Pages

Tuesday, August 9, 2016

திரையுலக ஆளுமை பஞ்சு அருணாசலம் அவர்கள் நினைவில்

நான் எடுத்த காரியம் எல்லாத்துலையும் வெற்றி அடைஞ்சேனா என்றால் இல்லை ஆனால் என்னால் மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் இல்லை - பஞ்சு அருணாசலம்

மதிப்புக்குரிய பஞ்சு அருணாசலம் அவர்கள் சில மணி நேரம் முன்னர் இறந்ததை அறிந்து பேரதிர்ச்சி கொண்டேன்.  தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, கதை, வசனகர்த்தாவாக, இயக்கு நராக விளங்கிய இவர் மனித உருக் கொண்ட சினிமாத் தொழிற்சாலை. கண்ணதாசனின் உதவியாளராக இருந்து சிறு முதலீட்டுப் படங்களில் ஆரம்பித்து பெரும் பட்ஜெட் படங்களை எடுத்துத் தள்ளிவர். இசைஞானி இளையராஜாவுக்கு அறிமுகம் கொடுத்தவர் கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு மாபெரும் வர்த்தகச் சந்தையைக் காட்டியவர்.
 பஞ்சு அருணாசலம் அவர்களை என் ஊடக வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்துப் பேச வேண்டும் என்ற கனவோடு இருந்த எனக்குக் கடந்த மூன்று மாதங்களாக பேஸ்புக் வழியான நட்புப் பாலம் கிட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த உறவுப் பாலத்தை ஏற்படுத்தியது இந்தப் பதிவு

பூப்போல பூப்போல பிறக்கும் பால் பால் போல சிரிக்கும் 👼🏻 பஞ்சு அருணாசலம் தொடர் 

ஆனந்த விகடனில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் முகம் கொண்ட பஞ்சு அருணாசலம் அவர்கள் தன் திரையனுபவங்களைத் திரட்டி அட்டகாசமான தொடர் எழுதி வருகிறார்.

திரையுலகில் சாதனை படைத்த இம்மாதிரியான மூத்தோர்களின் அனுபவங்களைப் படிப்பதே சிறப்பு. இந்தப் பணியைப் பத்திரிகைகள் அவ்வப்போது செய்து வந்தாலும் பலரை அவர்கள் இந்த முயற்சியில் இறக்கவில்லை. அதனால் வானொலிப் பேட்டி வழியாக "ஆபாவாணன்" உள்ளிட்டவர்களின் நீண்ட தொடர் பேட்டிகளை எடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறேன்.
பத்திரிகைத் தொடரில் குறித்த ஆளுமை பரவலான வெகுஜன வட்டத்துக்கு எழுதும் போது சுவாரஸ்யம் மிக்கதாக அமைய வேண்டும். முன்னர் சினிமா எக்ஸ்பிரஸில் இயக்குநர் விக்ரமன் எழுதி வந்த "நான் பேச நினைப்பதெல்லாம்" அவ்வகையினதே.
ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் கே.பாக்யராஜ் குமுதத்தில் தன் அனுபவத் தொடர் எழுத வந்தபோது ஆவலாக இருந்த எனக்குப் பெரும் ஏமாற்றம். வழவ்வழ கொழ கொழ வென்று இழுத்துத் தள்ளிவிட்டார். அந்தத் தொடரும் மேற்கொண்டு நகராமல் சிகப்பு ரோஜாக்களோடு பொத்தொன்று நின்று விட்டது.
குங்குமத்தில் இயக்குநர் மனோ பாலாவின் அனுபவத் தொடரும் ரசிக்க வைத்துச் சலிக்க வைத்தது பின்னர்.
இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் எழுதிய "நெஞ்சம் நிறைந்த நினைவுகள்" நூலை இந்த ஆண்டு புத்தகக் கொள்வனவுப் பட்டியலில் சேர்த்திருக்கிறேன்.

அந்த வகையில் பஞ்சு அருணாசலம் எழுதும் தொடர் வெகு நேர்த்தியும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அதற்குத் தொகுப்பாசிரியரும் காரணமாக இருக்கலாம்.

இதன் வழியாகவே "நானும் ஒரு பெண்" என்ற திரைப்படத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா பாடும் "பூப்போல பூப்போல பிறக்கும்" பாடலை எழுதியது பஞ்சு அருணாசலம் என்று தெரிய வந்தது.
கடந்த வாரம் இந்தப் பாடலின் ஒரு சில வரிகளை ஒலிபரப்பி மேற்கொண்டு தொடர முடியாமல் நேயர் அழைப்பு வந்ததால் முழுமையாக நான் இதைக் கொடுக்கவில்லை. அதற்கு நேயர்களின் செல்லக் கோபத்துக்கு ஆளானேன்.
இசை மேதை சுதர்சனம் அவர்களின் நட்சத்திரப் பாடல் இது.
"நானும் ஒரு பெண்" படத்தை லைக்கா கைங்கரியத்தில் வார இறுதியில் கொஞ்ச நேரம் பார்த்தேன். ஏவிஎம் நிறுவனம் இன்னொரு உப நிறுவனமான "முருகன் பிக்சர்ஸ்" வழியாகத் திரையிலும், நிஜத்திலும் ஜோடி கட்டிய எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோரோடு எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, ஏவிஎம் ராஜன் நடித்தது. இதில் நடித்து நிஜத்திலும் ஜோடியான இன்னொரு ஜோடி ஏவிஎம் ராஜன், புஷ்பலதா.

படத்தின் எழுத்தோட்டத்தில் வரும் பின்னணி இசையில் பின்னி எடுத்து விட்டார் ஆர்.சுதர்சனம். அதை அனுபவிக்க

இந்தப் படத்தின் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் பாடல் பிறந்த கதையையும் சொல்கிறார்.

பூப்போல பூப்போல பிறக்கும் பாடலை ரசிக்க

தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், கதை வசனகர்த்தா பஞ்சு அருணாசலம் குறித்து நான்கு வருடங்களாக நான் ட்விட்டரில் பகிர்ந்ததில் தேர்ந்தெடுத்தவை இவை : 


ராஜாவை நான் அறிமுகப்படுத்தியது தெய்வ சங்கல்பம், தன்னை உயர்த்திக்கொண்டது தொழில் பக்தியும் கடின உழைப்பும் - பஞ்சு அருணாசலம்
#மனதோடு மனோ

ராஜாவை இசையமைப்பாளராக ஆக்க முன்னரேயே 600 படங்களில் பல்வேறு பணிகளில் பணியாற்றியிருக்கிறார் பஞ்சு அருணாசலம் #நிறைகுடம்

தன் சபா மேடையில் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாடலை பாலமுரளிகிருஷ்ணா பாடுவதே அதன் பெருமை கூறும் - பஞ்சு அருணாசலம்

விஜய் பாஸ்கர் நல்லவர் ஆனால் வேறு சில இசையமைப்பாளர்கள் ராஜாவை என் தயாரிப்பில் போடவேண்டாம் அதிஷ்டமில்லாதவர் என்றார்கள் - பஞ்சு அருணாசலம்

அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலுக்கு ராஜா கொடுத்த ஆர்க்கஸ்ட்ரேஷன் பிரமாண்டமானது அதைப்பலர் பின்னாளில் பயன்படுத்தினார்கள் - பஞ்சு அருணாசலம்

ராஜாவை சந்தித்தநாளில் போட்ட மெட்டுக்களில்ஒன்று "வாங்கோண்ணா" இன்னொன்று க்ளாசிக்கல் அதை பாலாஜி பின்னாளில்பயன்படுத்தினார் - பஞ்சு அருணாசலம்

ஆரம்பகால இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்களுக்குப் பஞ்சு அருணாசலம் வரிகள் தான் நல்ல பொருத்தம்  #அழகு தமிழ்

பஞ்சு அருணாசலம், நீங்களும் கடவுளாக இருந்துவிட்டுப் போங்கள் => தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ? அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்

பஞ்சு அருணாசலம் குறித்த ஆவணப்படம் 
காலத்தினால் செய்த நன்றி, வாழ்க
@Dhananjayang

பஞ்சு அருணாசலம் விகடனில் எழுதிய தொடர் ஒரு பொக்கிஷம் இன்னும் பல வாரங்கள் கடக்க வேண்டிய அவரின் பொருள் பொதிந்த அனுபவங்களும் தொலைந்தது :-((

புகைப்படம் நன்றி : தமிழ் இந்து

1 comments:

maithriim said...

அவர் மறைந்த உடனே உள்ளார்ந்த ஆஞ்சலி. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.தோன்றும் போது புகழோடு தோன்றாவிடினும் மறையும் பொழுது புகழுடன் மறைந்திருக்கிறார்.

amas32