Pages

Tuesday, September 24, 2024

சாருகேசி 🩷



வரச் சொல்லடி

அவனை வரச்சொல்லடி

அந்திமாலை தன்னில்

அவனை வரச்சொல்லடி…..


https://youtu.be/eUGCBkaJ6c0?si=mGScynl8Njj0vym3


சாருகேசி ராகத்தில் இவ்விதமாகத் தூது விட்டார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அந்தப் பாடலின் முழு நீள முகப்பு இசை இலங்கை வானொலிக் காலத்து நிகழ்ச்சிகள் ஏதோவொன்றில் முகப்பு இசையாகக் கூடப் பயப்படுத்தக் கூடிய தார்ப்பரியம் நிறைந்தது.

இசையரசி சுசீலாம்மா ஒரு பெரும் சாஸ்திரிய இசைக் கச்சேரியை நடத்தி ஓய்ந்த தொனி இருக்கும் பாடல் முடியும் போது.

கவியரசு கண்ணதாசன் பாடல்களில் இன்னும் கொண்டாட வேண்டியது.


இந்தப் பாடல் இடம்பெற்ற “பாதுகாப்பு” வெளிவந்தது 1972 இல், அப்படியே 20 வருடங்கள் கழித்து 1992 “சாருகேசி”

80s kid குமரியாகி, நவீனப்படுத்தப்பட்ட இசையோடு பாடுகிறாள் இப்படி


“தூது செல்வதாரடி

 உருகிடும் போது

செய்வதென்னடி…..


https://youtu.be/SkPunUuLtNU?si=zqGmdoXS5p_jஜ்6ஊ


வெறும் அரைப் பாட்டு அந்த 2.30 நிமிடங்களில் ஒரு முழு நீளப் பாடலுக்கான தார்ப்பரியத்தை இசைஞானி கொடுக்க, ஜானகியம்மா அந்த குறுகிய ஓவர் துடுப்பாட்டத்திலும் சிக்சர் அடித்து விடுவார்.


நிலை பாரடி கண்ணம்மா 

பதில் கூறடி பொன்னம்மா 

என்

காதல் வேலன் 

உடன் வர

தூது செல்வதாரடி….


பாடலாசிரியர் பொன்னடியான் எழுத்துகளில் பொன்னாய் ஜொலிக்கும் வரிகள். இந்தத் தோழிமார் பாட்டு எழுதியவர் தானே இதற்கு முந்திய ஆ “குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே” என்ற சாகாவரம் பெற்ற பாடலையும் யாத்தவர்.


“அம்மம்மா கேளடி தோழி

  சொன்னானே ஆயிரம் சேதி”

சாருகேசியில் மெல்லிசை மன்னர் இசை கொடுத்ததையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம். இங்கே அவர் பகிர்வைக் கேளுங்கள்


https://youtu.be/r5V5mne7kwU?si=DQL9Bd7NyeuhRtmQ


இப்படியாக இந்த இரண்டு பாடல்களையும் எனக்கு நினைப்பு மூட்டியது இன்னொரு பாட்டு.

அதன் சரணத்தைச் சொல்கிறேன்

வாசிக்கும் போதே அப்படியே பல்லவி வந்து உங்கள் வாயில் கதவைத் தட்டிப் பாட வைக்கும்


தாழம்பூ கைகளுக்கு

தங்கத்தில் செயத காப்பு

வாழைப்பூ கைகளுக்கு

வைரத்தில் செய்த காப்பு


உன் அண்ணன் போட வேண்டும்

ஊரெல்லாம் காண வேண்டும்

கல்யாண நாளில் இங்கே

கச்சேரி வைக்கவேண்டும்


“மண மாலையும் மஞ்சளும் சூடி”


https://youtu.be/iEI_ns-BWIE?si=க்ஷ்ள்த்ஹு92ம்78க்ஷு


இந்தப் பாடலைக் கேட்கும் போது கூடப் பிறக்காத தங்கைக்காக கண்கள் கொட்டும் இன்பப் பரவசத்தில் அப்படியொரு உணர்ச்சி ஊட்டம் இது.


எண்பதுகளின் கல்யாண வீடியோ கேசட்டுகளின் சிறப்பு விருந்தினராக எத்தனை பேர் அலமாரிகளில் இந்தப் பாடல் குந்தியிருக்கிறது என்று விசாரித்துப் பாருங்கள்.


சாருகேசியை சுசீலாம்மாவும், ஜானகிம்மாவும் தலை மேல் சுமக்க, பாட்டுத்தலைவன் எஸ்.பி.பி தன் இதயத்தில் சுமந்து மீட்டுவார்.

ஒரு சில பாடல்களத் தான் அவற்றைக் கேட்கும் போதே சொந்தம் கொண்டாடி ஆனந்தக் கண்ணீர் கொட்ட வைக்கும். அதில் முதல் வரிசையில் இருக்கும் இது.


“குங்குமத்துச் சிமிழே வா…

  சங்கம் தந்த தமிழே வா…”


என்று இந்த நூற்றாண்டின் சங்கப் புலவர் புலமைப்பித்தன் தன் முத்திரையைக் காண்பித்திருப்பார்.


“பிறை போல் நுதலில்” 

நெற்றிக்குச் சம வார்த்தை நுதல் என்று போகிற போக்கில் தமிழ்ப் பாடம் வேறு.


கொடியில் அரும்பி

மடியில் மலர்ந்த

மலரே நீ வாழ்கவே.


சாருகேசி !

நீயும் வாழ்கவே ❤️


கானா பிரபா

24.09.2024

0 comments: