Pages

Wednesday, August 10, 2022

ஒரு மாலைச்சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே ❤️


கடந்த இரண்டு நாட்களாக இலக்கியாவைப் பள்ளிக்கூடத்தில் விடும் போதும், மீண்டும் அழைத்து வரும் போதும் இந்தப் பாடலையே தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.


அந்தத் தாள லய ஓசை நயம் என் காதுகளை விட்டு நகராமல் அப்படியே இருக்கிறது.


“பால் நெலவு சூரியன்போல் 

சுட்டதென்ன நியாயம்

பச்சக்கிளி தோளக் கொத்தி 

வந்ததிந்த காயம்

ஓடிவந்த வைகை நதி 

காஞ்சதென்ன மாயம்

கூட வழி இல்லையென்றே 

ஆனது பெண் பாவம்“


https://www.youtube.com/watch?v=eATA-QcfSOw


பாடலாசிரியர் காமராசனுக்குக் கிடைத்த பொக்கிஷப் பாட்டு.

அந்தப் பாட்டில் அழகானதொரு தொகையறாவும் முத்தாய்ப்பாய் இருக்கும்.


மின்மினி குரலைப் பிரதிபண்ணவே முடியாத ஒரு நுணுக்கம் இருக்கும். 

டி…யில் தொடங்கி

ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆ..ஆ..

அந்த “ஆஆஆ” எனும் போது அது அவரின் முத்திரையாக மிளிரும். கேட்கும் போதெல்லாம் மிண்ட் சுவை. இதற்காக அவர் குரல் ஒன்றும் அதிக பிரயாசைப்படாது, மின்மினியின் இயல்பான குரல் அது.


பாட்டு முழுக்க உணர்ச்சிப் பிரவாகத்தில் எஸ்பிபி தனித்துப் பன்முக ஏற்ற இறக்கங்களை அப்படியே நம்முள் கடத்தி விடுவார்.


வெண்ணிலவில் தேடுகிறேன் 

கன்னி முகம் காணோம்

புன்னகையும் நான் இழந்தேன் 

என் மனதில் சோகம்

சித்திரத்தை பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்

தென் மலையை போல் இருந்தேன் தென்னிலங்கை ஆனேன்


செல்லக் குயில் கூவ 

மெல்ல வரும் மேகம்

சொல்லில் வரும் சோகம் 

கங்கை நதி ஆகும்

எங்கிருந்த போதிலும் 

நீ வந்து விடு தேவி


மாலைச் சந்திரன் மலரைத் தேடுது

மலையடிவாரத்திலே


எஸ்.பி.பாலசுப்ரமணியம் சோக ராகம், மின்மினி குதூகலக் குரல் என்ற முரணோடு பயணிக்கும். இந்த மாதிரி இரண்டு விதமான மனோ நிலையை எப்படி ஒரு பாட்டுக்குள் அடக்க முடியும், அதை எப்படி உறுத்தாமல் ரசிகன் மனதில் பதியம் வைக்க முடியும் என்பதெல்லாம் எல்லாம் தெரிந்த வித்தைக்காரர் இசைஞானிக்கே கண்கூடு.


“வானில் விடிவெள்ளி" (ஆனஸ்ட் ராஜ்), “தாயறியாத தாமரையே” (அரங்கேற்ற வேளை) இந்த மாதிரிக் கலவை உணர்வை ஒரே பாட்டில் கடத்தும் வித்தைக்கார ராஜா.


2000 நாட்களுக்குப் பின் இசைச்சக்கரவர்த்தி இளையராஜாவுடன் கோவைத்தம்பி

ஒரு ராகம் தராத வீணை

நல்ல காதல் சொல்லாத பெண்மை

இந்த மண்ணில் ஏனடி

பதில் கூறு கண்மணி

அழகான கைகள் மீண்டும் வேளை

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் திரைப்படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பாடல் வரிகளை பிறைசூடன் எழுத, கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். 

எண்பதுகளில் கோவைத்தம்பி தன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவோடு இணைந்து பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட  பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பின்னர் இடையில் லஷ்மிகாந்த் பியாரிலால் கூட்டணியோடு "மங்கை ஒரு கங்கை" போன்ற படங்களை எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்டார்.

கோவைத்தம்பியின் அடுத்த சுற்றில் அவரின் தயாரிப்பில் "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்" படம் வெளியானது.


2000 நாட்களுக்குப் பின் இசைச்சக்கரவர்த்தி இளையராஜா இசையில் என்ற அறிவிப்போடு தான் இந்தப் படம் ஆரம்பிக்கும்.


நடிகர் பார்த்திபன் அப்போது வெளியார் இயக்கத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த சமயம் இந்தப் படமும் இயக்குநர் ஶ்ரீதேவ் இயக்கத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் வரும் "இப்போதும் நிப்போம்" பாடல் மூலமாகத்தான் நடன இயக்குநராக பிரபுதேவா அறிமுகமானர். படத்தின் எழுத்தோட்டத்திலும் அது வரும்.

இங்கே தரும் பாடலை எழுதிய பிறைசூடன் மற்றும் ஏனைய பாடல்களை வாலி, மு.மேத்தா, நா.காமராசன், முத்துலிங்கம், கங்கை அமரன் என்று ஏறக்குறைய அன்றைய எல்லாப் பாடலாசிரியர்களை இணைத்த படம் இது. இப்படியே ராஜாவின் எல்லாப் படப் பாடல்களும் ஒரு கூட்டுக் கலவையாக வந்திருக்கலாம் என்றெண்ணுவதுண்டு.


"ஒரு ராகம் தராத வீணை

நல்ல காதல் சொல்லாத பெண்மை

இந்த மண்ணில் ஏனடி

பதில் கூறு கண்மணி

அழகான கைகள் மீண்டும் வேளை"


https://www.youtube.com/watch?v=PJ7TLouNLUM


காலைவேளைக்குப் பூச்சுட்டிப் பொட்டும் வைக்கும்  பாட்டு

https://twitter.com/kanapraba/status/229370508544733184

என்று பத்து வருடங்களுக்கு முன் ட்விட்டியிருக்கிறேன் 🙂


பாடலின் ஆரம்ப வரிகளில் "வீணை" என்ற பதத்தைச் சேர்த்திருப்பார் பிறைசூடன், பாடலுக்கு அணி செய்வதுமே இந்த வீணை என்ற வார்த்தையை முன்னுறுத்திய வரிகள் தான். மெட்டமைத்து வரிகளை வாங்கும் போது கண்டிப்பாக வீணை வாசிப்பு இருந்திருக்காது. 


ஆனால் பாடலின் இன்ன பிற வாத்தியங்களின் சிறப்பான வாசிப்போடு இந்த வீணை வாத்தியம் பாடலில் நளினமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ராகம் வந்தாடும் வீணை" என்று பாடும் சமயமும் "நல்ல காதல் கொண்டாடும் பெண்மை" என்னும் போதும் சுண்டி இசைக்கிறது வீணை. அப்படியே முதல் சரணத்திலும் காவிக் கொண்டு ஏனைய வாத்திய இசைக்கருவிளை இணைக்கின்றது.


“ஓஹோஹோ காலைக்குயில்களே” 

https://www.youtube.com/watch?v=4VQ7qzKEzxI


அப்படியே தண்ணி வாளியை இறைத்தாற் போலக் கூட்டுக்குரல்களோடு எஸ்.ஜானகியம்மாவின் பரவசக் குரல் வந்து மனதை நிறைக்கும்.


“எல்லாப் பாடல்களும் இந்தப் படத்தில் அருமையாக  இருந்தும் இந்தப் படம் ஏன் ஓடவில்லை என்று மனம் வெறுத்து நான் சினிமாவை விட்டு ஒதுங்க இதுவும் காரணமாயிற்று" என்று அண்மையில் சாய் வித் சித்ராவில் கோவைத்தம்பி பேசினார்.


ஈழத்தில் போர்ச் சூழலில் சைக்கிள் டைனமோ சுத்திப் பாட்டுக் கேட்ட காலத்தில் என்னை வந்து சேர்ந்த பாடல்கள் இவையும் கூட.


கானா பிரபா

10.08.2022

0 comments: