Pages

Saturday, February 4, 2023

இயக்குநர் கே.விஸ்வநாத் ❤️

 

நடனக் கலையை மானசீகமாக நேசிக்கும் ஒருவன் தன் வாழ்நாளில் ஒரு தடவையேனும் மேடை வாய்ப்புக் கிட்டாமலேயே செத்துப் போவான், 

இப்படியாக கதை அமையப் பெற்றிருக்க வேண்டும் என்று இயக்குநர் கே.விஸ்வநாத் முடிவு செய்தாராம். 


அந்தக் கதையின் முடிவிடமாக அமையும் காட்சிக் களத்தில் தான் கற்ற வித்தையின் பிரதிபிம்பமாக அவள் இருக்க வேண்டிய தேவையின் வெளிப்பாடாக அமைந்த ஏக்கம், துடிப்பு இவை எல்லாம் கலந்த ஒரு போராட்டம்  பரத அரங்கேற்றத்தின் வழியாக வெளிப்பட்டிருக்கும் போது அதன் அச்சாணியாக அமையும் பாடல் (வேதம் அணுவிலும்)  எப்படியிருக்க வேண்டும் என்று பாட்டுக் கட்டும் நேரம் கே.விஸ்வநாத் அவர்களின் ஆவியே கூடு விட்டுக் கூடு பாய்ந்து இசைஞானியிடம் சென்று சேர்ந்ததோ என்று நினைக்குமளவுக்கு பாடல் கோப்பு, கதை இயக்குநரும், இசை இயக்குநரும் எதிர்பார்க்கும் அந்த உணர்வைப் பார்வையாளனுக்கும் கடத்தினார்கள்.


சங்கராபரணம் படத்தில் ஒரு சாஸ்திரிய இசை மேதையின் குரலாக, எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாட்டுத் திறன் அமைய வேண்டி அவரது உறவினராக இயக்கு நர் கே.விஸ்வ நாத் வேண்டவும் எஸ்பிபிக்கு வந்தது தயக்கம். ஆனால் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் உதவி இசையமைப்பாளர் புகழேந்தி அவர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டதை எஸ்.பி.பி. பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். புகழேந்தி அவர்களின் இறப்புக்குப் பின் பல்லாண்டுகளுக்கு முன்னர் புகழேந்தி அவர்களின் மனைவியை வானொலிப் பேட்டி எடுத்திருந்தேன். அப்போது இந்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டதோடு இன்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் அந்த நன்றி உணர்வோடு இருந்ததைச் சொல்லி நெகிழ்ந்தார். அந்தப் பேட்டி நீண்டது. பேட்டி முடிவில் அந்த அம்மையார் அழுது முடித்ததும் நினைவுக்கு வருகிறது.

இவ்விதம் ஒரு படத் தயாரிப்பில் தான் வேண்டுவதை மிகவும் கறாராராகப் பெற்றுக் காட்டிய விதத்தில்  இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களின் பெருமை விளங்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கான முதல் தேசிய விருது வரை அந்த அங்கீகாரம் நிலை நாட்டப்பட்டது.


கே.விஸ்வநாத் கொடுத்த சங்கராபரணம் படம் மொழி கடந்து, ஏன் நாடு கடந்து இலங்கை ஈறாகத் திரையிடப்பட்டது. இதற்கு முன் இந்தப் பெருமையான  “செம்மீன்” நிலை நாட்டியது. ஒரு படம் மொழி கடந்து கொண்டாடப்பட்ட பெருமையை விளைவித்தார்.

சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனில் இருந்து இசைஞானி இளையராஜா, வித்யாசாகர், கீரவாணி என்று எல்லா இசை விற்பன்னர்களுக்கும் அவர் படைப்புகள் தீனி போட்டன. 


சலங்கை ஒலியின் மூலம் சாகர சங்கமம் வழி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தன் படத்தின் வழி இன்னொன்றும், இசைஞானி இளையராஜாவுக்குச் சிறந்த இசையமைப்பாளர் என்றும் தேசிய விருது கிட்டியது.


அது போலவே இன்னும் கொண்டாடியிருக்கலாமே என்று இன்னும் ஏங்கும் கலைஞன் வித்யாசாகருக்கும் கே.விஸ்வநாத் இன் “ஸ்வாராபிஷேகம்” தேசிய விருதைக் கொடுத்தது.


சுப சங்கல்பம் படத்தை (தமிழில் பாசவலை) கீரவாணி இசைத்த போது இசைஞானியின் “தகிட ததிமி” பாடலோடு பிணைத்துப் பாடலாக்கினார்.


https://www.youtube.com/watch?v=TeU_AteGRh4


அந்தப் படம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கில் தயாரித்து, தமிழில் கமல் மொழி மாற்றியது.


“யாரடி நீ மோகினி”, “உத்தம வில்லன்” போன்ற தமிழ்ப் படங்களிலும் தன் குணச்சித்திரத்தால் மிளிர்ந்தவர் கே.விஸ்வநாத்.


நன்றாக ஆடக் கூட்டிய நடனக் கலைஞன் கமல்ஹாசனையே விஸ்வநாத் அவர்கள் ஆட்டுவித்த நிகழ்வை ராதிகா ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார்.

“ஸ்வாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து) படத்தில் 

“துள்ளித் துள்ளி நீ பாடம்மா”

https://www.youtube.com/watch?v=9tLYhiSVLv0


பாடல் காட்சிக்கு கமலோ தன் நடன வித்தையைக் காட்ட, திட்டி விட்டு இந்தப் பாத்திரம் இப்படியா ஆடும் என்று பெண்டு எடுத்து இயல்பாக ஆடப் பழக்கினாராம்.

இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள் எவ்வளவு நுட்பமாகப் பதிந்திருக்கும்.


இதையெல்லாம் தாண்டி நான் அசை போடும் ஒரு அழகியல், கே.விஸ்வநாத் இன் மனைவி கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியை “ஸ்வாதி முத்யம்” என்று தான் அழைப்பாராம்.


கே.விஸ்வநாத் அவர்களின் ஆரம்பங்களில் அமைந்த படைப்புகள் மிகவும் புரட்சிகர சிந்தனையைக் கொண்டவையாகவும் இருந்தன. நமக்கெல்லாம் சங்கராபரணம் தொட்டுத் தான் அவரைக் கொண்டாட முடிந்தது.


“தாதா சாகேப் பால்கே” என்ற உயர் விருது மட்டுமல்ல தான் வாழும் காலம் வரையும் கொண்டாடப்பட்ட மிகச் சில உன்னங்களில் விஸ்வநாத் அவர்களும் ஒருவர். தெலுங்கு தேசம் அவரைத் தன் தலை மேல் ஏற்றிக் கொண்டாடியது இன்னும் இறக்கி வைக்கவே இல்லை.


மூத்த படைப்பாளி கே.விஸ்வநாத் அவர்களுக்கு அஞ்சலிகள்..


கானா பிரபா

0 comments: