Pages

Tuesday, March 28, 2023

மணிரத்னம் உதவி இயக்குநராக இருந்த படம்


“என் கானம்

 இன்று அரங்கேறும்

என் சோகம் 

இன்று வெளியேறும்

https://www.youtube.com/watch?v=emuoLGX3EHs

இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே அல்லது கேட்டு விட்டு மேற்கொண்டு படியுங்கள்.

திரைப்பட உலகத்துக்கு வருவதும், அதில் வெற்றி பெறுவதும் கூட ஒரு வகை விபத்துத்தான். அப்படியானதொரு செய்தி தான் இந்தப் பதிவும்.

சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி அந்தப் பேட்டியில் தன்னுடைய தந்தை, பிரபல இயக்குநர் பந்துலுவைப் பற்றி அதிகம் பேசியிருந்தார். ஆனால் அவருடைய சகோதரன் பி.ஆர்.ரவிசங்கர் பற்றி ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார். ஆனால் அதற்குப் பின் ஒரு பெரிய செய்தி இருக்கிறது. அதை அவரும் சொல்லவில்லை.

தனக்கு சினிமாவில் ஈடுபடவே விருப்பம் இல்லாத சூழலில் தான் சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைவதற்கு முக்கிய காரணம், ஒளிப்பதிவாளர் அசோக்குமார் என்று குறிப்பிட்ட பி.ஆர்.விஜயலட்சுமி,  

தன் அண்ணன் இந்த விஷயத்தில் நேர்மாறாக, சினிமா குறித்த ஏராளம் புத்தகங்களை வாங்கிப் படித்துத் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டிருந்தார், மணிரத்னத்தின் நண்பர் என்று சொன்னதோடு சரி.

அந்த பி.ஆர்.ரவிசங்கர் வேறு யாருமல்ல.

இன்று இசைஞானி ரசிகர்களால் காலம் கடந்தும் கொண்டாடப்படும் “ஈரவிழிக் காவியங்கள்" படத்தின் இயக்குநர் தான் அவர்.

ஈரவிழிக் காவியங்கள் பாடல்கள் எல்லாமே காவியத் தரம். 

https://www.youtube.com/watch?v=tE-1bsXXWx4

ஆனால் அந்த ஆர்வத்தோடு பார்த்து விட்டுத் திட்டாதவர்களே இல்லை.

அது மட்டுமல்ல, நீங்கள் சிங்கப்பூர் வானொலிப் பிரியர் என்றால் இந்தப் பாடலை அடிக்கடி கேட்பீர்கள்

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

சுமை தாங்காமலே கரை தேடும்

சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

https://www.youtube.com/watch?v=5fNzDXvaLPo


எஸ்பிபி மற்றும் வாணி ஜெயராம் பாடிய அற்புதமான இந்தப் பாடல் இடம் பிடித்த, “அன்புள்ள மலரே” படத்தையும் இயக்கியவர் இந்த பி.ஆர்.ரவிசங்கர் தான்.

தமிழில் வருஷம் 16 வில்லன் விஜய் மற்றும் சாந்தி கிருஷ்ணா நடித்த இந்தப் படத்தின் இதே பாடல் தெலுங்கில் எஸ்பிபி & ஜானகி கூட்டில் ராஜ்குமார் படத்துக்காக சோபன் பாபு & அம்பிகாவுக்காக இப்படி வந்து ஹிட் அடித்தது.

https://www.youtube.com/watch?v=UQs9mkual70

இதெல்லாம் அரிய பாடல் தொகுப்புகள். 

பாடல்களில் கூட ஒரு தனித்துவமும் புத்துணர்வும் இருக்கும்.

அன்புள்ள மலரே படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்க

https://www.youtube.com/watch?v=S0Mwb2ZQG_c

“அலைமீது” பாடலை யாரோ கொலவெறி ரசிகர் “பல்லவி அனுபல்லவி” படப்பாடலோடு காட்சி வடிவம் கொடுத்ததை யூடியூபில் பார்க்கலாம். அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த காரியத்தின் பின் ஒரு செய்தியும் உண்டு.

“சினிமாவில் நான் வந்தது முழுக்க முழுக்க விபத்து, மார்க்கெட்டிங் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்து வந்தேன். அப்போது நண்பர் ரவிஷங்கர் தன் முதல் பட வேலையில் ஈடுபட்டிருந்தார். காணி என்ற கன்னடப்படத்தில் நானும் ரவியும், இன்னொரு நண்பர் ராமனும் (வீணை எஸ்.பாலசந்தர் மகன்) சேர்ந்து திரைக்கதை எழுதினோம். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்த பின் திரைக்கதையை விவாதிப்போம். ஒரு படத்தை எப்படி எடுப்பார்கள் என்ற அறியாமை என்ற வேரில் இருந்து மரமாக வளர்ந்த நம்பிக்கை அது. இப்படியாக ரவிஷங்கர் பட வேலையை ஆரம்பித்த போது நான் வேலையை ராஜினாமா செய்து விட்டு நான் ஆங்கிலத்தில் எழுதிய வசனங்களை ரவிஷங்கர் வழியாகக் கன்னடமாக்கி படம் எடுத்தோம். விஷ்ணுவர்த்தன், ஶ்ரீ நாத், அம்பரிஷ், லட்சுமி போன்றோர் நடித்த படம் பாதியில் நின்று விட்டது. ஆனாலும் என் துறை சினிமா தான் என்பது எனக்குப் புரிந்து விட்டது”

இப்படி “மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்” நூலில் பரத்வாஜ் ரங்கனிடம் மணிரத்னம் சொல்லியிருக்கிறார்.

இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால் சினிமா வேட்கையோடு தீவிரமாக உழைத்த அவரின் நண்பர் பி.ஆர்.ரவிசங்கரால் நிலைத்து நிக்காத துறை,

சினிமா மீது துளி ஆர்வமும் இல்லாத பி.ஆர்.விஜயலட்சுமியை ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் ஆக்கியிருக்கிறது.

இதுதான் சினிமா “விதி”

பி.ஆர்.விஜயலட்சுமி குறித்து நான் முன்னர் எழுதிய இடுகை மேலதிக வாசிப்புக்கு http://www.radiospathy.com/2009/12/blog-post.html

கானா பிரபா

28.03.2023


0 comments: