Pages

Wednesday, November 10, 2021

பிள்ளைப் பாசமும் மனித ஜாதியும்1991 ஆம் ஆண்டு நவம்பர் 5 தீபாவளி வெளியீடுகளில் வந்த இன்னொரு இளையராஜா படமும் உண்டு. ஆனால் காலவோட்டத்தில் இப்படியொரு படம் வந்த சுவடே இல்லாத உலகமும் வந்து விட்டது. அதுதான் வி.எம்.சி.ஹனீபா இயக்கத்தில் உருவான “பிள்ளைப்பாசம்”. 

முரசொலி செல்வம் தனது பூம்புகார் புரடெக்க்ஷன்ஸ் வழியாக வி.எம்.சி.ஹனீபாவை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அழைத்து வந்து, கலைஞர் கருணாநிதி வசனத்தில் வந்து “பாசப் பறவைகள்” என்ற வெற்றிச் சித்திரத்தையும், தொடர்ந்து பாடாத தேனீக்கள் என்று தொடர்ந்ததும் வி.எம்.சி.ஹனீபா தொடர்ந்து தமிழில் இயங்கியதையும் முன்னொரு விரிவான பகிர்வில் கொடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாகத் தன் “ப” வரிசைப் படங்களில் ஒன்றாக மீண்டும் பூம்புகார் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து வி.எம்.சி.ஹனீபா இயக்கிய படமே பிள்ளைப்பாசம்.

மரண தண்டனைக் கைதிகளைக் கழுவேற்றும் சிறைப் பணியாளராக சிவகுமாரும், தன் மகன் ராம்கியே அந்த மரண தண்டனைக் கைதியாகவும் எதிர் கொள்ளும் ஒரு சவால் நிறைந்த படமாக “பிள்ளைப் பாசம்” வெளியானது. ஆனால் முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் அலையில் அந்தத் தீபாவளித் திருநாளில் இம்மாதிரியான கனதியான கருப்பொருளில் அமைந்த இந்தப் படத்தை மக்கள் ஒதுக்கி விட்டார்கள்.

அதே ஆண்டு இன்னொரு படம் சிவகுமாரும் ராம்கியும் நடிக்க வெளியாக இருந்தது. அதுதான் மனித ஜாதி. 

பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைமணி அவர்கள் தன்னுடைய கதை, தயாரிப்பில் மனோபாலா இயக்கிய “மல்லுவேட்டி மைனர்” என்ற வெற்றிச் சித்திரத்தைக் கொடுத்த பின்னர், தானே கதை எழுதி இயக்கிய படம் தான் மனித ஜாதி.

ஆனால் பட வெளியீட்டில் சிக்கல் எழுந்து, தமிழகத்தில் திரையிட முடியாத சூழலில் வெளிநாட்டில் திரையிட்டு, படம் திருட்டு வீடியோவாக வந்து கலைமணி அவர்கள் இயக்கிய இந்த இறுதித் திரைப்படத்துக்கு இந்த நிலை நேர்ந்தது வருத்தம்.

1991 ஆம் ஆண்டில் இரட்டை நாயகர்களாக நடித்த சிவகுமார் & ராம்கி கூட்டணியின் பிள்ளைப் பாசம் மற்றும் மனித ஜாதி இரண்டுக்குமே இவ்வகைத் துரதிஷ்டம்.

பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர்  என்று பன்முகம் கொண்ட ஆளுமை கங்கை அமரன் அந்தந்தத் துறைகளின் வழியாக என் ரசனைக்குத் திறமான தீனி போட்டவர் பாடகராகவும் கூட இதில் பங்கு போட்டிருக்கிறார். 

இசைஞானி இளையராஜாவின் குரலுக்கு நெருக்கமாக இருந்தாலும் கங்கை அமரன் குரலை அடையாளப்படுத்த முடியும். அவருக்குக் கிடைத்த பாடல்களை வைத்து ஒரு தனிப்பதிவு கொடுக்க வேண்டும். நான் கேட்ட வகையில் ஒன்று கூடச் சோடை போகாத ரகம்.

ஒரு சோறு "சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்" இசையரசி P.சுசீலாவுடன் பாடிய அந்தப் பாட்டைப் பற்றி எழுதும் போது "பூஜைக்கேற்ற பூவிது" என்று  கூடப் பாடிய சித்ரா ஞாபகப்படுத்துகிறார் இன்னொன்றை.

"மன்னன் கூரைச் சேலை" (சிறைச்சாலை) பாடலைப் பற்றி முன்னர் சிலாகித்து எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு ஆண் குரல்கள், மலையாளத்தில் இளையராஜா என்றால் தமிழில் கங்கை அமரன். 

 "அடி குயில்கள் பாடும் நாள் வந்தால்" என்று கடக்கும் அந்த அடிகளை இழுத்துப் பிடித்து ரசித்துக் கொண்டே இருப்பேன் மீண்டும் மீண்டும்.

அவ்வளவுக்கு கங்கை அமரன் இந்தப் பாடலில் ஒரு குறுகிய பகுதியில் நிறையவே நியாயம் செய்திருப்பார். 

மனித ஜாதி படத்தில் வரும் 

"இரு பாதம் பார்த்தேன்" பாடலும் கிட்டத்தட்ட "மன்னன் கூரைச் சேலை" பாட்டோடு ஒட்டி உறவாடக் கூடிய அளவுக்கு மெதுவாகப் பயணித்து

மனதைச் சூறையாடும் பாங்கு கொண்டது. இந்தப் பாடலில் கங்கை அமரன், சித்ரா இருவருக்குமே சம பங்கு. 

"இரு பாதம் பார்த்தேன் சிறு பூவைப் போலே”

https://www.youtube.com/watch?v=iJYhut5wNQ8

அந்தத் தொண்ணூறுகளின் ஆரம்பம் ஈழத்தில் கனத்த போர்க்காலம். உணவுப் பொருட்களுக்கே கூப்பன் கடைகளில் (ரேஷன்) வரிசையில் நின்றாலும் வித விதமாகப் பாட்டுக் கேட்கும் சுவைக்கு ஒன்றும் குறைச்சலில்லை நமக்கு.

புதிய கேஸட்டுகளை வாங்க வக்கில்லாத சூழலில், இருப்பிலும் இல்லை என்பது வேறு விடயம் பழைய நைந்து போன லேபல் எல்லாம் நொதிந்த ஒரு கேஸட்டை ரெக்கார்டிங் பார் காரரிடம் கொடுத்துப் பதிவு செய்து, சைக்கிள் டைனமோவில் மின் பிறப்பாகிப் பாடலைப் போட்டால் அந்த அறையே அதிர்ந்தது 

“நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம்”

https://www.youtube.com/watch?v=cEgTHkOgRHM

பிள்ளைப் பாசம் படத்தில் முதல் பாடலாகப் பதிவு செய்து கேட்ட அந்தப் பாட்டின் அதிர்வலையை இன்றும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறேன். பின்னாளில் நான் வானொலி நிகழ்ச்சி செய்யும் காலத்தில் எல்லாம் திருமண நாள் வாழ்த்துப் பாடல்களில் இந்தப் பாடலை நேயர் வாழ்த்துப் பகிர்வாக் கொடுத்து மகிழ்வது என்பது கொடுப்பினை.

பிள்ளைப் பாசம் படத்தின் பாடல்களைக் கேட்க, குறிப்பாக இளையராஜாவின் “விடிந்ததா” பாடலைக் கேட்டுப் பாருங்கள் படத்தில் எதிர்கொள்ளப் போகும் அந்த அவலத்தை நோக்கி நகரும் ஒரு துன்பியல் சங்கீதம்

https://www.youtube.com/watch?v=kPem1YyAU-Q

கானா பிரபா

10.11.2021

மனிதஜாதி படப்பிடிப்புப் புகைப்படம் நன்றி IMDB மற்றும் தினமலர்

0 comments: