Pages

Tuesday, December 27, 2022

இயக்குநர் கங்கை அமரன் 40 ஆண்டுகள் 🎥

நடிகர் பிரபுவுக்கு 1982 ஆம் வருடம் தன் வாழ் நாளில் மறக்க முடியாத ஆண்டு.

அதே ஆண்டின் ஆரம்பத்தில் சி.வி.ராஜேந்திரன் என்ற மூத்த இயக்குநரின்  “சங்கிலி" படத்தின் வழியாக குணச்சித்திர பாத்திரத்தில் மிடுக்கோடு அறிமுகமாகும் அவருக்கு அதே ஆண்டின் கிறிஸ்துமஸ் விருந்தாக அறிமுக இயக்கு நர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளி வந்த “கோழி கூவுது” ஒரு பண்பட்ட நடிகர் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்தது.

அந்த வகையில் அறிமுக இயக்குநர் என்ற தன் இன்னொரு அவதாரத்தை எடுத்த வகையில் கங்கை அமரனுக்கும், வாரிசு நடிகர் என்றாலும் உழைத்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்ற வகையில் நடிகர் பிரபுவுக்கும் இது கலைத்துறையில் 40 வது ஆண்டு. அவரின் சம காலத்து நடிகர்கள் பலர் ஓட்டமிழந்து நின்றாலும், “ஓடுற குதிரையில் நானும் ஒரு குதிரையாக இருக்கணும்” என்று வாய் விட்டுச் சொன்ன பிரபுவின் அந்தத் தாரக மந்திரம் தான் இன்று அவர் மகன் காலத்திலும் குணச்சித்திரமாகப் பரபரப்பாக இயங்க முடிகின்றது.

ஐந்து பாடல்களை வைத்து எப்படியாவது கதை பண்ணி விடலாம் என்ற கதைக்கே இடமில்லை. கோழி கூவுது தொடங்கி தன் ஒவ்வொரு படங்களிலும் கதையம்சத்திலும் கூடத் தன் முத்திரை பதிப்பார் கங்கை அமரன்.

அதற்கு உதாரணமாக பிரபுவை வைத்துப் பின்னாளில் இயக்கிய படங்களான பொழுது விடிஞ்சாச்சு, கும்பக்கரைத் தங்கையா, சின்னவர் ஆகியவற்றில்  வேறுபட்ட கதைப் பின்னணியும் உதாரணமாக அமையும்.

“கோழி கூவுது” படத்தைத் தொடர்ந்து "பாவலர் கிரியேஷன்ஸ்" தயாரிக்க "கொக்கரக்கோ" படம் கங்கை அமரன் இயக்கத்தில் உருவானது. இந்தப் படத்திலும் இசைஞானி இளையராஜா குறை வைக்காத மணி மணியான பாடல்கள். கோழி கூவுது படத்தைப் போல இந்தப் படத்திலும் வைரமுத்து பாடல்களை எழுதினார். அதில் ஒன்று தான் "கீதம் சங்கீதம்". படம் தோல்வி கண்டாலும் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கும் அதிமதுரப் பாடல் இந்தப் படத்தை எப்போதும் நினைப்பூட்டும். 

சினிமாத்துறையில் உச்சத்துக்கு வருவது சுலபமில்லை, அப்படியே வந்தாலும் அதைத் தொடர்ந்து சில வருஷங்கள் தக்க வைத்துக் கொள்வது என்பதும் சவாலான காரியம். இதையெல்லாம் தாண்டித் தங்களது தனித்துவத்தினால் முன்னேறி நின்று நிலைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிச் செய்திக்குப் பின்னால் பல இரகசியங்கள் இருக்கும், திறமையானதொரு இயக்குநரின் நெறிப்படுத்தலில் வளர்ந்தவர்கள், தமக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தம்மை நிரூபித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் நடிகர் ராமராஜன் எண்பதுகளின் மிக முக்கியமானதொரு நாயகனாகக் கொள்ளப்படுகின்றார்.

சினிமாவை வணிக சினிமா, வணிகம் சாரா சினிமா என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே வணிக சினிமா தான், போட்ட முதலுக்கு மேல் இலாபம் வரவேண்டும் என்று தானே எல்லாத் தயாரிப்பாளரும் படத்தயாரிப்பில் இறங்குவார்கள்? ராமராஜனைப் பொறுத்தவரை எண்பதுகளில் ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறக்க, இவரோ மாமூல் கதையம்சம் கொண்ட, அதிக சவால் இல்லாத பாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தித் தானும் ஒரு முக்கியமான குதிரை என்று நிரூபித்தவர். ஆரம்பத்தில் தியேட்டரில் வேலை செய்தும், பின்னாளில் இராம. நாராயணனிடம் உதவி இயக்குநராக இருந்தும், பின்னர் தானே இயக்குநராக மாறியதும் என்று இவரின் பாதையே சற்று வித்தியாசமாகத் தான் ஆரம்பித்தது. ராமராஜனுக்கு "நம்ம ஊரு நல்ல ஊரு" திரைப்படத்தின் மூலம் அரிதாரம் பூசவைத்து நாயகனாக்கிய இயக்குநர் வி.அழகப்பனை நன்றியோடு இன்றும் நினைவுகூருவார். அந்தப்படத்தின் வெற்றியே அவரைத் தொடர்ந்தும் கதாநாயகனாக்கி இருத்தியது.  கங்கை அமரனே இந்தப்படத்தின் இசையமைப்பாளர்.

ராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது.  கே.எஸ்.ரவிக்குமார் வகையறா உருவாக்கி வைத்த ஆண்டான் அடிமைச் சமுதாயம் சார்ந்த நாட்டமைக் கதைகளல்ல ராமராஜன் படத்தின் கதைகள், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் இயல்பான சிக்கல்களை வைத்துப் பாட்டாலே பின்னிப்பிணைத்து வெற்றிகரமான படைப்பாக்கி விடுவார்.

இன்றைக்கும் கிராமியப்படங்கள் வந்து கொண்டு தானிருக்கின்றன, ஆனால் கிராமியம் என்றாலே "செண்பகமே செண்பகமே" என்று முணுமுணுக்கும் எண்பதுகளின் திரைப்பிரியர்களைத் தாண்டி எல்லார் மனசலும் இருக்கிறான் "எங்க ஊரு பாட்டுக்காரன்" . கோழி கூவுது படத்தின் பெரு வெற்றியை கங்கை அமரனாலேயே ஜீரணிக்க முடியாமல் தடுமாறித் தோல்விப்படங்களாகக் கொடுத்தவருக்கு பாட்டுக்காரன் மீண்டும் கைதூக்கி உயர்த்தி விட்டான். பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிப்பில் வந்த அந்தப் படத்தில் ராமராஜனோடு ரேகா, நிஷாந்தி (அறிமுகம்) என்று ஜோடிகள், மொத்தம் எட்டுப்பாடல்கள், அத்தனையும் முத்துக்கள். கங்கை அமரனே பாடல்களை எழுதி அண்ணனிடம் கொடுக்க, அந்தநாள் நாடகக்காரர் சங்கிலி முருகனின் பழைய நட்பும் சேர்ந்து கொள்ள ராஜா குஷியாகிப் போட்ட பாடல்கள் இன்றும் தேன், " பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு ... பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்ட"

 எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் வெற்றியால் எங்க ஊரு காவக்காரன் படத்தை சங்கிலி முருகன் எடுத்திருந்தாலும் ஏனோ கங்கை அமரன் இல்லை டி.பி.கஜேந்திரனே இயக்கம். "செண்பகமே செண்பகமே" பாடல் பாடாத தமிழ் பேசும் ஊர்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர் அதே தலைப்பில் மீண்டும் கங்கை அமரன், ராமராஜன் இணைந்த படம். "வெளுத்துக் கட்டிக்கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி" என்று பாடலை எழுதி அண்ணன் இளையராஜா ஆரம்பிக்க, தம்பி கங்கை அமரன் மிச்சப்பாடல்களைக் கவனித்துக் கொண்டார். மஞ்சப்பொடி தேய்க்கையிலே பாட்டின் மெட்டு தெலுங்கும் தாவியது, எல்லாப்பாடல்களிலும் உச்சம் "வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்ட வச்சுப்புட்டா"  தமிழ் சினிமாவில் ஓராயிரம் படங்கள் வந்திருக்கலாம், இதில் சில நூறை உச்சம் என்று கொண்டாடவும் செய்யலாம் ஆனால் ஏனோ எனக்கு "கரகாட்டக்காரன்" போன்ற படங்கள் கொடுக்கும் போதை ஏனென்று புரியாத புதிர். படத்தின் வீசிடி வாங்கி அதுவும் தீராமல் ஒரிஜினல் டிவிடி வாங்கி, இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் பிலிம் சுருள் கிடைத்தால் கூட வாங்கிச் சொந்தம் கொண்டாத் தோன்றுமளவுக்குப் பித்துப் பிடிக்க வைத்தது.  படத்தின் பின்னணி இசையை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிய பின்னரும் தீரவில்லை இந்தப் படம் மீது கொண்ட மோகம். ஒருமுறை கனவில் கூட ஏதோ ஒரு ஊர்க்கொட்டகையில் கரகாட்டக்காரன் படம் பார்ப்பது போலக் கண்டு அடுத்த நாள் என்னையே நொந்துகொண்டேன் 😉 இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாளின் கொள்ளுப்பேத்தி கதை ஆனால் எல்லாமே அளவாகப் போட்டுச் சமைத்த அறுசுவை அரசு நடராசன் கைப்பதம். இந்தப் படம் ஒரு வருடம் ஓடியதில் வியப்பில்லை, ரசிகனுக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியும்.   "மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்"   "எங்க ஊரு பாட்டுக்காரன்" வெற்றியால் அந்தப் படத்தின் "செண்பகமே செண்பகமே" பாடலை எடுத்துத் தலைப்பாக்கி வெற்றி கண்ட கங்கை அமரனுக்கு "கரகாட்டக்காரன்" கொடுத்த தாறுமாறு வெற்றியால் அந்தப் படத்தில் இடம்பெற்ற "ஊரு விட்டு ஊரு வந்து" பாடலின் தலைப்பை எடுத்து இயக்கிய படம் வெற்றிகரமானதாக அமையவில்லை. அண்ணன் என்னதான் பாடல்களில் சோடை போகாவிட்டாலும் தம்பிக்கோ கவுண்டர், செந்திலை வைத்து பேயாட்டம் ஆடலாம் என்று விளையாடி விட்டார். 

இந்தப் படத்தில் வரும் " சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா" புலம்பெயர் தமிழருக்கு இன்னொரு தேசிய கீதம். "தானா வந்த சந்தனமே" எப்போது கேட்டாலும் தேனா இனிக்குமெல்லோ "கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட புத்தம் புது செண்டுகள் ஆட புது தாகம் தோணுமே"   "பொண்ணுக்கேத்த புருஷன்" இந்தப் படத்தின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுபவர்கள் இருக்குமளவுக்கு அதிக பிரபலமில்லாத படம் ஆனால் பிரபலங்கள் சேர்ந்த படம். மீண்டும் ராமராஜன், கெளதமி, கங்கை அமரன், இளையராஜா.  "சாதி பேதமின்றி சண்டை சிறு பூசலின்றி சகலரும் செல்லும் சினிமா" பாடல் தமிழ் சினிமாவை ஆராதிக்கும் பாடல்.  "மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே" சென்னை வானொலியின் அந்தக்காலத்து நேயர் விருப்பத்தில் கட்டுண்டோருக்குப் புரியும் சிறப்பான பாடல்         கரகாட்டக்காரனுக்குப் பிறகு எடுத்ததெல்லாம் ஏனோதானோவென்றும் ஓரளவு வெற்றியும் என்று ஓடியபோது மீண்டும் ஒரு காரனோடு வந்தார் கங்கை அமரன், இம்முறை "வில்லுப்பாட்டுக்காரன்" கங்கை அமரன் இன்ன பிற பாடல்களோடு "சோலைமலையோரம் கோலக்குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கலையோ" மனசை நிறைக்க, அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய "கலைவாணியோ ராணியோ பாடல்" போட்டி போட்டு இடம் பிடித்தது. வில்லுப்பாட்டுக்காரன் பாடல்களை மட்டும் நன்றாகப் பாடினான்.          கங்கை அமரனுக்கும் ராமராஜனுக்கும் சொல்லிவைத்தாற் போல நேரம் சரியில்லை, கூடவே தமிழ் சினிமாவின் போக்கும் இன்னொரு திசைக்கு மாறிவிட, இந்த பார்முலா படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தெம்மாங்கு பாட்டுக்காரன். நீண்ட காலம் இழுபறிப்பட்டு வெளிவந்த படம் (தணிக்கைக்குப் போக முன்னரே என்பதைக் கவனிக்க)  . கங்கை அமரன், இளையராஜா, பாவலர் வரதராஜன் சகோதரர்களின் பாடல்கள் இடம்பெற்ற படம் என்ற தனித்துவம் கூடத் தெரியாமல் போய்விட்டது.      

கங்கை அமரன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஐ வைத்து இயக்கிய படங்களில் முதன்மையானது “வெள்ளைப் புறா ஒன்று”. அந்தப் படத்தில் நடிகை சுஜாதாவுக்கே முக்கிய வேடம். இப்படி ஒரு படம் வந்த சுவடே தெரியாது.

அது போல அவர் இயக்கிய “தேவி ஶ்ரீதேவி” திரைப்படமும் பெரிய வெளிச்சம் காணாத திரைப்படம். நடிகர் ஏவிஎம் ராஜன் தயாரித்த அந்தப் படத்தில் அவரின் மகள் மகாலட்சுமி நாயகி.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மனதில் வைத்து கங்கை அமரன் எடுக்க நினைத்த படம் “சக்கரைப் பந்தல்” ஆனால் கல்யாண் குமாரையே தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ஒப்பந்தம் செய்து அந்தக் காலத்தில் நாயகனாக அரிதாரம் பூசிய சரண்ராஜ் & நிஷாந்தி கூட்டணியில் எடுத்த படம், விளங்கவில்லை. 

எப்படி சிவாஜியைத் தான் ஆசைப்பட்டபடி "சக்கரைப் பந்தல்" படத்தில் இயக்க முடியவில்லையோ அது போலவே கமலை வைத்து "அதிவீரபாண்டியன்" படத்தையும் இயக்க முடியாது போயிற்று.

அர்ஜீனின் இறங்குமுக காலத்தில் “அண்ணனுக்கு ஜே” படத்தை கங்கை அமரன் இயக்கினார். படத்தில் கங்கை அமரன் முத்திரையே இருக்காது. பாடல்கள் அண்ணன் இசையில் வழக்கம் போலத் தேன் மாரி.

தொண்ணூறுகளில் தானே இசையமைத்து இயக்கிய படமாக அமைந்தது “அத்தை மக ரத்தினமே”. “அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா” பாடல் மட்டும் அந்தப் படத்தின் பேர் சொல்ல விளங்கியது.

கங்கை அமரன் இதுவரை இயக்கிய படங்களில் அவருக்கு வெற்றியைக் கொடுத்த இறுதிப் படம் இந்த கோயில் காளை. 

கோயில் காளை படத்தில் வழக்கமான விஜயகாந்த்  & கனகா படங்களை விடக் கொஞ்சம் விரசல் தூக்கலாக இருக்கும்.

வங்காள மொழியில் ரவீந்திர நாத் தாகூர் எழுதிய கதையில் ஜெய பாதுரி (அமிதாப் மனைவி) நடித்த சுட்டிப் பெண் பாத்திரத்தை வைத்து கனகாவின் பாத்திரப் படைப்பை உருவாக்கி 

“விஜயகாந்த் ஓர் ஊருக்குப் பெண் பார்க்க வருவார். ஊருக்குள் நுழையும்போது, ஒரு தென்னந்தோப்பைக் கடக்கிறார்கள்; இளநீர் குடிக்க நினைக்கிறார்கள். தென்னை மரத்தில் ஏறி ஒரு பெண் இளநீர் பறித்துப் போடுகிறாள். வழியில் இளநீர் பறித்துப் போட்ட அதே பெண்ணைத்தான், அவர் பெண் பார்க்கப் போகிறார் எனக் கதையை உருவாக்கியிருந்தேன். அந்தப் பெண்ணாக கனகா நடித்தார். முழுக்க முழுக்க அந்த ஜெயா பாதுரி பாதிப்பில் உருவாக்கியதுதான் இது.” என்று கடல் தொடாத நதி தொடரில் “கோயில் காளை” கதாசிரியர் ஆர்.செல்வராஜ் கதை பிறந்த கதையைச் சொல்லியிருக்கிறார்.

இளையராஜாவின் குடும்பத் தயாரிப்பு என்பதும் சேர்ந்து கொள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தேனிசை.

எனக்குக் கோயில் காளை படத்தை நினைத்தாலே அந்தப் படத்தில் இடம் பிடித்த "வண்ணச் சிந்து வந்து விளையாடும்" பாடல் தான் மனசுக்குள் பாடும். அவ்வளவுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று அது.

வண்ணச் சிந்து பாடலைக் கேட்கும் போது வள்ளி முருகன் காதல் படலத்துக்குப் பொருந்தும் அட்டகாசமான இசைக் கோவையாக உணர்வேன்.

அண்ணன் உடையான் படம் இயக்க அஞ்சான் என்று இசைஞானி இளையராஜா இசையில் கங்கை அமரன் இயக்கிய படம். இயக்குநர் கங்கை அமரன் & இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணி என்றாலேயே கண்டிப்பாகப் பாடலில் தனிச் சுவை இருக்கும் என்று முடிவு கட்டி விட்டுத்தான் கேட்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். இந்தப் படத்திலும் எஸ்.ஜானகி என்ற பாடகிக்கே முழு ஜோடிப் பாடல்களையும் அர்ப்பணித்து விட்டு அந்தப் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் மனோ ஆகியோர் பாட, தனிப்பாடலில் இளையராஜாவும்,கங்கை அமரனும் கூட்டுச் சேர்ந்து கொள்கின்றனர். மலேசியா வாசுதேவனும் பாடியதாகக் குறிப்பு உண்டு.  இப்படத்தில் இடம் பிடித்த

சோலைக் கிளிகள் ரெண்டு, அடி மானா மதுரையில, தாயிண்டு தந்தையிண்டு, பள்ளிக் கூடம் போகலாமா பாடல்கள் தொண்ணூறுகளின் மறக்க முடியாத பாடல் வரிசைகளில் தவிர்க்க முடியாதவை.

கங்கை அமரன் இயக்க, அவர் மகன் வெங்கட் பிரபு நாயகனாக அமைய, பெரியப்பா இளையராஜா இசையில் “பூஞ்சோலை” படம் உருவாகியும் இன்று 28 வருடங்கள் கழித்தும் முடங்கிப் போயிருக்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் படத்தை “ஒருவன் ஒருவன் முதலாளி” என்ற பெயரில் கொண்டு வர இருந்தும் கைகூடவில்லை.

பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற அவதாரங்களோடு ஒரு இயக்குநராகவும் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொண்டவர் கங்கை அமரன்.

கானா பிரபா

27.12.2022


0 comments: