Pages

Monday, December 26, 2022

பாடகி கோவை கமலா ❤️


பொழுதிருக்கும் போதே

புகழ் தேடு

ஹே அடடடடா

இளமை அது போனா

திரும்பாது

ஹே அடடடடா.....

கானக்கருங்குயிலே 

கச்சேரிக்கு வர்ரியா வர்ரியா...


90களில் புகழ் பூத்த நூறு பாடல்களில் இந்தப் பாடல் தவிர்க்க முடியாததொன்று. பொன்னடியான் வரிகளில் இந்தப் பாடலைக் கேட்டால் துள்ளிசைக்குள் தத்துவார்த்தம் பொதிந்திருக்கும்.

இந்த வாரம் சாய் வித் சித்ராவில் Chithra Lakshmanan  “சேது" படத்தின் தயாரிப்பாளர் கந்தசாமி கலந்து கொண்ட போது இந்தப் பாடல் பற்றிச் சொன்ன போது ஆச்சரியம் எழுந்தது.

“கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்ரியா வர்ரியா” பாடலை உருவாக்கச் சொன்னதே தயாரிப்பாளர் கந்தசாமி தானாம்.

“முத்து" படத்தில் வந்த “கொக்கு சைவக் கொக்கு" மாதிரி ஒரு துள்ளிசைப் பாட்டு அதுவும் எல்.ஆர்.ஈஸ்வரி மாதிரி கனத்த குரலில் வரவேண்டும் என்று அவர் ஆசைப்படவும் முதலில் நாட்டுப்புறப் பாடல்களில் கோலோச்சும் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனைப் பாட ஒத்திகை பார்த்து ஈற்றில் இளையராஜாவின் தெரிவில் வந்தவர் கோவை கமலா.

கோவை கமலாவின் பாடலை முதலில் நான் கேட்ட அனுபவம் ஒரு இடி விழுந்தது போல 😜

ஏன் அப்படி ஒரு உவமை சொல்கிறேன் என்றால், என் சின்ன வயசில் அப்போது உள்ளூர்த் தொலைக்காட்சிச் சேவை வழியாக “ஓடங்கள்" படத்தைப் போட்டார்கள். அதில் மனோரமா தன் தோழிகளோடு சேர்ந்து ஒரு பாட்டைப் பாடுவார். அந்தப் பாட்டின் வரிகள் எப்படி இருக்கும் தெரியுமா?

கிழவிக்கு முதலிரவு கேட்டாலே கிறுகிறுக்கும்

https://www.youtube.com/watch?v=T000GaIrjnM

சம்பத் – செல்வம் இரட்டையர்கள் இசையில் அந்தப் பாட்டைக் கேட்ட போது உண்மையில் கிறுகிறுத்தது. என்னடா கே.பி.சுந்தராம்பாள் சுத்தபத்தமாகப் பக்திப் பாடல் பாடுபவர் அந்தக் குரலில் இப்படி ஒரு பாட்டா என்று. ஆனால் கண்டிப்பாக அவராக இருக்கமாட்டார் என்று தேடிப் பிடித்த போது தான் கோவை கமலா என்ற பாடகி பற்றித் தெரிந்தது.

கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் கலையுலக வாரிசாகத் திகழும் கோவை கமலா எண்ணற்ற பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

கோவில் படத்தில் “காதல் பண்ண" https://www.youtube.com/watch?v=lDKn1OPHnIQ பாடலை முதலில் பரவை முனியம்மாவைப் பாட வைக்க முனைந்து பின்னர் அவருக்குப் பதில் கோவை கமலா வந்ததும் அப்போது துணுக்குச் செய்தியாக வந்தது. எப்படி மனோரமாவுக்குக் குரல் கொடுத்தாரோ அது போலவே பரவை முனியம்மாவுக்கும் பாடகக் குரலானார்.

59 திரைபடங்களில் பாடியிருக்கும் கோவை கமலா இளையராஜா இசையில், ராஜாவே எழுதிய 

“பதியை விட்டுப் பிரிஞ்ச காரணத்தால் 

பாரினில் பிறந்து வந்த தாயே " https://www.youtube.com/watch?v=o8wWMqdQT5U 

என்ற அற்புதமான பாடலை காதல் ஜாதி படத்துக்காகப் பாடியிருக்கிறார். வில்லுப்பாட்டின் சந்தத்தில் அந்தப் பாடல் அமைந்திருக்கும்.

ஏன் “தந்தனத்தோம் என்று சொல்லியே” https://www.youtube.com/watch?v=IomFQhUjkuU என்று வில்லுப்பாட்டையே இளையராஜா இசையில் “கரகாட்டக்காரி” படத்துக்காகப் பாடியிருக்கிறார்.

கலைஞர் வசனம் எழுதிய “உளியின் ஓசை” படத்தின் ரஷ் ஐப் பார்த்து விட்டு "இதில் ஒன்று குறையுதே என்று சொல்லி கூப்பிடு கமலாவை" என்று வாலியை எழுத வைத்துப் பாட வைத்தாராம்

கரகாட்டக்காரியா கூத்தாட்டக்காரியா” என்ற பாடலை.

ஸ்வர்ணலதாவுடன் கோவை கமலா பாடும் ஒரு பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=aZ7TTkSq__w

“இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” படத்தில் “அந்தப்புரம் மகிழ வரும்” https://www.youtube.com/watch?v=vgiehRrizuQ பாடலில் கோவை கமலா தோன்றி நடித்திருக்கிறார்.

தேவா இசையில் “ஒத்துடா ஒத்துடா” (புதுமனிதன்) மலேசியா வாசுதேவன் பாடலிலும் கோவை கமலா குரல் ஒலித்தது.

தேவாவோடு கூட்டுச் சேர்ந்து “ஊனம் ஊனம்” (பொற்காலம்) பாடலையும் பாடியிருக்கிறார். மேலும் காதலி, ஶ்ரீ ராஜராஜேஸ்வரி, சக்ஸஸ், மகா நடிகன் (அல்வா நாயகனே) என்று இன்னும் பல படங்களில் தொடர்ந்து தேவாவால் பாடல்கள் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

அவர் தனிப்பாடல்களாகப் பக்திப் பாடல்களை வழங்கியது போலத் திரையிசையிலும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 

“அருள் தரும் முருகா”, “குன்றக்குடி கொண்ட வேலா”, “பழனியிலே பால் மணக்கும்” ஆகிய பாடல்களை  “யாமிருக்கப் பயமேன்” படத்திலும்,

“உதயத்தில் ஒளி தந்து” https://www.youtube.com/watch?v=GAE8cQ2dnoU 

பாடலை “நவக்கிரக நாயகி” படத்தில் கூட்டுப் பாடகியாவும் பாடியிருக்கிறார்.

ஒரு பேட்டி எதையெல்லாம் கிளறி விட்டது பாருங்கள் 🙂


காலம் இருக்குது வாய்யா

இந்த மண்ணோட மன்னர்களே

https://www.youtube.com/watch?v=cypg2w2XPNM

சேது படத்துக்காக முதலில் படமாக்கியதே இதைத் தானாம். பாலா, விக்ரம், சசிகுமார், அமீர், ரத்னவேல் என்று எத்தனை பேர் காலத்தை மாற்றி வைத்தது இந்தப் பாட்டு....


கானா பிரபா

26.12.2022


0 comments: