Pages

Tuesday, June 15, 2021

மலேசியா வாசுதேவன் ❤️இளமை நினைவை இசைக்கும் கலைஞன்



இன்று மலேசியா வாசுதேவன் அண்ணனின் 77 வது பிறந்த நாள். இந்த “அண்ணன்” என்ற அடைமொழியை நான் இடுவதற்குக் காரண காரியத்தைச் சொல்ல வேண்டுமென்றால் எண்பதுகளின் வாழ்வியலைக் கிண்ட வேண்டும்.

கோவில் வாசலில் மாலை நேரச் சந்திப்புகளில் அண்ணன்மார்களின் பாடலாக ஒலித்தவர் மலேசியா வாசுதேவன் அவர்கள். 

“பொன்மானைத் தேடி நானும் பூவோட வந்தேன்” என்று சாறம் (லுங்கி) கட்டிய அண்ணன் 

பெருங்குரலெடுத்துப் பாடுவான். 

இன்னொரு அண்ணனோ

“கல்லறையிலே இருக்கின்ற பல சமாதிகள்

 காதலிலே தோல்வியுற்றவை தான் போலிருக்கிறது”

என்ற வசன விளக்கங்களோடு “ஒரு மூடன் கதை சொன்னான்” பாடுவான். இதே மாதிரியானதொரு எண்ணப்பாட்டோடு சுகா அவர்கள் “மலேசியா வாசுதேவன் – அண்ணன்களின் பாடகன்” என்றொரு அற்புதமான கட்டுரையை முன்னர் வடித்திருக்கின்றார். 

மலேசியா வாசுதேவனுக்கு முன்னும், சம காலத்திலும் அவரையும் கடந்த சாகித்தியம் நிறைந்த பாடகர்களைச் சந்தித்தாலும் “அண்ணன்” குரல் நமக்கு நெருக்கமானது.

இசை குறித்த இலக்கண அறிவில்லாத பாமர ரசிகனின் ரசிப்பு என்பது பசித்தவனுக்குக் கிட்டும் சாப்பாட்டுத் தட்டில் இருக்கும் அறுசுவை போன்றது. “மலையோரம் மயிலே வெளையாடும் குயிலே” என்று பாடும் போது தோளில் கை போடக் குறையாகச் சங்கதி போடுவார்.

மலேசியா வாசுதேவன் அண்ணன் குறித்து அவ்வப்போது பல கட்டுரைகளை எழுதியிருந்தாலும், இன்றைய சிறப்புப் பகிர்வாக நான் தருவது இசைஞானி இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் அவர்களின் பங்களிப்பு.

இசைஞானி இளையராஜா இசையில் மொத்தம் 524 பாடல்களைப் பாடியிருக்கிறார். ராஜா இசையில் முதலில் வெளியீடு கண்ட படமாக “பத்ரகாளி” படத்தில் “ஒத்த ரூபா உனக்குத் தாரேன்” (எஸ்.ஜானகி)

https://www.youtube.com/watch?v=7QKTwTXWnX0 என்று தொடங்கியவர் “நான் தான் மாப்பிள்ளை நான் பொறந்த நாட்டிலே” https://www.youtube.com/watch?v=UIo4s_ZTVsA என்ற “தொடரும்” படப் பாடலோடு, 1976 தொடங்கி 1998 வரையான 22 ஆண்டுகள் இணைந்து பயணித்திருக்கின்றார். 

இவற்றில் நேரடிப் படமாக அனஸ்வரம் என்ற மலையாளப் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், C.O.ஆண்டோ ஆகியோரோடு “கல்லெல்லாம் கற்பூர முத்துப் போலே” https://www.youtube.com/watch?v=Vu33n4_mceM பாடலைப் பாடியிருக்கிறார். தவிர பின்னாளில் தமிழுக்கு மீள எடுத்த புதிர் படத்தின் கன்னட வடிவம் அஜேயா படத்திலுமாக https://www.youtube.com/watch?v=_pgIFBURMYM அரிதாகவே பிற மொழி தொட்டிருக்கிறார்.

எப்படி பாலுமகேந்திராவுக்கும், பாஸிலுக்கும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு ஆன்ம பந்தம் போலக் கதைகளினூடு பாடிச் செல்வாரோ அது போலவே பாரதிராஜாவுக்கு மலேசியா வாசுதேவன் என்றானது ஒரு விபத்து. “செவ்வந்திப் பூமுடிச்ச சின்னக்கா பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாட இருந்து பாட முடியாத சூழலில் மலேசியா வாசுதேவனுக்குப் போய்ச் சேர்ந்ததும் தொடங்கிய ராசி, பாரதிராஜா இளையராஜா கூட்டணி போடாத படங்களிலும் மலேசியா வாசுதேவன் இருக்குமாறு பார்க்குமளவுக்குத் தொடர்ந்தது.

ஏன் ஏற்கனவே பதிவான “ஏய் ராசாத்தி ரோசாப்பூ வா வா” பாடல் பதிவான சூழலில், அப்போது தான் ஒலிப்பதிவுக் கூடத்தில் தன் கையோடு அழைத்து வந்த மலேசியா வாசுதேவனும் இருக்க வேண்டும் என்று பாரதிராஜா வைத்த கோரிக்கையில் அந்தப் பாடலின் மேற் பூச்சாக மிளிர்ந்தார் மலேசியா அண்ணன்.

கோவணம் கட்டிய நாட்டுப்புறத்தானுக்கு “ஆட்டுக் குட்டி முட்டையிட்டு”, கோட், சூட் போட்ட விஜயனுக்கு “ஆயிரம் மலர்களே மலருங்கள்”, பருவம் தண்டிய மூத்தோன் காதலுக்குப் “பூங்காத்து திரும்புமா”, “ஏல மலக் காட்டுக்குள்ள” என்று ஓலமிடும் நாடோடிக் கூட்டத்தில் ஒருவன் என்று எத்தனை வித விதமாக அழகு பார்த்தார்கள் மலேசியா வாசுதேவனை பாரதிராஜா படங்களில்.

தனியே பாரதிராஜா காலத்து மலேசியா வாசுதேவன் என்றொரு ஆராய்ச்சிப் பதிவு கூடப் போடலாம், பின்னர் கவனிப்போம்.

ஆண் பாடகர் வரிசையில் தன் முந்திய தலைமுறைப் பாடகர் T.M.செளந்தரராஜன், சக எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோருடன் மலேசியா வாசுதேவனும் சேர்ந்து மூவருமாக “ஓடி விளையாடு தாத்தா” படத்தில் “சின்ன நாக்கு” 

https://www.youtube.com/watch?v=ZF6y5hInK94

பாடலைப் பாடியவர், அதே படத்தில் ஏ.எல்.ராகவன், இளையராஜாவோடும் சேர்ந்து (பெண் பாடகி எல்.ஆர்.அஞ்சலி) “ ஒரு கோடிப் பொய்யை ஒண்ணாகச் சேர்த்து” https://www.youtube.com/watch?v=gtr0REcvdq4 பாடலைப் பாடியிருக்கிறார்.

இலங்கையில் புகழ் பூத்த பொப் இசைப் பாடலான சுராங்கனி பாடலை இளையராஜா “அவர் எனக்கே சொந்தம்” படத்தில் மீளப் பயன்படுத்திய போது மலேசியா வாசுதேவனே பொருந்தினார், கூடப் பாடிய பெண் குரல் ரேணுகா

https://www.youtube.com/watch?v=ganXbbrv5Os


எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு கூட்டுச் சேர்ந்து, இளையராஜா இசையில் கொடுத்த

உல்லாசப் பறவைகள் படத்தில் “எங்கெங்கும் கண்டேனம்மா” (சுருளிராஜனுக்கு எஸ்.பி.பி வெண்ணிற ஆடை மூர்த்திக்கு மலேசியா வாசுதேவன்), நம்ம முதலாளி ( நல்லவனுக்கு நல்லவன்), “என்னம்மா கண்ணு செளக்யமா” (மிஸ்டர் பாரத்), “சும்மா தொடவும் மாட்டேன்” (முதல் வசந்தம்), தென்மதுரை வைகை நதி (தர்மத்தின் தலைவன்), பத்தரை மாத்துச் சித்திரப் பொன்னே ( என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு), வானமென்ன கீழிருக்கு (வெற்றி விழா) உள்ளிட்ட 14 பாடல்களை இணைந்து பாடியிருக்கிறார்.

“தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது நம்பி” பாடலைக் கேட்டால் கோஷ்டி கானங்கள் ஒவ்வொன்றை மனசு அசை போடும். மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய தனிப்பாடல்கள், காதல் ஜோடிப் பாடல்கள் தவிர, அவரோடு இணைந்து பாடிய முன்னணி ஆண் பாடகர்களோடு பட்டியல் தரும் கோஷ்டி கானங்களுக்குத் தனி அத்தியாயம் ஒதுக்கலாம்.

“ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க” ஒரே பாடலிலேயே ராமராஜன் என்ற நாயகக் குரலாகவும், கவுண்டமணி நகைச்சுவை நாயகக் குரலாகவும் எந்த விதமான குரல் ஜாலமின்றிப் பாடும் தொனியிலேயே வித்தியாசப்படுத்தி அசத்துவார்.

இவ்வகைக் கோஷ்டி கானங்களில் “தாயே மூகாம்பிகையே” பாடலில் சீர்காழி கோவிந்தராஜன், பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வ நாதனோடு இணைந்தது பெருஞ் சிறப்பு. 

இளையராஜாவோடு “மாப்பிள்ளை மாப்பிள்ளை” (பாசப் பறவைகள்), “நம்ம பாஸு (நாங்கள்) உள்ளிட்ட நான்கு ஜோடிப் பாடல்கள் பாடியவர் அதன் நான்கு மடங்காக 16 பாடல்களில் கங்கை அமரனோடு கூட்டுச் சேர்ந்து பாடியிருக்கிறார். தன் பிந்திய வயதுக்காரர் மனோவோடு சம வயதுத் தோழமை போலக் கலாய்ப்பும் கிண்டலுமாக இருப்பவர் 17 பாடல்களில் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்.  அவை பெரும்பாலும் ஹிட் அடித்தவை,

“யாரு யாரு இந்தக் கிழவன் யாரு” (தர்மத்தின் தலைவன்), “நீ பொட்டு வச்ச தங்கக் குடம் (பொன்மனச் செல்வன்), குளு குளு மலரே ( நீ சிரித்தால் தீபாவளி), “எங்க பாட்டுக்குப் பாடுறோம் பாட்டு” (தாயம்மா) ஆகியவை அதில் முத்தாய்ப்பானவை.

மலேசியா வாசுதேவன் குரல் எந்தக் கட்டுக்குள்ளும் நில்லாது. அதனால் தான் அச்சாணி, மரகதவீணை போன்ற படங்களில் மனோரமாவோடு கூட இணைந்து பாடிச் சிறப்பித்தார்.

அவற்றில் அது மாத்ரம் இப்ப கூடாது (அச்சாணி)

https://www.youtube.com/watch?v=1ewaucD5-bk அந்தக் காலத்தில் ஏக பிரபலம் கொட்டிய பாட்டு.

“ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்று கமலுக்குப் பதிந்தவர், ஆரம்ப கால ரஜினிகாந்த் படங்களில் ஸ்டைல் நடிப்பும், மலேசியா வாசுதேவன் குரலும் என்றானது ஒரு காலம். பின்னாளில் ஒத்தடி ஒத்தடி ( தர்மத்தின் தலைவன்) பாடலில் தான் இன்னும் களைக்காத பொலி காளை என்று நிரூபித்தார். ரஜினிக்காகவே தனித்து நின்று பாடிய “மாவீரன்”, “அதிசயப் பிறவி” என்று பாடிச் சிறப்பித்தார்.

“ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூட்டி”, “ஒரு தங்க ரதத்தில்” என்று அடக்கமான ரஜினி குரலாகவும் பதிந்தவர்.

“வெத்தல வெத்தலை” (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) என்று சிவக்குமாருக்கும், “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி” (தூறல் நின்னு போச்சு), பாக்யராஜ், “இளம் வயசுப் பொண்ணை வசியம் பண்ணும் வளவிக்காரன் ( பாண்டி நாட்டுத் தங்கம்) கார்த்திக், “மலையோரம் மயிலே” ( ஒருவர் வாழும் ஆலயம்), “சோலை இளங்குயிலே” (அண்ணனுக்கு ஜே) அர்ஜூன், “வெட்டிவேரு வாசம்” ( முதல் மரியாதை) சிவாஜி கணேசன், “ஏத்தம்மய்யா ஏத்தம் (நினைவே ஒரு சங்கீதம்) விஜயகாந்த், “கம்மாக்கர ஓரம்” (ராசாவே உன்ன நம்பி) ராமராஜன், “ஒன்னப் பார்த்த நேரத்துலே ஒலகம் மறந்து போனதடி (மல்லுவேட்டி மைனர்) சத்யராஜ் என்று எல்லா எண்பதுகளின் நாயகக் குரலாகவும் மிளிர்ந்தவர் என்பதற்கு இந்த ஒரு சோறுகள் பதம்.

அது மட்டுமா 

“அட வஞ்சிரம் வவ்வாலு மீனு தானா

இது கண்ணியில் சிக்காத மானு தானா”

https://www.youtube.com/watch?v=T3pEYWfz6X4

என்று மன்சூரலிகானுக்கான குரலாய் மிளிரும் போது தான் எவ்வளவு உரப்பும், உழைப்பாளியின் உற்சாகக் கொண்டாட்டமுமாய் எங்கள் மலேசியா வாசுதேவன் அண்ணர்.

எழுதிக் கொண்டே போகலாம், இன்னும் மிச்சம் வைப்போம் எங்கள் மலேசியா வாசுதேவன் அண்ணனை ஆண்டாண்டுகளாகக் கொண்டாடிக் கொண்டிருக்க.


கானா பிரபா


0 comments: