Pages

Saturday, August 8, 2015

அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே

அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாட வா

பாடகர் ஜெயச்சந்திரனுக்கான முத்திரைப் பாடல்களில் தனித்து நிற்பவை சாஸ்திரிய இசைக் கலவையைத் தூவி இசையமையமைத்தவை. குறிப்பாக "மாஞ்சோலைக் கிளி தானோ", "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே" சில பருக்கைகள். 

தொண்ணூறுகளில் இவ்விதமாக அமைந்த இரண்டு பாடல்கள் தனிச்சிறப்பு மிக்கவை. ஒன்று 1992 ஆம் ஆண்டு ராமராஜன் அலை ஓயும் வேளை வந்த "பொண்ணுக்கேத்த புருஷன்" படப்பாடலான 
"ஜல் ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்" 
கங்கை அமரன் வரிகளுக்கு ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா பாடியிருப்பார்கள். இந்தப் படம் வந்த சுவடே தெரியாதவர்களும் உண்டு என்ற காரணத்தால் இன்னும் வெகுவாகப் புகழப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பாடலும் அதிகம் ஆர்ப்பாட்டம் அற்று அமுங்கிவிட்டது. 

இதே படத்தில் வந்த "மாலை நிலவே" (மனோ, சித்ரா, குழுவினருடன்) பாடல் என்னுடைய நெருக்கத்துக்குரிய விருப்பத் தேர்வுகளில் ஒன்று. 
பாடல் ஆரம்பிக்கும் குதிரைக் குளம்பொலி ஓசையைக் கேட்டவுடனேயே "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று அன்பே வா காலத்தை நினைப்பூட்டிவிடுவதால் காட்சியிலும் அதை உருவிப் போட்டு ராமராஜன், கெளதமி ஜோடியை ஊடால விட்டு கொலவெறி பண்ணிருப்பார்கள். பார்த்தலில் கேட்டல் இனிது :-)

"அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" ஆர்.வி.உதயகுமார் என்ற அற்புதமான பாடலாசிரியர் இசைஞானியின் மெட்டுகளுக்கு வரிகளால் வைர மோதிரம் பூட்டிய இன்னொரு பாட்டு. 
"உரிமை கீதம்", "புதிய வானம்" என்று வெவ்வேறு இசையமைப்பாளர்களோடு பயணப்பட்டுவிட்டு இளையராஜாவோடு கூட்டணி அமைக்க ஆரம்பித்த போது இணைந்த "உறுதி மொழி" படத்தின் இந்தப் பாடலே இந்தக் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாகப் பிரகடனப்படுத்த உதவியது. ஆனால் "கிழக்கு வாசல்" வெற்றி இன்னும் மணிமகுடமாக.

மணியோசை வரும் திறப்பு இசையே காதலர் கூடும் கொண்டாட்டத்தை விரும்பி வரவேற்பதாய்த் தொனிக்க எஸ்.ஜானகியின் ஆலாபனை, அதனைத் தொடர்ந்து பீறிடும் உற்சாக இசை அப்படியே மேலெழுந்து அடங்க ஜெயச்சந்திரன் ஆரம்பிப்பார்.
இந்தப் பாடலின் முழு வரிகளுமே மன்னர் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருப்பதும் அதே சமயம், பின்னணி இசை இதமான மேற்கத்தேய ஒலிப்பாய்ப் பின்னியிருக்கும் ஆனால் அந்த முரணில் உறுத்தல் இருக்காது.

இணைந்த வாத்தியங்கள் எல்லாவற்றுக்கும் கெளரவம் கொடுத்திருந்தாலும் புல்லாங்குழல் தான் இதில் குணச்சித்திரம். முதல் சரணத்தில் கிட்டாருடன் குலவும் போது சிறப்பாகவும், இரண்டாவது சரணத்தின் ஆரம்பத்தில் மெது மெதுவாக அடியெடுத்து வந்து ஆடும் போதும் புல்லாங்குழல் தரும் சுகம் ஆகா.

பாடல் வரிகளை ஜெயச்சந்திரன் உச்சரிக்கும் போது அறுத்து உறுத்துத் தமிழை ஈறு கெடாமல் காப்பாற்றியிருப்பார். எஸ்.ஜானகி பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இந்தப் பாடலில் அவர் பாடும் தொனி, மாப்பிள்ளை காதில் கிசுகிசுக்கும் புதுமணப் பெண் போல இருக்கும்.

உறுதி மொழி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிட்டவில்லை. ஆனால் இந்தப் பாடலை ஓராயிரம் முறை கேட்டுக் கொண்டாடிருப்பேன்.

2 comments:

தனிமரம் said...

அதிகாலை நிலவு அருமையான பாடல்! பகிர்வுக்கு நன்றிகள்

கானா பிரபா said...

மிக்க நன்றி சகோ