இசைஞானி இளையராஜா தன் பாடல்களில் வெவ்வேறான காட்சிச் சூழல்களிலும் புதுமையான உத்திகளைக் கையாண்டிருப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியம் மேலிடும்.
அவ்வாறானதொரு பாடல் தான் இந்த “ யாரிகாகி ஆட்டா”
https://youtu.be/mK1ak5B9tXo
கன்னடத்தில் Bharjari Bete
படத்துக்காக 41 வருடங்களுக்கு முன்பே செய்து காட்டிய உத்தி அது. ஒரு காபரே நடனத்துக்கு 3 beats உத்தியைக் கையாண்டு அந்தப் பாடலை அமைத்திருக்கிறார்.
இந்த உத்தியைப் பற்றி ராஜா விளக்கிய பின்னர் பாடலைக் கேட்கும் போது அட போடத் தோன்றும்.
https://youtu.be/dqU5XM7ZuYQ
எஸ்.ஜானகி போன்ற அசுரத்தனமான பாட்டுக்காரர் தான் ராஜாவின் மனதில் ஓடும் இவ்வாறான புதுமைகளுக்கு வழி கோலுவார்கள். அதையே நிரூபித்தும் காட்டியிருக்கிறார் ஜானகிம்மா. ஆரம்பத்தில் பதுங்கிப் பதுங்கிப் பின் சுதந்திரப் பிரவாகமாகக் கொட்டுவார் பாருங்கள் அப்பப்பா
கன்னடத்தில் “ஹ” வகை வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கும். இங்கே “ஹேளு” என்று ஜானகிம்மா உச்சரிக்கும் போதெல்லாம் அதே இன்ப அனுபவம்.
பாடலின் இசைக் கோப்பும் இந்தப் புதுமை அனுபவத்தின் உச்ச சோடனையாக இருக்கும். தாள லயம் மூன்று மூன்று என்று தட் தட் தட்
இந்த மாதிரியான அற்புதமான பாடல் கன்னடத்தில் படமாக்கப்பட்ட வகையிலும் ஒரு பிரமிப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆனால் இது நான்கு வருடங்கள் கழித்துத் தமிழில் அந்த ஒரு நிமிடம் (1985) ஆன போது “நல்ல நேரம்” என்று ஜெயமாலினிக் குலுக்கலுக்குப் பயன்பட்ட போது கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதை நீங்களே YouTube இல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அந்தத் தமிழ் வடிவத்தின் ஒலிப் பகிர்வை மட்டும் இங்கே கேளுங்கள்.
https://youtu.be/ELpXrToXfwE
எப்படி அந்த 3 beats உத்தியை யாரிகாகி ஆட்டா வரிகளும் மெய்ப்பித்ததோ அதே அளவு நியாயத்தைத் தமிழில் வைரமுத்து கொடுத்த வரிகளும் கொடுக்கவில்லை. இந்த மாதிரிப் பாட்டுக்கு வாலியோ, கங்கை அமரனோ அதிகபட்சமாக இருந்திருப்பார்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற இசை அசுரன் தான் பாடாத பாடல்களின் இசை நுணுக்கங்களைக் கூடப் பாட்டுப் பேட்டி மேடைகளில் பகிர்ந்து விளக்குவார். இந்தப் பாடலைக் கூட அவர் விட்டு வைக்காததைப் பார்க்கும் போது ஆச்சரியமும், இன்னொரு பக்கம் இப்படியான ஞானஸ்தரை எப்பிறப்பில் காண்போமோ என்ற கவலையும் எழும்.
https://youtu.be/RHP5_vcksMI
இசையமைப்பாளர் ஹம்சலேகாவை மட்டுமல்ல கணேச சதுர்த்தி மேடைகளில் இன்னும் கன்னடர்களின் பெரு விருப்பப் பாடலாய் இது இன்னும் கொண்டாடப்படுகிறது.
கன்னடத்தின் மகா நடிகன் சங்கர் நாக் இப்போது நம்மிடையே இருந்திருந்தால் தனது 68 வது பிறந்த நாளை இன்று 09.11.2022 ரசிகர்கள் புடை சூழக் கொண்டாடியிருப்பார்.
தன் 36 வயதிலேயே அகாலம் கொண்ட அவரின் “ஜோதயலி” https://youtu.be/xfWnvQHdkNo பாடல் வழியாக இன்னமும் மொழி கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இசைஞானி இளையராஜா & சங்கர் நாக் தனிப்பதிவு பின்னர் கொடுப்பேன். சங்கர் நாக் இன் “Geetha” கன்னடப் படத்தில் ராஜா இசை கொண்டாடப்பட்டது போலவே Bharjari Bete பாடல்களும் இன்னொரு பரிமாணத்தில் அமைந்தவை.
பாடல்களைக் கேட்க
https://youtu.be/VD4Vyfsg-zE
அவை கொண்டாடித் தீரா அனுபவம். 😍❤️
கானா பிரபா
0 comments:
Post a Comment