Pages

Friday, August 19, 2022

ஏன் பெண் என்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ❤️

அப்பொழுது பரபரப்பாகப் படங்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்த ஆர்.பி.செளத்ரி அவர்களின் அலுவலகக் கதவைத் தட்டுகின்றார் 22 வயதே நிரம்பிய இளைஞர்.

“சார் ! நான் நன்றாக இசையமைப்பேன் எனக்கு ஒரு வாய்ப்புத் தர்ரீங்களா?

என்று அந்த இளைஞன் கேட்கவும்,

“இதோ பாருப்பா நான் இப்போ நாலு படம் பண்ணிட்டிருக்கேன்

எனக்குத் திருப்தியான இசையை நீ கொடுத்தாய் என்றால் உனக்கு வாய்ப்புத் தர்ரேன்" 

என்று சொல்லி இரண்டு நாள் அவர் அலுவலகத்தை ஒதுக்கிக் கொடுக்கிறார்.

அந்த இளைஞன் ஏற்கனவே சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் வழியாக வந்த எல்லாப் படங்களின் பாடல்களையும் ஒருமுறை மனதில் ஓட்டி விட்டு அவற்றில் இருந்து விலகிப் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தன் சிந்தனையைத் தட்டி விடுகின்றான்.

மெட்டுக்கள் பிறக்கின்றன.

ஆர்.பி.செளத்ரியிடம் தான் பிரசவித்த மெட்டுகள் ஒவ்வொன்றையும் ஆசையாகப் பகிர்கின்றார்.

செளத்ரி முகத்தில் சந்தோஷம், இதோ இசையமைப்பாளராக வாய்ப்பு அந்த இளைஞனிடம் போய்ச் சேருகின்றது.

அந்த இளைஞனின் பெயரிலேயே படத்தின் பெயரும் ஒட்டிக் கொள்கிறது. காரணம் தொண்ணூறுகளில் ஒரு மெளனப் புரட்சியை இளைஞர் மனதில் விதைத்த “லவ் டுடே” ஆச்சே.

ஆம் அந்த இளைஞன் தான் “லவ் டுடே” சிவா.

ஆர்.பி.செளத்ரி ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் மட்டுமல்ல. ஆகச் சிறந்த திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் சமர்த்தர். அதனால் தான் நமக்கு செளந்தர்யன் போன்றோரும் “சேரன் பாண்டியன்” வழியாகக் கிட்டினார்கள்.

“கன்னத்துல வை” கொஞ்சம் இடைவெளி விட்டு

“ஆ வைரமணி மின்ன மின்ன” இந்த ஐடியாவைக் கொடுத்ததே செளத்ரி சார் தான் என்று இசையமைப்பாளர் சிற்பி சொல்லியிருக்கிறார்.

நடிகர் விஜய் பேரதிஷ்டசாலி. தான் நாயகனாக நடித்த “நாளைய தீர்ப்பு” படத்தில் இசையமைத்த மணிமேகலை என்ற சிறுமி தொட்டு இந்த 22 வயது லவ்டுடே சிவா உள்ளடங்கலாக அவரின் படங்களின் பாடல்கள் எல்லாமே இசையமைப்பாளர் பேதம் பார்க்காத இன்சுவைப் பாடல்கள் விஜய்க்குக் கிட்டிய வரம். அவரை இன்னும் பரவலாகக் கொண்டு போய்ச் சேர்த்ததில் பாடல்களுக்கும் பங்குண்டு.

“லவ் டுடே” சிவாவும், தன் முதற்பட இயக்குநர் பாலசேகரனுமாக இணைந்து தொடர்ந்து நான்கு படங்களில் இயங்கியிருக்கிறார்கள்.

“சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்”

பாட்டு எல்லாம் இந்த இருவர் கூட்டணியில் விளைந்த நல் முத்துகள்.

“ஒருவர் மீது இருவர் சாய்ந்து” படம் வழியாக இருவரும் மீண்டும் சேர்ந்த போது “லவ்டுடே” சிவா தன் பெயரை ஹரிஹரன் என்று மாற்றிக் கொண்டார். ஆனால் சிவா தான் அதிஷ்டம் நிரம்பிய பெயர் போல.....

லவ் டுடே பாடல்களில் உச்சமாக அமைந்த இன்னொன்று எஸ்பிபி கொட்டமடிக்கும் காதல் பாட்டு “என்ன அழகு எத்தனை அழகு” எவ்வளவு உச்ச சக்தியைத்  தன் குரல் வழியே பிரதிபலித்து உடன் மனுஷர் இந்தப் புது இசையமைப்பாளரை அடையாளப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.

பெங்காலி மண் பெற்றெடுத்து தமிழ்ச் சூழல் சுவீகரித்துக் கொண்ட 90களின் பக்கத்து வீட்டுப் பெண் சுவலட்சுமி புராணத்தைத் தனியே கவனிப்போம். 😀

லவ் டுடே பாடல்களில் “ஏன் பெண்ணென்று”, “என்ன அழகு” வைரமுத்து வரிகளிலும், மறைந்த பாடலாசிரியர் வாசன், செல்வன் இவர்களோடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அண்ணன் மகன் பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம் (மோனிகா மோனிகா) கூடப் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். 

“லவ் டுடே” சிவா எவ்வளவு அசாத்தியத் திறன் மிகு இசையமைப்பாளர் என்பதற்கு “இரு” சோறு பதமாக ஒரே பாடல் இரண்டு வடிவில் அமைந்த 

“ஏன் பெண்ணென்று பிறந்தாய்” பாடலே போதுமாயிருக்கும்

“ஏன் பெண்ணென்று பிறந்தாய்” உன்னிகிருஷ்ணன் தனித்த வடிவத்திலும்

https://www.youtube.com/watch?v=_qhpzZCXX-I

“ஏன் பெண்ணென்று பிறந்தாய்” அஸ்லாமோடு 

https://www.youtube.com/watch?v=V3Q392-mMgA

அற்புதம் நிறைந்தது.

ஒரு இந்துஸ்தானி இசைக் கச்சேரியைக் கேட்டு முடித்துப் பலமணி நேரம் கடந்த பின்னும் காதை விட்டு அகலாத ஓசை நயம் கொண்டது இந்தப் பாட்டு.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானோடு கஸல் மேடைகளில் பந்தி வைக்கும் அஸ்லாமை இந்தப் பாடலில் இவ்வளவு அழகுறப் பொருத்த வேண்டும் என்ற எண்ணத்தைச் செயற்படுத்திய இசையமைப்பாளரை என்னவென்று சொல்லிப் பாராட்ட?

ஒரு குறித்த காட்சியோடு இழைந்த பாடலை யூடியூபில் அதிகம் காணக் கிடைப்பதில்லை. நமக்கும் அந்தக் காட்சியை ஞாபகப்படுத்தி ஒட்டிப் பார்க்க நினைவில் இராது.

அப்படியொரு பாட்டு இந்தப் பாட்டு, "ஏன் பெண்ணென்று பிறந்தாய்" பாடலை இந்தப் படம் வந்த போது கூட இவ்வளவு தூரம் பார்த்திருப்போமா என்றெண்ணத் தோன்றியது காணொளியில் பார்த்த போது

https://www.youtube.com/watch?v=oUyGLyJU-EY

நிமிர்ந்தெழுந்த கோபுரத்தோடு விரியும் காட்சியமைப்பில் பாசத் தந்தை தன் மகனுக்கு எடைக்கு எடை நேர்த்தி வைக்கிறார். அந்த நேரம் தராசில் நிறுக்கப்பட்டிருக்கும் அவன் உயரப் போக எதிர்ப்படுகிறாள் பிரியத்துக்குரியவள்.

அவள் உதிர்க்கும் சிரிப்பில் உறைந்து போனவனை அசைக்கிறது மணிச் சத்தம்.அப்படியே அவன் கனவுலகத்தை அசைத்துப் போடுகிறது புல்லாங்குழல் ஒலி மனதின் பிரவாகமாக, அவளின் உதிர்ந்த பூ இதழொன்று வந்து உட்காருகிறது மறு தட்டில், இறக்கம் காண்கிறான் அந்த ஒற்றைப் பூ இதழால்

பாடல் தொடங்குகின்றது,

“ஏன் பெண்ணென்று பிறந்தாய்

ஏன் என் கண்ணில் விழுந்தாய்

ஏன் ஒரு பாதி சிரித்தாய்

என் உயிர்ப் பூவை எரித்தாய்”

அற்புதமானவொரு பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகருக்குக் கிட்டும் உச்ச பட்ச அங்கீகாரமே இயக்குநர் அதைப் பொருத்தமான காட்சிப்படுத்தலாக்குவது.

அந்த வகையில் காட்சியமைப்போடு பயணிக்கும் பாடல் ஒரு அழகிய கவிதை.

“லவ் டுடே” இசையமைப்பாளர் சிவா, இயக்குநர் பாலசேகர் இருவரும் அது நாள் வரை தேனீயாகச் சேகரித்த கற்பனையை ஊற்றெடுத்துப் பரவ விட்டது போல.

லவ் டுடே

இளையதளபதி விஜய் என்ற நடிகனின் ஆரம்ப காலத் திருப்புமுனைகளில் ஒன்றாக மட்டுமல்ல, 

அப்பா ரகுவரன் மகன் விஜய் பாசப் பிணைப்பின் பரிமாணத்தைக் காட்டிய வகையில் மட்டுமல்ல,

அந்தத் 90 களின் வசந்த கால இசையில் இம்மாதிரியான அத்திப் பூக்களையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

உலகை உலகை உன்னால் வெறுத்தேன்

உறவாய் உறவாய் உன்னையே நினைத்தேன்

இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்

என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும் ! ❤️

கானா பிரபா

19.08.2022


0 comments: