மெல்பர்னுக்கு வந்து பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கு அடிக்க்கடி தமிழ்ப்படங்கள் திரையிடும் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் யூனியன் சினிமாவில் முதல் காட்சி பார்த்து விட்டு, அடுத்த காட்சிக்குக் காத்திருந்தோரைப் பார்த்து “நாங்கள் ஏற்கனவே பார்த்த படத்தைத் தானே நீங்கள் பார்க்கப் போறீங்கள்” என்று கிண்டலடித்துக் கொண்டே வந்துது நேற்றுப் போலிருக்கிறது.
அதுவரை அப்பாவின் கடனே என்று படங்களை நடித்துத் தள்ளிய விஜய்க்கு மாபெரும் நட்சத்திர அந்தஸ்தளித்த பூவே உனக்காக, லவ் டுடே வரிசையில் வெள்ளி விழாச் சித்திரமாக அமைந்தது “காதலுக்கு மரியாதை”.
நாடகக்காரராக வேஷம் கட்டிய காலத்தில் இருந்தே சங்கிலி முருகனின் நேசத்துக்குரிய இசைஞானி இளையராஜாவோடு மீண்டும் இணைந்து இசை விருந்தோடு முருகன் சினி ஆட்ஸ் தயாரிப்பின் இன்னொரு வெற்றிச் சித்திரம். அதுவரை விநியோகஸ்தராக இயங்கிய ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் காதலுக்கு மரியாதை அடுத்த படி நிலைக்குக் கொண்டு போக உதவியது. அதற்குப் பின் ஆஸ்கார் ரவிச்சந்திரன் குறைந்தது ஒரு தசாப்தம் வரை உச்ச் தயாரிப்பாளராக இருந்தார் இன்றும் நிலைத்திருக்கிறார்.
இயக்குநர் பாசிலின் பல மலையாளப் படங்கள் தமிழுக்கு மாற்றம் கண்டு தயாரிக்கும் போது நிரந்தர இசையமைப்பாளராக இருப்பது இசைஞானி இளையராஜா. இசைஞானியின் பின்னணி இசையின் ஆழம் எவ்வளவு தூரம் சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணத்தை இங்கே தருகின்றேன்.
அனியத்தி பிறாவு திரைப்படத்தினை நான் காதலுக்கு மரியாதை திரைப்படம் வருவதற்கு முன்னர் பார்த்து ரசித்திருந்தேன். மீண்டும் அனியத்தி பிறாவு படத்தைப் பார்த்த போது "காதலுக்கு மரியாதை" திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா எவ்வளவு தூரம் தன் பின்னணி இசையினால் இன்னும் அந்தக் காவியத்தை உயரே தூக்கி நிறுத்தியிருக்கின்றார் என்பதை அழகாகக் காட்டுகின்றது இங்கே நான் தரும் இரண்டு படங்களின் இறுதிக் காட்சியும்.
முதலில் "அனியத்தி பிறாவு" படத்தின் இறுதிக்காட்சி, இசை வழங்கியவர் அவுசப்பச்சன்
https://youtu.be/dokObpEA2KM
இதோ இசைஞானியின் ராக சாம்ராஜ்யத்தில் "காதலுக்கு மரியாதை" இறுதிக் காட்சி, குறிப்பாக நிமிடம் 2.07 வினாடிக்கு முன்னும் பின்னுமுள்ள இசைமாற்றத்தை அவதானித்துப் பாருங்கள். காதலர் கண்கள் சந்திக்கும் போது அதுவரை இருந்த இசை மெல்ல மாறி சோக இழையோடலில் என்னைத் தாலாட்ட வருவாளோ
https://youtu.be/YWBpUCSgX8Y
97 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழில் தனியார் பண்பலை வரிசைகள் உலகளாவிய ரீதியில் பல்கிப் பெருகிய போது பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்களில் ஒன்றாக “இது சங்கீதத் திருநாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ” நிதமும் தவிர்க்க முடியாத பாடலாக ஓலித்தது. கூடவே “ஆனந்தக் குயிலின் பாட்டு இனி எங்களின் வீட்டுக்குள்ளே” என்று இரட்டைக் கொண்டாட்டப் பாட்டுகள்.
சோகப் பாடல் பிரியர்களுக்கு “ஆரிரரோ ஆரிரரோ ஆனந்தம் தந்தாயே” என்று சித்ராவின் குரலில் அது மறு வடிவத்தில் வருடியது.
பொதுவாகவே ஃபாசில், பாலுமகேந்திரா படங்களில்
இசைஞானி கூட்டில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் முத்திரைப் பாடல் ஒன்று இருக்கும். இங்கேயும் “ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே” என்று தொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் அதிகம் ஆக்கிரமித்துக் கொண்ட பாடகி சுஜாதாவோடு கூட்டணி கட்டினார்.
“ஓ பேபி பேபி” விஜய் குரலில் ஒரு துள்ளிசை அந்தப் பாட்டை நினைக்கும் போதெல்லாம் “ந ந ந நா நா நா” என்று இடையிசையில் பவதாரிணியின் குரல் பூச்சு தான் முதலில் தோன்றி மறையும்.
காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஃப்ரெண்ட்ஸ் இந்த மூன்று விஜய் படங்களும் இசைஞானி இளையராஜாவின் இசையில் தொடர்ந்து வந்த போது முழுப் பாடல்களையும் பழநி பாரதி அவர்களே எழுதிய வரிகளில் இளமைக் கொண்டாட்டமாகவும், மெல்லிசையோடு இணைந்த கவி நயமுமாக ரசிக்க வைத்தன. அவற்றில் உச்சமாக அமைந்தது “என்னைத் தாலாட்ட வருவாளோ” பாடல். ஹரிஹரன் பாடிய அந்தப் பாடல் இருபது வருடங்கள் கழித்தும் இன்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் குடும்ப ஒன்று கூடல்களிலும் சூடான பரிமாறலாக இருக்கிறது.
இளையராஜா பாடிய “என்னைத் தாலாட்ட வருவோளோ” ராஜாவின் குரலைத் தேடி ரசிக்கும்
என்னைப் போன்ற ரசிகர்களுக்கானது.
நடிகர் மணிவண்ணனுக்காக இசைஞானி இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் தேவா பாடிய பாடல்கள்
அபாரமாக ஒத்துப் போயிருக்கின்றன. “மனிஷா மனிஷா போலிருப்பாளா” (நினைத்தேன் வந்தாய்), “கோகுலத்துக் கண்ணா கண்ணா” (கோகுலத்தில் சீதை) இரண்டிலும் அச்சொட்டாக மணிவண்ணன் இருப்பார். அதுபோலவே காதலுக்கு மரியாதையின் “ஐயா வூடு தொறந்து தான் இருக்கு”.
ஜ்ஜும் ஜ்ஜும் என்று ஒரு உதைப்பு ரிதம் பாடலோடு பின்னிப் பிணைந்திருக்க
"ஏ இந்தா இந்தா இந்தா
ஐயா வூடு
தெறந்து தான் இருக்கு"
கேட்கும் போதே அந்த இடம் வலம் பாராமல் துள்ள வைக்கும் மொத்திசை அது.
காதலுக்கு மரியாதை முழுப் பாடல்களையும் கேட்க
https://youtu.be/0xVkHngAzBQ
0 comments:
Post a Comment