Pages

Monday, March 4, 2024

Manjummel Boys ❤️❤️❤️ மஞ்ஞும்மெல் பாய்ஸ் ❤️❤️❤️

“கமலஹாசன் கையில் தான் 

இனி எல்லாம்”

என்று அந்தப் பயண ஓட்டத்தில் கூட்டாளிகளில் ஒருவன் சொல்ல, அந்த நண்பர் கூட்டம் ஆர்ப்பரிப்புடன் கொடைக்கானல் நோக்கிக் கிளம்பும்.

சற்று முன்னர் தான் பழனிமலை அடிவாரக் கடையில் வாங்கிய கமல் ஹிட்ஸ் mp3 ஐக் காரில் கேட்டுக் கொண்டே பயணிக்கிறார்கள்.

அப்படியே ஆபத்துக் குழியில் சிக்குகிறார்கள்.

மிக எளிமையான கதை, கதை என்பதை விட ஒரு நிகழ்வு. அதை எந்த வித மாய்மாலமும் இல்லாத, புத்திசாலித்தனமாகக் காட்டிக் கொள்ளாத காட்சியோட்டத்தோடு எடுக்கப்பட்ட படம். ஒளிப்பதிவில் கூட எந்தவிதமான தொழில் நுட்ப மிரட்டல் இல்லை. ஆனால் இரண்டரை மணி நேரப் படத்துக்குள் இறுகக் கட்டிப் போட்டு விடுகின்றது.

“கண்மணி அன்போடு 

காதலன் நான் எழுதும் கடிதமே”

பாடலை ஓவிய வரைகலையோடு ஆரம்ப எழுத்தோட்டத்தில் நகர்த்துவதிலாகட்டும், அப்படியே அந்தப் பாட்டின் இடையிசையை இன்னொரு வடிவத்தில் அதே வாத்தியக் கோப்பை ஒத்திசைவோடு கொடுப்பதிலாகட்டும் இயக்குநர் மட்டுமல்ல, இசையமைப்பாளர் 

சுஷின் ஷியாமும் ஆத்மார்த்தமாக உழைத்துள்ளார்.

எந்த வித பய உணர்ச்சியும் இல்லாத, தங்களுக்குள் அடித்துக் கொண்டும், கூடிக் குலாவிக் கொண்டும் இருக்கும் அந்த இளைஞர் கூட்டணியை அழகாக வரைந்திருக்கும் ஆரம்பக் காட்சிகளில் துள்ளிசை கூட அந்த நிறத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது.

எல்லோருமே “கண்மணி அன்போடு” பாடலை உச் கொட்டுகிறார்களே?

இன்னொரு விஷயம் கவனித்தீர்களா?

அந்தப் பழனி மலைச் சூழலில் மெல்ல மிதந்து போகும் “அண்ணாத்தே ஆடுறார் ஒத்துக்கோ” (அபூர்வ சகோதரர்கள்) பாடலின் வாத்திய ஒலிக்கீற்று பேரிகையோடு கடந்து போனதை?

இப்படி கமல் reference படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மானையும், கமல்ஹாசனையும் இன்னமும் தங்கள் ஆள் என்று தான் கேரளத்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை அதை நியாயமாகக் கெளரவம் செய்திருக்கிறார்கள்.

“சிறு பொன்மணி அசையும்” பாடலை வைத்து சுப்ரமணியபுரம் தொட்டு இருந்து ஏராளம் தமிழ்ப் படங்களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவை hype பண்ண மட்டுமே கையாளப்பட்டிருக்கின்றன. 

ஆனால் இந்த “மஞ்ஞும்மெல் பாய்ஸ்”படத்தைப் பொறுத்தவரை “கண்மணி அன்போடு”

பாடலையும் சரி “குணா” படத்தையும் சரி ஒரு கருவியாகவே அல்லது குறியீடாகவே கையாண்டிருக்கிறார்கள்.

“குணா” என்ற கற்பனைக்கும் “மஞ்ஞும்மெல் பாய்ஸ்” என்ற நிஜத்துக்குமான ஒரு உறவாடல் எனலாம்.

பழனி மலையடியில் பாட்டு சீடி எடுக்கும் போது “விஜய் ஹிட்ஸ்” எடு என்று கூட்டாளி சொல்வது மலையாளிகளின் விஜய் மீதான சமீபகால ஈர்ப்பைக் கோடிட்டிருக்கும். தான் விஜய்யின் மீதான  தன் அபிமானத்தையும் இப்பட இயக்குநர் குறிப்பிட்டிருக்கிறார்.

“மலைக்குளிருக்குக் கட்டிங் போட்டது போல கமல் பாட்டுகள் இருக்கும்” என்று  சொல்லிக் கொண்டே பாட்டைப் போடுவது,

“பாட்டைக் கேட்டு ரூட்டை மாத்தி”

“அபிராமி ஆள் எங்கே” என்று குணா குகைக்குள் குரல் கொடுப்பது என்று வசன அமைப்பில் அ நியாயத்துக்கும் எளிமை அதுவே ஈர்ப்பைக் கொடுக்கிறது.

“Devil's kitchen” என்று வெள்ளைக்காரனாலேயே மிரண்டு போய் வைத்த பூர்வீகப் பெயர்க் காரணத்தோடு, 900 அடி ஆழமிருக்கும், இதுவரை குழிக்குள் போன 13 பேர் போனது போனதுதான்”

என்று பிரச்சார நொடி அற்ற, அந்தக் குகையின் பயங்கர நிலவரத்தைப் பாத்திரங்களினூடு கடத்திய உத்தி சிறப்பு.

இயக்கு நரின் புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டு, இந்தப் படைப்பின் முக்கிய பாத்திரங்கள் அல்லது கதை நகர்த்திகளுக்கு மிகவும் பரிச்சயமான முகங்களைப் போட்டது.

அந்த வகையில் நண்பனைக் காப்பாற்றும் சகபாடியாக ஷோபின் ஷகிர் (தயாரிப்பாளர்களில் ஒருவர்) (விசில் பறக்கிறது தியேட்டரில் அவர் தோன்றும் முதற்காட்சியில்),  குழிக்கும் விழும் நண்பனாக ஶ்ரீநாத் பாஸி இருவருமே  தமிழ் உலகத்திலும் OTT புண்ணியத்தில் பரிச்சயமானவர்கள். 

அது போல் படமே 90 வீதம் தமிழ்ப்படம் பார்க்கின்ற உணர்வில் இருக்கும் போது தமிழ் நடிகர்கள் ஜோர்ஜ் மரியான், கதிரேசன் மற்றும் ராம்ஸ் ஆகிய தமிழின் முக்கிய நடிகர்கள் வலுச் சேர்க்கிறார்கள்.

ராம்ஸ் ஐ இன்னும் முழு அளவில் தமிழ் சினிமா பாவிக்கவில்லை என்ற ஆதங்கத்தை இந்தப் பதிவில்

https://www.facebook.com/photo.php?fbid=10204585223775901&set=a.10200950943041154&type=3

 நான் எழுதிய போது நண்பர் ஹரி Hari HK S தொலைபேசியில் ராம்ஸ் உடன் பேச வைத்தார் அப்போது.

தனக்கு நல்ல வாய்ப்புகள் வரவில்லையே என்று என்னிடம் ஆதங்கத்தோடு ராம்ஸ் பேசியிருந்தார்.

அந்த நிலை இன்றும் தொடர்வது அந்தக் கலைஞனுக்கு நிகழும் பேரவலம் 

ஒரு காலத்தில் மலையாளப் படம் என்றால் இரண்டே இரண்டு காட்சி அதுவும் ஒரேயொரு தியேட்டரில் என்ற நிலை மாறி சிட்னியின் பெரும்பான்மை திரையரங்கில் தினமும் மூன்று காட்சி, அதுவும் நான் பார்த்த காட்சியில் 2 டிக்கெட் தான் நான் பதிவு பண்ணும் போது எஞ்சி இருந்தது.

படம் முடிந்ததும் கை தட்டிக் கொண்டாடினார்கள்.

மஞ்ஞும்மெல் பாய்ஸ்

குறித்து இரண்டு ஆதங்கங்கள் உள்ளன. 

ஒன்று

படத்தின் முடிவில் மீண்டும் இயக்குநர் விபரம் வந்த பின்னர் தான் 2006 இல் நிகழ்ந்த ஒரு உண்மைக்கதை படமாக்கப்பட்ட செய்தியே நிழற்படங்களோடு காட்டப்படுகிறது.

முன்னர் படம் பார்த்தவர்களே இந்தப் படத்தின் மெய்த்தன்மையைத் தவற விட்டு விட்டார்கள். அதிலும் குறிப்பாக நண்பனுக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து விருது பெற்ற சைஜு டேவிட் குறித்த தகவலும்.இரண்டு

குழியில் இருந்து நண்பன் காப்பாற்றப்பட்டு மேலெழும் தருணத்தில்

“கண்மணி அன்போடு” பாட்டு திடுதிப்பென்று பாய்வது அந்த உணர்வோட்டத்தைச் சிதைப்பது போலவும் படுகிறது.

என் அபிப்பிராயத்தில் இதையே வேறு விதமாகக் காண்பித்திருக்கலாம்.

அதாவது அந்த குணா குகையில் இருந்து வெளியேறும் சூழலில் 

“மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்று கத்தி விட்டு கமல் மலையில் இருந்து விழும் போது எழும் அசரீரியைக் கொடுத்திருக்கலாம்.

பின்னணி இசையோடு அதைக் கொடுக்கிறேன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

மனிதர் உணர்ந்து கொள்ள

இது மனிதக் காதல்

அல்ல……..

http://www.radio.kanapraba.com/Guna/guna17.mp3

அது போல எல்லோரும் கேரளம் திரும்பும் போது “கண்மணி அன்போடு” பாடலை ஒலிக்க விட்டிருக்கலாம்.

குணா படமும், பாடலும் காட்சி  உத்திக்கு மெருகூட்டி,  பார்வையாளர் ஈர்ப்புக்குக் கைகொடுத்தாலும், தெரிந்த முடிவோடு பயணிக்கும் ஓட்டத்தைச் சுவாரஸ்ய சித்திரமாக்கியதில் படக் குழுவின் பங்கு அபாரம். ஆகவே குணாவை மட்டும் முன்னுறுத்த முடியாது.

ஆக மொத்தத்தில் இயக்குநர் சிதம்பரம் குழுவினரை சபாஷ் போட்டுக் கொண்டாடலாம்.

கானா பிரபா

04.03.20240 comments: