செங்காட்டு மண்ணும்
நம் வீட்டுப் பொண்ணும்
கை விட்டுப் போகக்
கண்டா கண்ணீர் வருமே....
https://www.youtube.com/watch?v=joijwWyvKfk
ஏனோ தெரியவில்லை கடந்த நான்கு நாட்களாக இந்த வரிகள் மட்டும் மனசின் ஓரத்தில் ஒளிந்திருந்து அவ்வப்போது தலைதூக்கி முணுமுணுக்கும். இம்மட்டுக்கும் “கிழக்குச் சீமையிலே” படத்தைப் பற்றியோ, இந்தப் பாடலைப் பற்றியோ கூட யோசிக்காமல் தான் இருந்தேன். அப்படியிருந்தும் “நினைவுக் கிளப்பி" ஆகத் துரத்திக் கொண்டிருக்கிறது.
என்னதான் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், கண்ணதாசனுக்குப் பின் ஒரு கதையின் கருவியாக, இன்னும் ஒரு படி மேலே போய் ஆன்மாக இயங்கும் வரிகளை யாத்ததில் வைரமுத்துவின் பங்கு அளப்பரியது. திறமை மிகு பாடலாசிரியர் பலர் என்பது வேறு, அந்தந்தக் களங்களில் குறித்த படைப்பின் ஆக்ககர்த்தாக்களில் இயக்குநர், இசையமைப்பாளருக்கு அடுத்ததாகப் பாடலாசிரியர் என்று வரும் போது அந்த அடையாளத்தை நிறுவிய வகையில் வைரமுத்துவின் பங்கு தனித்துவமானது. கிழக்குச் சீமையிலே பாடல்கள் ஒவ்வொன்றைக் கேட்டாலும், அல்லது ஒட்டுமொத்தமாக அந்தப் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டாலும் அந்தப் படைப்பின் “நிறத்தை” பாடல்களில் கொண்டு வந்திருப்பார்.
ஏ.ஆர்.ரஹ்மானைப் பொறுத்தவரை “கிழக்குச் சீமையிலே” ஒரு கட்டுடைப்பு எனலாம்.
இந்தப் படத்துக்குப் பின்னரும் அவ்வப்போது கிராமியத் தெம்மாங்கைத் தொட்டுப் போகும் வகையில் அவர் பாடல்களை இசையமைத்திருந்தாலும், ஒரு ஒட்டு மொத்தப் படைப்புக்கும் நியாயம் கற்பிக்கும் பாடல்களைக் கொடுத்த வகையில் “கிழக்குச் சீமையிலே” சாதனையை அவராலேயே முறியடிக்கவில்லை என்று சொன்னாலும் தகும்.
“பச்ச ஒடம்புக்காரி
பாத்து நடக்கச் சொல்லுங்க”
அந்த இடத்தைக் கேட்டாலேயே மயிர்க்கால்கள் குத்திட்டுச் சிலிர்க்கும்,
அப்படியே கொஞ்சம் தள்ளிப் போய்
“மச்சான திண்ணையிலே போத்திப்
படுக்கச் சொல்லு..
இஹ்ஹ்ஹு ஹி”
என்ற எள்ளலாகட்டும், எஸ்பிபி என்ற ராட்சசனை
“மானூத்து மந்தையிலே”
https://www.youtube.com/watch?v=DCArpOtp3z4
தாய்மாமன் சீர்செனத்தியோடு கூட அழைத்துப் பாட வைத்ததாகட்டும்,
வண்டிமாடு எட்டு வெச்சு
முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம்
பின்னே போகுதம்மா
https://www.youtube.com/watch?v=Giy-Wwd0VnQ
அந்த ஜெயச்சந்திரன் குரலின் தொனியை முன் பின் கேட்டதுண்டா?
கூடவே தன் முத்திரை ஆலாபனையோடு எஸ்.ஜானகி....
“வலது கண்ணைப் பிரிஞ்சு போற
இடது கண்ணே,
அண்ணே உசிரு இங்க
அரை உசுருஆனதம்மா
நீ விளையாட தாவாரம்
வெறிச்சோடிப் போனதம்மா
குறுணை போட்டு நீ வளர்த்த
கோழி கூட அழுவுதம்மா
வலது கண்ணைப் பிரிஞ்சு போற
இடது கண்ணே வா”
இப்படித்தான் ஆரம்பத்தில் “கத்தாழங்காட்டு வழி” பாடலுக்குத் தொகையறாவை அமைத்தாராம் வைரமுத்து. ஆனால் பாடலின் காட்சி வடிவத்துக்குப் பொருந்தவில்லை என்று ரஹ்மான் சொல்லவும் மாற்றிய தொகையறா தான் “கத்தாழங்காட்டு வழி” என்ற செய்தியை சாய் வித் சித்ராவில் இயக்குநர்/நடிகர் மாரிமுத்து பகிர்ந்திருந்தார்.
அப்படியே இள வட்டங்களுக்காக மனோ & சுஜாதாவை ஜோடியாக்கி
“அத்தைக்குப் பிறந்தவளே”
https://www.youtube.com/watch?v=wxX5-wvOoRc
பாண்டியனை மீண்டும் மறுவாழ்வு கொடுக்க, ஒரு பாட்டையும் கொடுத்த “எதுக்குப் பொண்டாட்டி” அதில் தன் ஆஸ்தான சாகுல் ஹமீத்துடன், ஆரம்ப காலத்து நட்பு டி.கே.கலாவையும் என்று கலவையான தொகுப்பாக அமைந்த ஒரு கிராமியக் கொண்டாட்டம் இந்த “கிழக்குச் சீமையிலே”
சொல்லப் போனால் கே.ஜே.ஜேசுதாஸ், சுசீலா, வாணி ஜெயராமையும் மட்டும் ஆட்டத்தில் சேர்த்திருந்தால் எண்ணிப் பாருங்கள்,
எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், ஜானகி, டி.கே.கலா, சசிரேகா சித்ரா, மனோ இவர்களுடன் சேர்ந்த ஒரு முந்திய யுகத்துப் பாடகர்களைக் கொண்டாடும் திருவிழா என்று கூட இந்த இசை ஆல்பத்துக்குச் சூட்டியிருக்கலாம்.
“கிழக்குச் சீமையிலே” பாடல்களில் அன்பு, அரவணைப்பு, பாசம், மகிழ்ச்சி, சோகம், காதல் என்று எல்லாமே உணர்வோட்டமாக இருந்ததால் தான் அவை அந்தப் படைப்போடும் மிக நெருக்கமாக அமைந்து முழுமையான வெற்றிக்கு வழி சமைத்தது. ஒரு அங்காளி பங்காளிக் கதையை (ரத்னகுமார் கதாசிரியர்) 90களில் ஒரு புதிய போக்கில் காட்சிப்படுத்தியவர் பாரதிராஜா. அதன் பின்னரும் இன்னொரு அலையும் எழும்பியது எனலாம். எல்லாமே சரி சம விகிதத்தில் அமைந்த கலவை அது.
அதன் பின் இதே கூட்டணியில் வெளியான “கருத்தம்மா” படத்தின் நிலவியலும், கதைக்களமும், பாடல்களோடு ஒட்டி உறவாடவில்லை. பாடல்கள் தனியே கேட்கத் தான் இனிக்கும்.
ஒரு பக்கம் “கிழக்குச் சீமையிலே” வைரமுத்து வரிகளிலும், இன்னொரு பக்கம் “உழவன்” வாலியின் வரிகளிலும் (மாரிமழை பாடல் இயக்குநர் கதிர்) என்று 1993 தீபாவளிக்கு வெளியாகிறது. அதாவது ஒரே தினத்தில் இரு கிராமியப் படங்களுக்கு ரஹ்மான் இசை. கூடவே இன்னொரு படமான “திருடா திருடா” வில் “ராசாத்தி என் உசுரு” வையும் சேர்த்து மூன்றாக்கலாம்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனி இசைத் தொகுப்புக்கு அணி சேர்த்த ஆரம்ப காலப் பாடகர் மலேசியா வாசுதேவன்
டிஸ்கோ டிஸ்கோ பாடல்களைக் கேட்க
https://www.youtube.com/watch?v=5al2Nxu1RiA&list=PLI8EXXUlH-NFfj1hYEkBUOfKMrga_BsKQ
பாசில் படங்களிலும், பாலுமகேந்திரா படங்களிலும் ஜேசுதாஸ் ஒரு கெளரவப் பாடகராக இயங்குமாற் போல பாரதிராஜா படங்களில்
மலேசியா வாசுதேவன். அந்தக் கணக்கில் கிழக்குச் சீமையில் வந்திருந்தாலும் கூட, ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியா வாசுதேவனுக்குக் கொடுத்த ஆகச் சிறந்த கெளரவமாக இந்தப் பாடலையே சொல்வேன்.
“செம்மண்ணிலே தண்ணீரைப் போல்
உண்டான பந்தம் இது”
என்று அவரே பாடியது போல,
கிராமியத்து ராகத்துக்கு மலேசியா வாசுதேவன் என்ற கலைஞன் குரல் ஆத்மார்த்தமாக அமைந்து விடும். அதையே இதுவும் மெய்ப்பிக்கின்றது. கேட்கும் போது பாசமென்னும் பெருஞ்சுமையை நம் மேல் இறக்கி வைக்கிறார். அதை நாம் பிரித்தெடுக்க முடியாமல் அடி மனக் கிணற்றில் போட்ட கல்லாகக் கீழிறங்கி விடுகிறது.
தாய் வீட்டுப் பேரும் தாய் மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே
சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே
https://www.youtube.com/watch?v=joijwWyvKfk
கானா பிரபா
30.03.2023
0 comments:
Post a Comment