ஆரம்பத்தில் பிரபலமாகப் பேசப்பட்டவர் யாகவா முனிவர். பறவைகளின் மொழி தனக்குத் தெரியும் என்றெல்லாம் பரபரப்பூட்டினார். ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் எல்லாம் அவரைச் சந்திக்கும் அளவுக்கு அப்போதிருந்தார். யாகவா முனிவரின் வாழ்க்கையை சிவாஜிகணேசன், மனோரமா முதன்முறையாக ஜோடி சேர்ந்து "ஞான பறவை" என்று வியட்நாம் வீடு சுந்தரம் இயக்க வெளிவந்திருந்தது அப்போது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.
அந்தக் காலத்தில் யாகவா முனிவருக்கும், சிவசங்கர் பாபாவுக்கும் இடையில் நடந்த சந்திப்பு மோதலாகிப் பரபரப்பானது. பின்னர் இந்தச் சம்பவத்தை விவேக் இதை நகைச்சுவைக் காட்சியாக, தான் யாகவா முனிவர் போலவும், மயில்சாமி சிவசங்கர் பாபா போலவும் அமைத்திருப்பார்.
யாகவா பிலிம்ஸ் என்ற பெயரிலேயே அப்போது யாகா முனிவரின் மானேஜராக இருந்த தனபாலன் என்பவர் ஞானப்பறவை, செவத்தப் பொண்ணு, தங்க மனசுக்காரன், மணிக்குயில் படங்களைத் தயாரித்திருந்தார்.
இளையராஜா இசையமைத்த தங்க மனசுக்காரன், மணிக்குயில் படங்களுக்கு ராஜவர்மன் என்ற இயக்குநரே இயக்கினார். இதே காலத்தில் ஏஜிஎஸ் தயாரித்த தங்கக் கிளி படத்துக்கு ராஜா இசையிலும் அதே முரளி நாயகன், இயக்கம் ராஜவர்மன்.
பின்னாளில் தன் பணத்தை தனபாலன் சுருட்டிவிட்டார் என்ற யாகவா முனிவரின் சாபத்துக்கு ஆளார்.
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார் தான் சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா
மணிக்குயில் படத்தில் உமா ரமணன், மனோ பாடிய அந்தப் பாடலுக்கு இன்று வரை நான் அடிமை.
யாகவா பிலிம்ஸ் வழங்கிய மணிக்குயில் பாடல்கள் இளையராஜா இசை வழங்க
யாகவா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்றே இந்த "தங்க மனசுக்காரன்". இசைஞானி இளையராஜா நாயகன் முரளிக்காகப் போட்டுக் கொடுத்த மெட்டுக்கள் ஒரு படி மேலாக விசேஷமாகத் தோன்றும். இந்தப் படத்திலும் எதை எடுப்பது எதை விடுவது என்ற அளவுக்கு எல்லாப்பாடல்களும் அட்டகாசமாக இருக்கும். மனோ மட்டும் தனித்து ஆண்பாடகராகவும், பெண்பாடகிகள் எஸ்.ஜானகி, மின்மினி, சசிரேகா ஆகியோர் கூட்டுச் சேர்ந்த பாடல்களை பிறைசூடன், காமகோடியன், கங்கை அமரன் எழுதியிருந்தார்கள்.
"மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி" பாடல் சந்தோஷம், சோக இசையில் இரண்டாகியும், தீயை மிதிப்போம் என்ற பக்தி மணம் கமிழும் பாடலும், கரகாட்டக்காரனில் எஸ்பிபி பாடும் தனித்துப் பாடும் "மாங்குயிலே பூங்குயிலே" பாட்டின் ரிதத்தை உள்வாங்கிப் போட்டது போல அதே மேள அடியுடன் "பாட்டுக்குள்ளே பாட்டு உண்டு" என்றதொரு அட்டகாசமான ஜோடிப்பாடலோடு இன்னொரு ஜோடிப் பாடலாக வருவது இங்கு நான் பகிரும் "பூத்தது பூந்தோப்பு" பாடல்.
தங்கமனசுக்காரன் படத்தில் கங்கை அமரன் கொடுத்த ஒரேயொரு முத்து இந்த "பூத்தத்து பூந்தோப்பு" பாடல். பாடலை மேலோட்டமாகக் கேட்கும் போது பெரிதாக ஏதும் இல்லாதது போலத் தெரியும் ஆனால் மீண்டும் மீண்டும் கேட்கும் போது இளையராஜா இந்தப் பாடலுக்குக் கொடுத்திருக்கும் அசாதாரணமான மெட்டின் அருமை துலங்கும். "தம்தன நம்தன தாளம் வரும்" "தீம்தன தீம்தன" (பூமாலையே தோள் சேரவா பாடலில் வருவது) போன்றே இந்தப் பாடலிலும் கோரஸ் குரல்கள் கொடுக்கும் "தானத்தம் தீனத்தந்தம்" என்று வரும் சங்கதியைப் பார்க்கும் போது அண்ணனுக்குப் பாடல் எழுதும் போதெல்லாம் கங்கை அமரன் இம்மாதிரி அலங்காரங்களை மேலதிகமாக உரிமையெடுத்துச் சேர்த்து அழகு பார்த்திருப்பாரோ என எண்ணத் தோன்றும்.
கங்கை அமரன் எழுதிய பாடல்களைக் கேட்கும் போது அவரின் இலக்கணமும் ஓரளவு பிடிபடும்.
தங்க மனசுக்காரன் பாடல்கள் வந்த போது பாடல்களைக் கேட்காமலேயே அப்போது எம் ஊரில் இருந்த ரெக்கார்டிங் பார் இன் பதிவேட்டில் புதிதாக இளையராஜாவின் இசையில் வந்த படம் என்ற நம்பிக்கையில் அப்போது ஒலிப்பதிவு செய்து மின்சாரம் இல்லாத காலத்தில் சைக்கிள் டைனமோ வழியாக மின்சாரத்தைப் பிறப்பித்து ஆசை தீர வியர்வை சிந்திக் கேட்டது
தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர் பெரிசோ சிறுசோ யாருக்கும் வஞ்சகம் இல்லாது அள்ளிக் கொடுத்த இம்மாதிரிப் படங்கள் ஏராளம், அந்த நம்பிக்கை தான் என் போன்ற ரசிகனும் கண்ணை மூடிக்கொண்டு ராஜாவின் இசை என்ற ஒரே காரணத்துக்காக பதிவு பண்ணிக் கேட்க வைத்தது.
தங்க மனசுக்காரன் பாடல்கள்
கானா பிரபா
1 comments:
//தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர் பெரிசோ சிறுசோ யாருக்கும் வஞ்சகம் இல்லாது அள்ளிக் கொடுத்த இம்மாதிரிப் படங்கள் ஏராளம், அந்த நம்பிக்கை தான் என் போன்ற ரசிகனும் கண்ணை மூடிக்கொண்டு ராஜாவின் இசை என்ற ஒரே காரணத்துக்காக பதிவு பண்ணிக் கேட்க வைத்தது. // - உண்மையான வரிகள்...
நன்றி.
Post a Comment