Pages

Sunday, April 23, 2023

எஸ்.ஜானகி 85 ❤️

திரையிசை கண்ட உன்னதமான ஆளுமைகளில் எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். 

"எஸ்.ஜானகி அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும் இல்லை" 

என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும் புகழ்ச்சி மாலை அல்ல என்பதை எம் போன்ற கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான்.

பாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து காட்டுகிறார்.

திரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின் அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது.

ஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல்.

எந்த ஒரு துறையிலும் இறங்கியவர்கள் அப்படியே மாற்றமின்றி அதன் போக்கில் வாழ்ந்தவர்கள் அப்படியேதானிருக்கிறார்கள்,அதையும் தாண்டிக் கடந்து சிந்தனையைச் செயல்படுத்தியவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். எஸ்.ஜானகியின் இந்த அறுபதாண்டு இசை வாழ்வு அவரைச் சாதனையாளராக முன்னுறுத்துகிறது. தனக்கு வாய்ந்த அழகிய குரல் என்பது அதன் இனிமையைச் சுவைக்க அல்ல அனுபவிக்கவென்று குரல் பேதங்களில் வெளிப்படுத்தும் உணர்வின் வழி நிரூபித்துக் காட்டியவர்.

எமக்கெல்லாம் இசையரசி பி.சுசீலா அம்மாவின் பாட்டு அன்னையின் குரல் என்றால் பாட்டுக் குயில் எஸ்.ஜானகியின் ஓசை தோழியின் குரலாக நிற்கின்றது.

எண்பதுகளின் இலங்கை வானொலிப் பிரியர்கள் மறக்கவொண்ணாத பாடல்களில் ஒன்று "கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே". 

ருசி கண்ட பூனை திரைப்படத்துக்காக பாடகி எஸ்.ஜானகி மழலைக் குரலாக மாறிப் பாடிய 

இந்தப் பாடல் அப்போது புதுமையாகப் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டது. 

"கண்ணா நீ எங்கே" பாடலுக்குப் பின்னால் பலரும் அறியாத செய்தி ஒன்றும் இருக்கிறது. இந்தப் பாடலைப் பாடியது மட்டுமன்றி எழுதியதும் எஸ்.ஜானகி தான் என்பதே அது.

இப்படியாகப் பன்முகக் குரலாட்சி செய்யும் எஸ்.ஜானகி அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு பேரு, பல்வேறு இசையமைப்பாளர்களோடு அவர் பாடிச் சிறப்பித்தது.


இங்கே இன்னொரு விடயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எஸ்.ஜானகி அவர்கள் "மெளனப் போராட்டம்" என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளராகவும் இயங்கியிருக்கிறார். 

எஸ்.ஜானகி என்ற இசையமைப்பாளர், தன் ஆத்ம பந்தப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இணைந்து பாடிய

“லோலிலிட்டா லோலிலிட்டா”

https://www.youtube.com/watch?v=QZ5lKR-1DK8

ஏக பிரபலம் கொண்டு இன்னும் விளங்குகிறது தெலுங்கு தேசத்தில்.

எஸ்.ஜானகி இசையமைத்த தெலுங்குப் படமான “மெளனப் போராட்டம்” படத்தில் உதவி இசையமைப்பாளராகவும், பின்னணி இசை வழங்கியவராகவும் இருந்தவர் எஸ்பிபி. 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குப் பெரும் புகழைக் கொடுத்த, அவர் இசையமைத்த “மயூரி” திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய “இதினா ப்ரிய நர்த்தன வேளா” 

https://www.youtube.com/watch?v=QZ5lKR-1DK8

பாடலுக்குத் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று எஸ்பிபி ரொம்பவே எதிர்பார்த்தாராம்.

மயூரி திரைப்படத்தில் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இணைந்து பாடிய 

“மெளனம் நாணம்” 

https://www.youtube.com/watch?v=7fyPxhquT1A

பாடல் இப்போது கேட்டாலும் இனிக்கும். கானாபிரபா

பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் ஒரு சில படங்களுக்கு இசையமைத்த போது, அங்கும் பாடிச் சிறப்பித்தவர் எஸ்.ஜானகி.

அப்படியாக வெளிவந்த ஒரு படம் “கொலுசு”.

இந்தப் படத்தில் இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவனுடன் இவர் பாடிய பாடல் 

“மச்சான் கண்ணு”

https://www.youtube.com/watch?v=1poUG7KJuSg


பாடகராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படும் இன்னொரு ஆளுமை எம்.எஸ்.ஶ்ரீகாந்த். இவரின் பெயரைக் கேட்டால் வாணியம்மாவுடன் பாடிய 

“நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு”

ஞாபகம் வருகிறதல்லவா?

இது போலவே, எம்.எல்.ஶ்ரீகாந்த் இசை வழங்கிய “கல்யாண வளையோசை” படத்தில் எஸ்.ஜானகியோடு பாடிய 

“வள்ளுவன் குறளில் சொல்லெடுத்து”

https://www.youtube.com/watch?v=yrsvV3Q3PL8

இவருக்கு இன்னொரு புகழ் கொடுத்த பாடல். எஸ்.ஜானகியின் அற்புதமான ஆலாபனையோடு மிளிரும் அற்புதம்.

இன்னும் கொஞ்சம் காலத்தைப் பின்னோக்கி இழுத்துப் போனால் அங்கே மிதப்பது ஏ.எம்.ராஜா என்ற ஒப்பற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.ஜானகியோடு கூட்டுச் சேர்ந்த பாடலகள்.

தேனான பாடல்களைக் குழைத்துக் கொடுத்த ஏ.எம்.ராஜா இசைத்துத் “தேன் நிலவு” தந்த

“ஓஹோ எந்தன் பேபி

 நீ வாராய் எந்தன் பேபி”

https://www.youtube.com/watch?v=_I5kqlNUfu8

பாடல் அந்தக் காலத்து எஸ்.ஜானகிக்கும் புகழை வழங்க ஏதுவானதைச் சொல்லவும் வேண்டுமா?

எஸ்.ஜானகிக்கு மிக அற்புதமான பாடல்களை வழங்கிய ஷியாம் அவர்களின் இசையில் நன் முத்துகளைத் தோண்டத் தோண்டக் கிட்டும். அப்படியொன்று “பஞ்சகல்யாணி”.

இந்தப் படத்தில் ஒரு புதுமை, 

படத்துக்கு இசை வழங்காத இசையமைப்பாளரான சந்திரபோஸ் அவர்களோடு, எஸ்.ஜானகி பாடியிருக்கும் 

“ராசா வந்தாண்டி”  

https://www.youtube.com/watch?v=iMFsRVLTfQI

எனும் பாடல்.

இம்மாதிரி இன்னொரு இசையமைப்பாளர் வேறொருவர் இசையில் பாடிய பாடல்களில் எஸ்.ஜானகியும் இணைந்திருக்கும் புதுமையின் நீட்சியாகச் சொல்லிக் கொண்டே போனால்

T.V.ராஜூ அவர்களின் இசையில் “ரிஷ்ய சிருங்கார்” படத்தில்

“விண்ணாளும் சுந்தர ரூபம் 

https://www.youtube.com/watch?v=KmCmkSE_NGI

பாடலை இன்னொரு இசையமைப்பாளர் மற்றும் புகழ் பூத்த பாடகர் கண்டசாலாவுடன் பாடியது சாட்சாத் ஜானகியம்மாவே தான்.

“Kaise Kahoon”

https://www.youtube.com/watch?v=I8btjaXIaUY

தமிழில் வந்த ஹிந்திப் பாட்டு. அதிலும் ஓர் புதுமை, இன்னொரு பாடகர் P.B.ஶ்ரீநிவாஸ் பாட்டெழுத, ஹிந்தியில் கோலோச்சிய வாத்திய விற்பன்னர், இசையாளர், கடந்த 2022 இல் நம்மை விட்டு மறைந்த பூபேந்திர சிங் அவர்கள் எஸ்.ஜானகியோடு இசைஞானி இளையராஜா இசையில் பாடிய பாட்டு.

இங்கே ஒரு விடயம், தமிழில் தான் இத்தனை இசையமைப்பாளர்களோடு ஜோடி கட்டிய ஜானகி அவர்கள் இன்னும் மற்றைய மொழிகளிலும் தோண்டி எடுத்தால் இன்னும் பல கிட்டும்.

இளையராஜாவின் குரு நாதர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களால் எஸ்.ஜானகிக்குக் கிடைத்த அற்புதமான கன்னட, தெலுங்குப் பாடல்கள் தமிழில் அவருக்கு இருந்த இடைவெளியை நிரப்பிய காலங்கள். பின்னர் தமிழில் பெரும் சகாப்தம் அவர் படைக்க “அன்னக்கிளி” இளையராஜா வந்தார். அன்னக்கிளி பாடல் வரலாற்றில் எஸ்.ஜானகி அவர்கள் எத்துணை தூரம் புதிய இசையமைப்பாளரின் ஒத்திகை நிகழ்விலும் ஒத்துழைப்புக் கொடுத்தார் என்பது உப வரலாறு.

இங்கே ஜி.கே.வெங்கடேஷ் அவர்களைத் தன் இசையில் எஸ்.ஜானகியின் பாடலொன்றின் முகப்புக் குரலாய் இணைத்து அணி செய்திருக்கிறார் இளையராஜா. 

அதுதான் “கவிக்குயில்” கொண்ட

“மானத்துலே நீயிருக்க” தொகையறாவோடு

“உதயம் வருகின்றதே”

https://www.youtube.com/watch?v=r6_9zhS10LY


“அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் சிலம்புவதைக் கேள்?

https://www.youtube.com/watch?v=oE8kjdqQ3RA

இன்று தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டிகளில் தவிர்க்க முடியாத சங்கீர்த்தனம் இந்தப் பாடல். இங்கே ஜானகியோடு ஜதி சொல்லிப் பாடும் T. S. ராகவேந்திரா, “வைதேகி காத்திருந்தாள்” படத்தில் ரேவதியின் தந்தையாகவும் நடித்திருப்பார். அவரின் இன்னொரு முகம் விஜயரமணி என்ற இசையமைப்பாளர். 

விஜயரமணி என்ற T. S. ராகவேந்திரா தன் ஆரம்ப காலத்து இசை நட்பு இளையராஜாவோடு எண்பதுகளில் இயங்கிய போது பல புதிய பாடகிகளை ராஜாவுக்கு அறிமுகம் செய்து பாடல்களை வாங்கிக் கொடுத்தவர் என்பதும் ஒரு உபரித் தகவல்.

இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விளங்கிய கங்கை அமரன் வஞ்சகமில்லாமல் பல இசையமைப்பாளருக்குப் பாடியிருக்கும் போது தன் அண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன? 

இளையராஜா இசையில் எஸ்.ஜானகி & கங்கை அமரன் கூட்டணி பாடல்கள் பலது இருந்தாலும்,

“பொங்கும் ஆகாய கங்கை” 

https://www.youtube.com/watch?v=0MtPuQRocE8

என்று காதல் ரசம் கொண்டு பாடும் பாடுவதும்,

“வாடி என் பொண்டாட்டி நீதானே”

https://www.youtube.com/watch?v=9qNJxv-b53Q

என்று ரகளையாகப் பாடியதும் இருக்க,

எனக்கு ஆத்மார்த்தமாக இனிக்கும் பாடலொன்று உண்டு.

அதுதான்

“மனித ஜாதி” படத்தில் கங்கை அமரனும், எஸ்.ஜானகியும் பாடும்

“புதுசு புதுசு புதுசு

உன்னோட கொலுசு கொலுசு கொலுசு”

https://www.youtube.com/watch?v=L500Xj21LSw

என்றதோர் இனிமை சொட்டும் அரிய பாட்டு. கானாபிரபா


இவ்விதம் இசையமைப்பாளர் கங்கை அமரன் இன்னொரு இசையமைப்பாளருக்காக எஸ்.ஜானகிக்காகப் பாடிய இன்னொன்று என்றால் எல்.வைத்தியநாதன் அவர்களின் இசையில் வந்த “ஏர்முனை” படப் பாடலான

“முத்துசாமி பேர”

https://www.youtube.com/watch?v=fCQ1adugj2Q

“அள்ளி அள்ளி வீசுதம்மா

 அன்பை மட்டும் அந்த நிலா நிலா”

https://www.youtube.com/watch?v=v6Ls9ylLrPU

இசையமைப்பாளர் கங்கை அமரன் இசையில்  தனக்குப் பிடித்த பாடல் என்று மெல்பர்ன் இசை மேடையில் புகழாரம் சூட்டியவர் எஸ்.ஜானகி. 

“காலம் நேரம் வந்தாச்சு” 

https://www.youtube.com/watch?v=lT5tVdoZciY

என்ற பாடல் கங்கை அமரன் இசையில் “அர்த்தமுள்ள ஆசைகள்” படத்தில் இடம்பெற்ற போது மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகியோடு துணைப் பாடகராகவும் பாடிச் சிறப்பித்தார்.

கங்கை அமரன் இசையில், இளையராஜா & எஸ்.ஜானகி பாடிய "போடய்யா ஒரு கடுதாசி" 

https://www.youtube.com/watch?v=CskQxI8lSrI

பாடியளித்ததும் சிறப்பு. 

 

இசையமைப்பாளர் தட்சணாமூர்த்தி சுவாமிகளை, இளையராஜா இசையில் எஸ்.ஜானகியோடு பாட வைத்துப் பெருமை சேர்த்தது "மரகத வீணை". அதில் வரும்

"சுதா மாதுர்ய பாஷண"

https://www.youtube.com/watch?v=ad110ow5w3Y

இந்த வரலாற்றை எழுதி வைத்தது.

“மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே”

https://www.youtube.com/watch?v=IDYAjpR0xQ4


அப்படியே காற்றில் அலைந்து திரிவோமே இதைக் கேட்கும் தோறும்?

இசைஞானி இளையராஜா எத்தனையோ பின்னணிப் பாடகிகளோடு ஜோடி சேர்ந்தாலும், “கவிதை சொல்லும்” எஸ்.ஜானகி குரலோடு சேரும் போதெல்லாம் 

“உந்தன் கிள்ளை மொழியினிலே

உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்”

என்று அவர் பாடலில் சொல்வது போலத் தான்.

இவ்விருவர் கூட்டுப் பாடல்களைக் கூட்டிப் பார்த்தாலே இன்னொரு தொகை பதிவு தேறும்.

“காற்றில் மிதக்கும் புகைபோலே

அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே

மனவீடு அவன் தனிவீடு அதில்

புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ....

“சொல்லத் தான் நினைக்கிறேன்”

https://www.youtube.com/watch?v=wxvpmaSKM54

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பாடியளித்த மிகச் சில காதல் ஜோடிப் பாடல்களில் அதி சிறந்தது என்று நானும் சொல்லத்தான் நினைக்கிறேன். 

எஸ்.ஜானகியம்மா தலைமுறை தாண்டி நிலைத்து நிற்கும் குரல் என்பதற்கு முன் சொன்ன தலைமுறை இசையமைப்பாளர்களோடு கூட்டுச் சேர்ந்ததில் மெல்லிசை மன்னர் தம் பங்குக்கும் இவருக்கு முதல் மரியாதை செய்திருக்கிறார்.

சொல்லப் போனால் இந்தப் பதிவை எழுத எனக்கு மூல காரணியாக மூளையில் அந்த எண்ணம் தோன்ற ஏதுவாக அமைந்ததே இந்தப் பாடல் தான். 

“ஆஹா 

சொல்லத்தான் நினைக்கிறேன்

உள்ளத்தால் துடிக்கிறேன்

வாய் இருந்தும் சொல்வதற்கு

வார்த்தையின்றி தவிக்கிறேன் 

ஆஹா...”

நினைத்துப் பார்த்தாலே போதும், இந்த வரிகளில் ஜாலம் காட்டி, வளைந்தும், நெளிந்தும் ஓடும் ஓர் மலையருவியாக நிலைப்பார்

எஸ்.ஜானகி.

கானா பிரபா

23.04.2023



0 comments: