நிலை தளர்ந்து அப்படியே உடைந்து சரியும் நிலையை அப்படியே மனக்கண் முன்னே கொண்டு வர முடியுமானால் அந்த உணர்வைப் பிரதிபலிக்கக் கூடிய அரிய பாட்டு இது.
மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி & வாணி ஜெயராம் என்று மூன்று குரல்களின் சோகப் பிரதிபலிப்பு ஒரே அலைவரிசையில் இருக்கும்.
அதெப்படி மூன்றுமே ஒன்றாகி ஒரே உணர்வைக் கொடுக்கிறது என்ற ஆச்சரியம் மேலிடும்.
பாடல் வரிகளை மறந்து “சின்னப்பொண்ணு” “சின்னப்பொண்ணு” என்று அந்த மெட்டில் உட்காரும்படி பாடிப் பார்த்தால் கூடப் பொருந்திப் போகும் நெளிவு சுழிவு இருக்கும்.
விழுந்து கிடக்கும் பிரபுவை எழுப்ப எஸ்.ஜானகியின் ஆலாபனை காதலிக்குப் (பல்லவி) போய்ச் சேர, அதை முந்திக் கொண்டு கட்டிய மனைவி (ராசி) ஓடி வரும் போது தோதாக வாணி ஜெயராமின் ஆலாபனை வரும் பாருங்கள். இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்தக் காட்சியை ஒருமுறை பாருங்கள் இந்த இசைக்குக் காட்சி கொடுத்த மரியாதை புரியும்.
எத்தனையோ பிறப்பில் வாழ்ந்து கழித்து விட்டோம் இப்பிறப்பில் ஏனிந்தப் பிரிவினை என்று நொந்து கொள்ளும் காதலி,
கொண்டவன் வேதனையைக் கண்டு மருகும் மனைவி,
இருவருக்கும் நடுவில் மலேசியா வாசுதேவனின் தளர் நடையில் எழும் சோக ராகமாய் அமைந்திருக்கும்.
அதில் சுயபச்சாதாபம் இல்லாதிருக்கும்.
கங்கை அமரனின் பாடல் வரிகள் இந்தச் சூழலுக்கு நியாயம் செய்திருக்க, அண்ணனின் இசை மெல்லிய நீரோடை போலப் பின்னணியில் ஓடும். சிவாஜி புரடெக்ஸன்ஸ் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த முதல் படம் அறுவடை நாள் தொடர்ந்த ஆனந்த் ஆகிய இரு படங்களுக்கும் கங்கை அமரன் தான் முழுப் பாடல்களும்.
மலேசியா வாசுதேவனைக் கொண்டாடும் போது இம்மாதிரியான பாடல்களையும் தேடி எடுத்துச் சிலாகிக்க வேண்டும். அவர் உயிர்ப்புடன் இருப்பார்.
சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணு
கண்ணுக்குள்ள என்ன கண்ணு….
https://youtu.be/dNcsEuZQyqw?si=CHXRvg5iOaH7Tiw0
மலேசியா வாசுதேவன் நினைவில்
(20 பெப்ரவரி 2011)
கானா பிரபா
0 comments:
Post a Comment