Pages

Saturday, August 6, 2022

தந்தன தந்தன தை மாசம்... அது தந்தது தந்தது உன்ன தான்...❤️



மெல்லிசை இளவல் வித்யாசாகர் கொடுத்த மென் வருடல் பாடல் தொகுப்பில் தவிர்க்கக் கூடாததொன்று இது. 


“இரு விழி இரு விழி...

இமை கொட்டி அழைக்குது...

உயிர் தட்டி திறக்குது...

ரெக்கை கட்டி பறக்குதம்மா...

ரெக்கை கட்டி பறக்குதம்மா...”


தோழிமார் தொடக்கி வைக்கக் கூடு சேரும் அந்தப் பாடகக் காதலர்கள்.

திருமண வீடுகளில் அதிகாரபூர்வமற்ற ஒலிபரப்பாளனாக இயங்கும் போதும், அந்த வீடியோப் பேழைகளிலும் போய் இடம் பிடித்து விடும் இது.


தோழிமார் தொகையறாவை முடிக்கும் போது அப்படியே கையேந்தும் தள வாத்தியத் தபேலாக்காரார் இலேசாக “தந்தனத் தந்தன” வை உருட்டிப் பார்ப்பார். இந்தத் தாள லயம் அப்படியே கே.ஜே.ஜேசுதாஸ் & சாதனா சர்க்கம் கூடிப் பாடும் போது தம்பாட்டுக்கு பின்னால் இசைத்துக் கொண்டே பயணிக்கும் போது இரண்டுக்காகவும் தனித்தனியாகக் கேட்க வேண்டும் போலவொரு பேராசை பிறக்கும்.


இந்தப் பாடலின் மெட்டுக்கட்டல் அபாரமாக இருக்கும். தந்தனத் தந்தனப் போட்டுக் கொண்டு அப்படியே இன்னொரு திசைக்குக் கிளை போடும்


“என் காது ரெண்டும் கூச...

வாய் சொன்னதென்ன நீ சொல்...

அந்த நேரம் என்ன பேச...

அறியாது போலே நீ சொல்...”


அழகியல் இன்பம். அந்த வரிகளுக்குப் பின்னால் ம்ம்ம்ம்ம் கொட்டும் ஒரு இசைக் கோவை அழகான ஐசிங்.


இரண்டாவது சரணத்துக்கு முன்னர் நானும் பாடிப் பார்க்கட்டா? என்பது போல

புல்லாங்குழலும் பாடிப் பார்ப்பார்.


தை ரத்தத் தை தை ரத்தத் தை


வித்யாசாகரம் ❤️


கே.ஜே.ஜேசுதாஸ் & சாதனா சர்க்கம் ஒரு விநோதமான கூட்டு.

அதனால் தான் ரட்சகன் படத்தின் அத்துணை துள்ளிசைப் பாடல்களும் கொட்டமடிக்க, ஓரமாக இருந்து நெஞ்சை அள்ளி விடும்

“நெஞ்சே நெஞ்சே 

 மறந்து விடு 

நினைவைக் கடந்து விடு”


https://youtu.be/ugbdnewtQJM


வித்யாசாகரின் பாடகர் தேர்வில் ரஹ்மானின் தாக்கம் அதிகமாக இருக்கும். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அவர் கூட்டுச் சேர்ந்த பாடகர்களையும், ஜோடிகளையும் ஆழமாக அவதானித்தால் புரியும்.

ஆனால் வித்யாசாகரின் தனித்துவம் மிளிரும்.


அப்படியே இந்த ஜேசுதாஸ் & சாதனா சர்க்கத்தைக் கவர்ந்து வந்து

“காதல் வந்ததும்

 கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை” 


https://youtu.be/Fs3u1mDSPT4


என்றவொரு தன்னன்னான கொடுத்திருப்பார். 


“நில்லாத காற்று 

சொல்லாது தோழி 

நீயாக உந்தன் 

காதல் சொல்வாயா”


😍


அறுபதைக் கடந்த கானக் கந்தர்வனின் குரலை விட மனமில்லாமல் அவருக்காகக் கொஞ்சம் இயல்பாக, கீழ்த்தளத்தில் போடப்பட்ட பிரவாகமாக இந்த இரண்டு பாடல்களும் இருக்கும்.


“தந்தனத் தந்தனத் தை மாசம்” பா.விஜய் கொடுத்த அழகிய பாடல்.


ஒரு வணிகச் சூழலுக்குச் சமரசம் செய்யும் துள்ளிசைப் பாடல்களைக் கொடுத்து அங்கும் தன் முத்திரை பதித்தாலும், அடி மனதின் ஆழத்தில் உறைந்திருக்கும் இம்மாதிரியான மெல்லிசை கீதங்களைக் கொடுக்கும் போது தன் ஆத்மார்த்தமான உழைப்பை அங்கு காட்டுவார் வித்யாசாகர்.


எங்கள் “சொக்கக் தங்கம்” விஜயகாந்தும், செளந்தர்யாவும் அழகு ஜோடியாகப் பயணித்த முன்னோடி இந்தத் தவசி.


https://youtu.be/c4ObfHk6ZFM


உன் கண்களோடு நானும் 

முகம் பார்த்து வாழ வேண்டும்

உன்னைப் பார்த்து பார்த்து 

வாழ நகக் கண்ணில்

பார்வை வேண்டும்


https://youtu.be/8bG1r005-jI


அய்யா உன் முகம் பார்க்க 

என் கண்ணே

கண்ணாடி ❤️


கானா பிரபா

06.08.2022

1 comments:

Anonymous said...

அருமையான பதிவு சகோதரர் 🤩🤩😍😍😍😍👌🏻🤝🏻👍🏻