திலும் “இன்று எந்தன் நெஞ்சில் சக்தி”
என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருக்கிறார்.
ஒரு பொழுது இசைஞானி இளையராஜாவின் தெலுங்குப் பாடல்களை இசை வட்டில் கொடுத்துக் காலைத் தீனியாகச் சுவைத்துக் கொண்டிருக்கும் போது
“தெல்ல சீரக்கு தகதிமி தபனலு” https://youtu.be/NgJSt2F_8nY பாடல் வந்தது. முன்பு கேட்ட ஞாபகமும் இல்லை
ஆனால் பழக்கி வைத்த கிளியைப் போலச் சட்டென்று மனதில் உட்கார்ந்து கொண்டு விட்டது. இப்போது போலக் கேட்டுக் கேட்டுப் பழக்கப்படுத்தி ரசிக்க வேண்டிய தொல்லை இல்லையே இந்த மாதிரி ராஜா கொடுத்த பாடல்களில்.
ஆகா எவ்வளவு அபரிதமான துள்ளிசை வார்ப்பு, எஸ்.பி.பாலசுப்ரமணியமும் லதா மங்கேஷ்கரும் பாடும் அந்த உற்சாகத் தொனி அப்படியே “வளையோசை கலகலவென” பாடலைத் துணைக்கழைத்து வருகிறது. கூட்டுக் குரல்களின் உற்சாக ஆர்ப்பரிப்பு ராஜா பாடல்களில் வழமையே என்றாலும் வழக்கமாக இசை மேடையில் குஷியாகி மேலதிக சங்கதி போடும்
எஸ்.பி.பி இங்கே இடையிசையிலும் அந்த உற்சாக விளையாட்டைக் காட்டுகிறார். Aakhari Poratam திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது இந்தப் பாட்டு.
லதா மங்கேஷ்கர் பல்லாண்டுகளுக்குப் பிறகு
தமிழிலும் தெலுங்கிலும் பாட வந்த போது நானே அவருக்கு ஜோடிக் குரலாக அமைந்திருக்கிறேன் என்று பெருமை பட இந்தக் காணொளியின் பாட்டு முடிவில் எஸ்.பி.பி பேசுகிறார் பாருங்கள் https://youtu.be/otmuLVbjcQU
இசைஞானி இளையராஜா தமிழில் கொடுத்த பாடல்களையே ஆண்டு அனுபவிக்க இந்த ஆயுசு போதாது. தெலுங்கிலும் இன்ன பிற மொழிகளிலும் அவர் கொடுத்த இந்த மாதிரித் திரவியங்களை ஆண்டு அனுபவிக்க இன்னொரு பிறவி வேண்டும்.
எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம்
என் உயிரில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ
ஏங்கிடுதே மனமே
அந்தப் பள்ளி நாட்களில் அருட்செல்வம் மாஸ்டரின் டியூஷன் சென்டரின் நவராத்திரி கால வாணி விழாவில் பெரிய வகுப்பு அக்கா ஒருவர் பாடியது மனக் கிடங்கில் இன்னும் பழுது படாது பசுமையாய் இருக்கிறது.
இசைஞானி இளையராஜா தன் இசையில் ஒவ்வோர் பாடகியருக்கும் இம்மாதிரியான ஏதேதோ எண்ணம் வளர்த்த, மாலையில் யாரோ, பொன்வானம் பன்னீர்த்தூவுது
ரகங்களைக் கொடுத்துக் கெளரவித்திருக்கிறார். அப்படி லதா மங்கேஷ்கருக்குக் கிட்டிய அபரிதமான பாட்டு இது. அதுவும் அந்த இசையோடு கூட்டுச் சேரும் போது அமானுஷ்ய உலகில் சஞ்சரித்துப் பாடுமாற் போல இருக்கும்.
லஜ்ஜா ஹிந்திப் படத்தில் இளையராஜா பின்னணி இசைத்த போது ஒரேயொரு பாடலையும் லதாவைக் கொண்டு பாட வைத்தார். அந்தப் பாட்டு இதயம் போகுதே போல ஒரு சோக ராகம் மீட்டும். அது இதுதான்.
இசைஞானி இளையராஜாவுக்கு டிசெம்பர் 4 ஆம் திகதி 1998 இல் மத்தியப் பிரதேச அரசாங்கம் லதா மங்கேஷ்கர் விருது கொடுத்துக் கெளரவித்தது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் லதா மங்கேஷ்கர் பாடியது சொற்பம். ஆனால் அனைத்துமே சொர்க்கம்.
அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான்
அன்னத்தை எண்ணம்போல் ஆடவைத்தான்
ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ....
கானா பிரபா
0 comments:
Post a Comment