என் அபிமான காமிக்ஸ் நாயகன் லக்கி லூக் தம்னுடைய ஆஸ்தான குதிரை வாகனத்தில் பயணிக்கும் போது சொல்லும் வாசகம் சின்ன வயசில் இருந்து சேர்ந்து கொண்ட ஆத்மார்த்தங்களில் ஒன்று.
ஒவ்வொரு மனிதனும் இரண்டு உலகில் வாழ்கிறான்.
அவனது உள் மன யாத்திரைக்கானது.
கடந்து போன நினைவுகளையும், கழிந்து போன பொழுதுகளையும் அந்த உலகில் உயிர்ப்பித்து வாழும் இன்னொரு உலகு அது.
நம் வாழ்வில் முதல் இருபது வருஷங்களாவது கொடுக்கும் வாழ்வியல் தான் எஞ்சிய காலத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது.
அசட்டுத் தனங்கள், சின்னச் சின்னத் தோல்விகள், சின்னச் சின்னச் சின்னச் சந்தோஷங்கள், பெரிய பெரிய கனவுகள் என்று அந்த ஆரம்பங்களைப் பின்னாளில் தனியே இந்த உலகில் மீள அழைத்துக் கதை பேசும் இரண்டாம் உலகம்.
நம்முடைய வாழ்வுக்கு நெருக்கமான படைப்பில், குறித்த படைப்பாளியின் உண்மைக்கு நெருக்கமான சங்கதிகளை அவர் சந்தித்ததாலேயே நமக்கும் அது இன்னும் நெருக்கமாகின்றது.
ஒளிப்பதிவுத்துறை மாணவனாகத் திரைப்படக் கல்லூரியில் பயின்ற போது தனக்கு காட்டுயிர் ஒளிப்படக்கலையில் (wildlife photography ) தான் நாட்டம் என்று சொல்லவும் அல்போன்ஸ் ராய்
என்ற உலகப் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞரிடம் உதவியாளராகச் சேர்கிறார் 96 பட இயக்குநர் சி.பிரேம்குமார். தன் வாழ்வின் ஆகச் சிறந்த பொக்கிஷத் தருணமாகத் தன் குருவிடம் கற்றுக் கொண்டதை சமீபத்தில் சாய் வித் சித்ராவில் குறிப்பிடுகிறார். அதுவே “கரை வந்த பிறகே” பாடலின் பயணமாக, இன்னும் ஆழமாக நேசிக்க வைத்து விடுகிறது.
ஒரு மனிதனின் உள் மன யாத்திரையை அச்சொட்டாகத் திரையிசையாகக் காட்டியதில் இரண்டைக் குறிப்பிடுவேன்.
ஒன்று
இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியைத் தேட
https://www.youtube.com/watch?v=psi5C9WM3i0
இன்னொன்று இந்த
கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை
https://youtu.be/psi5C9WM3i0?si=7ச்5ழ்2இளூ28ய்83ந்
இந்த இரண்டில் ஒன்றைத் தட்டி எழுப்பி விட்டால் முன் சொன்னது போல அந்த இரண்டாம் உலகின் திறவுகோலாகி விடும்.
வாழ் நாளுக்குமான இரண்டு பாடல்களாக மனது எழுதிக் கையொப்பம் இட்டு விடும்.
நானே இல்லாத ஆழத்தில்
நான் வாழ்கிறேன்……
நம்முடைய செயற்பாட்டை விட மனதின் இயக்கம் ஆழமானது.
இந்தப் பாடலின் ஆகப் பெரும் பலம் கார்த்திக் நேகா எக்ஸ் ரே வரிகளின் ஆழத்தை அப்படியே அனுபவித்து நமக்குக் கொடுக்கும்
பாட்டுக்காரர் பிரதீப்குமார்.
ஒப்பனை போல் பூசாத சங்கதிகளில் மின்னும் யதார்த்தம்,
நிகழ் உலகின் அற்புதங்களில் ஒருவர் பிரதீப் குமார்.
திமிலேறிக் காளை மேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
தான் காண்கின்ற இயற்கையை வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து இறுமாப்பூதும் கவிஞன் கார்த்திக் நேகா.
தனிமையும், அதைச் சூழ இருக்கும் இயற்கையும் விலை மதிப்பில்லாத நண்பர்கள்.
நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறக்கிறேன்…
நரை வந்த பிறகே...
புரியுது உலகை...❤️
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டேன்
என்ற கணக்கில்லை,
ஆனால் நேற்று(ம்) கேட்ட போது(ம்)
கண்கள் பூமாரி சொரிந்தது.
வாழா என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்
❤️
கானா பிரபா
0 comments:
Post a Comment