Pages

Wednesday, July 18, 2018

கவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️

கவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️


“நன்றி சொல்லவே உனக்கு

  என் மன்னவா வார்த்தை இல்லையே

 தெய்வம் என்பதே எனக்கு 

 நீயல்லவா வேறு இல்லையே”


இன்று அதிகாலைப் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு காரில் உட்கார்ந்த போது எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும் போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் பிறந்த நாள் அவர் எழுதிய பாடல் முக விசேடம்.


கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால், 

தான் ஒரு படைப்பாளி நான் என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார், அதே சமயம் கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார். 


அதனால் தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டபட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும்

 “நன்றி சொல்லவே உனக்கு 

என் மன்னவா வார்த்தை இல்லையே”

பாடலும் பிடிக்கும், 


அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும் 


“சின்ன ராசாவே.....

சித்தெறும்பு என்னைக் கடிக்குது” 


பாட்டும் பிடிக்கும் இரண்டுமே வாலி தான் இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார்.


“அந்த நாள் ஞாபகம் 

நெஞ்சிலே வந்ததே வந்ததே

நண்பனே.....”


என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்

 எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர் தான்,


“நிலவிடம் வாடகை வாங்கி

விழி வீட்டினில் குடி வைக்கலாமா

நாம் வாழும் வீட்டுக்குள்

வேறாரும் வந்தாலே தகுமா.....”


என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” இற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி சமைஞ்சது எப்படி” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.

“டாலாக்கு டோல் டப்பி மா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் 😀 போடுவது வாலியின் பண்பு.


ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும். 

எப்படி ஒரு அழுத்தமான சூழலில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப் 

பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார்.  இயக்குநர் கதிர் -  இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால் தான் நமக்கும் 


“யாப்போடு சேராதோ 

பாட்டு தமிழ்ப் பாட்டு

தோப்போடு சேராதோ 

காற்று பனிக்காற்று....”


என்று இதயத்திலும்


“ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்

அன்பே உன் பேரைச் சிந்தித்தால் 

தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்

கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்

நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்

உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..”


என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது.


“அன்னமிடும் கைகளிலே 

ஆடிவரும் பிள்ளை இது

உன்னருகில் நானிருந்தால் 

ஆனந்தத்தின் எல்லையது

காயத்ரி மந்திரத்தை 

உச்சரிககும் பக்தனம்மா

கேட்கும் வரம் கிடைக்கும் வரை 

கண்ணுறக்கம் மறந்ததம்மா” 


தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி - இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை 


“தாமரை மேலே நீர்த்துளி போல்

தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்கு

மாலையும் மேளமும் தேவையென்ன?” 


என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில் 


“நிலவினை நம்பி இரவுகள் இல்லை

விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை

ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…”


எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது.


அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில்

முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம். 


கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள். 

இன்னொரு பரிமாணமும் இருக்கிறது அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும்.


தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத் தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி.


கானா பிரபா

18.07.2018

0 comments: