Pages

Monday, March 25, 2024

பெரியோனே…. என் ரஹ்மானே…….❤️ ரஹ்மானும் அவர் தந்தையும் அளித்த ஆன்மாவின் பாடல்கள் ❤️புகை போல சிட்னியின் விடிகாலைப் புகார் முட்டியிருந்த அந்தச் சனிக்கிழமை விடிகாலை.


காரை வெளியில் எடுத்துக் கொண்டு வழக்கமாக ஓட்டப் பயிற்சி எடுக்கும் பூங்காவை நோக்கிப் பயணிக்கும் சமயம் “பெரியோனே” 

பாடலை ஒலிக்க விடுகிறேன்.


அந்த ஏகாந்தச் சூழலில் அந்தப் பாடல் எழுப்பிய உணர்வுக்கு மொழியில்லை.

அந்த மலையாளப் பாடலோடே ஐக்கியமாகின்றேன்.


கையறு நிலைப்பட்ட ஒரு ஆன்மாவின் மன ஓசையாகப் பிறக்கும்  இந்தப் பாடலின் முதலடிகள் தான் இறைவனை யாசிக்கும், அதன் பின்னெல்லாம் வருவது அவனின் சுய பச்சாதாபமாக இருக்கும்.


ரஹ்மானைப் பொறுத்தவரை ஆன்மிகப் பாடல்களைத் தனித்தும் செய்தவர்.


உதயங்கள் எல்லாமும் 

மேற்கில் அல்லவா

அது உண்மை நபி நாதர் 

தரும் வாக்கில் அல்லவா


https://youtu.be/-XdmSHm2xWk?si=n-6O2CNMl_Jv50yn


வாங்கிக் குவித்த இசைத்தட்டுகளின் குவியலில் முதல் இறையருள் பாடல்கள் கொண்ட இசைத்தட்டு என்ற பெருமையப் பெறுவது தீன் இசை மாலை எனும் இசை வட்டு. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகுக்கு வருவதற்கு முன்னர் இசையமைத்து வெளிவந்த இஸ்லாமியத் தனிப்பாடல் திரட்டு இதுவாகும்.

இலங்கையில் இருந்த காலத்தில் வானொலி வழியாக, இங்கே நான் பகிர்ந்த சுஜாதா பாடிய பாடல் வழியாகத் தான் இந்த இசைவட்டு குறித்த அறிமுகம் எனக்குக் கிட்டியது.

"தீன் இசைமாலை" இஸ்லாமிய இறைபக்திப் பாடல்களுக்குப் புது வடிவம் கொடுத்ததென்பேன்.


“பெரியோனே” பாடலில் ஜித்தின் ராஜ் இன் குரலை எப்படித்தான் ரஹ்மான் கச்சிதமாக அமர்த்திக் கொண்டரோ, எல்லா மொழிகளிலும் அவர் குரல் அந்தப் பாடலின் ஆன்மாவாகவே பிரதிபலிக்கின்றது.


“ஆடு ஜீவிதம்” படத்துக்காக மிகவும் சிரத்தையெடுத்துக் கொண்டேன் என்ற ஏ.ஆர்.ரஹ்மானின் கூற்றின் மெய்த்தன்மையைக் கட்ட “பெரியோனே” ஒரு சிறு உதாரணம் பறையும்.


https://youtu.be/mX8JxEc2_mk?si=dDi7dTjBg1yf44uR


பின்னணி ஓசையை ஆற்றுப்படுத்தி, குரலுக்கே முக்கியத்துவம் தருகிறார்.

“பெரியோனே” என்று தொடங்கும் போதே பாலைவனத் திடலில் நின்று ஒலிக்கும் ஒற்றைக் குரலாகவே தொனிக்கிறது.


“ஒரு ஆன்மிக இடம் போல எந்த வித தேவையற்ற பேச்சுக்கள் அற்ற சூழலாக ரஹ்மானின் ஒலிப்பதிவுக் கூடம் இருக்கும்” என்று சாய் வித் சித்ராவில் கெளதம் வாசுதேவ மேனன் பேட்டியில் குறிப்பிட்டிருப்பார். அது சரியான நேரத்தில் இந்தப் பாடலின் வழியே உணர வைக்கின்றது.


ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் மலையாள சினிமாவின் உதவி இசையமைப்பாளர், இசை ஒருங்கமைப்பாளராகவும் இயங்கியவர்.

ஆர்.கே.சேகர் இசையமைப்பாளராய் அறிமுகமானது 1964 இல்  “பழசிராஜா” படைப்பின் வழியாக பின்னாளில் மம்மூட்டி நடிக்க இளையராஜா இசையில் இதே பெயரில் ஈராயிரங்களில் உருவானதும் நாமெல்லோரும் அறிந்ததே.


ஆர்.கே.சேகரின் அறிமுக இசைமைப்பில் வயலூர் ரவிவர்மா பாடல் வரிகளில் கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு பாடல் இருக்கின்றது. அந்தப் பாடலில்


காலன் கோழிகள் கூவி

கழுவன் சுற்றி நடந்தூ…..


என்று இடைவரி அமைந்திருக்கும்.

அதை இப்போது தனையன் ரஹ்மானின் ஆடு ஜீவிதத்தோடு பொருத்திப் பார்க்கிறேன்.


ரஹ்மானின் தந்தை கொடுத்த 

அந்தப் பாடல்

.

“சொட்ட முதல் சுடலை வரே

  சுமடும் தாங்கி 

  துக்கத்தின் தண்ணீர்ப்பந்தலில்

  நில்குன்னவரே…. நில்குன்னவரே


https://youtu.be/0H2dqpx6R8M?si=xwfz8X05pfjr2vt7


✍🏻

கானா பிரபா

0 comments: