"நம்பர் 1 பெருசா நம்பர் 2 பெருசா?” என்று மன்னன் படத்தில் ரஜினிகாந்த் விஜயசாந்தியிடம் கேட்பது போல அடிக்கடி பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் வரும் போது மனம் கேள்வி எழுப்பும்.
உண்மையில் எந்த விஷயத்திலும் முதலாவது ஆளாக நான் வர வேண்டுமென்று விரும்பியதில்லை, அது பள்ளிப் படிப்பு காலத்தில் இருந்து இன்றைய தொழில் வாழ்க்கை வரை நீட்சி பெறும்.
இதே மாதிரியானதொரு மனப்பாங்கை வளர்ப்பதற்கு ஒரு காரணம், போட்டி மனப்பான்மை இல்லாமல் கிடைத்ததோடு திருப்தியோடு எனக்கு நானே நம்பர் 1 ஆக இருந்து விடலாமே என்ற நோக்கம் தான்,
இதையே அண்மையில் சாய் வித் சித்ராவில் நடிகர் ராஜேஷ் பேட்டியில் பேசும் போது இரண்டாம் கட்ட நடிகர்கள் சிலரை உதாரணப்படுத்தி அவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை அதிக கஷ்டமோ, அதிக நஷ்டமோ இன்றிக் கொண்டு நடத்தினார்கள் என்று சொன்ன போது என்னை அங்கே பொருத்திப் பார்த்தேன். இந்த மாதிரியான வாழ்க்கை தான் நடிகர் ஜெமினி கணேசனுக்கும் கிடைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர் & சிவாஜி என்ற உச்ச நட்சத்திரங்கள் மிளிர்ந்து கொண்டிருந்த காலத்தில் இரண்டாம் கட்ட நடிகர்களாக ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பின்னாளில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார் என்றெல்லாம் வந்த போது இவர்கள் தனித்து நாயகர்களாகவும், உச்ச நட்சத்திரங்களின் படங்களில் குறிப்பாக சிவாஜியிடம் சேரும் போதெல்லாம் இணை நாயகர்களாகவும் பயணித்திருக்கிறார்கள். இவர்களில் ஜெமினி கணேசனை நினைத்தால் ஏனோ ஒரு புன்முறுவல் எட்டிப் பார்க்கும்.
காரணம் அவர் திரை வாழ்க்கை எப்படி இருந்ததோ அது போலவே தன் நிஜ வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டவர். அந்த நிஜ வாழ்க்கைப் பக்கம் நமக்குத் தேவை இல்லை, ஒரு கலைஞனாக அவரின் திரை வாழ்க்கையைப் பார்க்கும் போது அவரளவில் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையையே நடத்தி முடித்திருக்கிறார்.
காரைக்குடி நாராயணனைத் தொழில் பழக விடாமல் லூட்டி அடித்துக் கொண்டிருந்த ஜெமினியை பானுமதி கடிந்து கொண்ட கதையைக் காரைக்குடியார் சொன்ன போது ஜெமினியின் இயல்பான சுபாவத்தை நினைத்து மனசுக்குள் சிரித்துக் கொண்டேன்.
மிஸ்ஸியம்மா, கல்யாணப் பரிசு, தேன் நிலவு, காத்திருந்த கண்கள்,, மனிதன் மாறவில்லை, சுமை தாங்கி போன்ற படங்களெல்லாம் ஜெமினி கணேசனை விலத்தி இன்னொருவரைப் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்குப் பாத்திரங்களின் குணாதிசியங்களோடு பொருந்திப் போனவர். இதில் வேடிக்கை என்னவென்றால் ஜெமினி கணேசனுக்கு இரட்டை ஜோடிகள் என்றே தெரியாமல் படம் பார்த்துக் கொண்டு பாதியில் அவரின் காதல் திருவிளையாடல் அரங்கேறும் திருப்பமாகப் பார்த்த போது அட ஆரம்பிச்சுட்டாரய்யா என்று மனசு எக்காளமிடும். அப்படி ஒரு அனுபவம் ஆடிப் பெருக்கு படம் பார்த்த போது.
ஜெமினி கணேசன் படங்கள் என்றால் கூடவே A.M.ராஜாவும், P.B.ஶ்ரீனிவாசும் வந்து விடுவார்கள், ஒரே நாயகனுக்கு இவ்விதம் இரண்டு குரல்களும் பொருதிப் போனது கூட அதிசயம் தான். அதிலும் ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக ராஜா A.M.ராஜா அடையாளப்படும் போது அங்கே ஜெமினியும் கூடவே இருப்பார்.
இணை நடிகராக பார்த்தால் பசி தீரும், பாசமலர், பாவமன்னிப்பு போன்ற படங்களில் நடித்த போதும் தனக்கான இடத்தை அங்கே நிறுவியவர். 50 களின் பிற்பகுதியில் இருந்து 60 களில் ஶ்ரீதரும், 70 களில் கே.பாலசந்தரும் இவருக்கான தீனியைக் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர்கள். எப்படி ஶ்ரீதரின் காதல் படங்களில் ஜெமினியின் ஆரம்ப கால இளமைத் துள்ளாட்டத்துக்கான ஒரு களம் இருந்ததோ அதன் எதிர்த் திசையில் எழுபதுகளில் குடும்பத் தலைவனாகவும், குணச்சித்திரமாகவும் இன்னோர் பரிமாணம் ஜெமினிக்கு,இரு கோடுகள், காவியத் தலைவி, பூவா தலையா, வெள்ளி விழா, என்று கே.பாலசந்தரின் படங்கள் சான்று பகரும். இன்னொன்று “நான் அவன் இல்லை” படத்தில் தன் காதல் மன்னன் பட்டத்தை எழுபதுகளிலும் நிறுவியது. சின்ன வயசில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் மூட்டம் ரூபவாஹினியில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்க, முழு இரவு கடந்து துண்டு துண்டாக ஜெமினியின் “சுடரும் சூறாவளியும்” பார்த்த ஞாபகம் இன்னமும் பசுமையாக.
“பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளை””யாக ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின் வருகிறார் உன்னால் முடியும் தம்பி படத்தில். ஒரு ஆசார சீலராக, கடும் கோபக்காரராக ஜெமினி கணேசனுக்கு முற்றிலும் மாறுபட்டதொரு படைப்பு.
இதற்கு முன்னர் கே.பாலசந்தர் இவரைத் தெலுங்கிலும் இதற்கு முன்னர் பிலஹரி கணபதி சாஸ்திரியாக அரங்கேற்றி விட்டுத் தான் தமிழிலும் மார்த்தாண்டம் பிள்ளையாக இறக்கியிருப்பார். அந்தப் பாத்திரப் படைப்பில் ஜெமினி எவ்வளவு தூரம் நியாயம் செய்திருக்கிறார் என்பதைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?
பொன்மனச் செல்வன் படம் ஜெமினி கணேசன் & சரோஜாதேவி ஜோடியை மீண்டும் சேர்த்து அழகு பார்த்தது.
வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு பொழுது போகாமல் தவித்த ஜெமினிக்கு “கிருஷ்ண தாசி” தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வைத்த போது அவர் பட்ட ஆனந்தத்தையும் குட்டி பத்மினி சொல்லியிருந்தார். எவ்வளவு சொத்துப் பத்து இருந்தாலும் கலைஞனுக்கு ஓய்வேது. மேட்டுக்குடி படத்திலும் ஜெமினிக்கு நல்ல தீனி கிட்டியது.
சிவாஜி கணேசனுக்குப் போக வேண்டிய பாத்திரம் ஜெமினிக்குப் போனதாம், ஆனால் இந்தப் பாத்திரத்தில் ஜெமினி அளவுக்கு அந்த சிருங்கார நயத்தோடு காதல் செய்யும் கிழவராக யாரை நினைத்துப் பார்க்க முடியும் என்று சாதித்தது அவ்வை ஷண்முகியில் வந்த விஸ்வநாத ஐயர் பாத்திரம்.
ஜெமினி கணேசன் என்ற காதல் மன்னனுக்கு இன்று நூறு வயசு 17.11.2020
கானா பிரபா
0 comments:
Post a Comment