Pages

Monday, August 24, 2015

"கேளடி கண்மணி" 25 ஆண்டுகள் - ரசிகனின் டயரிக்குறிப்பிலிருந்து


 "விவித்பாரதி" வர்த்தக சேவையில் கட்டுண்டு கிடந்த 90களின் ஆரம்பம் அது. அப்போதெல்லாம் ஆகாசவாணியின் விவித்பாரதி எடுத்து வரும் வெகிவர இருக்கும் திரைப்படங்களுக்கான குறு விளம்பரங்களினூடே சில நொடிகள் மட்டும் அறிமுகமாகும் பாடல்களே அவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆவலை உண்டு பண்ணுவதுண்டு.
அப்படியாக அறிமுகமானது தான் கேளடி கண்மணி படப் பாடல்கள்.
"மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ" என்று வாத்திய இசையைத் தொடரும் எஸ்.பி.பியின் குரல் அப்படியே குறைய கேளடி கண்மணி விளம்பரம் ஆரம்பிக்கும் பின்னர் "தென்றல் தான் திங்கள் தான்" என்று ஜேசுதாஸ் தொடங்கி சித்ராவின் கைக்குப் போக முன்பே, மீண்டும் படத்தின் விளம்பரம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து அப்படியே "நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றித் தூங்காது கண்ணே" 
என்று ஆளுக்குத் தலா இரண்டு அடிகள் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் உமா ரமணன் பட அப்படியே கேளடி கண்மணி பட விளம்பரம் ஓய்ந்து விடும்.
நம்மூரில் கடும் யுத்தம் ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள் ஆரம்பிக்க, மின்சாரமும் நின்று போக, கிடைத்த பேட்டரிகளில் சிலதை வைத்துக் கொண்டு தான் இந்த விவித்பாரதி நிகழ்ச்சியை இரவில் கேட்பேன். சரியாக எட்டு மணிக்குத் திரை விளம்பரங்கள் வரும் என்று நினைவு.
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அந்த பேட்டரி சக்தியில் இயங்கிய டேப் ரெக்கார்டர் வழி "மண்ணில் இந்தக் காதலன்றி" பாடல் மீதான மோகம் தலைக்கேற  அந்தச் சில நிமிடத் துளிகளை ஒலிப்பதிவு செய்து பேட்டரியின் கையிருப்பைக் குறைத்துக் கொண்டது தனிக்கதை. பின்னர் அந்த பேட்டரிகளை நிலத்தில் வீசி அடித்து மீண்டும் டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்ட கதையாகத் தொடர்ந்தது.

யுத்தம் கடுமையானதால் என் படிப்பைக் கொழும்பில் தொடர வைக்கலாம் என்று வீட்டார் முடிவுகட்டியதன் விளைவாக, அம்மாவுடன் தலைநகருக்கு வந்தேன். பிள்ளை தனியாகத் தங்கிப் படிக்கப் போகுது என்று என் மேல் அளவு கடந்த கரிசனை அம்மாவுக்கு. 
அப்போது வெள்ளவத்தை சவோய் தியேட்டருக்கு எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கடை வளாகம் இருந்தது. அதன் மேல் அடுக்கில் ஒரு பெரிய ரெக்கார்டிங் பார். தனியனாக ஒரு நாள் கொழும்பைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய எனக்கு அந்த ரெக்கார்டிங்க் பார் கண்ணில் படவே அங்கு போய் வித விதமாக அடுக்கி வைத்திருந்த எல்.பி.ரெக்காட்ஸ் ஐ எல்லாம் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். ஏழைக்கேற்ற எள்ளுப் பொரி என்று ஓரமாக அடுக்கி வைக்கப்பட்ட ஒலி நாடாக் குவியலில் "கேளடி கண்மணி" தெரிந்தது.அள்ளிக் கொண்டேன் அதை.
கொழும்பில் உறவினர் வீட்டில் என்னை விட்டுவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் போகத் தயாரானார் அம்மா. "எனக்கு இஞ்சை இருக்கப் பிடிக்கேல்லை நானும் உங்களோட வாறன்" என்று அழுது புலம்பியதும் அம்மா என் சூட்கேசையும் சேர்த்து அடுக்கினார். சூட்கேஸ் ஓரமாக அந்தக் "கேளடி கண்மணி" ஒலிநாடாப் பேழையை வைத்தேன்.  எஸ்.பி.பாலசுப்ரமணியம் முகம் மட்டுமே பெரிதாக வைத்து அழகாக வடிவமைக்கப்படிருந்த அந்தப் பேழையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிய பயணம். வழியில் வவுனியா இராணுவச் சோதனைச் சாவடியில் ஆட் பரிசோதனைக்காக இன்னொரு பஸ்ஸில் எம்மை ஏற்றினார்கள். சூட்கேஸ் ஐயும் திறந்து காட்டி விட்டுத்தான் வருவார்களாம். எமக்கான சோதனை முடிந்து பஸ் நடத்துனரோடு கூட இருந்த கைத்தடிகளிடமிருந்து  சூட்கேஸைப் பெற்றுத் திறந்தால் "கேளடி கண்மணி" மாயம். 
"கேளடி கண்மணி" வந்து ஐந்து ஆண்டுகளுப் பின்னரேயே சொந்தமாக அந்தப் படப் பாடல்கள் என் கையில் நிரந்தரமாகக் கிட்டும் வாய்ப்பு வந்தது, இருந்தாலும் அந்த எக்கோ ஒரிஜினல் "கேளடி கண்மணி" ஒலி நாடாப் பேழை தொலைந்த கவலை எனக்கு இன்னமும் உண்டு.

ஒரு காலத்தில் விவித் பாரதியில் ஒரு துளி பாடலைக் கேட்கத் தவமிருந்த காலம் போய் பின்னாளில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளன் ஆகி "காதலர் கீதங்கள்" என்ற தொகுப்பில் அளவுகணக்கில்லாமல், ஆண்டுக்கணக்காக "நீ பாதி நான் பாதி கண்ணே" பாடலை ஒலிபரப்புவேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். "நீ பாதி நான் பாதி கண்ணே" கவிஞர் வாலி முத்திரை, இதே வாலி முன்னர் இதே கே.ஜே.ஜேசுதாஸ் & உமா ரமணன் கூட்டணிக்கு "ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ" என்று இன்னொரு அற்புத
 படையலையும் கொடுத்த கணக்கே தீராது,

"மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ" சாதனை படைத்த பாடல் காதலின் வேதனை துடைத்த பாடல் என்றெல்லாம் அப்ஸராஸ் இன்னிசை வார்ப்புகள் மெல்லிசைக் குழு அப்போது கொண்டாடியிருந்தது இந்தப் பாடலை.  "எடேய் எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடியிருக்கிறாராம்" என்றெல்லாம் கூட்டாளிமாரிடம் வியந்து கொண்டே உள்ளுக்குள் நாமும் பாடிப் பார்க்கலாமே என்று விஷப்பரீட்சை எல்லாம் செய்ததுண்டு.
ஆனால் மெல்பர்னுக்கு ஒருதடவை கங்கை அமரன் உடன் இசைக்கச்சேரிக்கு வந்திருந்த எஸ்,பி.பி "மூச்சு விடாமப் பாடினா மனுஷன் செத்துடுவான் இல்லியோ" என்று சொல்லி அந்தச் சிதம்பர ரகசியத்தைப் புஸ்வாணம் ஆக்கினார். அத்தோடு "மண்ணில் இந்தக் காதலன்றி" பாடல் பாவலர் வரதராஜன் அவர்கள் எழுதியது என்று ரெக்கார்டில் போட்டிருந்தாலும் அது உண்மையில் கங்கை அமரன் அவர்களே எழுதியது என்று அதே மேடையில் சொன்னார் எஸ்.பி.பி.

"தென்றல் தான் திங்கள் தான்"இந்தப் பாடலை ராஜா சார் கம்போஸ் பண்ணும் போது எனக்குப் பிடிக்கவே இல்லை. வேற ஒரு மெட்டு கொடுங்களேன் சார் என்று கேட்டேன். ராஜா சாரோ "நீ இருந்து பாரேன்" என்று தன்னைச் சமாதானப்படுத்தியதாகவும் பின்னாளில் அந்தப் பாடல் எவ்வளவு தூரம் ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெற்றது என்பதையும் "கேளடி கண்மணி" இயக்குநர் வஸந்த் ஒருமுறை ராஜ் டிவி பேட்டி ஒன்றில் சொல்லக் கேட்டுக் கப் என்று அந்தத் தகவலைப் பிடித்து வைத்துக் கொண்டேன்.
"தென்றல் தான் திங்கள் தான்" (பாடலாசிரியர் பிறைசூடன் எழுதியது) பாடல் குறித்து ஒரு முழு நீளப் பதிவையும் எழுதியிருக்கிறேன் இங்கே http://www.radiospathy.com/2011/11/blog-post_08.html

"கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ" என்ற ஆண்டாளின் திருவாய்மொழியை  "காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா" பாடல் உருவாக்கத்தின் போது இளையராஜா, கவிஞர் வாலியிடம் பகிர்ந்ததைக் கேட்டபோது கற்பனை செய்து பார்த்தேன். இம்மாதிரியான பாடல்களின் உருவாக்கங்களின் போது தேவார, திருவாசகம் தொட்டு நாலாயிரத் திவ்ய பிரபந்தம் வரை இசைஞானியின் ஒலிப்பதிவு கூடத்தில் பாடல் பிரசவிக்கப்படும் தருணங்களில் பேசு பொருளாக இருக்குமோ என்று. குறிப்பாக வாலி கலந்து கொள்ளும் அந்தச் சபைகளில்.
இங்கே "கேளடி கண்மணி படத்தில் ஆண்டாளே வந்திருக்கிறார். "வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து" பாடல் எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல்களில் தனித்தனியாக அந்தப் பாசுரத்துக்கு மெய்யிசை சேர்க்கப்பட்டு உயிரோடு உலாவ விடப்பட்டிருக்கிறது.

"என்ன பாடுவது என்ன பாடுவது" விளையாட்டுத்தனமான துள்ளிசை, கங்கை அமரன் வரிகளில் அவர் அண்ணன் குழுவினரோடு பாடியது. "எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும்" பாடலின் உறவு முறை.

"தண்ணியில நனைஞ்சா" பாடல் தான் கேளடி கண்மணி படத்தில் அதிகம் கவனிக்கப்படாத பாட்டாக இருக்கும். அந்தப் பாடலை எழுதியது மு.மேத்தா. ஆனால் வட்டியும் முதலுமாக இன்னொரு பாடலில் தன் பேரை அழுத்தமாக பதிய வைத்து விட்டார் அதுதான் 
"கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று"

"கற்பூர பொம்மை ஒன்று" பாடலை இலக்கியா பிறக்கும் முன்னரும் எத்தனையோ தடவை கேட்டு அழுதிருக்கிறேன். இப்போதும் கூட இந்தப் பாடலைக் கேட்கும் போது குறைந்த பட்சம் ஏதாவது ஒரு சரணத்தில் கண்ணில் நீர் முட்டுவதைத் தவிர்க்க முடியாது. அவ்வளவு தூரம் உணர்வைச் சீண்டிப் பார்க்கும் பாடல் இது. தாயாகவும் என்னக் உணரும் சந்தர்ப்பங்கள் பலவற்றில் இந்தப் பாடல் மடி சுரப்பது போல அமைந்து விடுகிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நாயகனாக நடித்த படங்களில் முக்கியமானதொரு வெற்றி படமாக "கேளடி கண்மணி" அமைந்தது. அப்போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது.
கேளடி கண்மணி படம் ஓடி முடிந்த சில வருடங்களில் ஆனந்த விகடனில் சிறுகதை ஒன்று. அதில் குறிப்பிட்ட கதைக்களத்தில் "கேளடி கண்மணி" படத்தின் கடைசி நாள் காட்சியில் ஹவுஸ்புல் என்றதொரு குறிப்போடு கதாசிரியர் எழுதிவிட்டார். அடுத்த இதழில் ஒரு வாசகர் அதைச் சுட்டிக் காட்டி "எப்படி கடைசி நாள் காட்சி ஹவுஸ்புல்லாக இருக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார். ஆனால் தொடர்ந்து மறு வாரம் வந்த விகடன் இதழில் இன்னொரு வாசகர் "சேலம் விஷ்ணு" படம் ஏதோவொரு தியேட்டரில் இம்மாதிரி கடைசி நால் ஹவுஸ்புல்லாக ஓடியது என்று ஆதாரத்தோடு எழுதியிருந்தார். 

"கேளடி கண்மணி" படத்தின் தலைப்பு வடிவமைப்பைப் பாருங்கள். எவ்வளவு கலை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் இம்மாதிரித் தலைப்பைச் செதுக்கிக் காட்டுவதிலேயே தேர்ந்ததொரு கலா ரசனை மிளிரும்.

"புதிய பாதை" என்ற படத்தைத் தயாரித்து 1989 இல் வெளியிட்ட விவேக் சித்ரா சுந்தரம் (விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய பத்திரிகையாளர்)அவர்கள் அந்தத் தேசிய விருதுப் படத்தைத் தொடர்ந்து "கேளடி கண்மணி" என்ற இந்தத் தேசிய விருந்தை 1990 இல் ஆக்கிப் படைத்தார். இந்த ஆண்டோடு இந்தப் படம் வெள்ளி விழா காண்கிறது.
"கேளடி கண்மணி" பொன் விழா கடந்தும் நினைவு கூரப்படும்.


4 comments:

Anonymous said...

"தண்ணியில நனைஞ்சா" இப்படி ஒரு பாட்டு இருக்கா?!
சரவணன்

Umesh Srinivasan said...

1990ல் கும்பகோணம் நகரில் பணி நிமித்தம் தங்கியிருந்தபோது இரவுக் காட்சியாகப் பார்த்த ஞாபகம். வானொலி விளம்பரங்களில் 'கேளடி, கண்மணி'என்று அறிவிப்பாளர் நீட்டி முழக்கிச் சொல்வதே தனி அழகாக இருக்கும். கே.பாலச்சந்தரின் சீடராகிய வசந்த் முதற்படத்திலேயே மிகவும் பேசப்பட்டவர், ஆனால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காமல் போனது துரதிர்ஷ்டம்.

தனிமரம் said...

இன்னும் நீங்காத நினைவில் நிற்பது பாலா மூச்சுவிடாமல் பாடிய மண்ணில் இந்த காதல் என்று பலர் மூச்சுவிடாமல் பாட முயற்ச்சித்த பள்ளிக்காலம் மறக்க முடியாது படம் வசந்த் இயக்கம் அதில் குழந்தை நட்சத்திரம் அஞ்சு பின் தமிழ் சினிமாவில் வந்து போனார் ஆனாலும் ராதிகா போல இன்னும் ஒரு நல்ல பாத்திரம் வரவில்லை ! இந்தப்பாடல் பாவலர் வரதராஜன் ராஜாவின் அண்ணாவின் கவிதை என்று இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம் சரியா என்று நான் மறந்து போய்விட்டேன் நான் பாதி வானொலி பாதி என்ற காலம் இன்று போய்விட்டது கற்பூரமுல்லை என்று போல[[[

வல்லிசிம்ஹன் said...

சேர்ந்து பயணித்தேன் பிரபா.அருமை.