Pages

Thursday, October 16, 2014

நான் பெருமைக்குரிய கிரேஸி மோகன் ரசிகன்

கமலஹாசனுக்குப் பொருத்தமான ஜோடி ஶ்ரீதேவி என்ற நினைப்பை மாற்றி கமலுக்குப் பொருத்தமான ஜோடி கிரேஸி மோகனே என்று சொல்லுமளவுக்கு அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து வெற்றிக் கூட்டணியாக இருந்து வருகிறார்கள்.

நாடக மேடைகளில் இருந்து திரைத்துறைக்கு பாலசந்தரின் "பொய்க்கால் குதிரை" திரைப்படத்தின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிஷ்யப்பிள்ளை கமலின் அபூர்வ சகோதரர்களே கிரேஸி இருக்கிறார் கொமாரு என்று அவர் பெயரைச் சொல்ல வைத்தது. அதற்குப் பின்னால் இன்னும் அழுத்தமாக கிரேஸி மோகன் யார் என்பதை மைக்கேல் மதன காம ராஜனில் ஆரம்பித்து, சதிலீலாவதி,  மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி, காதலா காதலா,  பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி, பம்மல் கே சம்பந்தம் என்று தொடரும் கமல் - கிரேஸி மோகன் பந்தம்  வசனத்தில் பஞ்ச் தந்திரம் அடித்து ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்குக் கடந்த முப்பதாண்டுகளில் இம்மாதிரி தொடர்ச்சியான வெற்றிக் கூட்டணி அமைந்ததில்லை.

கமல்ஹாசன் தவிர்த்து வேறு பல இயக்குநர் படங்களிலும் கிரேஸி மோகன் பணியாற்றியிருந்தாலும் "ஆஹா" படம் தவிர்த்து  கிரேஸி மோகனின் தனித்துவத்தை மெய்ப்பிக்கக்கூடிய படங்கள் வாய்க்கவில்லை என்பேன். "கொல கொலயா முந்திரிக்கா" படத்தை கிரேஸி மோகனை ஹீரோவாக நினைத்துக்  கொண்டுதான் பார்த்து ரசித்தேன். 

என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவரிடம் தனக்குத் தேவையானதை பொருத்தமான களத்தில் முழுச்சுதந்தரம் கொடுத்து வேலை வாங்குபவர் ஜெயித்துக் காட்டுவார். இந்தச் சூத்திரம் இளையராஜாவின் பாடல்களில் கூடப் பொருத்திப் பார்க்கலாம். கமல்ஹாசன் அளவுக்கு கிரேஸி மோகனின் நுண்ணிய நகைச்சுவை உணர்வைத் தன் படைப்புகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிரேஸி மோகனை அவ்வளவு புரிந்து கொள்ளாத படைப்புலகம் இருக்கிறது என்றும் கொள்ளலாம்.

மெல்பர்னில் இருந்த போது பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் "காதலா காதலா" படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ட்ராம் வண்டியில் திரும்புகிறோம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது ஓயாத சிரிப்பு மழையால் அமுங்கிப் போன வசனங்கள் ஒவ்வொன்றையும் அந்த நேரம் அவதானித்த வகையில் ஒவ்வொருவராகச் சொல்லிச் சிரித்து மகிழ்கின்றோம். பின்னர் அடுத்த வாரம் ஆனந்த விகடனின் இரண்டு பக்கங்களில் "காதலா காதலா" படத்தின் குறித்த சில வசனப் பகுதிகளை மட்டும் பகிர்ந்த போது விடுபட்ட இன்னும் பல நகைச்சுவைப் பகிர்வுகளைத் தெரிந்து சிரித்துச் சிரித்துத் தேய்ந்து போனோம்.
அதுதான் கிரேஸி மோகன்.

இளையராஜாவின் பாடல்களைப் பல்லாண்டுகளாகக் கேட்டு வந்தாலும் குறித்த பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிதாய் ஒரு சங்கதி இசையிலோ அல்லது மெட்டமைப்பிலோ கிட்டும். அது போலவே கிரேஸி மோகனின் வசனப் பங்களிப்பும். சோகம் துரத்தும் தருணங்களில் ராஜாவின் இசைக்கு நிகராக இன்னொரு தளத்தில் கை கொடுப்பது அவ்வை சண்முகி மாமியின் அட்டகாசங்கள்.
வெளிநாட்டுப் பயணத்தில் கண்டிப்பாக ஒரு  காட்சி "மைக்கேல் மதன காமராஜன்"ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

கிரேஸி மோகனின் பங்களிப்பு திரைத்துறை தாண்டி மேடை நாடகத்திலும் வெற்றிகரமாக இயங்கினாலும் எனக்கு அந்த அனுபவம் கிட்டவில்லை. ஆனால் ஒலி நாடாவில் வெளிவந்த கிரேஸி மோகன் நாடகங்கள் ஓரளவு ஆறுதல். தொலைக்காட்சியில் கிரேஸி மோகன் நாடகத் தொடர்கள் வந்திருந்தாலும் ஒன்றிரண்டு அங்கங்களுக்கு மேல் என்னை ஈர்க்காதது அவர் குற்றமன்று. அவரின் வசனத்தில் இருக்கும் நவீனத்துவத்தையும் புத்திசாலித்தனத்தையும் சின்னத்திரை ஊடகத்தில் பயன்படுத்தும் போது இன்னும் பலபடிகள் தொழில் நுட்ப ரீதியிலும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
வெள்ளைக்காரனின் நகைச்சுவைத் தொடர்களுக்கு இஞ்சித்தும் குறைந்ததல்ல கிரேஸி மோகனின் பங்களிப்பு ஆனால் அதைப் பணக்காரத்தனமாகக் கொடுக்கும் போது இன்னும் பரவலான ஈர்ப்பைப் பெறும் என்பது இசைஞானியின் ஒரு அற்புத இசையை மொக்கைப் படத்தில் கைமா பண்ணும் போது ஏற்படும் ஏமாற்றத்துக்கு நிகரானது. கிரேஸி மோகன் வசனங்களுக்கென்றே பொருத்தமான கலைஞர்கள் வாழ்க்கைப்பட்டு விட்டார்கள்.

தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்போர் கிரேஸி மோகன் போன்ற ஆளுமைகளையும் அவரால் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் ரசிகர்களையும் தெரிந்திராதவராக இருப்பர்.

கிரேஸி மோகனின் சினிமாப் பதிவுகளைத் தொகுக்க எண்ணி நண்பர்களை இணைத்து கிரேஸி மோகன் சினிமாப்பக்கம் http://crazymohanincinema.wordpress.com என்ற தளத்தை ஒரு வருடம் முன்னர் உருவாக்கியிருந்தேன்.
இன்று பிறந்த நாள் காணும் கிரேஸி மோகனுக்கு கடைக்கோடி ரசிகனாக என் வாழ்த்துகளைத் தெரிவித்து மன நிறைவு கொள்கிறேன்.

7 comments:

சு. திருநாவுக்கரசு said...

கிரேசி மோகனின் கிராகத ரசிகன் நான்! அவரது வசனங்களுக்கு பூரண பொலிவூட்டுவது கமல்தான்!

srinivasansubramanian said...

திறமை இருந்தாலும் அதை வெளிக்கொணர மற்றொரு திறமைசாலி நம்மை இனங்கண்டு துணை நிற்க வேண்டும்.அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஒரு பால்ச்சந்தர் அமைந்தது போல் கிரேசி மோகனுக்கு கமல் கிடைத்தார்.

தனிமரம் said...

என் வாழ்த்துக்களும் தங்களுடன் இணைகின்றது.

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Anonymous said...

அவருடைய புத்தகங்களும் அதே போலத்தான் ...
சஞ்சிகைகளில் தொடர்களாக வந்தவற்றின் முழுமையான தொகுப்பு என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் அவருக்கு ...

பகீரதன்
@karadi_kathai

Anonymous said...

கட்டுரை அருமை சார்
சத்யா படத்தின் போது தான் கமல் crazy சந்திப்பு நடந்ததாக ஒரு பதிவு படித்த நினைவு உண்டு. கற்றோரை கற்றோரே காமுறுவர்

pudugaithendral said...

கிரேசி மோகனின் வசனங்கள் சான்சே இல்லை. 2 நிமிஷம் தாமதமானாலும் 4 ஜோக் மிஸ் செய்து விடுவோம். எனக்கு ரொம்ப பிடிக்கும். தூர்தர்ஷன் காலங்களில் அவரது நாடகங்களுக்காக காத்திருந்தது உண்டு. இப்போ சீடியில் அவரது டிராமாக்கள் கேட்பது பழக்கமாகிவிட்டது.