Pages

Wednesday, December 14, 2022

🏍️ ராசுக்குட்டி🧑‍🦼

 



“செட்டியாரே! 

என்னால உங்களுக்கு நிறைய நஷ்டமாகிடுச்சு. பாக்யராஜிடம் ஒரு படம் பண்ணக் கேட்டிருக்கிறேன் பண்ணித் தர்ரேன்னு சொல்லியிருக்கிறார். அதை உங்களுக்கே மாத்தித் தந்துடுறேன்.”


பிரபல கதாசிரியரும், தயாரிப்பாளருமான தூயவன் தன் இறப்புக்கு முன் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் கொடுத்து விட்டுப் போன மரண சாசனம் தான் “ராசுக்குட்டி”.


தூயவன் தயாரிப்பில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை வைத்து எடுத்த “நானே ராஜா நானே மந்திரி” படத்தில் அவரை நகைச்சுவை நாயகனாக ஏற்றுக் கொள்வார்களோ என்ற குழப்பத்தில் பின் பாதிக் கதையைக் குழப்பியதால் அந்தப் படம் முதலுக்கு நஷ்டமில்லாமல் ஓடித் தப்பியது. அதன் பின் கவுண்டமணியை நாயகனாக்கிய படம் அவுட். இப்படி தூயவன் படங்களுக்கு நிதி ஆதாரம் அளித்து நஷ்டப்பட்ட பஞ்சு அருணாசலத்துக்கு நன்றிக் கடனாகத் தான் பாக்யராஜ் கால்ஷீட்டை அவருக்கு எழுதிக் கொடுத்தார்.


ராசுக்குட்டி முதல் ஷெட்யூல் பார்த்த பஞ்சு அருணாசலத்துக்கு அதிருப்தி. பாக்யராஜும் அதை ஆமோதித்து என் மனைவி கூட இது உங்க படம் மாதிரி இல்லையேன்னு சொன்னாங்க என்று சொல்லி விட்டு அடுத்த ஷெட்யூல் எடுத்து முடித்தால் சிறப்பாக வந்ததாம். இவற்றை எல்லாம் பஞ்சு அருணாசலத்தார் தன் “திரைத்தொண்டர்” நூலில் பதிவாக்கி இருக்கிறார்.


பாக்யராஜ் படங்களில் நான் அடிக்கடி பார்த்து ரசிக்கும் படங்களில் முதன்மையானது ராசுக்குட்டி. அதுவும் பாக்யராஜ் வளர்ப்புப் பிள்ளை என்ற காட்சி எல்லாம் நெகிழ வைத்துக் கரைக்கும்.


கதையோட்டம் தெரியாத சூழலில் இப்படத்தைப் பார்க்கும் போது எதிர்பாராத திருப்பமாக  ஒரு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுக்கும். 

உதார்த்தனத்தில் இருந்து அந்த இரண்டு நிமிடத்துக்குள் நிலை குலைந்து சரணாகதி நிலையில் அப்படியே கை கூப்பி வணங்குவாரே அது தான் பாக்யராஜ் முத்திரை.


“என் சொத்தைப் பிரிச்சுக் கொடுங்க” என்று அடாவடியாகக் கேட்கும் ராசுக்குட்டிக்கு அதே இடத்தில் வைத்து, 

தான் கல்யாண்குமார் - மனோரமா தம்பதிகளின் சொந்த மகன் இல்லை என்ற உண்மை தெரிய வரும். 


அப்போது அந்தக் காட்சியமைப்பில் எழும் மாறுதல் என்பது சாதாரண கிராமத்து செண்டி என்று ஒதுக்க முடியாத அளவுக்கு மெல்ல மெல்ல நம் எல்லோர் மனதிலும் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுமளவுக்கு அப்படியே மாற்றி விடும் காட்சிப் போக்கு. மனோரமாவுக்கு பழக்கப்பட்ட வேடம் என்றாலும் இதில் புதிதாகத் தெரிவார். அதுவும் உண்மை தெரிந்ததும் மருகு ம் காட்சியில்.


ராசுக்குட்டிக்கு வயசு 30. அந்த அனுபவத்தில் சிறு பகிர்வை பாக்யராஜ் பகிர்ந்திருக்கிறார்.


https://youtu.be/TemYWbWBNsU


ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி என்று அட்டகாஷ் ஜோடி ஒரு புறமென்றால் படம் தொடங்கிய போதே “வாடி என் செங்கமலம்” என்று மின்மினிப் பூச்சியின் ரீங்காரம் ஆஹா.

இதையெல்லாம் தாண்டி 


அடி நான் புடிச்ச கிளியே

வாச மலர் கொடியே

எம் மனசு தவிக்குதடி


தாரை தப்பட்டை ஒலியைப் போட்டு அப்படியே கோரஸ் அதைத் தாண்டி ஒரு சோக உணர்வுக்கு கொண்டு போகும் “ராஜ” வல்லமை. 

எஸ்.பி.பி இது மாதிரி எத்தனை பாடியிருப்பார். ஆனால் இந்தப் பாட்டைக் கேட்கும் போது அவ்வளவு புத்துணர்வு உணர்வுப் பிரவாகமாகக் கொட்டுவார்.


https://youtu.be/OCxwCWAfaoM


கானா பிரபா

14.12.2022

1 comments:

Anonymous said...

வளர்ப்பு மகன் உணர்வுகளை சரியாக பதிவு செய்திருப்பார் பாக்கியராஜ்.தான் வளர்ப்பு மகன் என தெரிந்தும் உண்மையான அம்மா அப்பா யார் என்று தேட மாட்டார்.இதே போன்ற கதையோட்டம் உள்ள கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் மணிரத்னம்திரைக்கதையில் சூப்பரா கோட்டை விட்டிருப்பார்.குழந்தை அம்மாவை பார்க்க துடிக்கும். படம் பார்ப்பவர்களுக்கு அந்த உணர்வே வராது.