Pages

Monday, April 15, 2024

கொக்கு சைவக் கொக்கு 🦩 விக்கல் பாட்டு ❤️❤️❤️


ஐந்து பாட்டை இசையமைப்பாளரிடம் கேட்டு வாங்கிப் படமாக்குவதை விட மிகச் சிறந்த அனுபவம், குறித்த காட்சியை உள்வாங்கி, அதன் அணுக்கள் எல்லாவற்றையும் பாடலுக்குள் அடக்கும் போது அது காட்சியாக விரியும் போது இரண்டும் கலந்து கொடுக்கும் இன்பப் பரவசத்துக்கு அளவே இல்லை.

அப்படியொரு பாட்டு இது.

புறச் சத்தங்களை வைத்து ரஹ்மான் கொடுத்த அரிதான, மிக அற்புதமான முதற்தர வரிசைப் பாட்டு இது.

ஒரு விக்கலோடு தொடங்கி, ஆனால் அதை வைத்தே ஜல்லி அடிக்காமல் மாறுபட்ட இசைக் கோவைகளும், கூட்டுக் குரல்களும்,  இடையில் கோழிக் கொக்கரிப்பை விக்கலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும், 

“ஏலாலோ எலக்கடி ஏலாலே”

ரஹ்மான் டச்சுமாக ஒரு கலகலப்பான கொண்டாட்டமாக மாறி முடியும் தறுவாயில் அந்த விக்கலை மீண்டும் நினைவுபடுத்தி முடிப்பார்.

வாத்து எழுப்பும் ஒலி நயத்துக்கு ஏற்ப சுபஶ்ரீயின் இரு தோள்களும் அசைந்தாடும் அழகியலாக ஒவ்வொரு இசைத் துணுக்குக்கும் அசைவுகளின் அழகியல்.

ரஹ்மானின் ஆரம்பங்களில் புல்லாங்குழலைக் கையாளும் நுட்பத்துக்குத் தனி அத்தியாயம் வைக்க வேண்டும். அங்கே புல்லாங்குழல் நவீனையும் கொண்டாட வேண்டும்.

கோபியர் கொஞ்சும் ரமணாவாய் ரஜினிக்குப் புல்லாங்குழலை மீட்டக் கொடுத்திருப்பார்.

தேனி குஞ்சரம்மாளின் குரலை “வயசான சுந்தரி” க்குப் பொருத்திய குறும்புத்தனம் என்றால், அது உறுத்தாமல் ஜோதிலட்சுமியின் மிடுக்குக்கு அளவெடுத்த சட்டை.

இந்தப் பாடலை ஓவராக தத்துவம், கத்துவம் போடாமல் ரஜினியின் பாத்திரப் படைப்புக்கு ஏற்ப அமைத்தது போல எளிமையாகக் கொடுத்திருப்பார் வைரமுத்து.

பாடுவது ரஜினியா எஸ்பிபியா என்று குழம்புமளவுக்கு அச்சொட்டான பிரயோகம் கொடுப்பார் சூப்பர் ஸ்டார்.

கூட்டத்துக்கு ஏய்ப்புக் காட்டும் எஸ்பிபி, குஞ்சரம்மாள் குரலைக் கேட்டு அடங்கி வழி விட்டு

“வயதான சுந்தரியே

  மன்மதன் மந்திரியே”

என்று எள்ளலோடு ஒரு போடு போட்டு காலி பண்ணி விடுவார் அந்த மிடுக்கன்.

இந்த மாதிரிப் பாட்டுப் பாட இன்னொரு எஸ்பிபி பிறந்து வர வேண்டும்.

மெல்பர்னில் வாழ்ந்த காலத்தில், அறைத்தோழர் ஜோ அண்ணா படு பயங்கர ரஜினி விசிறி. 

படத்தில் ரஜினி அழுதால் இவருக்குத் தொண்டை கட்டி விடும்.

நானும் அவருமாக மெல்பர்ன் மொனாஷ் பல்கலைக்கழக யுனியன் சினிமாவில் படம் பார்க்கிறோம்.

“குளுவாலிலே” பாட்டுக்கு நெளிகிறார்.

ரஜினியை உதித் நாராயணன் குரலுக்கு ஒப்பிட மறுக்கிறார் என்பது புரிந்தது.

“படம் எப்பிடி?”

வீடு திரும்பும் சமயம் கார் தரிப்பு இடத்துக்கு வரும் போது பேச்சுக் கொடுக்கிறார்.

“கொக்கு சைவக் கொக்கு கலக்கல்” என்றேன். 

சிரித்தார்.

அக்கக் கக்க அக்க…வோடு முடியும் 

ரஹ்மான் முத்திரை ❤️

https://youtu.be/9HTvvuSyfn0?si=aIwuTNRofQNeImpZ

கானா பிரபா


0 comments: