Pages

Thursday, December 1, 2022

நிலவு வந்தது நிலவு வந்தது


நீயும் நானும் சேர்ந்ததற்கு

காதல் தானே காரணம்..

காதல் இங்கு இல்லை என்றால்

வாழ்வில் ஏது தோரணம் 💚


ஒரேயொரு ஐந்து நிமிடத்துக்குள்ளான பாடலில் அந்தக் காதலர்களின் அன்னியோன்யத்தை நிறுவிக் காட்ட வேண்டும். ஏனெனில் இந்தக் காட்சியமைப்பு நினைவொழுக்கின் பழைய வாழ்வைக் கிண்டிப் பார்க்கும் சூழல். சவாலை வாங்கிக் கொண்டது இசைஞானி ஆயிற்றே.


நிலவு வந்தது நிலவு வந்தது

ஜன்னல் வழியாக

ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது

கண்கள் வழியாக

https://youtu.be/Oz2JryqZOog


என்னை இழந்தேன்

செந்தேன் மொழியில்..

விண்ணில் பறந்தேன்

சிந்தும் கவியில்.. ❤️


ஒரு பக்கம் வாலியார் உருகித் தள்ளி எழுதி விட உயிர்கொடுக்கும் காதலர் வாய் மொழியாக ஜானும்மாவும், மனோவும்.

பாடலைப் பின்னிப் போட்ட அந்த இசைத் தூவல் எல்லாம் அவளை இழந்த போதும், அந்தக் காதலின் ஈரம் இன்னும் அவன் மனசுக்குள் இருப்பதைக் காட்டும். 


அந்த ஆரம்ப இசைச் சத்தம் இடையிசை எல்லாம் நீர்த்துளிகள் பட்டுத் தெறிக்கும் ஓசை நயம் அப்படியே வளித்து அள்ளும் புல்லாங்குழல்.


இரண்டாவது சரணத்தில் ஒலியெழுப்பும் மணியோசையோடு துளிர்க்கும் இசை தரும் தேவாலயத்தின் சன்னல் வழியே சுதந்திரமாக எட்டி  வான வெளி பறக்கும் புறாக்களாய்.


ஈழத்தில் போர் கனன்று கொண்டிருந்த அந்தத்


தொண்ணூறுகளின் காலப் பகுதியில் ஒவ்வொரு பாடல்களையும் “ஆழக் கடலில் தேடிய முத்து” போலக் கேட்டது. 5 வருடம் மின்சாரமில்லா இருட்டு வாழ்க்கையில் பாட்டுக் கேட்க மட்டும் குறைச்சலில்லை.

“இதயம்” கொடுத்த பரவசத்தில் “என்றும் அன்புடன்” படப் பாடல்கள் ஷண் றெக்கோர்டிங் பார் இல் வந்திருக்குது என்றறிந்து சுதாவின் மக்ஸெல் காஸட்டை காற்சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு யாழ் நகர பாஸ் ஸ்ராண்ட்டடியில் நடு நாயகமாக இருந்த அந்தக் கடைக்குப் போய் சதீஷ் அண்ணையைக் குசலம் விசாரித்து, நாளைக்கே தந்துடுங்கோ என்று அன்புக் கட்டளை போட்டு.

அடுத்த நாளும் விமானக் கழுகுகளின் இரையாகாமல் தப்பிப் பிழைத்து ஒலிப்பதிவு செய்த “என்றும் அன்புடன்” பாடல்களை, சைக்கிளைத் தலைகீழாகக் கிடத்தி மிதியடியைச் சுழட்டி டைனமோ வழியாக வயரில் பாயும் மின்சாரத்தை டேப் ரெக்கார்டரில் பாய்ச்சினால்

❤️❤️❤️❤️❤️❤️

இன்பம் என்றால் என்னவென்று

உன்னிடத்தில் கண்டு கொண்டேன்..

இன்னும் என்ன உண்டு என்று

சொர்க்கம் வரை செல்லுகின்றேன் 

❤️❤️❤️❤️❤️❤️


இப்போதும் கூட “நிலவு வந்தது” பாடலைக் கேட்டால் அந்தப் பள்ளிக்கூடக் காதலியைக் காணும் ஒரு இன்பப் பரவசம் தலையில் இருந்து கால் வரை அதிர்வலையை எழுப்பும்.


“என்றும் அன்புடன்” படம் வந்து இந்த ஆண்டோடு 30 ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது. ஆனால் எனக்கென்னவோ பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி அதன் நறுமணத்தை மேவி நாசிக்குள் இழுக்கும் அனுபவம்.


நண்பர்களுக்கு டியூசன் போய் வர, மதியா சாப்பாட்டுச் செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்துப் பங்கு போட்டு, ஒரு போத்தல் மண்ணெண்ணை வாங்கி 

இந்தப் படத்தையும் சூட்டோடு சூடாகப் பார்த்து ரசித்தோம்.

எங்கள் தமிழர் பகுதியில் பொருளாதாரத் தடை போட்ட அந்தக் காலம் மண்ணெண்ணெய் 200 ரூ என்றால் இப்போது எத்தனை ஆயிரம் என்று கணக்குப் பண்ணிப் பாருங்கள். 


“சின்னஞ்சிறு அன்னக்கிளி கண்ணில் ஆடுது”


https://youtu.be/Aukv-5HuAoE


இந்தப் பாட்டுக்குப் பின்னால் உள்ள கதை சொல்வார் இசைஞானி தன் மேடைகள் தோறும். மெல்பர்னில் அவர் 2013 இல் மெல்பர்ன் மேடையில் பகிர்ந்து கொண்டதை முன்னர் எழுதியிருந்தேன், அது ;


வாலி அண்ணன் எனக்கு முதலில் எழுதிய பாட்டு "கண்ணன் ஒரு கைக்குழந்தை". ஆனால் நான் இசையமைப்பாளரா வர்ரதுக்கு முன்னாடியே எனக்காக என் அண்ணன் பாஸ்கர் ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி இறங்கினார். அப்போ ஒரு தயாரிப்பு நிறுவனம் தாங்கள் தயாரிச்சிட்டிருக்கிற ஒரு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்காக வாலி எழுதிய பாடலைக் கொடுத்து அந்தப் பாடலை இசையமைக்கச் சொன்னார்கள், நானும் "வட்ட நிலா வானத்திலே" என்ற அந்தப் பாட்டை இசையமைத்துக் காட்டினேன்" என்று அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார்.

அந்தப் பாடலின் மெட்டை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்று என் வலது புற மூளை இயங்கத் தொடங்கியது. சட்டென்று கண்டுபிடித்து விட்டேன். அந்த மெட்டில் "என்றும் அன்புடன்" படத்தில் வரும் "சின்னஞ்சிறு அன்னக்கிளி கண்ணில் ஆடுது" என்ற பாடல், அதுவும் வாலி தான் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.


“இதயம்” படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தான் அதே முரளி & ஹீரா ஜோடியை வைத்து “என்றும் அன்புடன்” படத்தைத் தயாரித்தது. இங்கு காதலர்களாக ஒன்று சேர்ந்தாலும் மண வாழ்வில் ஒன்று சேராதிருப்பர். சித்தாராவுக்கும் ஒரு கதை, காலனி கலாட்டா என்று படம் ரசிக்கும் தரமென்றாலும் முன்னதைப் போல ஓடிச் சம்பாதிக்கவில்லை.


“என்றும் அன்புடன்” படத்தை இயக்கிய பாக்யநாதன், பின்னர் விஜய்யை வைத்து” நெஞ்சினிலே” படத்தை இயக்கினார். ஆனால் படப்பிடிப்பு நேர விஷயத்தில் கறார்த்தனம் காட்டிய எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஒரு முறை படப்பிடிப்பில் எழுந்த சோதனையால் அவரைத் தள்ளி விட்டுத் தானே இயக்கினார். இதனால் மனமுடைந்த ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் அந்தப் படத்தோடு விலகிய பின்னணிக் கதையை சாய் வித் சித்ராவில் சொல்லியிருக்கிறார்.


இயக்குநர் பாக்கியநாதன் & ராதிகா  ஜோடியாக “சித்திரச்சோலை” படம் எடுத்து முடிக்காமலேயே முடங்கிப் போனது.


“துள்ளித் திரிந்ததொரு காலம்”


https://youtu.be/v7X316JzJUo

 

அதுவரை “நிலவு வந்தது” பாட்டிலேயே மோகித்துக் கிடந்த எங்களுக்கு, படம் பார்த்த பின் பிடித்துப் போனது இந்தப் பாடலின் காட்சி அனுபவத்தோடு கேட்ட போது….


காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே

இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே


துள்ளித் திரிந்ததொரு காலம்

பள்ளிப் பயின்றதொரு காலம்


கானா பிரபா

01.12.2022

0 comments: