Pages

Friday, March 24, 2023

TMS என்பதோர் திருக்குரல் ❤️

“என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்

என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்”

இவ்வளவு தான் அவரைப் பற்றிப் பேச என்று அவர் தம் பாடலின் வழியாகவே சொல்லி விடலாம். 

அதுதான் T.M.செளந்தரராஜன் என்ற பாட்டுலகச் சக்கரவர்த்தியின் பெருமை. அந்தப் பெயரைச் சொன்னால் ஒரு கம்பீரம் பிறக்கிறதே அந்தக் குரல் வலிமை தான் திரையிசையை நாடாள வைத்ததன் தார்ப்பரியம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி என்று நீண்ட திரையுலக உச்ச நட்சத்திரங்களின் அணி செய் குரலாக இருந்ததும், அதுவும் எப்படி இவர் எம்.ஜி.ஆருக்குப் பாடும் போது அவரே ஆகவும்,

சிவாஜிக்குப் பாடும் போது சிவாஜியே ஆகவும் பிரதிபலிக்கிறாரே என்ற வியப்பெல்லாம் இயல்பாகி விட்டது.

அதை விட வியப்பான காரியம், ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் செளந்தரராஜன் அவர்கள் அணி செய்த விதம். அதுதான் மிக முக்கியமானது. திரைப்படைப்புகளில் அண்ணனாக, தந்தையாக, நண்பனாக, இலட்சிய வேட்கை கொண்ட புரட்சிக்காரனாக, அப்பாவியாக என்று ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் இவர்தம் குரல் அணி செய்த விதம் ஒருவகை என்றால்,

இன்னொரு பக்கம் அண்ணனில் தான் எத்தனை வகை பாருங்கள்

“மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்" அண்ணன் சிவாஜிக்கும்,

“கல்யாணச் சாப்பாடு போடவா” அண்ணன் நாகேஷுக்கும் தான் எத்தனை வித்தியாசம்? இந்த நுணுக்கங்களையெல்லாம் ஒரு பாடலைக் கேட்கும் போது கொண்டு வர முடிகின்றதென்றால், அந்தக் குரல் ஆளுமையின் பின்னால் எப்பேர்ப்பட்ட ரகசியம் ஒளிந்திருக்கிறது பாருங்கள்.

பக்தி இலக்கியங்களாகவும், பாடியே நடித்தவர்களாகவும் திரையிசை இலக்கணம் இயங்கிய காலத்தில் இருந்து படிமுறை மாறுதலாக,

நடிகர்களுக்குக் குரல் கொடுக்கும் நிலைக்கு மாறிய போது அதில் எல்லா இலக்கணங்களுக்கும் சரிவரப் பொருந்தியவர் செளந்தரராஜன் அவர்கள். அவரின் நீட்சியே பின்னால் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற இன்னொரு சகாப்தம்.

ஆனாலும் தனக்கு முந்திய யுகத்தின் பிரதிபலிப்பையும்

“வசந்த முல்லை போலே வந்து 

அசைந்து ஆடும் பெண் புறாவே

மாயமெல்லாம் நான் அறிவேனே 

வா வா ஓடி வா....”

தொட்டுக் காட்டி பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர்.

இன்னும் நீட்டித்துப் பார்த்தால்,

சிவாஜி கணேசன் என்ற மகா நடிகருக்கு என்னதான் மாற்றுக் குரல்கள் வந்தாலும்,

“பாசமலரே.....!

அன்பில் விளைந்த வாசமலரே....!”

என்று எண்பதுகளில் குரல் கொடுத்த போது அச்சொட்டான அப்பன்காரனின் கனிவை எழுப்ப முடிகின்றதென்றால் அந்தக் குரலுக்கு ஓய்வில்லை என்று தானே அர்த்தப்படும்?

அற்ப வாழ்நாள் கொண்டிருந்தாலும் அற்புதக் கவியாற்றல் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் எழுச்சி மிகு பாடல்களுக்கு உணர்வு வடிவம் கொடுத்தது இன்னும் உயர வைத்தது டி.எம்.எஸ் இன் குரல்.

“பிறப்புக்கு முன்னால்

இருந்தது என்ன

உனக்கும் தெரியாது

இறந்த பின்னாலே

நடப்பது என்ன

எனக்கும் புரியாது

இருப்பது சிலநாள்

அனுபவிப்போமே

எதுதான் குறைந்துவிடும்

இரவினில் ஆட்டம்

பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம்”

அந்த முரடனின் ஒவ்வொரு தள்ளாட்டத்தையும் பதிவு செய்யும் குரலாகி விடுவார்.

கண்ணதாசனின் காதலில் இருந்து எல்லா உணர்வையும் அசரீரியாகக் கொடுத்ததில் டி.எம்.செளந்தரராஜனின் குரலே முதன்மையானது.  தமிழ்த்திரையின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், சிவக்குமார் வரையான நாயகர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடிச் சென்றவரின் பாடல்களை வெறுமனே ஒலி வடிவில் கேட்கும் போதே இது யாருக்கானது என்று கண்டுபிடித்துச் சொல்லுமளவுக்கு நுணுக்கம் நிறைந்தவர்.  

அவருக்குப் பின்னர் தான் திரைப்படத்தின் நாயகனின் பாத்திரத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பாடும் வல்லமையைத் தமிழ்த்திரையிசையுலகம் பதிவு செய்து கொண்டது. அந்த நிலையை இழந்து நிறமற்றது போலப் போய் நிற்கின்றது இன்றைய தமிழ்த்திரையிசையுலகம். 

டி.எம்.செளந்தரராஜன் குரல் போர்க்கால இலக்கியமாகக் கொண்டாடப்பட்ட அதே சமயம் ஆலயங்கள் தோறும் கொடியேறிக் கொண்டாட்டம் நடக்கும் போதும் இன்னும் முக்கிய திருவிழாக்களிலும் "உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே" என்றும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே" என்றும் "தில்லையம்பல நடராஜா" என்றும் அந்தந்த ஆலய மூல மூர்த்தியின் பெருமைதனைக் கூறும் பக்திப்பாடல்களிலும் இடம்பிடித்தவர் இன்னும் தொடர்கின்றார்.

"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே" என்ற பாடலை எங்களூர் வீரமணி ஐயர் அவர்கள்  கபாலீஸ்வரர் கோயில் உறையும் அன்னை மீது எழுத  அதை டி.எம்.செளந்தரராஜன் குரல் வடிவம் கொடுத்து ஈழத்தமிழகத்துக்கும், இந்தியத்தமிழகத்துக்கும் உறவுப்பாலம் அமைத்ததை இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்வோம்.

அன்றைய காலகட்டத்தில் நாங்கள் சிறுசுகளாக இருந்த போது,  மாமன், மச்சான் உறவுகளும் சரி ஊரில் தோட்டவேலை செய்து களைத்து விழுந்து வீடு திரும்பும்  உழைப்பாள சமூகமும் சரி இடம், பொருள் ஏவல் பாராமல், டி.எம்.எஸ் இன் குரலைத் தம்முள் ஆவாகித்துக் கொண்டு பாடியபோதெல்லாம் வேடிக்கை பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் எல்லாத்தளங்களிலும் நின்று தன்னை நிறுவியிருக்கிறான் என்ற ஆச்சரியமே மேலோங்குகின்றது.

உயர்ந்தவன் 

           தாழ்ந்தவன் 

இல்லையே நம்மிடம்.......

பள்ளிக்கால நண்பனைத் தேடி அலையும் மனம், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே கேட்கும் போதெல்லாம்.

“நீ கொண்ட பெயரை

நான் உரைத்து கண்டேன் சாந்தி

நீ காட்டும் அன்பில்

நான் கண்டு கொண்டேன் சாந்தி

நீ பெற்ற துயரை

நான் கேட்டு துடித்தேன் சாந்தி

நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி”

எண்பதுகளின் திரையிசைப்பாடல்களிலே டி.எம்.செளந்தரராஜனுக்கான கெளரவத்தை மீளவும் நிலை நிறுத்தியவர் டி.ராஜேந்தர். அவரின் ஒரு தலை ராகம் படத்தில் வரும் "நானொரு ராசியில்லா ராஜா" அன்றைய அண்ணன்மாரின் காதலுக்கான தேசிய கீதமாகவும், "என் கதை முடியும் நேரமிது" காதலின் விரக்தியில் நின்றோரின் உள்ளத்து ஓசையாகவும் அமைத்துக் கொடுத்தார் டி.ராஜேந்தர். இளையராஜா காலத்தில் புதுமையைத் தேடி எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ் என்று மும்முனைப் போட்டியிருக்க, அங்கும் தன்னை நிலை நாட்ட வைத்தது ஒரு தலை ராகம் திரைப்படப் பாடல்கள். டி.ராஜேந்தரின் அடுத்த படைப்புக்களிலும் குறிப்பாக "ரயில் பயணங்களில்" படத்தில் "அமைதிக்குப் பெயர் தான் சாந்தி" என்றும் "நெஞ்சில் ஒரு ராகம்" திரைப்படத்தில் "குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன" என்றும் டி.எம்.செளந்தரராஜனின் குரலை அடுத்த தலைமுறையும் ஆராதிக்கும் வண்ணம் செய்தார். இதில் முக்கியமாக டி.ராஜேந்தரின் கவியாழமும் சிறந்ததால் இன்னும் ரசிக நெஞ்சங்களில் இடம்பிடிக்க முக்கிய ஏதுவாக அமைந்திருந்தன.

உன்னை தினம் தேடும் தலைவன்

கவி பாடும் கலைஞன்

காவல் வரும்போது கையில்

விலங்கேது கால்கள் நடமாடட்டும்

லலலலலலலலாலா

எண்பதுகளிலே திரைப்படக்கல்லூரி வழியாக வந்து பிரமாண்டத்தைத் திரையில் புகுத்தும் பரம்பரையில் மூத்தவர் ஆபாவாணன் வருகையும் டி.எம்.செளந்தரராஜனை மீள நிறுவுவதற்கு உசாத்துணையாக அமைகின்றது.  மனோஜ் கியான் இசையில் "உழவன் மகன்" திரைப்படத்தில் "உன்னைத் தினம் தேடும் தலைவன்" என்று அன்றைய முன்னணி நாயகன் விஜய்காந்துக்கான குரலாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கெல்லாம் மணிமகுடமாக அமைந்தது மனோஜ் கியான் மீண்டும் இசையமைக்க ஆபாவாணன் உதவி இசையை வழங்கிய 1989 இல் வெளிவந்த "தாய் நாடு" திரைப்படம். இந்தப் படத்தின் ஐந்து பாடல்களிலும் டி.எம்.செளந்தரராஜனைப் பாடவைத்துக் கெளரவம் சேர்த்தார் ஆபாவாணன்.

“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்

 இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா”

குதிரை வலுவைப் பிறப்பிக்கின்ற அந்தக் குரலின் சக்தி ஒரு கட்டத்தில் அரசியல் மாற்றத்தின் திறவுகோலாகவும் பயன்படுகிறது.

“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்”, "ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறதே" என்றும், "அச்சம் என்பது மடமையடா" என்றும் சில்லென்று காதை ஊடுருவுகிறது டி.எம்.எஸ் இன் கணீர்க்குரல், அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களின் எழுச்சிக் குரல் அது.

“சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்”

என்று இன்னோர் புறம் கனிவான கவியாகவும் பாட முடிகிறதே?

“பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள் 

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்”

கேட்கும் போது நின்ற இடத்தில் இருந்து மனமுருகிக் கைக்கூப்பி மெய்யார இறைஞ்சுதல் நிலைக்குப் போக முடிகின்றதென்றால் அந்தக் குரலை இயக்கும் சக்திக்குத் தான் என்ன பெயர்?

நான் நிரந்தரமானவன்

அழிவதில்லை

எந்த நிலையிலும் எனக்கு

மரணமில்லை

என்று கவியரசர் எழுதியதைப் பாடியளித்த செளந்தரராஜன் என்பதோர் திருகுரலுக்கும் கூட இது பொருந்திப் போகும்.

கானா பிரபா


0 comments: