Friday, May 2, 2008
சிறப்பு நேயர் "கண்ணபிரான் ரவிசங்கர் (KRS)"
கண்ணபிரான் ரவிசங்கர், பெயரிலேயே கண்ணனின் திருநாமத்தை முகவரியாக்கிக் கொண்ட இவர் வலைப்பதிவுலகில் கண்ணன் பெருமையைச் சுவைபடக் கூறும் பதிவர். ஆனால் வெறும் ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே இவரின் அடையாளம் இல்லை என்று சொல்லுமளவுக்கு இசை, இலக்கியச் சுவை, நகைச்சுவை என்று தன் எழுத்தெல்லைகளை பரவலாக்கிக் கொண்டவர். ஏனோ தானோவென்று பதிவைப் போட்டால் போச்சு, பின்னூட்டம் வந்தால் பார்ப்போம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை.
முன்பு நண்பர் ஜீ.ராகவனைப் பற்றிச் சொல்லும் போது தோன்றிய எண்ணங்களே கே.ஆர்.எஸ் ஐப் பற்றி எழுத ஆரம்பித்த போதும் வந்து முளைத்தன.தான் எழுத எடுத்துக் கொண்ட எந்த விடயம் என்றாலும் விரிவான நடைகொடுத்து, நல்ல தமிழ் சொற்கோர்த்து இவர் எழுதும் பாணியே சிறப்பானது. எதையும் ஆராய்ந்து பொருத்தமான வேளையில் கொடுக்கும் இவர் பதிவுகள் பலரின் தேடல்களுக்கு விடைகள் ஆகின்றன.
ஒவ்வொரு பதிவுக்கும் கொடுக்கும் தலைப்பே KRS தான் இந்தப் பதிவின் சொந்தக்காரர் என்று காட்டிக்கொடுத்துவிடும் அளவிற்கு அதிலும் தனித்துவம் காட்டுவார். குறிப்பாக இன்னது தான் சிறப்பானது என்று பொறுக்கி எடுத்துச் சிலாகிக்க முடியவில்லை. காரணம் எழுத முன்னரேயே இவை தான் பதிவுலக வாசகரைப் போய்ச் சேரவேண்டும் என்று அவரே முடிவெடுத்துவிட்டது போலத் தனித்துவமான பதிவுகள் பலவற்றைக் கொடுத்திருக்கின்றார்.
மாதவிப்பந்தல் என்பது இவரின் தனித்துவமான வலைப்பதிவு, கூடவே ஒரு கூடை கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதிவருகின்றார் கே.ஆர்.எஸ். இதோ KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர் தான் தேர்ந்தெடுத்த முத்தான ஐந்து பாடல்கள் குறித்து என்ன சொல்கின்றார் என்று கேட்போம், பார்போம்.
நான் காபி அண்ணாச்சி என்று அழைக்கும் நம்ம கானா பிரபா அண்ணாச்சியைக் கண்மூடித்தனமா கண்டிச்சிட்டு இந்த றேடியோஸ்பதி கச்சேரியைத் துவங்குகிறேன்! பின்னே என்னவாம்?
ஒரு ரொமாண்டிக் பவுர்ணமி இரவில், வீட்டு மொட்டை மாடியில், காதலியுடன் அழகாய்க் கதைத்துக் கொண்டிருந்தேன்! அப்போ, கண் முன்னே தோன்றியது காதல் தேவதை! நீலவானில் கொட்டிக் கிடக்கும் தாரகைகளை எல்லாம் ஒரு பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்திருந்தது.
கூடையில் உள்ளதில், ஐந்து பூக்களை மட்டும் எடுத்துக் கொள்ள உனக்கு வரம் தருகிறேன் என்று தேவதை கூறியது! இப்படியெல்லாம் கொக்கி போட்டு வரம் கொடுத்தா கோபம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்க!
அந்தக் கூடையில் மின்னி மினுக்கும் நட்சத்திரங்களை எல்லாம் அப்படியே அள்ளி அள்ளிக், காதலியின் மேல் பொழிய மனசு துடிக்குது! ஆனால் தேவதையோ "லிமிட் ஃபைவ்" என்கிறது!
அது போல இருக்கு காபி அண்ணாச்சி சொல்லும் றேடியோஸ்பதி "லிமிட் ஃபைவ்" கணக்கு! சரி, கொடுத்த வரத்தை இப்போதைக்கு வாங்கிக் கொள்வோம்! அமிழ்தினும் இனிய தமிழ்த் திரையிசையில் இதோ...எனக்குப் பிடித்த ஐந்து நட்சத்திரங்கள்!
--------------------------------------------------------------------------------
1. நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்!
படம்: டிஷ்யூம்
குரல்: ஜெயதேவ், ராஜலக்ஷ்மி
இசை: விஜய் ஆன்டனி
வரி: புவன சந்திரா
என்னை வழிக்கு கொண்டு வருவது எப்படி என்று என் நெருங்கிய நண்பர்களுக்கு நல்லாத் தெரியும்! இந்தப் பாட்டு தான்! :-)
மனம் கனமாக இருக்கும் போது, சட்டென்று இந்தப் பாட்டு நினைவுக்கு வந்துருச்சின்னா போதும், உடனே லைட்டாகி விடுவேன்! ஏன் என்றால் இந்தப் பாட்டில் சோகமும் இருக்காது! சந்தோஷமும் பிச்சிக்கிட்டு கொட்டாது! "நிறைவு" என்று சொல்கிறோமே, அது!
"எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன் - இன்னும் பூமுகம் மறக்கவில்லை" என்று காதலன் பாடுவான்! எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!
பாட்டில் ஜீவாவும் சந்தியாவும் தோன்றும் காட்சிகள், அதிலும் அந்தப் படகுவீட்டில் முதலிரவு நடப்பதாய் வரும் கனவு, எனக்கு மிகவும் பிடித்த ஒன்று :-)
விஜய் ஆன்டனி சில ஹிட்களே கொடுத்த இளம் இசையமைப்பாளர். அதுக்கு அப்புறம் இவரை ரொம்பக் காணவில்லையே! இதில் பாடுபவர்களும் புதுமுகங்கள் தான்! ஆனாலும் பாட்டு செம ஹிட். பாட்டின் மெட்டு கொஞ்சம் க்ளாசிக்கல் என்றாலும், மெலடி பாடல்களில் இது ஒரு மகுடம் தான்!
இந்தப் பாட்டோட ராகம் பிருந்தாவன சாரங்கா என்று பிற்பாடு ஒரு நண்பர் சொன்னார்! நமக்கு எங்க அதெல்லாம் தெரியப் போகுது? பிருந்தாவனம் கண்ணனுக்குப் பிடிச்சதாச்சே! அதான் என் கூடவே ஒட்டிக்கிச்சி போல! :-)
பாட்டின் ஹை-லைட் வரிகளே...நட்சத்திரத்தை எல்லாம் கூப்பிட்டுக் காதலைச் சொல்ல முடியுது, ஆனா அவளிடம் மட்டும் சொல்ல முடியலையே என்ற ஏக்கம்!
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு
பட்டினியா கிடப்பாளே அது போலே...
பாடலைப் பார்க்க
படிக்க
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பாட்டே
நெஞ்சாங்கூட்டில் முதலில் நிற்கிறாய்!!
--------------------------------------------------------------------------------
2. உச்சி வகிந்தெடுத்து
படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
குரல்: SPB
இசை: இளையராஜா
வரி: புலமைப்பித்தன்
காலத்தால் அழியாத பாடல்-னு சொல்லுவாங்களே (Evergreen Song)! அதில் இது ஒன்னு!
பொதுவா எனக்கு நாட்டுப்புறப் பாடல்கள்-னா ரொம்பவே உசுரு! (கானா ஊர்ஸ்ல நாட்டார் பாடல்-ன்னு சொல்லுவாய்ங்களாம்). இதுல பெருசா தாம் தூம்-னு இசை இருக்காது. அலங்காரமாச் சொற்களும் இருக்காது! இசைக் கருவிகளும் சாதாரண டொய்ங்க் டொய்ங்க் கருவிகள் தான்! ஆனா எந்த வேஷமோ முகமறைப்போ பாசாங்குகளோ இல்லாம, இதயத்தோடு நேரடியாப் பேசும் பாடல்கள் இவை.
என் கொஞ்ச நாள் வாழைப்பந்தல் கிராம வாசம் இன்னும் எனக்குள்ளாற வீசிக்கிட்டே தான் இருக்கு! அதுவும் எங்க ஆயா பாடிய நாட்டுப் பாடல்கள்! அதுலயும் தாலாட்டுப் பாட்டுங்கனா ரொம்பவும் பிடிக்கும். (சரியான கும்பகர்ணன் என்பதை எப்படி எல்லாம் டீஜன்டா சொல்லுறான்-ன்னு அங்க யாருப்பா சவுண்டு வுடறது? :-)
நான் தான் தூங்கிட்டனே-ன்னு நெனச்சி பாட்டைப் பாதியில் நிறுத்திருவாங்களாம்! ஆயா மறந்துட்டாங்க போல-ன்னு மீதியை நான் அப்பவே எடுத்துக் கொடுப்பே-ன்னு இப்பவும் வூட்ல சொல்லிச் சிரிப்பாய்ங்க!
பிச்சிப்பூ, ராக்கொடி, சித்தகத்தி, வட்டக்கருப்பட்டி-ன்னு கிராமச் சொற்களா இந்தப் பாட்டில் வரும்! சிவகுமார் தன் மனைவியைப் பத்தி ஊரு என்னென்னமோ சொல்லும் போது, நம்பவும் முடியாம, தள்ளவும் முடியாமப் பாடுவாரு! எப்பமே ஸ்டைலாப் பாடும் SPBயா இதப் பாடுறாரு-ன்னு நமக்கே சந்தேகம் வந்துரும்! பாட்டுல கிராம வாத்தியங்களும் ஒலிக்கும். என்னென்ன-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
நம்ம மேல யாராச்சும் அபாண்டமாச் சொல்லிட்டாங்கன்னா...இல்லை ஆபீஸ் அரசியல்...இல்லை பதிவு அரசியல்...எதுவா இருந்தாலும்.....இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்க!
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
ஆரீராரோ! ஆரீராரோ! ஆரீரா-ரீராரி-ஆரீராரோ!
அப்படியே தட்டித் தட்டித் தூங்க வைப்பது போல்! ராஜா என்னிக்குமே ராஜா தான்!
பாடலைப் பார்க்க
படிக்க
--------------------------------------------------------------------------------
3. அற்றைத் திங்கள் வானிடம்
படம்: சிவப்பதிகாரம்
குரல்: மது பாலகிருஷ்ணன், சுஜாதா
இசை: வித்யாசாகர்
வரி: யுகபாரதி
இந்தப் பாடலைக் கேட்ட பிறகு கல்லுக்குக் கூட காதல் ரசம் சொட்டும்! Husky Voice என்பார்களே, அதுக்கு இந்தப் பாடல் நல்ல எடுத்துக்காட்டு! சுஜாதா மிக அழகாகப் பாடி இருப்பார்கள். நான் அடிக்கடி இரவில் கேட்கும் பாட்டு! Yeah, this is absolutely a night song! :-)
அற்றைத்திங்கள் வானிடம், அல்லிச்செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம், சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல் என்னிடம், நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
இந்தப் பாட்டைக் கொஞ்சம் உன்னிப்பாக் கேளுங்க! அந்த "ம்" சத்தம் ஒவ்வொரு வரியிலும் கேட்கும்! காதலன்-காதலி பேச்செல்லாம் கொஞ்சம் கொஞ்சமா எப்படி அடங்கும்-னு நினைக்கறீங்க? அந்த "ம்" சத்தத்தில் தானே? அதைப் பாட்டில் அழகா கொண்டு வந்திருப்பாரு கவிஞர்! தூய தமிழ்ச் சொற்கள் புழங்கும் பாட்டு இது!
நடுங்கலாம் குளிர் வாடையில், அடங்கலாம் ஒரு ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில், உறங்கலாம் அதிகாலையில்
-ன்னு ரசம் கொஞ்சம் ஸ்ட்ராங்காத் தான் இருக்கும்! ஆனா ராங்கா இருக்காது! :-)
பாடலைப் பார்க்க
படிக்க
--------------------------------------------------------------------------------
4. மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
படம்: ஷாஜகான்
குரல்: உன்னி மேனன்
இசை: மணிசர்மா
வரி: வைரமுத்து
இந்தப் படத்தைப் பார்த்ததில்லை! ஆனா இந்தப் பாட்டை எத்தனை வாட்டி கேட்டிருக்கேன்னு எனக்கே தெரியாது! இளையராஜாவாக்கும் தான் முதல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன். அப்பறம் தான் தெரிஞ்சிச்சி, மணிசர்மாவாம்! உன்னியும் நல்லாவே பாடி இருப்பாரு!
பாட்டு முழுக்க தட்டல் ஓசை, பாட்டுக்கே ஒரு ஜீவ களை சேர்க்கும்! அதை விட சிறப்பம்சம், பாட்டில் வரும் வயலின் இசை! ஏக்தார்-ன்னு ஒரு ஒற்றைத் தந்தி கருவி! அதில் வரும் இசையை அப்படியே வயலினில் போட்டிருப்பார் மணிசர்மா! It's just awesome!
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா-ன்னு வரும் வரிகளை அழுத்தி அழுத்திப் பாடி, நண்பர்கள் என்னை அடிக்கவும் வந்திருக்கிறார்கள்!
தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜன்மம் மரணம் ரெண்டும் தருபவளே - நிஜமாலுமே வைரமுத்துவின் வைர வரிகள் தான்!:-)
பாடலைப் பார்க்க
படிக்க
--------------------------------------------------------------------------------
5. ஆயர்பாடி மாளிகையில், தாய் மடியில் கன்றினைப் போல்
இசைவட்டு: கிருஷ்ண கானம்
குரல்: SPB
இசை: MSV
வரி: கண்ணதாசன்
மீண்டும் இன்னொரு தாலாட்டா-ன்னு கேக்குறீங்களா? ஹிஹி! நான் தான் முன்னமே சொன்னேனே என்னைப் பத்தி!
மெல்லிசை மன்னர் பல அருமையான பக்திப் பாடல்களைத் தந்திருக்காரு! ஆனா இது பக்திப் பாடல்-ன்னே சொல்ல முடியாது அளவுக்கு, தாலாட்டும் தாய்மையும் மட்டுமே மிஞ்சி நிற்கும்! SPB குரலின் மென்மையில் கிறங்கி உறங்கி விடலாம்.
வீட்டில் பெருசா ஏதாச்சும் சண்டை வந்தா, சாப்பிடாமல் தூங்கிருவேன். நள்ளிரவில், தட்டில் ரசம் சாதம் போட்டு எடுத்துக்கிட்டு வருவாங்க! ரோஷத்துல கொஞ்சமா சாப்பிட்டு விட்டு, மீண்டும் தூங்கப் போயிருவேன்! யார் கூடவும் பேச மாட்டேன்!
அவங்களும் தரையிலேயே படுத்துப்பாங்க! கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இந்தப் பாட்டு சன்னமா, ஹம்மிங் டோன்ல கேக்க ஆரம்பிக்கும்!
பேசாத ரோஷக்காரன்..."அம்மா"ன்னு கூப்பிட.....அட, இதுக்கு மேல சொல்ற சக்தி இல்லீங்க!
பாடலைப் படிக்க
பார்க்க
இனிய நினைவுகளை எல்லாம் அசை போட வைத்த காபி அண்ணாச்சிக்கு நன்றி!:-)
anbudan, krs
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
தெரிவுகள் சிறப்பாக இருந்தாலும் குறிப்பாக 'உச்சி வகிந்தெடுத்து..' பாடலின் அறிமுகம் மிகவும் சிறப்பு. பாராட்டுக்கள் கே.ஆர்.எஸ்.
இப்படி புதைந்து போன பாடல்களையும் இவ்வாறான முயற்சியின் மூலம் வாரம் தோறும் நினைவுபடுத்தும் கானா பிரபாவிற்கு விசேட நன்றிகள்.
அடாடா..கேயாரெஸ் அண்ணாச்சி,
முதல்ல கையைக் கொடுங்க..
எப்படிங்க இப்படியெல்லாம்?
எனக்குப் பிடிச்ச எல்லாப் பாட்டும் உங்களுக்கும் பிடிச்சிருக்கு?
1.இந்தப் பாட்டு ஆஹா...
அடிக்கடி கேட்கும் பாட்டு..பாடியவர் பிரசன்னா என்று நினைத்திருந்தேன்.
மிக அழகான பாடல் இல்லையா?
//விஜய் ஆன்டனி சில ஹிட்களே கொடுத்த இளம் இசையமைப்பாளர். அதுக்கு அப்புறம் இவரை ரொம்பக் காணவில்லையே!//
'பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்'பாடலின் இசையும் இவர்தானே?
அந்தப் பாடலும்,வரிகளும் கூட எனக்கு மிகப்பிடிக்கும்.
//அதிலும் அந்தப் படகுவீட்டில் முதலிரவு நடப்பதாய் வரும் கனவு, எனக்கு மிகவும் பிடித்த ஒன்று :-) //
அப்ப,இப்பவே ஒரு படகு வீட்டை புக் பண்ணி வச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். :P
2.இந்தப்பாட்டை யாருமற்ற நள்ளிரவில் அமைதியான மெல்லிசையில் கேட்கணும்.
ரொம்ப இனிமையா இருக்கும்.
எஸ்.பி.பி யின் குரலில் கவனித்தீர்களா? நாயகனின் சோகமும்,இயலாமையும் குரலில் அபாரமாக வெளிப்படும் பாடலிது அல்லவா?
//நம்ம மேல யாராச்சும் அபாண்டமாச் சொல்லிட்டாங்கன்னா...//
இவ்வளவு இனிமையா இருக்கீங்க..உங்களைப் போய் யாராவது,ஏதாவது அபாண்டமா சொல்வாங்களா?இங்க பொய்யெல்லாம் சொல்லக் கூடாதுன்னு நண்பர் பிரபா சொல்லலியா?
3.ஆஹா..அற்றைத் திங்கள் வானிடம்...
எவ்வளவு அழகான காதல்பாடல்...
காணுகின்ற காதல் என்னிடம்..
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்..
ஆர்ப்பாட்டமில்லாத மெல்லிசை
அடிதொட,முடி தொட,ஆசை பெருகிட நேரும் புதுவித பரிபாஷை..
பொடி பட,பொடிபட நாணம் பொடிபட கேட்கும் மனதினில் உயிரோசை...
முகம்தொட முடி தொட மோகம் முழுகிட வேர்க்கும் முதுகினில் இதிகாசம்..
உருகிட உருகிட ஏக்கம் உருகிட கூடும் அனலிது குளிர்வீசும்..
மேனி சிலிர்க்கச் செய்யும் யுகபாரதியின் அழகிய வரிகள்.தூய தமிழிலான காதலின் பாடல்.
மதுபாலகிருஷ்ணனின் குரலில் கே.யேசுதாஸ் அவர்களின் குரலின் சாயல் இழையோடுகிறது கவனித்தீர்களா?
4.மின்னலைப் பிடித்து...
மணிசர்மாவின் அருமையான பாடல்..
பாருங்கள்..தெலுங்கு இசையமைப்பாளர் என்றாலும் அழகிய தமிழில் முழுப்பாடல்..
எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய வரிகள்.
இந்தப் படத்தின் மெல்லினமே..மெல்லினமே..
பாடலும் எனக்கு மிகப்பிடிக்கும்.
5.ஆயர்பாடி மாளிகையில்...
சின்ன வயசில் ஸ்கூலில் பாட்டுப் பாடச்சொன்னால் இதைத்தான் பாடுவேன்...உடனே எல்லோரும் தூங்கிட்டாங்களான்னு கேட்கப்படாது..
பழைய,இனிய நினைவுகளைக் கிளறி விட்டுட்டீங்க நண்பா..
போட்டோல அசத்தலா இருக்கீங்க கேயாரெஸ்..
இனிமே பெண் ரசிகைகள் எண்ணிக்கை கூடப்போகுது..:)
அழகான பாடல்களைத் தந்தமைக்கு நன்றிகள் கேயாரெஸ்.. :)
நண்பர் கானாபிரபாவுக்கும் ஒரு கைகுலுக்கல் :)
21ம் நூற்றாண்டின் ஆழ்வாராகிய திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களின் விருப்பப் பாடல்களை வழங்கிப் பெருமை கொண்ட கானா பிரபாவிற்கு நன்றி பல.
// அந்தக் கூடையில் மின்னி மினுக்கும் நட்சத்திரங்களை எல்லாம் அப்படியே அள்ளி அள்ளிக், காதலியின் மேல் பொழிய மனசு துடிக்குது! ஆனால் தேவதையோ "லிமிட் ஃபைவ்" என்கிறது! //
ஆகா ஆகா ஒங்கக் காதலி குடுத்து வெச்சவங்க.அவங்கமேல தாரகைகளை அள்ளித்தெளிக்க விரும்புறீங்க. கண்ணன் மேல இப்பிடிச் செய்ய கோபிகைகள் விரும்புவாங்களாம். அந்த மாதிரி இருக்கு ஒங்க பக்தி கலந்த அன்பு. ஒங்க பூஜ்யஸ்ரீ காதலியை நல்லா பாத்துக்கோங்க. :)
கானாபிரபாவுக்கு ஒரு கேள்வி. கே.ஆர்.எஸ் படத்தப் போடாம எதுக்கு ரெண்டு கிஷ்னரு படம் போட்டிருக்கீங்க? இதெல்லாம் தப்பு. என்னோட படத்த ரிஷானோட படத்தப் போட்டுட்டு.. கே.ஆர்.எஸ்க்கு வர்ரப்போ அவரோட சாமியான கிருஷ்ணரின் படத்த ரெண்டு வாட்டி போட்டிருக்கீங்களே!
பிரபா, கே.ஆர்.எஸ் ஒரு பொய் சொல்லீட்டாரு. அவருக்குப் பிடிச்ச பாட்டு ஒன்னு இருக்கு. ரொம்ப ரொம்பப் பிடிச்சப் பாட்டு. அதைத்தான் இப்பல்லாம் அடிக்கடிக் கேட்டு புளகாங்கிதம் அடையுறாராம். அந்தப் பாட்டு இந்தப் பாட்டுதான்.
http://www.imeem.com/people/W1QMsu/music/112TPCC0/kamalhassan_ksr_dasavatharam_kallai_mattum_kandal/
//கே.ஆர்.எஸ்க்கு வர்ரப்போ அவரோட சாமியான கிருஷ்ணரின் படத்த ரெண்டு வாட்டி போட்டிருக்கீங்களே//
ஹா ஹா ஹா....
கண்ணனின் மயக்கும் மோகனமே அது தான் ஜிரா!
நீங்க மயங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! :-))))))
@காபி அண்ணாச்சி!
படங்கள் மிக அருமை! New Generation Paintings - வாட்டர் கலரோ? வண்ணங்கள் பிரகாசிக்குது! கையைக் கொடுங்க!
//ஆகா ஆகா ஒங்கக் காதலி குடுத்து வெச்சவங்க//
என்னத்த குடுப்பாங்க? என்னத்த வச்சுப்பாங்க? ஹிஹி! :-))
//கண்ணன் மேல இப்பிடிச் செய்ய கோபிகைகள் விரும்புவாங்களாம்.//
அடப்பாவி! ஒளிஞ்சிருந்து பாத்தீங்களா? :-)
//அந்த மாதிரி இருக்கு ஒங்க பக்தி கலந்த அன்பு//
பக்தி எல்லாம் இல்ல! வெறும் அன்பு தான்! நோ கலப்படம்-ஸ்!
//ஒங்க பூஜ்யஸ்ரீ காதலியை நல்லா பாத்துக்கோங்க. :)//
உன் சித்தம், என் பாக்கியம் ராகவா! :-)
//ஆ.கோகுலன் said...
தெரிவுகள் சிறப்பாக இருந்தாலும் குறிப்பாக 'உச்சி வகிந்தெடுத்து..' பாடலின் அறிமுகம் மிகவும் சிறப்பு. பாராட்டுக்கள் கே.ஆர்.எஸ்.//
நன்றி கோகுலன்!
அதே படத்துல வெத்தல வெத்தல வெத்தலையோ....கொழுந்து வெத்தலையோ-ன்னு இன்னோரு பாட்டும் வரும்! அதுவும் நல்லா இருக்கும்!
//இப்படி புதைந்து போன பாடல்களையும் இவ்வாறான முயற்சியின் மூலம் வாரம் தோறும் நினைவுபடுத்தும் கானா பிரபாவிற்கு விசேட நன்றிகள்//
ஆமா...காபி அண்ணாச்சியால இப்படி எல்லாம் புதையல் தோண்டறோம்! தமிழ்த் திரை இசையில் கிராமீய/நாட்டார் பாடல்கள் பற்றி ஒரு தொடர் இன்னும் சில நாளில் இசை இன்பம் வலைப்பூவில் தர இருக்கோம்! அதையும் தவறாது பாருங்க! உங்களுக்குப் பிடிச்சிருக்கும்!
ரவியின் விருப்பப் பாட்லக்ள் அதற்கு அவர் தந்தவிளக்கம் எல்லாம் அருமை. ஏந்தான் எங்க 13வது ஆழ்வாரை ஜிரா இப்படிக் கிண்டல் செய்யறீங்களோ!!!!
//எம்.ரிஷான் ஷெரீப் said...
அடாடா..கேயாரெஸ் அண்ணாச்சி,
முதல்ல கையைக் கொடுங்க..//
ஹிஹி இந்தாங்க ரிஷான்...கையி :-)
//எப்படிங்க இப்படியெல்லாம்?
எனக்குப் பிடிச்ச எல்லாப் பாட்டும் உங்களுக்கும் பிடிச்சிருக்கு?//
Great men dash dash :-))
//1.பாடியவர் பிரசன்னா என்று நினைத்திருந்தேன்.//
இல்லை ரிஷான்! பாடுபவர் ஜெயதேவ்! "ஏன் எனக்கு மயக்கம்" பாட்டும் இவர் தான் பாடுவாரு - நான் அவன் இல்லை படத்துல.
//'பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்' பாடலின் இசையும் இவர் தானே?//
ஆமா ரிஷான்! அவரே தான்!
ஆனா படமும் அதே படம் தான்! - அதான் அவரே இசை! :-))
பாட்டின் வரிகள் நீங்க சொல்வது போல் சூப்பரா இருக்கும்!
//அப்ப,இப்பவே ஒரு படகு வீட்டை புக் பண்ணி வச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். :P//
ஹிஹி! தனியா சாட்டில் சொல்லுறேன்! :-)
//2. எஸ்.பி.பி யின் குரலில் கவனித்தீர்களா?//
ஆமா ரிஷான்! நடு இரவில் ஏகாந்தமா கேட்கும் பாட்டு தான்! பல பேருக்கு அப்படிக் கிராம வாசனையா பாடுறது SPBயான்னே ஒரு சந்தேகம் வந்துரும்!
//இவ்வளவு இனிமையா இருக்கீங்க..உங்களைப் போய் யாராவது, ஏதாவது அபாண்டமா சொல்வாங்களா?//
ஹிஹி! இனிமையா? நானா? ஓ அதான் என்னை ரொம்ப எறும்பு கடிக்குதா? ஜிரா நோட் திஸ் பாயிண்ட்டு! :-))))
//3.அடி தொட,முடி தொட,ஆசை பெருகிட நேரும் புதுவித பரிபாஷை..
பொடி பட,பொடி பட நாணம் பொடி பட கேட்கும் மனதினில் உயிரோசை...//
அடி சக்கை! மனப்பாடமா சொல்றீங்க! அதுவும் எனக்குப் பிடித்த வரிகளை! நீங்க சொல்வது போல் கொஞ்சும் காதல் + கொஞ்சும் தமிழ் ரசம் சேர்ந்தா நிச்சயம் அது அமுதம் தான்!
//கே.யேசுதாஸ் அவர்களின் குரலின் சாயல் இழையோடுகிறது கவனித்தீர்களா?//
ஆமா ரிஷான்! நீங்க சொல்வது சரி தான்! மது கிட்ட கொஞ்சம் கொஞ்சம் யேசுதாஸ் சாயல் வீசுது! esp when he sings huskily...பாடும் போது லைட்டா மூச்சும் வாங்குது!
//4.மின்னலைப் பிடித்து...
இந்தப் படத்தின் மெல்லினமே..மெல்லினமே..
பாடலும் எனக்கு மிகப்பிடிக்கும்//
மெல்லினமே மெல்லினமே-வும் சூப்பர் பாட்டு! அதே படத்தில் அச்சச்சோ புன்னகை பாட்டும் நல்லா இருக்கும்! ஆனா மின்னலைப் பிடித்து மற்ற எல்லாப் பாடல்களிலும் தனித்து நிற்கும் just bcoz of serene and simple music! இந்தப் பாட்டின் துவக்கத்தில், காற்று வீசும் ஓசையை மட்டுமே சிறிது நேரம் இசையாக ஓட விட்டிருப்பார்கள்! so romantic! :-)
//5.ஆயர்பாடி மாளிகையில்...
சின்ன வயசில் ஸ்கூலில் பாட்டுப் பாடச்சொன்னால் இதைத்தான் பாடுவேன்...//
வாவ்! நீங்க ஒரு பாடகரா? சொல்லவே இல்ல? Dankees காபி அண்ணாச்சி!
//உடனே எல்லோரும் தூங்கிட்டாங்களான்னு கேட்கப்படாது..//
கேட்க மாட்டேன்! ஜிடாக்குல எனக்கு பாடுங்க! நான் தூங்கறேன்! :-)
//போட்டோல அசத்தலா இருக்கீங்க கேயாரெஸ்..
இனிமே பெண் ரசிகைகள் எண்ணிக்கை கூடப்போகுது..:)//
ஆகா! இப்படி ஒரு ஆசீர்வாதமா? :-)
சூப்பரோ சூப்பர்!
ஒவ்வொரு பாட்டையும் ரசிச்சி ரசிச்சிப் பின்னூட்டமா போட்டதுக்கு நன்றி நண்பா!
வாழ்வின் ரசனை உணர்வும் லயிப்பும் உங்களுக்கு இயல்பா இனிமையா இருக்கு ரிஷான்! வாழ்த்துக்கள்! :-)
//ஷைலஜா said...
ரவியின் விருப்பப் பாட்லக்ள் அதற்கு அவர் தந்த விளக்கம் எல்லாம் அருமை//
நன்றி ஷைலு அக்கா!
//ஏந்தான் எங்க 13வது ஆழ்வாரை//
யாரு அவரு? ஆழ்வார் படம் அஜீத் குமாரா? :-))
//ஜிரா... இப்படிக் கிண்டல் செய்யறீங்களோ!!!!//
ஜிராவின் சின்னச் சின்னக் கிண்டல்
நமக்கு இனிய கடற்கரைச் சுண்டல்!
தமிழ்ப் பயிர் வளர்ந்திடும் வண்டல்!
குளிர் மழை பொழிந்திடும் கொண்டல்!
ராகவா
ஆதலினால் கிண்டல் செய்வீர்! :-))
\\ஆனால் வெறும் ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே இவரின் அடையாளம் இல்லை என்று சொல்லுமளவுக்கு இசை, இலக்கியச் சுவை, நகைச்சுவை என்று தன் எழுத்தெல்லைகளை பரவலாக்கிக் கொண்டவர். ஏனோ தானோவென்று பதிவைப் போட்டால் போச்சு, பின்னூட்டம் வந்தால் பார்ப்போம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை. \\
தல 200% சரியாக சொன்னிங்க...;))
\\தான் எழுத எடுத்துக் கொண்ட எந்த விடயம் என்றாலும் விரிவான நடைகொடுத்து, நல்ல தமிழ் சொற்கோர்த்து இவர் எழுதும் பாணியே சிறப்பானது. எதையும் ஆராய்ந்து பொருத்தமான வேளையில் கொடுக்கும் இவர் பதிவுகள் பலரின் தேடல்களுக்கு விடைகள் ஆகின்றன.\\
எந்த ஓரு விஷயத்தையும் யார் மனதும் புண்படாமல், புரியும் படி எடுத்து சொல்வதில் தல கே.ஆர்.எஸ் வழி தனி வழி ;)
\\G.Ragavan said...
21ம் நூற்றாண்டின் ஆழ்வாராகிய திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களின் விருப்பப் பாடல்களை வழங்கிப் பெருமை கொண்ட கானா பிரபாவிற்கு நன்றி பல.
\\
வழிமொழிக்கிறேன் ;))
1. நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்!
முதல் பாட்டே காதல் பாட்டு...எனக்கும் பிடித்த பாடல்..அந்த படகுவீடும் ரொம்ப பிடிக்கும் ;)
2. உச்சி வகிந்தெடுத்து
இந்த பாடலை பற்றி நீங்கள் சொல்லியிருப்பதில் வரிக்குவரி ஒத்துப்போகிறேன். அருமையான பாடல்..அழகான விளக்கம்;)
3. அற்றைத் திங்கள் வானிடம்
அதிகம் கேட்டத்தில்லை...உங்களின் விளக்கம் கேட்க தூண்டுகிறது. ;)
4. மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
நானும் இந்த படத்தை பார்த்ததில்லை...இந்த பாடலை நிறைய தடவை கேட்டுயிருக்கிறேன். ;)
5. 5. ஆயர்பாடி மாளிகையில், தாய் மடியில் கன்றினைப் போல்
தல...இந்த பாடலை பற்றி சொல்ல ஒன்னும் இல்ல...அதுவும் விளக்கத்தை படித்தவுடன் அம்மா ஞாபகம் வந்திருச்சி..ரொம்ப அழகாக சொல்லியிருக்கிங்க தல ;)
ஒவ்வொரு பாடலின் விளக்கமும்...பாடலும் அருமை..;)
தல கே.ஆர்.எஸ்க்கு நன்றி ;)
//G.Ragavan said...
பிரபா, கே.ஆர்.எஸ் ஒரு பொய் சொல்லீட்டாரு. அவருக்குப் பிடிச்ச பாட்டு ஒன்னு இருக்கு. ரொம்ப ரொம்பப் பிடிச்சப் பாட்டு. அதைத்தான் இப்பல்லாம் அடிக்கடிக் கேட்டு புளகாங்கிதம் அடையுறாராம்//
ஹிஹி!
திங்கட்கிழமை காலையில் இந்தப் பாட்டுக்கு என்றே ஒரு தனிப் பதிவை மாதவிப்பந்தலில் எதிர்பாருங்கள்!
கமலஹாசன் & his "naked" lies :-))
//21ம் நூற்றாண்டின் ஆழ்வாராகிய திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களின் விருப்பப் பாடல்களை வழங்கிப் பெருமை கொண்ட கானா பிரபாவிற்கு நன்றி பல.//
ஆழ்வாரா?, நான் 21ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இராமானுஜர்ன்னு இல்ல கேள்விப்பட்டேன்....
//3. அற்றைத் திங்கள் வானிடம்
அதிகம் கேட்டத்தில்லை...உங்களின் விளக்கம் கேட்க தூண்டுகிறது. ;)//
ரீப்பீட்டே...
அதுவும் ரிஷானின் பின்னூட்டத்தை படித்தபின் கேட்காமலும் இருக்கலாமோ? :)
ஹைய்யோ ஹைய்யோ....
பாட்டுகள் எல்லாம் சூப்பர்ன்னு சொன்னா, படம் பழமா இருக்கேப்பா:-))))
நான் சொல்வது கேஆரெஸ்ஸின் படம்!!!
பிரபா, ஜி.ரா, மற்றும் கே.ஆர்.எஸ் சார்களே..
என்னமாக கலக்குறீங்க சார். நடத்துங்க நடத்துங்க நான் தான் ரொம்பா லேடோஓஓஓஓ (ஹி ஹி ஹி)
எப்படி எல்லாருக்கும் பிடிச்ச பாட்டை இவர் போடறார். நல்ல பல்ஸ் பார்த்துத்தான் செய்யறாருப்பா கேஆர் எஸ்.
உச்சி வகிடெடுத்து பாட்டு, சுகமான சோகம்.
செலெக்ஷன் சூப்பர் சாரே.
//கோபிநாத் said...
எந்த ஓரு விஷயத்தையும் யார் மனதும் புண்படாமல், புரியும் படி எடுத்து சொல்வதில் தல கே.ஆர்.எஸ் வழி தனி வழி ;)//
மாப்பி கோப்பி - நன்றிபா!
என் வழி தனி வழி எல்லாம் தலைவர் சொல்லுறது! நான் இல்ல! :-)
//அந்த படகுவீடும் ரொம்ப பிடிக்கும் ;)//
ஹேய்...எதுக்குப் பிடிக்கும்-னும் சொல்லு! சொல்லு! சொல்லு! :-))
//அற்றைத் திங்கள் வானிடம்
அதிகம் கேட்டத்தில்லை...உங்களின் விளக்கம் கேட்க தூண்டுகிறது. ;)//
சொக்கிப் போயிடுவே மாப்பி! ஜிரா சொக்கி, ரிஷான் சொக்கி, மெளலி அண்ணா சொக்கி...பாருங்க சத்தம் போடாம சொக்கி இருக்காய்ங்க! :-)
//. மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
நானும் இந்த படத்தை பார்த்ததில்லை...இந்த பாடலை நிறைய தடவை கேட்டுயிருக்கிறேன். ;)//
படம் போராம் கோபி! விஜய் படம் ஹிட் இல்லியாம்! ஒன்லி பாட்டு!
//ஆயர்பாடி மாளிகையில், தாய் மடியில் கன்றினைப் போல்
தல...இந்த பாடலை பற்றி சொல்ல ஒன்னும் இல்ல...அதுவும் விளக்கத்தை படித்தவுடன் அம்மா ஞாபகம் வந்திருச்சி//
எனக்கும் எழுதும் போது ஒரே ஃபீலிங்க்ஸா! ஆனா எழுதி முடிச்ச ஒடனே இந்தியப் பயணம்! எப்படியோ சரிக்கட்டிட்டேன்! :-)
விரிவா லயிச்சி ஒவ்வொரு பாட்டா ரசிச்சதுக்கு நன்றி கோபி!
// மதுரையம்பதி said...
ஆழ்வாரா?, நான் 21ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இராமானுஜர்ன்னு இல்ல கேள்விப்பட்டேன்....//
அண்ணா வேணாம்! கேள்விப்பட்டீங்களா? அடிங்க! கெளப்பி வுட்டதே நீங்க தான்! :-))
//3. அற்றைத் திங்கள் வானிடம்
அதுவும் ரிஷானின் பின்னூட்டத்தை படித்தபின் கேட்காமலும் இருக்கலாமோ? :)//
அதானே! காதல் மன்னன் ரிஷான் சொன்னாப் பிறகு காதல் பாட்டுக்கு அப்பீல் ஏது? கேளுங்க! கேளுங்க! :-)
//துளசி கோபால் said...
ஹைய்யோ ஹைய்யோ....
பாட்டுகள் எல்லாம் சூப்பர்ன்னு சொன்னா//
டீச்சர்!
நீங்களும் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் தான் முதலில் போட்டீங்க! பாருங்க...Teacher and Student think alike! இதுக்காகவே எனக்கு எக்ஸ்ட்ரா பத்து மார்க் போடணும் சொல்லிட்டேன்! :-))
//படம் பழமா இருக்கேப்பா:-))))
நான் சொல்வது கேஆரெஸ்ஸின் படம்!!!//
ஹிஹி!
அது Strawberry பழம்! :-)
இப்போ இந்தியப் பயணத்தின் போது, என் தங்கச்சிப் பொண்ணு என்னை இப்படிப் போஸ் கொடுக்கச் சொல்லிப் புடிச்ச போட்டா அது! :-))
//Covai Ravee said...
பிரபா, ஜி.ரா, மற்றும் கே.ஆர்.எஸ் சார்களே..
என்னமாக கலக்குறீங்க சார்//
நன்றிங்க கோவை ரவீ சாரே! :-)
//நடத்துங்க நடத்துங்க நான் தான் ரொம்பா லேடோஓஓஓஓ (ஹி ஹி ஹி)//
பதிவுல லேட்டு-ங்கிற பேச்சுக்கே இடமில்லை! ஒரு வருசம் கழிச்சி வந்து கூட பின்னூட்டம் போட்டு உசுரு கொடுக்கலாம்! :-))
//வல்லிசிம்ஹன் said...
எப்படி எல்லாருக்கும் பிடிச்ச பாட்டை இவர் போடறார். நல்ல பல்ஸ் பார்த்துத்தான் செய்யறாருப்பா கேஆர் எஸ்.//
ஹிஹி!
நான் Dr.KRS இல்லீன்னாலும் நல்லா பல்ஸ் பிடிப்பேன் வல்லியம்மா! அதுவும் யாரோட பல்சைத் தெரியுமா? :-))
//உச்சி வகிடெடுத்து பாட்டு, சுகமான சோகம்//
ஆமாங்க வல்லீம்மா! சுகமான மெட்டு! சோகமான கதை!
சிவகுமாரைப் பார்க்கப் பாவமா இருக்கும்! :-(
நல்ல பாடல்கள். அழகான தொகுப்பு.
காதல் பாடல்கள் மூன்று கொடுத்தீங்க. தாலாட்டு (பக்தி) பாடல் ஒன்னு கொடுத்தீங்க.
அந்த சோகமான பாட்டு தேவையா? அதுவும் அந்த பாட்டு தன் மனைவி இன்னொருவனுடன் வைத்திருக்கும் தொடர்பு பற்றி நம்பாமல் பாடுவது. அதை ஆன்மீகப் பதிவர் என்று சொல்லும் நீங்கள் தவிர்த்திருக்கலாமே? மற்றபடி நல்ல பாடல்களுக்கு நல்ல விளக்கங்கள் தான்.
//அந்த சோகமான பாட்டு தேவையா? அதுவும் அந்த பாட்டு தன் மனைவி இன்னொருவனுடன் வைத்திருக்கும் தொடர்பு பற்றி நம்பாமல் பாடுவது. அதை ஆன்மீகப் பதிவர் என்று சொல்லும் நீங்கள் தவிர்த்திருக்கலாமே?//
ஆன்மீகம்-ன்னா மட்டும் ஏன் தவிர்க்க வேண்டும்? உடலில் அழகும் அசிங்கமும் கலந்தே தானே இருக்கு? அதே போலத் தான்! சமூகம் தனி-ஆன்மீகம் தனி என்பது கிடையாது! இந்தப் pedestal putting attitude அவ்வளவா சரி வராதுங்க!
இன்னொரு தொடர்பு பற்றி இடித்துப் பேசாத புராணங்களா? ஆனா வாழ்க்கை-ன்னு வரும் போது மட்டும் அதை மறந்து தள்ளி வைத்து விடுகிறோம். அதைப் பேசவே கூடாது; அசிங்கம்-ன்னு நினைச்சா புராணங்கள் அவற்றை எல்லாம் நைசா மறைத்திருக்கலாமே?
இயல்பானதே ஆன்மீகம்! ஆன்மீகமும் இயல்பானதே! :-))
//மற்றபடி நல்ல பாடல்களுக்கு நல்ல விளக்கங்கள் தான்//
நன்றி அனானி ஐயா!
Post a Comment