“சொல்லாமலே” இயக்குநர் சசி பிறந்த நாள் செப்டெம்பர் 9 ஆம் திகதி அவர் நட்பு வட்டத்தில் இருப்பதால் வாழ்த்தி விட்டு, இரு தினம் கழித்தால், அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பாபியின் பிரிவுச் செய்தி எட்டியது.
சில வாரங்களுக்கு முன்னர் சங்கர் (கணேஷ்) புதல்வர் பாபி சங்கர் பேட்டியிலும் இசையமைப்பாளர் பாபி குறித்த பேச்சு வந்த போது தம் இசைக்குழுவில் வாத்தியக்காரராக இருந்தது குறித்துப் பேசியிருந்தார். பேட்டி எடுக்க வேண்டும் என்று நினைத்தவர்களில் இசையமைப்பாளர் பாபியும் ஒருவர், இப்படியான கை நழுவிய வாய்ப்புகளில் அவரும் ஒருவராகி விட்டார் இப்போது.
“சொல்லாதே சொல்லச் சொல்லாதே”
https://www.youtube.com/watch?v=FZjTCCXtvQA
பாடல் பாபியை நினைப்பூட்டிக் கொண்டே இருக்கும். அண்ணன் அறிவுமதி அவர்கள் எழுதிய பாட்டு அது.
அதை விட இரண்டு இனிய புதையல்கள் “சொல்லாமலே”யில் உண்டு.
அதில் ஒன்று “சிந்தாமணியே வா...”
https://www.youtube.com/watch?v=A0nx6vjOdys
சகோதரன் Senthooran A R Thiruchchenthooran வந்து ஞாபகப்படுத்தினார். பண்பலை வானொலி வளர்ப்பு அப்படி. இந்தப் பாடல் எல்லாம் இன்னும் அதிகம் கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டிய பாடல். அறிமுக இசையமைப்பாளர்களுக்கு எஸ்பிபி அந்நியமில்லாது பாடிய முதல் பாடல் என்ற பாட்டியல் போட்டால் இதுவும் முந்திக் கொண்டு வரும். உண்மையில் இந்தப் பாடலில் தான் இன்னும் அசாத்திய இசைத் திறனை பாபி காட்டியிருப்பார்.
ஈராயிரங்களில் பாடலாசிரியர் வாசனின் கூடப் பிறக்காத தம்பி முத்துக்குமார் எப்படி புதுப் புது இசையமைப்பாளர்களுக்கும் முத்து முத்தாய்க் கொடுத்தாரோ அது போலத்தான் வாசன் தான் வாழ்ந்த கொஞ்சக் காலத்திலும் நிறைவாகச் செய்து விட்டுப் போயிருக்கிறார்.
“சிந்தாமணியே வா” பாடல் அவரின் கை வண்ணம் தான்.
மறைந்த கலைஞரை அவர்தம் படைப்புகளால் நினைப்பூட்டிக் கொண்டாடுவது எப்பேர்ப்பட்ட வரம்?
அப்படித்தான் வாசனின் சகோதரியும் பாடலாசிரியர் வாசன் இசையமைப்பாளர் பாபியை நினைவுபடுத்தி அஞ்சலிக்கும் போது தன் அண்ணன் இந்தப் படத்துக்காக எழுதிய மூன்று பாடல்களோடு வந்தார்.
அதில் ஒன்று “சொல்லுச் சொல்லு”
https://www.youtube.com/watch?v=HDAg_-VYG6E
“சொல்லாமலே” படத்தின் கதையின் அடிநாதமாக இந்தப் பாட்டு அழகாய் அமைந்திருக்கும்.
அப்படியே பாபி இசையில் மலர்ந்த “நேசம் புதுசு”
https://www.youtube.com/watch?v=u14VVmdwKk0
பாடல்களையும் கேட்டுப் பாருங்கள், குறையொன்றும் இல்லாத இசை மகத்துவம்.
மேலும் "மார்கழி 16", "கன்னக்கோல்" ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
ஆனாலும் என்ன ஒரு படைப்பின் வெற்றி தானே ஆக்ககர்த்தாவை நிலைத்திருக்க வைத்திருக்கிறது.
0 comments:
Post a Comment