Pages

Sunday, November 14, 2021

இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியராக

"கற்பகம்" என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி எடுத்து அந்தப் படத்தின் வசூலை வைத்து கற்பகம் ஸ்டூடியோ என்று கட்டினார் என்ற உண்மையை இந்தக் காலத்தில் சொன்னால் எவ்வளவு தூரம் வாய் பிளப்போம். இந்தப் படத்தின் வழியாக நாயகியாக அறிமுகமாகி முன்னணி நட்சத்திரம் ஆனார் கே.ஆர்.விஜயா.
"முந்தானை முடிச்சு" படத்தை கே.பாக்யராஜ் இயக்கி வெளியிட்ட போது அது தனது கற்பகம் படத்தின் தழுவல் என்று அந்தக் காலத்தில் சாடியிருந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
அப்போது கே.பாக்யராஜ் அதை மறுத்தெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் காலம் எவ்வளவு தூரம் கணக்கைக் காட்டுகிறது. ஆனால் 2015 ஆம் ஆண்டு குமுதம் இதழில் கே.பாக்யராஜ் எழுதிய தொடரில் தனது முந்தானை முடிச்சு படம் உருவாக கற்பகம் படம் அடிப்படை என்று எழுதியிருந்தார். இது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இறப்பதற்குச் சில காலம் முன்பே நிகழ்ந்தது.
பெண்களை மையப்படுத்திய கதைகளை எடுத்த வகையில் அந்தக் காலத்து பாக்யராஜ் இவர்.
"கற்பகம்" படத்தில் இன்னொரு சுவாரஸ்யம், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இந்தப் படத்தில் வெறும் பெண் குரல் பாட்டுகள் மட்டுமே உண்டு. இதே போல தனி ஆண் குரல்களோடு பாடல்கள் அமைந்த வகையில் டி.ராஜேந்தரின் "ஒரு தலை ராகம்" , இளையராஜாவின் "இதயம்" ஆகியவை அமைந்திருந்தன.
இன்னொரு சுவாரஸ்யத் துணுக்கு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இசைஞானி இளையராஜா இசையில் இயக்கிய "பார்த்தால் பசு" (ராமராஜன் & பல்லவி நடித்தது) படத்திலும் சித்ரா மற்றும் சைலஜா பாடிய பெண் குரல் பாடல்கள் மட்டுமே உண்டு.
சித்தி, சாரதா, பணமா பாசமா உள்ளிட்ட வெற்றிச் சித்திரங்களை இயக்கியவர்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இறுதித் திரைப்படம் விஜய்காந்த், பானுப்பிரியா (இரட்டை வேடம்) நடிப்பில் "காவியத் தலைவன்" . பிரமாண்ட இயக்குநர் & தயாரிப்பாளர் ஆபாவாணனால் கதை, திரைக்கதை எழுதப்பட்டது.
நடிகர் தியாகராஜன், ஶ்ரீதேவி நடிப்பில்"தேவியின் திருவிளையாடல்" படத்தை எடுத்திருந்தார்.
தமிழ் சினிமாவில் இயக்குநரே பாடலாசிரியர் ஆக விளங்கிய பெருமையின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவராகவும் விளங்கியவர். பல்வேறு இசையமைப்பாளர்களுக்கு எழுதியிருக்கிறார்.
“உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே” https://www.youtube.com/watch?v=GhxXHrBIP3c என்ற புகழ்பூத்த பாடல் கூட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கைவண்ணம் தான். அவரின் குரு நாதர் ஶ்ரீதர் தயாரித்த “உத்தம புத்திரன்” படத்தில் ஜி.ராமநாதன் இசையில் எழுதியிருந்தார்.
பொதுவாக ஶ்ரீதர், கே.பாலசந்தர் போன்ற தமிழ் சினிமாவின் புதுமை யுகத்தின் தொடக்க இயக்குநர்கள் இளையராஜாவோடு இணைந்து கொடுத்த படங்கள் வெற்றியையும் தனி கவனிப்பையும் பெற்றன.
ஆனால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்க இளையராஜா இசையமைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா (200 வது படம்) நடித்த "படிக்காத பண்ணையார்", "யுக தர்மம்", "பார்த்தால் பசு" போன்றவை அதிகம் பேசாப் படங்கள்.
இளையராஜா இசையில் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நான்கு பாடல்களை எழுதிருக்கின்றார்.

யுகதர்மம் படத்தில்
மலேசியா வாசுதேவன் பாடிய “உன்னால் விளைந்ததடா’

எஸ்.ஜானகி பாடிய “என்னமோ பண்ணுதே”

மற்றும் "உருக்கு மனசு" என்ற பாடலும்,

இவற்றோடு படிக்காத பண்ணையார் படத்தில்
மலேசியா வாசுதேவன், எஸ்.சைலஜா பாடிய பாட்டு
“அட ஒண்ணும் தெரியாத பாப்பா”

ஆகியவையே அவையாகும்.

இன்று இயக்குநர் இமயம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களது 6 வது நினைவாண்டாகும்.
புகைப்படம் நன்றி : கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மகன் ரவி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். Ravi KS Gopalakrishnan
கானா பிரபா
14.11.2021

0 comments: